தல புராணம்-கோஷா மருத்துவமனை



‘திராயல் விக்டோரியா காஸ்ட் அண்ட் கோஷா ஆஸ்பிட்டல் ஃபார் உமன்’ என்பது அரசினர் கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை எனப் பெயர் மாற்றப்பட்டிருந்தாலும் சென்னைவாசிகளுக்கு அன்றும் இன்றும் கோஷா மருத்துவமனைதான்.

மெட்ராஸில் பெண்களுக்காகவே திறக்கப்பட்ட பிரத்யேக மருத்துவமனை இது. திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை ஒட்டியே ஐந்து ஏக்கர் பரப்பில் வீற்றிருக்கும் இம்மருத்துவமனை 134 வருடங்களைக் கடந்து இன்றும் சிறப்பாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது.

உண்மையில், பெண்களுக்காக ஒரு மருத்துவமனை திறக்கப்பட வேண்டும் என்கிற எண்ணம் 1880களில் தோன்றியதே ஆச்சரியமான விஷயம்தான்.
இதற்கு மூல காரணமாக இருந்தவர், மேரி ஆன் டகோம்ப் ஷார்லீப் என்ற பெண்மணி. இங்கிலாந்தில் 1845ல் பிறந்த இந்தப் பெண்மணி இருபது வயதில் திருமணம் முடித்து, தனது வக்கீல் கணவரான வில்லியம் ஷார்லீப் உடன் மெட்ராஸ் வந்து சேர்ந்தார்.

கணவர் வில்லியம், இங்கே பயிற்சி வக்கீல்களுக்காக ‘மெட்ராஸ் ஜூரிஸ்ட்’ என்ற சட்ட இதழை நடத்தி வந்தார். அவருக்கு உதவியாக இருந்தார் மேரி.
அப்போது இந்தியப் பெண்கள் பிரசவத்தின்போது படும் துன்பங்கள் பற்றி சர் ஜோசப் ஃபேரர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இவர், லண்டனில் இருந்த இந்திய மருத்துவ வாரிய அலுவலகத்தின் தலைவராக இருந்தார்.

அந்தக் கட்டுரையில் ஆண்களால் நிரம்பிய இந்திய மருத்துவ உலகில், பிரசவத்திற்கு வரும் பெண்கள் சிக்கலான நேரத்தில் உதவிகள் கேட்கவே தயங்கினர் என்பது உள்ளிட்ட பல விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தார். இதைப் படித்த மேரி மிகுந்த வருத்தமுற்றார். இதனால், பெண்களுக்கு சேவையாற்ற மருத்துவம் படிக்க விரும்பினார். ஆனால், அன்று ஐரோப்பா முழுவதும் மருத்துவப் படிப்பில் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. சேர்க்கலாமா? வேண்டாமா? என்கிற விவாதமே நடந்து கொண்டிருந்தது.

இங்கே தலைமை மருத்துவராக இருந்த ஈ.ஜி.பால்ஃபோரிடம் பேசினார் மேரி. அவர் அனுமதியளிக்க, 1875ம் வருடம் மெட்ராஸ் ெமடிக்கல் கல்லூரியில் சேர்ந்தார். இவருடன் மூன்று ஆங்கிலோ இந்தியப் பெண்களும் சேர்ந்தனர். மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைக்கான உரிமம் எனப்படும் மூன்று வருட LMS டிகிரி பெற்றார்.

பின்னர், தன் குழந்தைகளுடன் லண்டன் திரும்பியவர் அங்குள்ள ராயல் ஃப்ரீ மருத்துவமனையில் சேர்ந்தார். இதை பிரிட்டனின் முதல் பெண் மருத்துவரான எலிசபெத் காரெட் ஆண்டர்சன் நடத்தி வந்தார். அவர், பெண்களுக்கான மருத்துவப் பள்ளியையும் நடத்திக் ெகாண்டிருந்தார்.
இதில் சேர்ந்த மேரி, லண்டன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். டிகிரியை தங்கப் பதக்கத்துடன் பெற்று வெளியேறினார்.

