துப்புரவு தொழிலாளர்களுக்கு தீர்வு சொல்லாமல் டிஜிட்டல் இந்தியா கனவு காணலாமா..?பிரதமர் மோடி 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய உலக நாடுகளில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

ஆனால், இங்கோ வயிற்றுப் பிழைப்புக்காக கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி உயிர் விடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பிரதமரின் பணிகளுக்கும், விளிம்பு நிலையில் வாழும் ஒருவனின் சூழலுக்கும் சம்பந்தமில்லை என்று இதை ஒதுக்கிவிட முடியாது. பல ஆண்டுகளுக்கு முன்பே தடைசெய்யப்பட்ட, இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் சமூக அவலத்தை எவ்வித குற்றவுணர்ச்சியும் இன்றி கடந்து செல்வது மனிதகுல நாகரீகத்துக்கே இழுக்கு.

கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் தலைநகர் தில்லியில் உள்ள கழிவுநீர் சாக்கடை அடைப்பை சுத்தம் செய்யும்போது 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அரியானாவின் ரோடக் பகுதியில் அடைபட்ட கால்வாயை சரிசெய்த போது, அதிலிருந்து வெளியேறிய வாயுவால் மூச்சுத்திணறி 4 தொழிலாளர்கள் இறந்தனர்.
குஜராத் மாநிலத்தின் வதோரா பகுதியில் உள்ள ஹோட்டலில் கழிவுநீர் ெதாட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 7 தொழிலாளர்கள் பலியாகினர். தமிழகத்தில் கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு வீட்டின் கழிவுநீர் ெதாட்டியில் இறங்கி வேலை செய்தபோது 3 பேரின் உயிர் பிரிந்தது.

மொத்தத்தில் 5 நாட்களுக்கு ஒருவர் வீதம் கழிவுநீரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் தொழிலாளர் பலியாகி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகள் கடந்தும் மனிதர்களே மனிதக் கழிவுகளை அகற்றுதல், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தல், அதன் பைப்லைன் அடைப்புகளை சரிசெய்தல், சாக்கடை கால்வாய் அடைப்புகளை எடுத்துவிடுதல் போன்ற பணிகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர் என்பது இந்தியாவுக்கு அவலம்.

மனிதக் கழிவுகளை கையால் அள்ளும் பணி மற்றும் உலர் கழிப்பறை கட்டுமான தடைச் சட்டம் 1993லேயே கொண்டு வரப்பட்டு விட்டது. ெதாடர்ந்து 1994ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி சட்டபூர்வ அமைப்பாக தேசிய துப்புரவுப் பணியாளர்கள் ஆணையம் (என்சிஎஸ்கே) உருவாக்கப்பட்டது.

ஆனால், அதன் செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை. இதனால் மனிதர்களின் உயிரிழப்புகளை இன்றும் தடுக்க முடியவில்லை. அந்தத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களும் சாதிய, குடும்ப ரீதியாக சமூகத்தில் இருந்து வேற்று மனிதர்களாகப் பார்க்கப்பட்டு வருகின்றனர்.

அநீதியாகப் பார்க்கப்படும் இந்த விஷயத்தில், நீதிமன்றம் தலையிட்டதைத் தொடர்ந்து மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் பணிகளைத் தடைசெய்தல் மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வு என்ற திருத்தப்பட்ட சட்டம் 2013ல் கொண்டு வரப்பட்டது.

அதன்படி, கையால் மலம் அள்ளுதல், மனிதக் கழிவுகளை அகற்றுதல், சாக்கடையை சுத்தம் செய்தல் போன்ற நடைமுறை நீக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், எந்தவிதப் பயனோ மாற்றமோ ஏற்படவில்லை. துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் நலன் பேணப்படவும் இல்லை; கழிவுநீர் ெதாட்டிக்குள் இறங்கி வேலை செய்யும்படி கட்டளையிடுபவர்களின் மீது எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவும் இல்லை.ஜாமீனில் வெளியே வரக்கூடிய அளவில் இருந்த சட்டம் இப்போது ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவில் சேர்க்கப்பட்டு வலிமையாக்கப்பட்டும், உயிரிழப்புகள் தொடர்கின்றன.

இதிலிருந்து நேரடியாகக் கழிவுநீர்த் தொட்டிகளில் இறங்கி துப்புரவுத் தொழிலாளர்கள் சுத்தப்படுத்துவதைத் தடை செய்யும் 1993, 2013ம் ஆண்டு சட்டங்கள் எந்தளவுக்கு மீறப்படுகின்றன என்பதை உணரலாம். இத்தனைக்கும் திருத்தப்பட்ட சட்டப்படி குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது!

என்ன பயன்..? மலம் அள்ளுவதற்கும் கால்வாய் அடைப்பு சரிசெய்யவும் புதிய தொழில்நுட்பத்தை இந்தியா பயன்படுத்தவே இல்லை! மாறாக, மனிதர்களை நேரடியாக இறங்கி பணிபுரியும்படி சட்டத்தை மீறி கட்டளையிடுகிறது!  இதற்கு முக்கிய காரணமாக தொழிலாளர்களது வறுமை, பிறப்பு, அதிகாரிகளின் இரக்கமற்ற மனோபாவம், சமூகத்தின் அலட்சியம் போன்றவற்றைக் கூறலாம்.

