கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-19
வரதரின் அன்புத்தொல்லை!
பல வருடங்களுக்கு முன் காஞ்சி மாநகரம். அனைவரும் நெற்றி நிறைய திருமண் இட்டுக் கொண்டு வாய் நிறைய வரதனின் நாமங்களைப் பாடியபடி வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சென்று அவரை சேவித்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் நடுவே கஜேந்திர தாசர் என்ற திருக்கச்சி நம்பிகளும் ஞான ஜோதியாக பிரகாசித்தபடி இருந்தார். அவரது கைகளில் அழகான வேலைப்பாடுடன் கூடிய ஒரு விசிறி இருந்தது.
 ஆம். அந்த வைணவப் பெரியவர் காஞ்சி வரதனுக்கு ஆலவட்டக் கைங்கரியம் (பெருமானுக்கு விசிறி விடும் சேவை) செய்யவே கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தார். உலகமே வரதனின் திரு முன்பு தன் மனதில் இருக்கும் பாரத்தைக் கொட்டுவார்கள்.ஆனால், அந்த வரதன் ஆசை தீர பேசி மகிழ்வது இந்த மகானுடன்தான்! அந்த அளவு பக்தியையும் புண்ணியத்தையும் உடைய உத்தமர் அவர். இராமாயணத்தின் சபரியே கலியுகத்தில் தனது எளிய பக்தி நெறியை உலகிற்கு போதிக்க நம்பிகளாக அவதரித்தார்.
 சென்ற ஜென்மத்தில் சபரியின் பக்திக்கு மயங்கி அவள் தந்த எச்சில் பழத்தை உண்ட பகவான், இந்த ஜென்மத்தில் அவரோடு பேசி மகிழ்வதில் வியப்பொன்றும் இல்லையே! அன்பு என்ற ஒன்றை அவர் மேல் வைத்தால் தன்னையே தரும் தயாபரன் அல்லவா அந்த மாயவன்..?! அன்பே உருவான நம்பிகள் கோயிலுக்குள் நுழைந்தார். எதேச்சையாக வலது பக்கம் அவரது பார்வை சென்றது. அங்கு அவர் என்ன கண்டாரோ தெரியாது.
தன்னை மறந்து வலது பக்கமாக விழுந்து விழுந்து வணங்கத் தொடங்கினார் நம்பிகள். அவரது கண்களில் அருவியைப் போல நீர் வழிந்தபடி இருந்தது. ‘நாராயணா வரதா...’ என்று அவர் நா உச்சரித்தது. அருகில் இருந்தவர்கள் இதைக் கண்டு மலைத்துப் போனார்கள். நம்பிகளிடம் சென்று ‘‘சுவாமி! இப்படி நீங்கள் ஆனந்தப் பரவச நிலையை அடையக் காரணம் என்ன? எதைக் கண்டு இப்படி திக்குமுக்காடிப்போய் இருக்கிறீர்கள்.?’’ என்று கேட்டார்கள்.
அவர் தனது விரலை நீட்டி எதையோ காண்பித்தார்.அங்கிருந்தவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. புரியவுமில்லை. ‘‘அங்கே ஒன்றுமில்லையே சுவாமி...’’ ‘‘உங்களுக்குத் தெரியவில்லையா! அங்கு சங்கு சக்கரங்களைக் கையில் ஏந்திக் கொண்டு திருமகளாம் பெருந்தேவி தாயாரின் வலது கையைப் பற்றிக் கொண்டு தேவர்களும் முனிவர்களும் தொழ நமது தேவாதி தேவன் வரதன் உல்லாசமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பாருங்கள்! பாருங்கள்!’’ அந்தத் திசையை வணங்கிய படியே சொன்னார் நம்பிகள்.
‘‘சுவாமி! எங்களால் வரதனைக் காண முடியவில்லை. ஆனால், வரதனைக் கண்டு பேசி மகிழும் தங்களைக் கண்டதையே பெரும் பாக்கியமாகக் கருதுகிறோம்...’’ என்றபடி அனைவரும் அவர் பாதத்தில் விழுந்தார்கள்.
