தெலுங்கு சினிமாவுக்கு இது பொற்காலம்!



‘கண்ணாடி’ ஹீரோ சந்தீப் கிஷன் open talk

‘‘தமிழ்ல நான் அறிமுகமான ‘யாருடா மகேஷ்’ ஒரு அடல்ட் கன்டன்ட் படம். அதன்பிறகு இங்க அடல்ட் ஜானர் டிரெண்ட் உருவானதால அந்த ஜானரை தவிர்த்தேன். அப்புறம், ‘மாநகரம்’, ‘மாயவன்’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’னு வித்தியாசமான படங்கள் அமைஞ்சது.

என் வயசுக்கேத்த ஹீரோக்கள் பொதுவா லவ் ஸ்டோரியைத்தான் முதல்ல செலக்ட் பண்ணுவாங்க. ஆனா, இதுவரை கரெக்டான ஒரு லவ் ஸ்டோரி படம் தமிழ்ல எனக்கு அமையல!தவிர லவ் ஸ்டோரி பண்றதுல ஒரு பெரிய ரிஸ்க் இருக்கு. சரியான காதல் கதை அமையும்போது அது கொடுக்கற பெயரும் புகழும் வேறு எதிலும் கிடைக்காது. அதுவே சரியா செட் ஆகாத கதைன்னா திகட்டத் திகட்ட திட்டு தேடிவரும்!

இன்னொரு விஷயம், நான் இம்ப்ரஸ் ஆகுறது மாதிரி அற்புதமான லவ் ஸ்டோரியை யாருமே இதுவரை எனக்கு சொல்லவும் இல்ல. ‘நீங்க ரெண்டு வருஷத்துக்கு ஒரு படம் பண்றீங்களே?’னு நான் இங்க வரும் போதெல்லாம் கேட்கறாங்க. இடைவெளிவிட்டு பண்றதாலதான் நல்ல படங்கள் அமையுதோ என்னவோ!

எனக்கும், வாரத்துக்கு ஒரு படம் ரிலீஸ் பண்ணணும் என்கிற ஆசை இல்ல! வருஷத்துக்கு ரெண்டு படம் வெளியானா போதும்...’’ நான்ஸ்டாப் கொண்டாட்டமாக கலகலக்கிறார் ‘கண்ணாடி’ நாயகன் சந்தீப் கிஷன்.‘‘நான் நடிச்ச, நடிக்கற படங்கள்ல எப்பவுமே ஏதாவது ஒரு விஷயம் புதுசா இருக்கணும்னு எதிர்பார்ப்பேன். அந்த அடிப்படையில்தான் கதையும் செலக்ட் பண்றேன்.

இப்ப ‘கண்ணாடி’, ‘நரகாசூரன்’, ‘கசடதபற’ தவிர தெலுங்கிலும் படங்கள் பண்ணிட்டிருக்கேன். இதுல கண்ணாடி’ ஒரு ஹாரர் மூவி. ஆனா, அவ்ளோ சுவாரஸ்யமான ஒரு ஸ்கிரிப்ட். ‘இந்தப் படத்தை தியேட்டர்ல நீங்க பார்த்துட்டு, ‘இது ஒரு சாதாரண பேய்ப்படம் தான்’னு சொன்னீங்கன்னா இனிமே நான் நடிக்கறதையே விட்டுடறேன்’னு ஆடியோ ஃபங்ஷன்ல கூட சொல்லியிருந்தேன்! இப்பவும் அந்த முடிவில் நான் உறுதியா இருக்கேன்.

இந்த தைரியத்துக்கு காரணம், படத்தின் மேல் உள்ள நம்பிக்கைதான். என் நட்புக்காக நண்பர் சித்தார்த் ஒரு பாடலை பாடியிருக்கார். ஹாரர் தவிர, 24 வருஷங்கள் அட்வான்ஸா டிராவல் ஆகுற ஒரு விஷயமும் படத்துல இருக்கு.

ஹீரோயினா பாலிவுட்டைச் சேர்ந்த அன்யா சிங் நடிச்சிருக்காங்க. இந்தப் படத்தை சுப்பு நாராயணன் சார் தயாரிச்சிருக்கார். 19 வருஷங்கள் புரொடக்‌ஷன் மேனேஜரா இருந்து இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளரா ஆகியிருக்கார். ‘திருடன் போலீஸ்’ கார்த்திக் ராஜு இயக்கியிருக்கார்.

எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு இயக்குநர் அவர். சினிமா மீதான காதலால் தன் சாஃப்ட்வேர் ஒர்க்கைக்கூட உதறிட்டு, டைரக்‌ஷன் பக்கம் போராடும் மனிதர்...’’ புன்கைக்கிறார் சந்தீப் கிஷன். ‘நரகாசூரன்’ படத்தில் அரவிந்த்சாமி, இந்திரஜித் சுகுமாறனோடு நடிச்ச அனுபவங்கள் எப்படி?

