பிரபுதேவாவின் கோபமே இப்படத்தின் பலம்!‘‘சும்மா சொல்லிப் பாருங்க... ‘ பொன் மாணிக்கவேல்’. ஒரு எனர்ஜி, ஃபோர்ஸ், ஸ்பார்க்கோட ‘நச்’னு மனசுல பதியும். அதனாலதான் இந்த டைட்டிலை வைச்சோம். இதுல எமோஷனல், ஃபேமிலி, ஆக்‌ஷன்னு எல்லாமே இருக்கும். ஆக்சுவலா இந்த டைட்டில் அமைய மூணு மாதங்கள் போராடினோம். பல தடைகளை உடைத்து இந்த வெற்றி கிடைச்சுது. யாரும் டைட்டிலை குறை சொல்லவே இல்லை. கம்ப்ளீட் சினிமானு சொல்வாங்களே... அதுதான்.

இதில் எல்லாமே எமோஷனுக்குப் பக்கமாகவே போகும். நல்ல என்டர்டெயின்மென்ட்டுக்கு உத்தரவாதம் தர்றோம்...’’ தெளிவாகப் பேசுகிறார் ‘பொன் மாணிக்கவேல்’ இயக்குநர் முகில் செல்லப்பன்.
இவர், பிரபுதேவாவின் முக்கிய சீடர்.உங்கள் பிரபுதேவாவிற்கு நிறைய புது வடிவங்கள் கொடுத்திருக்கீங்க போல....பிரபுதேவாவின் ஸ்பெஷல் எல்லோரும் அறிஞ்சதுதான். அருமையாக நடிப்பார். பிரமாதமாக டான்ஸ் ஆடுவார். அவரோட பெரும் ரசிகனான நான், என் படத்தில் எப்படியெல்லாம் அவர் இருக்கணும்னு யோசிச்சேன்.

இது ஒரு போலீஸ் அதிகாரியோட லைஃப். ஒரு சம்பவம் அவரை திருப்பிப்போடுது. எப்படி அவர் மீண்டு வர்றார் என்பதுதான் கதை. இதில் பெரிசா சமுதாய சீர்திருத்தமோ, அரசியலோ கிடையாது. போலீஸ் படம் நிறைய நாம் பார்த்தாச்சு. ஒவ்வொரு ஹீரோவுக்கும் வகையான ஒரு போலீஸ் கதை மாட்டியிருக்கு. ரஜினிக்கு ‘மூன்று முகம்’, கமலுக்கு ‘காக்கிச் சட்டை’, விக்ரமிற்கு ‘சாமி’, சூர்யாவிற்கு ‘சிங்கம்’னு அடுக்கிக்கிட்டே போகலாம்.

அப்படியிருக்கும் போது இந்தப் படத்தில் புதுசா என்ன சொல்லிட முடியும்னு பார்த்தேன். அப்ப மனசில் பட்டது ஒண்ணுதான். என் அப்பா ‘நீ ஒரு போலீஸ் படம் எடுக்கணும். அதில்தான் நேர்மை, வீரம், ஆக்‌ஷன், பிரச்னைன்னு வேகமா சொல்ல முடியும்’னு சொன்னது நினைவுக்கு வந்தது.

பிரபுதேவாவின் வேற வடிவை கொண்டு வரணும்னு ஆசைப்பட்டேன். சினிமாவில் அவரை வேறு மாதிரி பார்த்திருப்பாங்க. அவருடைய ஒரிஜினல் முகம் எனக்குத் தெரியும். அவர் எந்த அளவுக்கு டெரர்னு 5% பேருக்குத்தான் தெரியும். அவருடைய கோபம் படத்தில் வந்தாலே படம் அருமையாக வந்திடும்.

அவரோட 13 வருஷங்களுக்கு மேல டிராவல் பண்றேன். அவருடைய வெளிப்படாத பகுதி என்னன்னு தெரிஞ்சு இந்தப் படத்தை செய்திருக்கேன். அவரே போலீஸ் படமான்னு யோசிச்சார். பிறகு அவரே தன்னை தயார்படுத்திக்கிட்டு ஒரு ஆபீஸர் மிடுக்கில் வந்து நின்னது எல்லாம் வரலாறு.

அவருடைய கேரியரில் இந்தப்படம் நிச்சயம் வித்தியாசப்பட்டு நிக்கும். டிரைலர் பார்த்திட்டு சிலருக்கு இருந்த டவுட்டும் விலகிப்போச்சு. அவ்வளவு அருமையா பொருந்தியிருக்கார்.

