பகவான்-37



சாக்ரடீஸை கொன்றவர்கள்!

பகவானின் ஜெட் விமானம் வானில் பறக்க நேபாள அரசு தடை விதித்து விட்டது. இதைத் தொடர்ந்து வேறு ஏதேனும் விமானத்தில் இடம் பிடித்து, நேபாளத்தை விட்டு வெளியேற ஓஷோ விரும்பினார். ஐரோப்பாவில் இருந்த அவரது பக்தர்கள் இதற்கான ஏற்பாடுகளை பெருமுயற்சி எடுத்து செய்து கொண்டிருந்தார்கள்.

நேபாளத்தின் மன்னரே கைவிட்டுவிட்ட நிலையில், நேபாளத்தில் அவருக்கு பாதுகாப்பு இல்லை. எனவே, முதலில் நேபாளத்தில் இருந்து வெளியேறி, தாய்லாந்துக்குப் போய்விடலாம். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து, அவரை ஐரோப்பாவுக்கு அழைத்துக் கொள்ளலாம் என்பது பக்தர்களின் திட்டம்.

ஆனால் -தாய்லாந்திலும் பகவானுக்கு சூழல் சரியாக அமையவில்லை.கடைசியாக ஐக்கிய அரபு நாடுகளின் தலைநகரான அபுதாபிக்குச் செல்ல அவருக்கு அனுமதி கிடைத்தது. அபுதாபியில் இருந்து ஜெட் விமானம் மூலம் ஐரோப்பாவுக்கு போய்க் கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர்.
ஆரம்பத்தில் ஒத்துழைத்த அபுதாபி விமான நிலைய அதிகாரிகள், ஏனோ அங்கு ஓஷோ வந்து சேர்ந்தபிறகு ஏகத்துக்கும் கெடுபிடி காட்டினார்கள். இவர்களுடைய ஜெட் விமானத்துக்கு எரிபொருள் நிரப்புவது தாமதமானது.

விமான நிலையத்தில் காத்திருந்த பகவானும், அவரது பக்தர்களும் விசாரணைக்கு உள்ளானார்கள்.“நீங்கள் ஆரஞ்சு நிற உடை அணிந்திருக்கிறீர்கள். கழுத்தில் மாலை போட்டிருக்கிறீர்கள். உங்களைக் கண்டால் ஏதோ தீவிரவாதக் குழுவினரைப் போல இருக்கிறீர்கள்...” என்றெல்லாம் விமானநிலைய விசாரணை அதிகாரிகள் இஷ்டத்துக்கும் குற்றம் சாட்டினார்கள்.

பகவான், பொறுமையாக தன்னைப் பற்றியும் தன்னுடைய அமைப்புகளையும், பக்தர்களைப் பற்றியும் அவர்களுக்கு எடுத்துரைத்தார்.“மாலை என்பது இந்துக்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் கூட அணிந்து கொள்ளலாம். இது அவரவர் மதத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது...” என்றார் பகவான்.

ஒருவழியாக பகவானின் ஜெட் விமானத்துக்கு அனுமதி வழங்கினார்கள்.ஓஷோவும், அவரது குழுவினரும் கிரீஸில் இருக்கும் க்ரீட் என்கிற தீவில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டனர்.அந்தத் தீவில் ஒரு சினிமா இயக்குநரது வீட்டில் ஓஷோ தங்கினார். அவர் கிரேக்க நாட்டில் ஒரு மாதம் தங்கியிருக்க ஆரம்பத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

அந்தக் கால அவகாசத்தை அதிகரிக்க கிரேக்க பிரதமரின் மகன் முயற்சித்துக் கொண்டிருந்தார்.ஆனால் -கிரேக்க ஊடகங்களோ, அமெரிக்க ஊடகங்களைப் போலவே நடந்துகொண்டன. ஓஷோவை ஒரு மந்திரவாதி போல சித்தரித்து எழுதி, மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தின. அமெரிக்க அதிகாரத்தைக் கைப்பற்ற ஓஷோ முயற்சித்தார் எனவும், அதுபோலவே இப்போது கிரேக்கத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றவே இங்கு முகாமிட்டிருப்பதாகவும் கற்பனைச் செய்திகளைக் கட்டவிழ்த்து விட்டன.

குறிப்பாக பாதிரியார்கள் ஊடகங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தனர். ஓஷோ, மதங்களுக்கு எதிரானவர், அவர் கிரேக்கத்தில் தங்கியிருந்தால் தங்கள் பிழைப்புக்கு வேட்டு வைப்பார் என்று மதம் சார்ந்த குருமார்கள் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தனர்.

