புதிய அரசு உடனடியாக தீர்க்க வேண்டிய டாப் 10 பிரச்னைகள்!



வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது பத்தொன்பதாவது மக்களவைத் தேர்தல். இந்தியா தனது ஜனநாயகப் பாதையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. ஆயிரம் பிரச்னைகள், சறுக்கல்கள், கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் இந்திய சிவில் சமூகம் மெல்ல முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

இந்தியா பல்வேறு விதமான மக்கள் திரள்கள், பலநூறு பண்பாடுகள், மத நம்பிக்கைகள், இனக்குழு மரபுகள் ஆகியவற்றின் கருத்தியல்களால் ஆன தொல்நிலம்.

இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலைக்கு இந்திய தேசியத்தை இழுக்கின்றன என்றால் மறுபுறம் உலகம் முழுதும் இருந்து வரும் புதிய நவீன சிந்தனைகள், அரசியல் சூழல்கள் கொடுக்கும் நிர்ப்பந்தங்கள் இன்னொருபுறம் சூழ்ந்து அழுத்துகின்றன. இவற்றுக்கு இடையேதான் நமது சமூக - அரசியல் - பொருளாதார நலத் திட்டங்கள் முதல் எந்த ஒன்றையும் செய்ய வேண்டி இருக்கிறது.

இப்போது அமையவுள்ள புதிய அரசு என்னவெல்லாம் செய்ய வேண்டியதாக உள்ளது என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.

தேசிய அளவில் உள்ள பிரச்னைகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதற்கு எப்போதுமே மாற்றுக் கருத்து இல்லை.

*இந்தியாவின் அயலுறவுக் கொள்கையில் சில முக்கியமான, ஆரோக்கியமான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியது அவசியம். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக, அதாவது உலகமயமாக்கலுக்குப் பிறகு இந்தியாவின் அயலுறவுக் கொள்கை என்பது இந்தியாவின் நலன்களை அயல் நாடுகளுக்குத் தாரை வார்ப்பதாகவே உள்ளது.

உலகமயத்தால் நமக்கு சில நன்மைகள் விளைந்திருந்தாலும் அணு ஒப்பந்தம் முதல் பல விவகாரங்களில் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் தங்களுக்குச் சாதகமாக விதிக்கும் பொருளாதார ஒப்பந்தங்களில் மறுகேள்வியின்றி கையொப்பம் இடுவதாகவே கடந்த கால இந்திய அரசுகள் செயல்பட்டிருக்கின்றன.

தன்மானமும் தன்னிறைவும் கொண்ட நாடாக நாம் மாற வேண்டும் என்றால் நம்முடைய குறைந்தபட்ச நலன்களையாவது கேட்டுப் பெறவேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். எனவே, நமது அயலுறவுக் கொள்கைகளை முதலில் பரிசீலிக்க வேண்டும்.

 நாட்டின் நிதி நிலை மோசமாக உள்ளது. அதிலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் தடுமாறியதைப் போல எப்போதுமே தடுமாறியது இல்லை.

உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து சரிந்து வருகிறது. விலைவாசி விண்ணளவு உயர்ந்துள்ளது. ஏழைக்கும் பணக்காரருக்குமான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

புதிய அரசு இதை எல்லாம் மேஜிக் போல் உடனே சீராக்க முடியாது என்றாலும் மக்கள் மைய பொருளாதாரம் என்ற கருத்தை மனதில் வைத்து செயல்பட்டால் நீண்ட கால அளவிலாவது இந்த மாற்றங்கள் நிகழும்.

* விவசாயம் கபளீகரம் செய்யப்பட்டிருக்கிறது. தொழில்துறைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் பாதிகூட விவசாயத்துக்குத் தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. நாம் தொழில்துறையில் எவ்வளவு வளர்ந்திருந்தாலும் இன்னமும் விவசாய நாடுதான். விவசாய மைய பொருளாதார நடவடிக்கைகளே நமக்கு எப்போதும் தேவை.

விளைபொருட்களுக்கு பொதுவான விலை நிர்ணயம் முதல் விவசாய சந்தையில் கார்ப்பரேட்டுகளின் அதீதமான தலையீடு, பூச்சிகொல்லி, உரக் கம்பெனிகளின் அடாவடித்தனம் வரை விவசாயத்துறையில் அதிரடி மாற்றங்கள் செய்ய வேண்டியது உள்ளது. விவசாயத்திலிருந்து மக்கள் வெளியேறுவது நிச்சயம் நமக்கு நல்லதல்ல. இதனை அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த ஆவன செய்ய வேண்டும்.

* தொழில்துறையும் அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி சிறப்பாக இல்லை. அதனால்தான் நமது ஜி.டி.பி பல்லிளிக்கிறது. குறிப்பாக, சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.