நீங்க அவரோட பழகியவர் ஆச்சே... ஈஸியா உங்கள் உணர்வுகளை கடத்தியிருக்க முடியுமே!சொல்லப்போனால் அவரை கையாள்வது ரொம்பக் கஷ்டம். இப்பப் பாருங்க இந்தில சல்மான் கானை வைச்சுப் பண்றார். இந்தப் பக்கம் சிரஞ்சீவி. நம்ம பக்கம் விஜய்யை வைச்சு பண்ணியிருக்கார். அக்‌ஷய்குமார் எல்லாம் அவருக்காக வெயிட்டிங்.

இப்படி மகா ெபரிய ஸ்டார்களை வைச்சு டைரக்ட் பண்றவரை நான் டைரக்ட் பண்றது சாதாரண வேலையில்லை. ஒரு சின்ன சந்தேகம் இருந்தால் கூட அதை தெளிவு பண்ணிட்டுத்தான் செய்வார். அவரை திருப்திப்படுத்திவிட்டால் அவருடைய அருமையான நடிப்பு நமக்கு கண்டிப்பாக கிடைக்கும். சில கட்டங்களில் அவர் நடிப்பைப் பார்த்து ‘கட்’ சொல்ல மறந்திருக்கேன்.

நடிகரா டைரக்டர் மகேந்திரனை கடைசியாக நடிக்க வைச்சிருக்கீங்க...சின்னதாக, ஆனா, ரொம்ப முக்கியமான ரோல். எழுதும் போதே இவர்தான்னு ஃபிக்ஸ் பண்ணிட்டு எழுதினேன். எல்லா நடிகர்களும் சிறந்தவர்களே. ஆனால், சில ரோலை செய்ய ரொம்ப பக்குவமானவங்க இருந்தால் நல்லாயிருக்கும். அப்படி நாங்க தேர்வு செய்தது மகேந்திரன் சாரை.

கடைசி நாள் அவரை தூக்கிக் கொண்டு வந்து உட்கார வைத்து படமாக்கினோம். ‘சீக்கிரம் என் ரோலை எடுத்திடுங்க’ன்னு சொன்னாலும், ஸ்பாட்டில் அவ்வளவு உற்சாகமாக அவரது உபாதைகளை மறைத்துக் கொண்டு இருந்தார். அவரோடு ஷூட்டிங்கில் இருந்த கடைசி தினத்தில் கண்ணீர் திரண்டு வந்தது. பிரபுதேவாவிற்கு அவர் மேலே பெரிய மரியாதை உண்டு. இரண்டு பேரும் அவர்களின் ஒவ்வொரு வார்த்தையிலும் அதைக் காட்டிக்கிறது அவ்வளவு நல்லா இருக்கும்.

பெத்துராஜ் ஜோடி ரொம்ப சரியா இருக்கு...அவங்க நளினம் கேட்கணுமா..? அபாரமாக இருக்கு. ஒரு பாடலுக்கு அவரும், பிரபுதேவாவும் ஒரு செல்ல ஆட்டம் போடுவாங்க பாருங்க... அதுதான் ‘உதிரா உதிரா...’ பாட்டு. பின்னி எடுத்திருங்காங்க.

பேட்டிக்காக சொல்றேன்னு நீங்க நினைச்சாலும் சரி, அவ்வளவு சிறப்பான பாடலாக வந்திருக்கு. கதையை நகர்த்திட்டுப் போக இமான் பாடல்கள் உதவியிருக்கு. பின்னணியிலும் பெரும் பங்கு. கடைசி வரைக்கும் புன்னகையை வைத்திருந்தவர் நேமி சந்த் ஜபக், ஹித்தேஜ் ஜபக். இவங்களுக்கு சினிமா என்பது வியாபாரம் என்பதை மீறி அதன் மீது காதலே இருக்கு.

‘பாகுபலி’யில் காலகேயனாக நடிச்ச பிரபாகர், சார்லஸ் வினோத், நாகேஷ் பேரன் பிஜேஷ் நாகேஷ்னு நல்ல நடிகர்களை வைச்சுக்கிட்டு தலைமையாக பிரபுதேவா மாதிரி பெர்ஃபார்மிங் ஆர்ட்டிஸ்ட்டை வைச்சு படம் பண்ணினது சந்தோஷமா இருக்கு. பாத்துட்டு நீங்களும் இப்படிச் சொல்வீங்க என்பது என் தீராத நம்பிக்கை.                

நா.கதிர்வேலன்