ஊடகங்களின் இந்த அடாத குற்றச்சாட்டுக்குகளுக்கு வலு சேர்ப்பதாக ரஜனீஷ் அங்கே நிகழ்த்திய உரை ஒன்று அமைந்து விட்டது துரதிருஷ்டவசமானது.ஓர் உரையின்போது அவர் சிந்தனையாளர் சாக்ரடீஸ் குறித்து பேசிய பேச்சு சர்ச்சைக்கு உரியதாகி விட்டது.

“சாக்ரடீஸ் என்கிற மிகப்பெரிய அறிவாளியின் பேச்சைக் கேட்டிருந்தால், உலகின் தலைசிறந்த அறிவுஜீவிகள் கிரேக்கத்தில்தான் இருந்திருப்பார்கள்.ஆனால் -சாக்ரடீஸை விஷம் கொடுத்து இந்த நாடு கொன்றுவிட்டது.அவரால் பெருமை பெற்ற கிரேக்கம், அவரைக் கொன்றதன் மூலம் தன்னுடைய ஒட்டுமொத்த புகழையும் இழந்து விட்டது. கிரேக்கம் தற்கொலை செய்துகொண்டதற்கு ஒப்பாக சாக்ரடீஸின் கொலை அமைந்து விட்டது.

சாக்ரடீஸ் கேள்விகளைக் கேட்டார். மக்களையும் கேள்வி கேட்கத் தூண்டினார். இப்போது நானும் அதற்காகத்தான் இங்கே வந்திருக்கிறேன்.என்னைக் கொல்லவும் உலகம் முழுக்க முயற்சிகள் நடக்கின்றன. சாக்ரடீஸால் செய்ய முடியாததைச் செய்ய நான் முயற்சிப்பேன்!”இவ்வாறு ஓஷோ மக்கள் மத்தியில் பேசினார்.

அவரது பேச்சு, மக்களிடையே குற்றவுணர்ச்சியைத் தோற்றுவித்தது.இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு சாக்ரடீசுக்கு விஷம் வைத்து அப்போதைய அரசு கொன்றதற்கு போதிய எதிர்ப்பை மக்கள் தெரிவிக்கவில்லையோ என்று தங்களைத் தாங்களே மீளாய்வு செய்யத் தொடங்கினார்.பகுத்தறிவு பிறந்துவிட்டால் மதங்கள் ஆட்டம் காணத் தொடங்கிவிடுமே?! மதத்தை வைத்தே தங்கள் பிழைப்பை நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு வேறு மார்க்கமில்லாமல் போய்விடுமே?எனவே, பாதிரியார்கள் கிளர்ந்து எழுந்தார்கள்.

“ஓஷோவை விரட்டு...” என்று கோஷமிட்டார்கள். கிரேக்க இளைஞர்களின் நெஞ்சில் நஞ்சு வைக்கவே ஓஷோ இங்கு வந்திருக்கிறார் என்று அலறினார்கள்.மத அடிப்படைவாதிகள் கிரேக்க அரசை அச்சுறுத்தத் தொடங்கினார்கள்.ஓஷோ வெளியேறாவிட்டால், குண்டு வைத்து அவரைத் தீர்ப்போம் என்று பகிரங்கமாகவே பிரதமரை மிரட்டினார்கள்.

இதற்கிடையே ஓஷோ தங்கியிருந்த வீட்டுக்கு முன்பாக நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். அவர்கள் கல்லெறிந்தும், கையில் வெடிகுண்டை வைத்துக் கொண்டும் மிரட்டிக் கொண்டிருந்தனர்.கிரேக்க அரசாங்கம் இவர்களது அச்சுறுத்தலைக் கண்டு அஞ்சியது. எனவே, ஓஷோவை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான ஆணையையும் பிறப்பித்தது. சம்பவ இடத்துக்கு போலீஸ் படை வந்தது.

ஓஷோவை வலுக்கட்டாயமாக ஒரு வண்டியில் போலீஸ் ஏற்றியது. ஏதோ ஓர் ஆவணத்தைக் கொடுத்து, அதைப் படித்துப் பார்க்கக் கூட வாய்ப்பு தராமல் அதில் கையெழுத்திடுமாறு அவசரப்படுத்தியது. ஓஷோவின் பக்தர்கள் சிலர், வண்டியைப் பின்தொடர்ந்து வந்துகொண்டே இருந்தனர். அவர்கள் கையிலிருந்த வீடியோ கேமிராக்கள் அனைத்தையும் பதிவு செய்துகொண்டே இருந்தன.