கடந்த கால பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற பொருளாதார நடவடிக்கைகளால் ஒருபுறம் இவை திவாலாக, மறுபுறம் பெரும் பண முதலைகள் வங்கிகளில் பணத்தை அபேஸ் செய்துகொண்டு வெளிநாட்டுக்கு ஓடுகிறார்கள்.
TIIC போன்ற மாநில அரசுகளின் நிதி நிறுவனங்கள் இந்த சிறிய தொழில்முனைவோருக்கு நிதியுதவி செய்துவந்தன.

சர்வதேச நிதி அமைப்புகள் இப்படியான பிராந்திய அரசுகளின் நிதி அமைப்பை சிதைப்பதில் முழு மூச்சாக உள்ளன. முதலில் மாநில அளவிலான அரசுகளின் நிதி அமைப்புகளை வலுப்படுத்த மத்திய அரசு உதவ வேண்டும். ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும். சிறுதொழில் முனைவோருக்கான நிதி வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.

* இந்தியக் கடற்கரைகளை இணைக்கும் சாகர்மாலா, மறைநீர், நவீன வனச்சட்டங்கள், நவீன சூழலியல் சட்டங்கள் ஆகியவற்றின் மூலம் நமது நாட்டு இயற்கை மற்றும் தாதுவளங்கள் அனைத்தையும் பன்னாட்டு பகாசுர கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடுவதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகின்றன.

அமையவிருக்கும் புதிய அரசு இவற்றை எல்லாம் நெறிப்படுத்த வேண்டும். இந்தியாவின் எதிர்கால சந்ததிகளை கருத்தில் கொண்டு இவற்றை எல்லாம் மனிதநேயத்தோடு திட்டமிட வேண்டும்.

* கல்வியை மாநிலப் பட்டியலுக்கு முழுமையாகக் கொண்டு செல்ல வேண்டும். கல்வி வணிகமயமாவது உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களில் ஆய்வுப் படிப்புகளுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, வெறும் தொழிற்கல்வி மட்டுமே வழங்கப்படு
வதைப் போன்ற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வளர்ச்சிக்கு எதிரான இப்படியான கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் மறுசீரமைக்கப்பட வேண்டும். நீட் போன்ற ஜனநாயகத்துக்கு விரோதமான கல்வியை வியாபாரமாக்கும் சட்டங்களை நீக்க வேண்டும்.

* பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர் போன்றோருக்கான பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். அவசியம் எனில் இவற்றுக்கென புதிய சிறப்புச் சட்டங்களை இயற்றலாம். ஒட்டுமொத்த தேச வளர்ச்சிக்கு ஒவ்வொரு சமூகத்தின் பங்களிப்பும் முக்கியம்.

எனவே, இவர்களை உழைப்பிலிருந்து, பொருளாதாரப் பங்களிப்பு மற்றும் நலன்களிலிருந்து, சமூக செயல்பாடுகளிலிருந்து வெளியேற்றி, முடக்க நினைக்கும் அடிப்படைவாதக் கருத்துகளைக் கடுமையாக ஒடுக்க வேண்டும்.தமிழகத்தைப் பொறுத்தவரை இதுவரையான அரசுகள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடே நடக்கின்றன என்ற மனநிலை இங்கு பலருக்கும் உள்ளது. தமிழகத்தின் நலன் காக்கப்படும் நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

* காவிரிப் பிரச்னைக்கான தீர்வு என்பது இப்போது வரை எட்டப்படவில்லை. உச்சநீதி மன்றமே வழிகாட்டிய பிறகும், காவிரி நடுவண் ஆணையம் இறுதித் தீர்ப்பைக் கொடுத்த பிறகும் ஒவ்வொரு ஆண்டும் குறித்த காலத்தில் நீர் தராமல் வஞ்சித்துக்கொண்டிருக்கிறது கர்நாடகம். அமையவிருக்கும் புதிய அரசு இதற்கான நிரந்தரத் தீர்வுக்கான ஏற்பாடுகளைச் செய்ய முன்வர வேண்டும்.

* ராமேஸ்வரம் மீனவர் பிரச்னையும் தீராத தலைவலிகளில் ஒன்றாக உள்ளது. சர்வதேச சட்டம் முதல் எந்த ஒன்றையும் மதிக்காமல் இலங்கை அரசு நடந்து வருகிறது. இதற்கு எதிராக இந்திய அரசு எப்போதுமே நடவடிக்கை எடுப்பதில்லை. ஒவ்வொருமுறையும் பலி விழும்போது மவுனமாக இருப்பதே அரசின் நடவடிக்கையாக இருக்கிறது.

இந்த அணுகுமுறையை அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைளை உடனடியாக அரசு மேற்கொள்ள வேண்டும்.
* ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, கூடங்குளம் அணு உலை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போன்ற மக்களால் எதிர்க்கப்படும் திட்டங்களை மத்திய அரசு வம்படியாகத் திணிக்க முயலக் கூடாது.                                      

இளங்கோ கிருஷ்ணன்