‘‘புரியுதா கண் ணா..? இந்த திருக்கச்சி நம்பிகள் எம்பெருமான் வரதருடன் பேசி அவரைப் பார்த்துப் பழகி மகிழ்ந்தவர்! கடவுளோட பேசினவங்க இருக்காங்களானு தொடர்ந்து காலம் காலமா மக்கள் கேட்டுட்டு இருக்காங்க இல்லையா..? ஒவ்வொரு காலத்துலயும் அதுக்கான வாழும் உதாரணங்களை அந்தப் பெருமாளே மக்களுக்கு காட்டிட்டு இருக்கார் இல்லையா..? அப்படி ஆயிரம் வருடங்களுக்கு முன்னாடி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலா வாழ்ந்தவர்தான் திருக்கச்சி நம்பிகள்...’’ பக்தியுடன் சொன்னார் நாகராஜன்.
‘‘அது மட்டுமா..? வரதரோட அன்புத்தொல்லை தாங்காம நம்பிகள் ஊரைவிட்டே அல்லவா போகப் பார்த்தார்...’’ பக்தியில் கரைந்தபடி தன் பங்குக்கு ஆனந்தவல்லி சொன்னாள். கண்ணன் வியப்புடன் இருவரையும் மாறி மாறி பார்த்தான். ‘‘தாத்தா... தாத்தா... பாட்டி ஏதோ சொல்றாங்களே... அதைப் பத்தியும் கொஞ்சம் சொல்லுங்களேன் ப்ளீஸ்...’’ கெஞ்சினான்.
அத்திவரதரைப் பார்க்க வரிசையில் நின்றிருந்த நாகராஜன் புன்னகைத்தார். அவர் உதடுகள் கதையை சொல்லத் தொடங்கியது...இரவு அர்த்த ஜாமத்தில் வரதர் கோயிலை விட்டு வெளியில் வந்தார் திருக்கச்சி நம்பிகள்.
அவரது முகத்தில் ஆனந்தம் தாண்டவமாடியது.இருக்காதா என்ன? உலகில் உள்ள அனைவருக்கும் ஒரே துணையாக இருக்கும் பரம்பொருள் அவரை தனது பேச்சுத் துணையாகக் கொண்டுவிட்டாரே... அதனால்தானே அன்று வரதரோடு பல மணி நேரங்கள் பேசி மகிழ முடிந்தது!
பரந்தாமனோடு பேசிக் கொண்டிருந்ததில் அவருக்கு நேரம் போனதே தெரியவில்லை. இரவு வெகு நேரம் ஆனபிறகுதான் வரதர் அவருக்கு விடை கொடுத்தார்.இருள் அவர் கண்களைக் கரித்தது. தடுமாறிய அந்த மகானது திருவாய் அவரையும் அறியாமல் ‘‘வரதா!’’ என்று முணுமுணுத்தது. அவ்வளவுதான். ‘‘இதோ வந்துவிட்டேன் சுவாமி!’’ என்று கையில் தீப்பந்தம் ஏந்தியபடி ஒரு சிறுவன் அவரருகில் ஓடி வந்தான்!
தன் சிரசில் நம்பிகளின் திருப்பாதுகைகளை அவன் தாங்கிக் கொண்டிருந்தான். அந்தப் பாதுகையை அவரது பாதத்தின் அருகில் வைத்தான்.‘‘சுவாமி! எனது பெயர் வரதன். இவ்வூரே எனது சொந்த ஊர். உங்களைப்பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால், பகவானோடு பேசி மகிழும் தங்களைக் காணும் பாக்கியம் இன்றுதான் எனக்குக் கிட்டியிருக்கிறது. அதுவும் தங்களுக்கு உதவும் மகத்தான பேறுடன். தயவுசெய்து தங்களது இல்லம் வரை தீப்பந்தம் ஏந்தி வரும் வாய்ப்பை இந்தச் சிறியவனுக்குத்தாருங்கள்...’’ என்றபடி கை கூப்பினான். நம்பிகள் அவனை உற்றுப் பார்த்தார். அழகான கண்கள். அகண்டு விரிந்த மார்பு. நெற்றியில் கோபி சந்தன திலகம். இடையில் ஒற்றை வேஷ்டி. உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் திருமுகம். இதற்கு முன் இதே ஊரில் இப்படியொரு தேஜஸ்ஸான சிறுவனை அவர் கண்டதில்லை! ஆச்சர்யம் அவரைச் சூழ்ந்தது.