நைஸ். அரவிந்த்சாமி சார் ஆக்ட்டிங் ரொம்ப பிடிக்கும். படத்துல அவரோட காம்பினேஷன் அவ்ளோ கிடையாது. ஆனா, மலையாள ஆக்டர் இந்திரஜித் சுகுமாறன் சாரோட காம்பினேஷன் சீன்ஸ் அதிகம் இருக்கு.

இப்ப நான் இந்திரஜித் சாரோட ஃப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்கேன். அந்தப் பட ஷூட் டைம்ல தினமும் அவரோடதான் லன்ச், டின்னர் சாப்பிடுவேன்.

எப்பவுமே எனக்கு மலையாள சினிமா மீது பயங்கர மரியாதை உண்டு. அவரோட பேசிப் பழகினதுல மல்லுவுட் இண்டஸ்ட்ரி பத்தின நாலேஜ் கிடைச்சது. ஒருமுறை இந்திரஜித் சார் உதவியோடு படத்தின் ஹீரோயின் ஆத்மிகாவை பேய் இருக்குதுனு சொல்லி பயமுறுத்திட்டேன். அந்தப் பொண்ணு பயந்து அலறி, ஹோட்டல்ல ஒர்க் பண்ற ஆட்களை எல்லாம் கத்திக் கூப்பிட்டு... அப்புறம் கடைசியில் நான்தான் பயமுறுத்தினேன்னு உண்மையை சொல்லிட்டோம்!

சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கற ‘கசடதபற’ ஷூட், ரொம்பவே இன்ட்ரஸ்ட்டிங். ‘கண்ணாடி’யில் நான் நடிகனா என்ஜாய் பண்ணி நடிச்சாலும் புரொடக்‌ஷன் டென்ஷன் இருந்தது. ஆனா, ‘கசடதபற’ல அப்படி எந்த டென்ஷனும் இல்ல. நடிகனா மட்டுமே போய் நடிச்சிட்டு வந்தேன். மொத்த படத்தையும் என் தோள்ல சுமக்கற பாரமும் அதுல கிடையாது. அந்தப் படத்துல நிறைய கதைகள் இருக்கும். அதுல நான் வர்ற கதை அவ்ளோ அழகானது.

ஹைதராபாத்தில் ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்சீங்களே.. எப்படி போகுது?நல்லா போகுது. அங்கே நம்பர் ஒன் ரெஸ்டாரன்ட்டா எங்க ‘விவாக போஜனம்பு’ இருக்கு. சென்னையில் இருந்து யார் ஹைதராபாத் வந்தாலும் எங்க ஹோட்டலுக்கு வந்திடுவாங்க. ஜெயம் ரவி, குஷ்பு மேம்னு ரெகுலர் செலிபிரிட்டீஸும் உண்டு.

நானெல்லாம் சினிமாவில் இருந்தாலும் என்னோட கேரியர் பத்தின சிந்தனையோடவே எப்பவும் ஓடிட்டிருக்கவேண்டியிருக்கு. எங்க அம்மா, பெரியம்மாவுக்கு ஒரு சேலை கூட வாங்கிக் கொடுத்ததில்லைனு ஒருநாள் தோணுச்சு. சமீபத்துலதான் அவங்களுக்கு ஒரு சேலை எடுத்துக் குடுத்தேன்.

என்னோட இயந்திர வாழ்க்கையில எங்க அப்பா, அம்மாவை கவனிக்காமல் போயிடக்கூடாதுனு நினைச்சேன். கையில காசு வந்த ஒருநாள், அவங்களுக்காக ஒரு ரெஸ்ட்டாரன்ட் கட்டிக் குடுத்துட்டேன். அவங்க வருமானத்துக்காகவே அதை ஆரம்பிச்சு, அவங்க கையில் ஒப்படைச்சிட்டேன். அவங்களுக்கும் அதுல ஒரு மனநிறைவு. எப்பவாவது நான் அங்கே சாப்பிடப் போறதுண்டு. மத்தபடி அங்க எனக்கு வேலையில்லை.
டோலிவுட்லயும் நிறைய படங்கள் பண்றீங்க... அங்கே இண்டஸ்ட்ரி எப்படி இருக்கு?

சூப்பரா இருக்கு. தெலுங்கு இண்டஸ்ட்ரிக்கு இது பொற்காலம். புதுப்புது கதைகள், புதுப்புது இயக்குநர்கள் வந்து கலக்கறாங்க. ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி தமிழ் இண்டஸ்ட்ரி எப்படி அற்புதமான திறமைசாலிகளால் ஜொலிச்சதோ அப்படி இப்ப தெலுங்கு ஃபீல்டுல பலரும் கலக்கறாங்க!                                                    

மை.பாரதிராஜா