போலீஸ் கொடுத்த ஆவணத்தை ஓஷோ படிக்க முயன்றார். போலீஸ்காரர் ஒருவர் அதைத் தடுத்து, கையெழுத்து மட்டும் இடுங்கள் என்று அவரை மிரட்டினார். ஓஷோ அந்தக் காகிதக் கற்றைகளை வெளியே வீசியெறிந்தார்.காவல் நிலையத்துக்கு ஓஷோ கொண்டு செல்லப்பட்டார்.அதற்கு முன்பாகவே அங்கே கிறிஸ்தவப் பாதிரிமார்கள் சிலர் திரண்டிருந்தார்கள்.

“இவரை இப்படியே கப்பலில் ஏற்றி, அவரது நாடான இந்தியாவுக்கு அனுப்புங்கள்...” என்று தலைமைப் பாதிரியார் ஒருவர் கத்திக் கொண்டிருந்தார்.அவரிடம் பேச பகவான் முற்பட்டார்.“இரண்டாயிரம் ஆண்டுகளாக நிலைபெற்றிருக்கும் உங்கள் மதத்தை இரண்டே வாரங்களில் நான் அழித்துவிடுவேன் என்று எப்படி நினைக்கிறீர்கள்?” என்று ஓஷோ கேட்ட கேள்விக்கு, அந்தப் பாதிரியாரிடம் பதில் இல்லை.

அவசர அவசரமாக ஓஷோ வை இந்தியாவுக்கு அனுப்ப கப்பல் தயாராகிக் கொண்டிருந்தது.“எங்கள் பகவானுக்கு சொந்தமாக ஜெட் விமானம் இருக்கிறது. அதில் அவர் விரும்பிய இடத்துக்குச் செல்ல நீங்கள் அனுமதிக்க வேண்டும். அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது...” என்று பகவானின் பக்தர்கள் காவல்துறையிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

இதற்கிடையே கிரேக்கப் பத்திரிகையாளர்கள் ரஜனீஷைச்சந்திக்க வந்தனர்.அவர்களைச் சந்திக்க விடாமல் காவல்துறை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. பத்திரிகையாளர்களின் எதிர்ப்பையடுத்து, பகவான் அழைத்து வரப்பட்டார். அவரை ஒரு தீவிரவாதி மாதிரி போலீஸ் நடத்தியது. சுற்றியும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் புடைசூழ பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்.

“கிரேக்க அரசு கோழைத்தனமாக நடந்துகொள்கிறது...” என்று எடுத்த எடுப்பிலேயே அதிரடியாக ஆரம்பித்தார். அவரைப் பேசவிடாமல் தடுக்க அதிகாரிகள் முயற்சித்தனர். அதையும் தாண்டி அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்தார். தன்னுடைய சொந்த ஜெட் விமானத்தில், தான் வெளியேற அனுமதிக்க வேண்டும். அதற்கான உரிமை தனக்கு உள்ளது என்றார்.

“வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கிரேக்கம், அமெரிக்காவுக்கு அஞ்சுகிறதா?” என்று அவர் கேட்ட கேள்வி, அரசாங்கத்தை நடுங்க வைத்தது.ஒருவழியாக ஏதென்ஸ் நகரிலிருந்து ஜெட்டில் வெளியேற ரஜனீஷுக்கு அனுமதி வழங்கியது கிரேக்க அரசு.

ஆனால் -ரஜனீஷின் பாஸ்போர்ட்டில், ‘கிரேக்க அரசுக்கு எதிராகப் பேசியதால் நாடு கடத்தப்படுகிறார்...’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் காரணத்தை பேனாவால் அடித்துவிட்டு, “இப்போது முத்திரையிடுங்கள்!” என்று அதிகாரிகளிடம் சொன்னார் பகவான்.

உடனடியாக மேலதிகாரிகளிடம் கலந்தாலோசித்து, வேறு புதிய பிரச்னைகள் வேண்டாமென்று, பகவான் கேட்டுக் கொண்டபடியே முத்திரை இட்டு விமானம் கிளம்ப அனுமதித்தார்கள்.பகவானைத் தாங்கிக் கொண்டு விண்ணில் பறந்தது ஜெட்.எங்கே போவது என்றுதான் யாருக்குமே தெரியவில்லை!

(தரிசனம் தருவார்)

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்