‘‘சுவாமி! பந்தம் ஏந்தி தங்களது இல்லம் வரை துணையாக வந்து உதவலாமா என்று கேட்டேன்...’’ சிறுவன் தன் கோரிக்கையை நினைவுபடுத்தினான். ‘‘வ்..வ...வா... வரலாமே...’’ அவனைக் கண்ட ஆச்சரியத்தில் நம்பிகளின் வார்த்தைகள் தந்தி அடித்தன. இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.
மனிதர்களிடம் அமையப் பெறாத பல தெய்வீக லட்சணங்கள் அந்தச் சிறுவனிடம் இருந்ததை நம்பிகள் கண்டார். இருவருக்குமிடையே நிலவிய மவுனம் அந்தச் சிறுவனின் அழகை ரசிக்க அவருக்கு வெகுவாக உதவியது. ‘உதவட்டுமா..?’ என்ற அவனது குரல் பல நாட்களாகக் கேட்டுப் பழகிய குரலாகவும் தெரிந்தது. யாரென்று யோசித்தார். எதுவும் புரிபடவில்லை. அதற்குள் நம்பிகளின் இல்லம் வந்துவிட்டது. நம்பிகள் முன்னே சென்று கதவைத் திறந்துவிட்டு சிறுவனுக்கு நன்றி சொல்வதற்காகத் திரும்பினார்.அதற்காகவே காத்திருந்தவன் போல் அந்தச் சிறுவன் அருகில் இருந்த ஆணியில் தீப் பந்தத்தை சொருகிவிட்டு மின்னலைப் போல மறைந்தான்.
நொடியில் நிகழ்ந்துவிட்ட அந்த நிகழ்வைக் கண்ட நம்பிகள் இயல்புக்கு வர பல நிமிடங்கள் ஆனது. சுயநினைவை அடைந்ததும் ‘‘அந்தோ... கெட்டேன்!’’ என்று உரக்க கத்தி அழுதார் அந்த மகான். ‘‘எந்த தெய்வத்தை வேதங்களும் முனிவர்களும் தேடித் திரிகின்றதோ அந்த தெய்வத்தை என் அடிமையைப் போல வேலை வாங்கிவிட்டேனே! இந்த பாவம் கங்கையில் நீராடினாலும் போகாது... எந்த ஒரு பரிகாரத்தாலும் நீங்காது.
இப்படிப்பட்ட பாவம் செய்த பாவியான நான் இனி இந்த காஞ்சியில் இருக்க தகுதியற்றவன். இப்போதே நான் திருவேங்கடமலைக்குச் செல்கிறேன். ஒரு வேளை நான் இங்கேயே தங்கினால் வரதன் இதுபோல் அன்புத் தொல்லைகளால் மேலும் என்னை பெரும் பாவியாக்கி விடுவான்!இனி எனக்கு வேங்கடநாதன்தான் ஒரே கதி! பட்டதெல்லாம் போதும். இனி இந்த வரதனும் வேண்டாம் அவன் பரிவும் வேண்டாம்...’’ அழுதபடியே முடிவெடுத்தார் திருக்கச்சி நம்பிகள்!
(கஷ்டங்கள் தீரும்)
ஜி.மகேஷ்
ஓவியம்: ஸ்யாம்
|