அப்பா ஊட்டி தோட்டத்திலும் அம்மா காளான் பண்ணையிலும் வேலை பார்க்க...



மகன் ஜெர்மனியில் ஃபுட்பால் விளையாடிவிட்டு திரும்பியிருக்கிறார்!

‘‘பொதுவா பேரன்ட்ஸ் என்ன சொல்வாங்க..? ‘என் பையன் எது படிக்கிறதா இருந்தாலும், சாதிக்கிறதா இருந்தாலும் இங்கயே செய்யட்டும்... வெளியூர்லாம் வேண்டாம்...’ இப்படித்தானே?

அப்படித்தான் எங்கம்மாவும் சொன்னாங்க. ஆனா, அதை மீறி நான் ஜெர்மன் போயிட்டு திரும்பியிருக்கேன்!’’ உற்சாகமாகச் சொல்கிறார் ஊட்டியைச் சேர்ந்த ராகுல். 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கால்பந்து போட்டியில் இந்தியா சார்பாக விளையாடியவர் இவர்! ‘‘எங்கப்பா ரவிச்சந்திரனும் ஃபுட்பால் ப்ளேயர்தான். சின்ன வயசுல கால்பந்து விளையாடியிருக்கார். ஸோ, அப்பாதான் என் முதல் கோச். நிறைய டிப்ஸ் கொடுத்திருக்கார். நிறைய பாடங்கள் சொல்லித் தந்திருக்கார்.

ஊட்டிதான் எங்களுக்கு சொந்த ஊர். இங்க ஒரு டிரஸ்ட் தோட்டத்துல அப்பா வேலை செய்யறார். அம்மா பேரு ராதா. அவங்க காளான் பண்ணைல வேலை பார்க்கறாங்க...’’ என இன்ட்ரோ கொடுக்கும் ராகுலுக்கு 7வது படிக்கும்போது ஃபுட்பாலில் ஆர்வம் ஏற்பட்டதாம்.

‘‘8வது, 9வது, 10வதெல்லாம் சென்னை டான் போஸ்கோ ஸ்கூல்ல படிச்சேன். அம்மாவுக்கு நான் அவங்க கூடவே இருக்கணும்னு ஆசை. அதனால ப்ளஸ் 1, ப்ளஸ் 2வை ஊட்டிலயே படிச்சேன். என்னை வெளியூர் அனுப்ப அம்மா தயாரா இல்ல. ஸோ, காலேஜும் ஊட்டிலதான்.

ஊட்டி ஆர்ட்ஸ் காலேஜுல பிஏ எகனாமிக்ஸ் சேர்ந்ததும் கல்லூரி ஃபுட்பால் டீம்ல சேர்ந்தேன். நல்லா பயிற்சி எடுத்துக்கிட்டேன். காலேஜ் முடிச்சதும் விளையாட்டு ஆசிரியர் பயிற்சிக்கு போகணும்னு பாரதிதாசன் பல்கலைக்கழகத்துல முயற்சி செஞ்சேன்.

ஆனா, அதுக்கான காலக்கெடு முடிஞ்சுடுச்சு. அதனால மாஸ்டர் டிகிரி பண்ணலாம்னு இருக்கேன்...’’ என்ற ராகுல் ஆறு முறை மாவட்ட அளவில் கால்பந்து போட்டியில் பங்கேற்றிருக்கிறார். இருமுறை மாநிலங்கள் அளவில் கலந்து கொண்டிருக்கிறார். இதன் பிறகே ஜெர்மனுக்கு சென்றிருக்கிறார்.

‘‘தமிழகம், அரியானா, தில்லி... இப்படி பல இடங்கள்ல ஏகப்பட்ட செலக்‌ஷன் நடந்தது. அதையெல்லாம் கடந்து நானும் என் கல்லூரில இன்னும் ரெண்டு பேரும் செலக்ட் ஆனோம். ஜெர்மனில ஆறு பேருக்கான கால்பந்துல கலந்துகிட்டு திரும்பியிருக்கேன். தொடர்ந்து படிக்கணும். அப்படியே இனி வரும் போட்டிகள்லயும் கலந்துகிட்டு விளையாடணும். இதுதான் இப்ப என் லட்சியம்...’’ என ராகுல் முடிக்க, மகனைத் தட்டிக் கொடுத்தபடி ரவிச்சந்திரன் பேசத் தொடங்கினார்.

‘‘என் மனைவி மட்டும் கொஞ்சம் சரின்னு சொல்லியிருந்தா ராகுல் இன்னும் சாதிச்சிருப்பான். பரவால்ல. இனியும் சாதிக்கத்தானே போறான்..? என் மனைவியை குறை சொல்ல முடியாது. ஒரே பையன். தன் கூடவே இருக்கணும்னு அம்மா நினைக்கறது இயல்புதானே?

ராகுலை ஃபுட்பாலோடு அத்லெட்டாகவும் ஆக்க நினைச்சேன். ஆனா, என்னை மாதிரியே அவனுக்கும் கால்பந்துலதான் ஆர்வம்! இன்னும் நிறைய நிறைய சாதிச்சு எங்களுக்கு மட்டுமில்ல... இந்த நாட்டுக்கும் பெயர் வாங்கிக் கொடுப்பான்னு உறுதியா நம்பறேன்!’’ என்ற ரவிச்சந்திரன் கடைசியாக ஒன்று சொன்னார்.‘‘எங்க போட்டோ எல்லாம் போடாதீங்க. ராகுல் போட்டோவை மட்டும் போடுங்க!’’ தந்தையின் ஆசையை நிறைவேற்றி விட்டோம்!

ஷாலினி நியூட்டன்