ராட்சசி
அர்ப்பணிப்பு இல்லாத அரசுப்பள்ளியை வளர்த்தெடுக்கப் போராடும் நல்லாசிரியையின் கதையே ‘ராட்சசி’.மாணவர்கள் பாஸ் ஆனால் என்ன... பெயில் ஆனால் என்ன... என அலட்சியமாக அரசுப் பள்ளிகளில் செயல்படும் ஆசிரியர்களை நோக்கி வீசப்பட்ட நெருப்புக் கணைகளே படத்தின் பெரிய பலம். கமர்ஷியல் அம்சங்களைக் கருத்தில் கொள்ளாமல் அரசுப்பள்ளிகளின் அவல நிலையை எடுத்துச் சொன்ன துணிச்சலுக்காகவும் அக்கறைக்கும் அறிமுக இயக்குநர் கவுதம்ராஜுக்கு பூங்கொத்து!
 அந்தப்பள்ளிக்கு தலைமை ஆசிரியாக பணிபுரிய வருகிறார் ஜோதிகா. ஒழுங்கீனத்தின் மொத்த உருவமாக இருக்கும் பள்ளியின் நிலையைப் பார்த்து வருத்தமும், அதிகபட்சமாக கோபமும் அடைகிறார். அந்தப்பள்ளி, ‘அப்படியே’ இருக்க விரும்புவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஜோவின் நடவடிக்கைகள் எரிச்சல் தர, அவருக்கு எதிராக அணியாகப் புறப்படுகிறார்கள். நேர்மையாக அதே பிடிவாதத்தில் இருந்து அந்தப்பள்ளியை முன்னிலைக்குக் கொண்டு வந்தாரா... அவர் நோக்கம் நிறைவேறியதா என்பதே மீதிக்கதை.
தலைமை ஆசிரியருக்கான கம்பீரத்தில், தோரணையில் பொருந்துகிறார் ஜோ. மாணவர்கள் தன்னுடன் சகஜமாகப் பழக அனுமதிப்பது, ஆசிரியர் முத்துராமனிடம் இருக்கும் பொறுப்பை வெளிக் கொணர்வது என அதிகமும் பக்குவமாக நடித்திருக்கிறார். மாணவர்களிடம் ஜோ நெகிழ்ந்து அன்பு காட்டுவதும் ஆசிரியர்களிடம் பிடிவாதம் காட்டுவதுமாக இப்படி ஓர் ஆசிரியர் எங்களுக்கும் வேண்டும் என்பது போல ஏங்க வைக்கிறார்.
பூர்ணிமா பாக்யராஜ் கொஞ்ச நேரமே வந்தாலும், கேரக்டரில் நிறைகிறார். அதட்டி உருட்டும் அருள்தாஸ், பழி வாங்கத் துடிக்கும் கவிதாபாரதி, பெற்றோரின் மனநிலையைப் பணமாக்கும் தாளாளர் ஹரிஷ் பொராடி என பாத்திரங்களுக்கு நியாயம் செய்திருப்பது நல் உழைப்பு. ‘பொண்ணு பாக்க வரட்டுமா’ என கொஞ்சல் மொழியில் கோரிக்கை வைக்கிற அந்தச்சிறுவன் மனதில் நிற்கிறான்.
‘தீமை நடக்கிறதென்று சொல்லி அதைத் தடுக்காமல் கூடவே பயணிக்கிறவர்கள் தீமையின் ஒரு பகுதி ஆகிறார்கள்’ என்பது போன்ற சாட்டையடி வசனங்களை பாரதி தம்பியும், கௌதம்ராஜும் எழுதி கவனிக்க வைத்திருக்கிறார்கள்.ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் மாணவர்களின் மொத்த நடமாட்டம், சூழல், இயல்பென மெனக்கெட்டிருக்கிறார். ஷான் ரோல்டன் இசையை ரசிக்க முடிகிறது.
பள்ளிகளின் இன்றைய நிலவரத்தை சுட்டி இருந்தாலும், படத்தில் ஆங்காங்கே செயற்கைத்தனம் எட்டிப்பார்க்கிறதே! ஜோவின் பின்புலம் வெறுமனே பாதிப்பு ஏற்படுத்தாமல் கடந்து போகிறதே! தனியார் பள்ளி தாளாளர் இப்படி ஓர் அரசுப்பள்ளியைக் கண்டு அஞ்சுவாரா... என கேள்விகள் விரிகின்றன.ஆனாலும் அரசுப்பள்ளிகளின் நல் மாற்றத்திற்கு வழி காட்டிய வகையில் இந்த ‘ராட்சசி’யை வரவேற்கலாம்.
குங்குமம் விமர்சனக் குழு
|