ஸ்காலர்ஷிப்பும் பெற்றார். இந்நேரமே ராணி விக்டோரியாவைச் சந்தித்து இந்தியாவில் பெண் மருத்துவர்கள் இல்லாததால் ஏற்படும் பிரச்னைகளை எடுத்துரைத்தார். தொடர்ந்து இந்தியா வந்தவர், மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். இதேநேரம், ஆண் மருத்துவர்களின் மேற்பார்வையில் இயங்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பாத பெண்களுக்குத் தனியாக ஒரு மருத்துவமனை நிறுவத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கான முன்முயற்சியை மேற்கொண்டார் மேரி ஷார்லீப்!

இதேபோல, அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த லார்டு டஃப்பரின் மனைவி லேடி டஃப்பரின் இந்தியாவில் உள்ள பெண்களின் உடல்நிலை மோசமடைவது பற்றியும், குழந்தைப்பேறு காலத்தில் அவர்களை மேம்படுத்தவும் நல்ல திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென ராணி விக்டோரியாவிடம் கேட்டிருந்தார்.

இதற்காக இந்தியாவிலுள்ள கொடை வள்ளல்களிடம் இருந்து நிதி வசூலித்து மருத்துவ உதவிகளுக்காக அளித்தார். இதற்கு டஃப்பரின் நிதி என்று பெயர். இப்படியாக, லேடி டஃப்பரின் 1885ம் வருடம் மார்ச் 6ம் தேதி மெட்ராஸின் முக்கிய நபர்களாய் விளங்கிய கஸ்தூரி பாஷ்யம் ஐயங்கார், திவான் பகதூர் ஆர்.ரகுநாத ராவ், விஜயநகர அரசர், நீதிபதி முத்துஸ்வாமி ஐயர் மற்றும் ராஜா சர் சவலை ராமஸ்வாமி முதலியார் ஆகியோருடன் கூட்டம் நடத்தினார். அதில், சாதி இந்து மற்றும் கோஷா பெண்களுக்காக ஒரு மருத்துவமனை அமைப்பதென முடிவெடுக்கப்பட்டது.

கோஷா என்றால் பர்தா அணிந்த முஸ்லிம் பெண்களைக் குறிக்கும். அன்று பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்ததால் இவர்கள் ஆண் மருத்துவர்களிடம் மருத்துவம் பார்த்துக்கொள்ளவில்லை. அதனாலேயே கோஷா பெண்களுக்கென மருத்துவமனையும் தேவையாக இருந்தது.

கூட்டம் முடிந்ததும் அடுத்த நொடியிலேயே எல்லோரிடமிருந்தும் ரூ.70 ஆயிரம் சேகரிக்கப்பட்டது. 1885ம் வருடம் டிசம்பர் 7ம் தேதி லேடி டஃப்பரின் மருத்துவமனையைத் திறந்து வைத்தார்.இம்மருத்துவமனை முதலில் நுங்கம்பாக்கத்திலுள்ள மூர் தோட்டத்திலிருந்து செயல்
படத் தொடங்கியது. ராணி விக்டோரியாவின் அனுமதியுடன், ‘தி ராயல் விக்டோரியா காஸ்ட் அண்ட் கோஷா ஆஸ்பிட்டல் ஃபார் உமன்’ எனப் பெயர் வைக்கப்பட்டது. முதல் கண்காணிப்பாளராக மேரி ஷார்லீப்பே இருந்தார்.

இதன்பின்னர், 1890ம் வருடம் சேப்பாக்கம் பகுதியில் மெட்ராஸ் மாகாண அரசு மருத்துவமனைக்கு இடம் ஒதுக்கியது. அத்துடன், ரூ.10 ஆயிரம் நிதியுதவி செய்தது. கூடவே, மருந்துகள் விநியோகிக்கவும் ஒப்புக் கொண்டது. இதில், பிரதான கட்டடம் கட்ட வெங்கடகிரி அரசர் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தார். 1890ல் ஜூன் மாதம் மருத்துவமனை இப்போதைய திருவல்லிக்கேணி பகுதிக்கு மாறியது. அன்றிலிருந்து இன்று வரை இதே இடத்தில் பல்வேறு விரிவாக்கங்களுடன் செயல்பட்டு வருகிறது.

