இயக்குநரான நிருபர்!



மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக புன்னகைக்கிறார் சை.கௌதம்ராஜ். ஜோதிகா நடித்த ‘ராட்சசி’யின் அறிமுக இயக்குநர்.‘‘ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. ‘ராட்சசி’ பார்த்துட்டு பள்ளிக் கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், டீச்சர்ஸ்னு நிறைய பேர்கிட்ட இருந்து வாழ்த்து மழை.
சிவகுமார் சார் கூப்பிட்டு ‘நெகிழ வச்சிட்டேய்யா’னு சந்தோஷமானார். ‘அறம்’ இயக்குநர் கோபி நயினார், என் பேச்சிலர் ரூமுக்கே தேடி வந்து வாழ்த்தி சால்வை போர்த்தி சந்தோஷப்படுத்தினார். அறிஞர் அண்ணாவின் ‘மாபெரும் தமிழ்க்கனவு’ நூலை பரிசா கொடுத்தார்.

என் சக இயக்குநர் நண்பர்கள் பலரும் கைகொடுத்து ‘அருமையான படம்’னு பாராட்டினாங்க. ஒரே நாள்ல இவ்வளவு பாராட்டுகளை சத்தியமா நான் எதிர்பார்க்கவே இல்ல...’’ நெகிழ்ச்சியில் கசிகிறார் இயக்குநர் கௌதம்ராஜ்.‘‘சென்னைல வளர்ந்திருந்தாலும் கூட இன்னமும் நான் கிராமத்தான்தான். ‘சினிமானாலே அது தியேட்டருக்கான புராடக்ட்... அது எளிய மக்களுக்கும் போய்ச் சேரணும்’னு என் குருநாதர் விக்ரமன் சார் எப்பவும் சொல்லுவார்.

நான் பண்ற படம் சாதாரண மக்களுக்கும் கனெக்ட் ஆகணும்... அந்தப் படம் என் ஊர்லயும் ரிலீஸ் ஆகணும்... என் மக்களும் அதைப் பார்த்து கொண்டாடணும்னு விரும்பினேன். என் முதல் படத்துலயே இந்த ஆசை நிறைவேறியிருக்கு!நாம எல்லாருமே பள்ளிப்  பருவத்தைக் கடந்து வந்திருப்போம். அதனாலேயே ‘ராட்சசி’ல எல்லாரும் ஈசியா கனெக்ட் ஆகினாங்கனு நினைக்கறேன்...’’ புன்னகைக்கும் கெளதம்ராஜ், திரைப்படக் கல்லூரியில் படித்தவர்.  

‘‘சொந்த ஊர் புதுக்கோட்டை பக்கம் அறந்தாங்கி. அப்பா இல்ல... அம்மாதான் என்னை வளர்த்து ஆளாக்கினாங்க. சின்ன வயசில இருந்தே சினிமா ஆசை. பாலிடெக்னிக் முடிச்சிட்டு சென்னை ஃபிலிம் இன்ஸ்டிட்டியூட்ல சேர்ந்தேன். அப்பவே ‘விகடன்’ல மாணவர் நிருபரானேன். ஷேர் மார்க்கெட், இன்ஸூரன்ஸுனு நான் எழுதாத ஏரியா கிடையாது.

அங்கிருந்து சினிமா முயற்சிகளை தொடங்கினேன். இயக்குநர் விக்ரமன் சார்கிட்ட ‘மரியாதை’ல உதவி இயக்குநரானேன். அப்ப ஃபிலிம்ல ஷூட் பண்ணிட்டிருந்தாங்க. அப்புறம் சினிமா டிஜிட்டலுக்கு மாறுச்சு. ‘சித்ரங்கதா’ அசோக் உட்பட இயக்குநர்கள்கிட்டயும் ஒர்க் பண்ணியிருக்கேன். ‘ரம்மி’ல அசோசியேட். ‘திருடன் போலீஸ்’ல இணை இயக்குநர்.

2014ல பிரபுதேவா சாரை வச்சு படம் பண்றதா இருந்தேன். ஆனா, சில காரணங்களால அது நடக்கலை. அப்புறம் நிறைய போராட்டங்கள்... முயற்சிகள். ஒரு ஹீரோவுக்கு பண்றதா நினைச்சுதான் ‘ராட்சசி’ கதையை எழுதினேன். அப்புறம் அதை ஹீரோயின் படமா மாத்தினேன்.
ஜோதிகா மேம்கிட்ட அந்தக் கதையைச் சொன்னதுமே அவங்க ஓகே சொல்லிட்டாங்க.

அந்த செகண்டை என்னால மறக்கவே முடியாது. ஏன்னா, என்னை இயக்குநரா இப்ப உங்க முன்னால நிறுத்தியிருக்கறது அந்த நொடிதான். தேங்க்ஸ் டூ ஜோதிகா மேம் அண்ட் ட்ரீம் வாரியர்ஸ்...’’ என்று சொல்லும் கெளதம்ராஜ், இரண்டு ஸ்கிரிப்ட்டுகளைத் தயாராக வைத்திருக்கிறார்.               

மை.பாரதிராஜா