Face to Face வாசகர்கள் கேள்விகள் குஷ்பூ பதில்கள்



திமுகவிலேயே இருந்திருந்தால் எம்பி ஆகியிருக்கலாமே என யோசித்ததுண்டா..?

தஞ்சாவூர் சாந்தி கமலா தியேட்டரில் 1991ம் ஆண்டு  ‘சின்னதம்பி’ படத்தின் வெற்றிவிழா. அங்கே மாடியில் நீங்கள் நின்று கை அசைத்தபோது கீழே நின்றிருந்த நூற்றுக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். அப்போதிருந்த உங்கள் மனநிலை என்ன?
- க.கமலக்கண்ணன், சென்னை - 78.

அந்த நாள் இப்பவும் பசுமையா ஞாபகத்துல இருக்கு. நீங்களும் அதை நினைவுல வைச்சு கேட்டதுக்கு தேங்க்ஸ் கமலக்கண்ணன் சார். என் வாழ்க்கைல மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டு அதுதான். ‘சின்னதம்பி’ ரிலீஸ்! அன்னைக்கு நான் மாடில நின்னு கை அசைச்சப்ப தமிழக மக்கள் எனக்கு கோயில் கட்டுவாங்கனு கொஞ்சமும் நான் நினைச்சுப் பார்க்கலை.

மதுரை ஏர்போர்ட்டுக்கு போயிருந்தப்ப அங்கிருந்த கூட்டத்தினர் என் பெயரை சொல்லிட்டிருந்தாங்க. எனக்கு எதிர்ப்பு தெரிவிக்கறாங்கனு
நினைச்சு ஓடி ஒளிய முயற்சி பண்ணினேன். அப்ப பிரபு சாரும் வாசு சாரும் என்னைப் பார்த்து சிரிச்சுகிட்டே, ‘அவங்க எல்லாரும் உன் ரசிகர்கள். அத்தனை பேரும் உன்னைப் பாராட்டறாங்க’னு சொல்லி தைரியப்படுத்தினாங்க.

தியேட்டர்லயும் அதே அளவுக்கு கூட்டத்தைப் பார்த்ததும் என் மனசுல எதுவும் ஓடல. ப்ளாங்கா இருந்தேன்.ஆனா, ஒரேயொரு விஷயம் மைண்ட்ல இருந்தது. ‘சின்னதம்பி’ தயாரிப்பாளர் கே.பாலு சார், இயக்குநர் பி.வாசு சார், பிரபு சார், அப்புறம் கோடிக்
கணக்கான என் ரசிகர்களுக்கு மனப்பூர்வமான நன்றி...இதைத்தான் அப்பவும் இப்பவும் எப்பவும் சொல்லிட்டிருக்கேன்!

திமுகவிலேயே தொடர்ந்து இருந்திருந்தால் எம்பி ஆகியிருக்கலாமே என எப்பொழுதாவது யோசித்ததுண்டா..?
- ஜி.பிரேமா குரு, சென்னை - 94.

சத்தியமா இல்ல! எந்த இடத்துக்குப் போனாலும் அங்க வளர்ச்சி இருக்கணும்னு நிச்சயம் ஆசைப்படுவோம். ஆசை இருக்கணும். ஆனா, பேராசை இருக்கவே கூடாது!திமுகவோ... காங்கிரஸோ... எனக்கு எம்பி சீட் கொடுப்பாங்கனு அங்க போகலை! எல்லாத்துக்கும் ஒரு நேரம்  காலமிருக்கு. எந்த நேரம் சரியா இருக்கோ... அப்ப எனக்கு கிடைக்கவேண்டிய  பதவி நிச்சயமா தேடி வரும்னு நம்புறேன்!

சினிமா, அரசியல், குடும்பம், குழந்தைகளுக்காக நேரத்தை செலவிடுவது... எது உங்களுக்கு முக்கியம் என நினைக்கிறீர்கள்?
- பி.சாந்தா, மதுரை - 14. & எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்.

குடும்பத்துக்காக நேரம் செலவழிப்பதுதான்! ஏன்னா ரெண்டு பெண் குழந்தைகளுக்கு நான் தாய். அதுல ஒருத்திக்கு இப்ப 19 வயசு. இன்னொருத்திக்கு 16+. இந்த நேரத்துல அவங்க ரெண்டு பேருக்குமே தாயின் அன்பும் அரவணைப்பும் 24 மணி நேரமும் அவசியம்னு நினைக்கறேன்.

இதுக்காக மக்களுக்கு சேவை செய்வதில் இருந்து பின்வாங்கி இருக்கேன்னு அர்த்தமில்ல! சினிமா, அரசியல், குடும்பம் எல்லாத்தையும் என்னால ஈசியா பேலன்ஸ் பண்ண முடியும். அந்த தன்மை எங்கிட்ட இருக்குனு நினைக்கறேன்; நம்பறேன். ஆனா, ஒரு தாயா என் கடமையை சரிவர செய்யலைனா... என்னால எப்படி மக்களுக்கு சரிவர கடமைகளைச் செய்ய முடியும்?

அரசியலில் களமிறங்கிய கமலின் வேகம், ரஜினியின் பொறுமை பற்றி?
- சங்கீதா சரவணன், மயிலாடுதுறை.

ரெண்டு பேரையும்  ஒப்பிட்டுப் பார்க்க விரும்பல. ரஜினி சார் இன்னும் அரசியலுக்கே வரல! முதல்ல அவர்  அரசியலுக்கு வரட்டும். அப்புறம் இருவரையும் ஒப்பிட்டுப் பேசலாம்!

‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ மகாலட்சுமி அண்ணி பற்றி..?
- மயிலை கோபி. சென்னை - 83.

மகாலட்சுமி  ஒரு ஃபிக்‌ஷன் கேரக்டர். அவ ரொம்ப தைரியசாலி. குடும்பத்தை மொத்தமா  பாத்துக்கணும். அவளோட கணவர் வெளிய ஒர்க் பண்றார். வீட்ல நடக்கற பிரச்னைகளை  அவர்கிட்ட சொல்லக்கூடாது. ஸோ, மகாலட்சுமி கிட்டத்தட்ட என்னை  மாதிரி. ஆனா, என் பர்சனல் லைப்ஃல நான் இன்னும் கொஞ்சம் போல்டா  இருக்கேன்.

எந்த ஒரு பிரச்னை வந்தாலும் அதை சந்திக்கக்கூடிய திறமை, தைரியம்  மகாலட்சுமிக்கு இருக்கு. அதே திறமை, தைரியும் குஷ்பூகிட்டயும் இருக்கு!  இதனாலயே மகாலட்சுமில அப்பப்ப குஷ்பூ எட்டிப் பார்க்கறாங்க!

திரைப்படங்கள் பார்ப்பது உண்டா? சமீபத்துல பார்த்து ரசித்த படம் எது?
- அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை - 72.

உண்டாவா... தியேட்டர்ல போய் படம் பார்க்கறதுதான் வேலையே! அதுல கிடைக்கிற சந்தோஷம் வேற எதுலயும் கிடைக்கறதில்ல. அதுவும் கைல பாப்கார்ன் வைச்சு கொறிச்சுகிட்டே படம் பார்க்கற சுகம் இருக்கே... அது தனி! எப்பவும் படம் பார்க்க எங்க குடும்பத்துல இருக்கிற 12 பேரும் சேர்ந்துதான் போவோம். பார்க்கவே திருவிழாவுக்கு போற மாதிரி இருக்கும். எல்லா ஜானர் படங்களுக்கும் போவோம்.

ஆனா, பசங்களுக்கு ஹாரர், அனிமேஷன் படங்கள்ல தனி ஈடுபாடு உண்டு. ‘அவெஞ்சர்ஸ்’ சீரிஸ்ல கடைசி படம்னு தெரிஞ்சு என் பசங்க அப்படி அழுதாங்க! ரொம்ப வருஷங்களுக்குப் பிறகு என் கணவர் சுந்தர் சாரும் உடன் வர ‘நட்பே துணை’ பார்த்தோம். பொதுவா கூட்டத்துல போய் படம் பார்க்கறது அவருக்குப் பிடிக்காது. நாங்க கட்டாயப்படுத்தி கூட்டிட்டு போனோம்.

சிம்பிளா சொல்லணும்னா, கலகலப்பா போற எல்லா படங்களும் எங்களுக்குப் பிடிக்கும்! கருத்து சொல்ற படங்கள்னா கொஞ்சம் யோசிச்சுதான் பார்ப்போம்!

கலைஞர் கருணாநிதி, அன்னை சோனியா காந்தி - இருவரில் யாரை உங்களுக்கு மிகவும் பிடிக்கும்?
- தா.சைமன் தேவா, விநாயகபுரம்.

நல்ல கேள்வி. அரசியல் பயணத்துல என் ஆசானும் குருவும் டாக்டர் கலைஞர் அவர்கள்தான். அப்புறம்தான் காங்கிரஸ்ல சேர்ந்தேன். அரசியல்னா என்ன? அரசியல் நாகரீகம்னா என்ன? மேடைன்னா என்ன? மேடைப்பேச்சுனா என்ன..? இப்படி எல்லாத்தையும் எனக்குக் கத்துக் கொடுத்தது திமுகதான்.

ரெண்டு பேர்ல யாரைப் பிடிக்கும்னா... வெல்... பதிலே தெரியாத நிலைலதான் இருக்கேன். ஆனா, என் அரசியல் குரு டாக்டர் கலைஞர் என்பதில் எந்த மாற்றமும் இல்ல. அன்னை சோனியாகாந்தி மேல மிகப்பெரிய அளவுல மரியாதை வைச்சிருக்கேன். வெளிநாட்ல பிறந்து வளர்ந்தாலும் இந்திய மருமகளா ஆனபிறகு இந்தியக் குடிமகளாதான் அவங்க இருக்காங்க. 19 வருஷங்களா காங்கிரஸ் கட்சியின் தலைவியா பொறுப்பு வகிச்சு திறம்பட கட்சியை நடத்தற அவங்ககிட்ட பிரதமர் பதவியைக் கொடுத்தப்பகூட அதை ஏற்க மறுத்துட்டாங்க!

கட்சியை மட்டும் வழிநடத்தறேன்... பிரதமர் பதவில ஆசை இல்லனு அவங்க சொன்னது இப்பவும் காதுல ஒலிச்சுட்டு இருக்கு. நாட்டுக்காக தன் மாமியார், கணவர்னு நெருங்கிய உறவுகளை எல்லாம் பறிகொடுத்த நிலைலயும் இந்தியாவை அவ்வளவு நேசிக்கறாங்க!
ஸோ, இந்தியாவின் மிகச்சிறந்த பெண்மணியா அன்னை சோனியாகாந்தியை மட்டுமே நினைக்கறேன்!

(பதில்கள் தொடரும்)