ஆனால், இந்த மருத்துவமனை அன்று எண்பது படுக்கைகளுடன் முஸ்லிம் மற்றும் உயர் சாதி இந்து பெண்களுக்காக மட்டுமே செயல்பட்டதாக, ‘Our Medical Work in India’ கட்டுரையில் குறிப்பிடுகிறார் டாக்டர் அன்னா சாரா குக்ளர்! ‘‘இதில், கிறிஸ்துவர்களும், பிற சாதி இந்துக்களும் அனுமதிக்கப்படவில்லை...’’ என்கிறார் அவர்.  

இதன்பிறகு, விஜயநகர அரசர் ரூ.37 ஆயிரம் நன்கொடை அளிக்க 1889ம் வருடம் கண்காணிப்பாளருக்கான குவார்ட்டர்ஸ்
தயாரானது. பின்னர், 1901ம் வருடம் நர்ஸ்களுக்கான குவார்ட்டர்ஸை கிருஷ்ணதாஸ், பாலமுகுன்தாஸ் என்பவர்கள் கட்டித் தந்தனர்.1902ம் வருடம், ‘மெட்ராஸ் மகளிர் ஞாபகார்த்த ராணி விக்ேடாரியா நிதி’ மூலம் ரூ.50 ஆயிரம் கிடைக்க உள்நோயாளிகளுக்கான வார்டுகள் கட்டப்பட்டன. தொடர்ந்து, 1904ம் வருடம் மகப்பேறு வார்டை பாஷ்யம் ஐயங்காரின் மனைவி திறந்து வைத்தார்.

1911ம் வருடம் ரூ.3 ஆயிரம் செலவில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. பின்னர், பொது நன்கொடை மூலம் விளக்குகள் போடப்பட்டன.
இதுவரை மருத்துவமனையின் உள்நிர்வாகத்தை டஃப்பரின் நிதிக் குழுவே கவனித்து வந்தது. பிறகு, 1921ம் வருடம் மருத்துவமனையை அரசு ஏற்று நடத்தத் தொடங்கியது. இப்போது முதல் கண்காணிப்பாளராக டாக்டர் மேரி பீடன் வந்து சேர்ந்தார்.

பின்னர் வந்த டாக்டர் லாஸரஸ் முதல் இந்தியக் கண்காணிப்பாளர் ஆவார். அவருக்குப் பிறகு டாக்டர் மதுரம் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஆனார். இவர்கள் இருவரும் அடுத்தடுத்துசிறப்பாகப் பணியாற்றிய இந்தியக் கண்காணிப்பாளர்கள் ஆவர்.1922ம் வருடம் வேல்ஸ் இளவரசர் மெட்ராஸிற்கு விஜயம் செய்தார். இதையொட்டி இம்மருத்துவமனையினுள் குழந்தைகளுக்கென ஒரு மருத்துவமனை கட்டத் தீர்மானிக்கப்பட்டது.

அதற்காக, ஒரு கமிட்டியும் அமைக்கப்பட்டது. பொதுமக்கள், விஜயநகர அரசர், திருவாங்கூர் மற்றும் கொச்சின் மகாராஜாக்கள், புதுக்கோட்டை ராஜா, சிவகங்கை ஜமீன்தார் ஆகியோர் அளித்த நன்கொடைகள் மூலம் ரூ.3.9 லட்சம் நிதி திரட்டப்படடது. 1934ம் வருடம் மெட்ராஸ் மாகாண கவர்னர் சர் பிரடெரிக் ஸ்டான்லி கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். பின்னர் 1936ம் வருடம் அன்றைய கவர்னர் எர்ஸ்கின் மனைவி மர்ஜோரியே எர்ஸ்கின் கட்டடத்தைத் திறந்து வைத்தார். 52 படுக்கைகளுடன் இந்தக் குழந்தைகள் மருத்துவமனை செயல்படத் தொடங்கியது.

இதன்பிறகு, ஆர்தர் ஹோப் மாகாண கவர்னராக வந்தார். இவரின் மனைவி ஹோப் 1941ம் வருடம் இன்னொரு கட்டடத்தைத் திறந்து வைத்தார். இந்த லேடி ஹோப் பிளாக் இன்றும் சிறப்பாக இயங்கி வருகிறது. இதற்கிடையே வெளிநோயாளிகளுக்கென ஒரு பிளாக் புதிதாக கட்டப்பட்டது.
இதன்பிறகான விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார் மருத்துவமனையின் டீன் டாக்டர் ஆர்.நாராயண பாபு.