விரும்பத்தகாத இந்த வேலையில் எவரையும் ஈடுபடுத்தும் முன்னர் 27 நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். பொறியாளர் ஒருவரின் ஒப்புதல் ெபற வேண்டும். விபத்து நேர்ந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஒன்று தயாராக இருக்க வேண்டும். ஆக்சிஜன் உருளை, பாதுகாப்பு முகமூடி, முழங்கால் வரை காலணி, தனிச்சிறப்பான அணிகலன்கள் தேவை... என்றெல்லாம் சட்டம் கட்டாயப்படுத்துகிறது.

இருந்தாலும் சமீபத்திய அறிக்கைகளின்படி அரசு நிறுவனங்களோ அல்லது தனியார் நிறுவனங்களோ இந்த விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை.
கடந்த ஜூலை 3ம் தேதி மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்துவாலே ராஜ்ய சபாவில் கேள்வி நேரத்தில் அளித்த பதிலில், ‘‘தலைநகர் தில்லியில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 18 பேர் கழிவுநீர் அகற்றும்போது விஷ வாயு தாக்கி இறந்துள்ளனர். நாடு முழுவதும் 88 பேர் இறந்துள்ளனர்...’’ என்று சொல்லியிருக்கிறார்.

அதே தேசிய துப்புரவுப் பணியாளர்கள் ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, கடந்த 2017 ஜனவரி முதல் 2018 செப்டம்பர் வரை 123 பேர் இறந்துள்ளதாகத் தெரிவிக்கிறது.சமூக ெபாருளாதார கணக்கெடுப்பு - 2011ன்படி நாடு முழுவதும் 1.82 லட்சம் தொழிலாளர்கள் கழிவுநீர் அகற்றுதல், துப்புரவுப் பணிகளில் ஈடுபடுவதாகக் கூறுகிறது.

2014ல் பிரதமர் மோடி அரசு பதவியேற்றபோது துப்புரவுப் பணியில் ஈடுபடுவோர் சந்திக்கும் பிரச்னை குறித்து அறிய குழு அமைக்கப்பட்டது. அதன் முதல்கட்ட ஆய்வின்படி நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட துப்புரவுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 53,236 பேர்! இது 12 மாநிலங்களில் 121 மாவட்டங்களை மட்டுமே அடையாளப்படுத்தி உள்ளது.

பல மாநிலங்கள் துப்புரவுத் தொழிலாளர்களின் விவரங்களை வெளியிடவில்லை என்பது இன்னொரு அவலம். உயிர் இழப்பு ஏற்பட்டவர்களின் குடும்பங்கள் சார்பில் மனிதக் கழிவுகளை மனிதனே கையால் அகற்றுவதைத் தடுக்கவும், நிவாரணம் தொடர்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் 2009ல் வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கில், ‘உயிர்ப்பலி ஏற்பட்ட குடும்பத்தினருக்கு 10 லட்ச  ரூபாய் நிவாரணம் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு குலத்தொழில் அல்லாத அரசு வேலை வழங்க வேண்டும். 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து, மனிதக் கழிவுகளை மனிதனே கையால் அள்ளுவது தடை செய்யப்படுகிறது...’ என்று உச்ச நீதிமன்றத்தால் சொல்லப்பட்டது.

ஆனால், இன்றைய தினம் வரை மனிதக் கழிவுகளை மனிதனே கையால் அள்ளும் கொடுமை அரங்கேறி வருகிறது. இதற்கு சமூகத் தீண்டாமையும், உள்ளாட்சி அமைப்புகள் தொழில்நுட்பங்களை பயன்படுத்தாமல் இருப்பதுமே காரணம். டிஜிட்டல் இந்தியா கனவை நிறைவேற்றுவதைவிட இந்த சமூக அவலத்தை முதலில் அரசு தீர்க்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!  
         
பண்டிகூட்ரோபோ

கேரள மாநிலம் குட்டிபுரத்தில் உள்ள பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 4 மாணவர்கள் குழிகளில் இறங்கிக் கழிவுகளை அகற்றும் ரோபோக்களை உருவாக்கி உள்ளனர். ‘ஜென்ரோபாட்டிக்ஸ்’ என்னும் நிறுவனத்தை நடத்திவரும் இவர்கள், ‘பண்டிகூட்’ எனப் பெயரிடப்பட்ட ரோபோக்களை உருவாக்கி இந்தியக் கண்டுபிடிப்புக்கான உரிமத்தைப் பெற்றுள்ளனர்.

இவர்களின் கண்டுபிடிப்பை கேரள அரசு அங்கீகரித்து முதல்கட்டமாக 50 ‘பண்டிகூட்’ ரோபோக்களை தயாரித்து வழங்க ஆர்டரும் கொடுத்துள்ளது. இதேபோல், சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கியுள்ள ரோபோ, கழிவு நீர் தொட்டிகளில் இருக்கும் அடர் கழிவுகளை அதிவேகமாக வெட்டி, ‘வாக்யூம்’ பம்ப் மூலம் உறிஞ்சி வெளியேற்றும்படி செய்துள்ளனர். இது விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.   

செ.அமிர்தலிங்கம்