‘‘1946ம் வருஷம் படுக்கை வசதி 367 ஆக அதிகரிக்கப்பட்டுச்சு. ஆரம்பத்துல மகப்பேறு மருத்துவம் மட்டும் பார்க்கக் கூடிய மருத்துவமனையா இருந்திருக்கு. அப்புறம், பெண்களுக்கு வரக்கூடிய நோய்கள வச்சு ஒவ்வொரு துறையா வளர்ந்திருக்கு.

சுதந்திரத்திற்குப் பிறகு, 1948ம் வருஷம் அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துமனை எனப் பெயர் மாற்றமாச்சு. 1952ல் பொது மருத்துவத் துறையும், அடுத்து காது, மூக்கு தொண்டை பிரிவும், பல் மருத்துவமும் தொடங்கப்பட்டுச்சு. பிறகு, பெண்கள், குழந்தைகளுக்கான பிரத்யேக மருத்துவமனையா மாறுச்சு.

கடந்த 2007ம் வருஷம் சமூக மகப்பேறியியல் நிறுவனமா தரம் உயர்ந்துச்சு. இப்ப கடந்த நாலு வருஷமா ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைஞ்சு இந்த மருத்துவமனை செயல்பட்டு வருது. இதனால, அரசுப் பொது மருத்துவமனையாகவும் ஆகியிருக்கு. அதனால, எல்ேலாரும் இங்க சிகிச்சைக்கு வர்றாங்க. சீக்கிரமே அரசு மருத்துவக் கல்லூரிக்கென மருத்துவமனை வந்திடும். அதன்பிறகு, பழையபடி அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனையா செயல்படும்...’’ என்றார். தொடர்ந்து மருத்துவமனையின் பேராசிரியர் மருத்துவர் விஜயாவிடம் பேசினோம்.

‘‘இந்த மருத்துவமனையின் முதல் சிறப்பே மகளிர் சிறப்பு சிறுநீரியல் துறைதான். இது இந்தியாவிலேயே முதல்முறையாக இங்கதான் தொடங்கப்பட்டுச்சு. அடுத்து, கர்ப்பப்பை புற்றுநோய் வருமுன் கண்டறியும் மையம் இருக்கு. அதற்கான சிறப்புப் பயிற்சி மையமும் இயங்கிட்டு வருது.

இந்தச் சிறப்பு மையம் தமிழகத்துல இங்க மட்டுமே இருக்கு. இதனால, தமிழகம் முழுவதும் இருந்து டாக்டர்கள் இங்க வந்து பயிற்சி எடுத்திட்டுப் போவாங்க. அப்புறம், கடந்த வருஷம் செயற்கை கருத்தரிப்பு மையம் ஆரம்பிச்சிருக்கோம். இந்தச் சிகிச்சைக்கு வெளியே 50 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஆனா, இங்க இலவசம்தான். கூடிய சீக்கிரம் டெஸ்ட் டியூப் முறையும் வரப் போகுது. இதுக்கு அரசு ஒப்புதல் வழங்கியிருக்கு.

அப்புறம், தாய்ப்பால் வங்கி, பேறு காலப்பிரிவு, அவசர சிகிச்சைப்பிரிவு, கர்ப்ப காலத்தில் வலிப்பு வரும் பெண்களுக்கான பிரத்யேகப் பிரிவுனு எல்லாமே சிறப்பா நடந்திட்டு இருக்கு...’’ என்றவர், மருத்துவமனை பற்றிய தகவல்களை அடுக்கினார்.

‘‘இங்க மாசத்துக்கு சுமார் 800 பிரசவம் நடக்குது. கர்ப்பப்பை கோளாறுனு 2 ஆயிரம் பேர் வர்றாங்க. அப்புறம், மாசம் 7 ஆயிரத்து 500 குழந்தைகள் சிகிச்சைக்கு வந்து போறாங்க. கடந்த வருஷம் மட்டும் ஐந்தரை லட்சம் பேர் சிகிச்சைக்கு வந்திருக்காங்க. மொத்தம்   முப்பத்தியாறு மருத்துவர்களும், 150 செவிலியர்களும், நூறுக்கும் மேற்பட்ட பணியாளர்களும் பணிபுரியறாங்க!’’ நிறைவாகச் சொல்கிறார் விஜயா!

பேராச்சி கண்ணன்  

ஆ.வின்சென்ட் பால்