டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்!ஜப்பான் அரசு இந்தத் தமிழரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது

‘‘ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு எவ்வளவு செலவு பண்றீங்க..? அதை விட குறைஞ்ச செலவுல உங்க டூவீலர் 200 கி.மீ. வரை போகும்னு சொன்னா எப்படித் துள்ளிக் குதிப்பீங்க? அப்படியொரு துள்ளலைத்தான் நான் செய்திருக்கேன்!’’ நிமிர்ந்து சொல்கிறார் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த சவுந்தரராஜன் குமாரசாமி.

‘‘இப்ப அதிகபட்சம் 60 கி.மீ.தான் வண்டிங்க மைலேஜ் கொடுக்குது. பெரும்பாலான வண்டிங்க இதுக்கும் கீழதான். இந்த உண்மை டூவீலர் ஓட்டற எல்லாருக்குமே தெரியும். வண்டிக்கு நாம போடற பெட்ரோல்ல 30%தான் எரிபொருள். மத்ததெல்லாம் புகை, கூலன்ட்னு சுற்றுச்
சூழலைக் கெடுக்கிற கார்பன் கலந்தவைதான்.

அதனாலதான் இதுக்குத் தீர்வா ஹைட்ரஜன் இன்ஜினை உருவாக்கி இருக்கேன்!’’ பெருமையாகச் சொல்லும் சவுந்தரராஜன் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ‘‘வெள்ளக்கோவில்தான் எனக்கு சொந்த ஊர். விவசாயம் சரியத் தொடங்கினதும் அப்பா பவர்லூம் தொழில் ஆரம்பிச்சார்.

அவர் கூடவே சேர்ந்து வேலை செய்தேன். அங்க இருக்கற மெஷினை எல்லாம் நான்தான் பராமரிச்சுட்டு இருந்தேன். மெக்கானிக், மோட்டார் வேலைகள்ல எனக்கு ஆர்வம் அதிகம். பவர்லூம் மெஷின்கள்ல எதுனா பிரச்னைனா இறங்கி சரி செய்துடுவேன். அப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமா எனக்கு மெஷின் வேலைகள் பழக்கமாச்சு.

படிச்சது 11ம் வகுப்புதான். அப்பா பிஸினஸ் என்னை மேற்கொண்டு மெக்கானிக்கல், எலக்ட்ரானிக் வேலைக்குள்ள கொண்டு வந்துச்சு. அப்பதான் லேசர் மூலமா எப்படி மின்சாரம் கொண்டு வரலாம் என்பதை கண்டுபிடிச்சேன். அதுக்கு பேட்டன்ட் ரைட்ஸ் கூட எடுத்தேன். அப்துல் கலாம் ஐயா என்னை நேர்ல சந்திச்சு பாராட்டினார்!

2008லதான் இந்த ஹைட்ரஜன் இன்ஜின் வேலைகளுக்குள்ள இறங்கினேன். பத்து வருஷங்கள் ஓடிருச்சு. கல்யாணம் பத்தி கூட யோசிக்கலை. ஏன் நாம எரிபொருளுக்கு இவ்ளோ செலவு செய்யணும் என்கிற கேள்விதான் என்னையும் சிந்திக்க வெச்சுது. உலகம் முழுக்க இதுல லட்சக்
கணக்கான விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்துட்டு இருக்காங்க. நிறைய ஹைட்ரஜன் இன்ஜின்கள் இருக்கு. ஆனா, எதுவுமே ஆன் போர்டுல ஹைட்ரஜனை உற்பத்தி செய்து இன்ஜின் ஓட்டக்கூடிய மெஷின்களா இல்ல. என் கண்டுபிடிப்பே அதுதான். ‘சூப்பர்சோனிக் ஹைட்ரஜன் ஹையர் எபிசியன்ஸி இன்ஜின்’.

இதைப் பத்தி கேள்விப்பட்ட ஜப்பான், என்னைப் பாராட்டி சான்றிதழ் கொடுத்தது! அதோட உலக அளவுல பேட்டன்ட் ரைட்ஸும் ஜப்பான் விஞ்ஞானிகள் எனக்கு பெற்றுக் கொடுத்திருக்காங்க. முறைப்படி இந்த இன்ஜினை அங்க வெளியிடவும் அனுமதி வழங்கி கவுரவிச்சிருக்காங்க. 7 மாதங்களா அங்க கம்பெனி நடத்திட்டு இருக்கேன்!’’ புன்னகைக்கும் சவுந்தரராஜன், தன் இன்ஜின் குறித்து விளக்கினார்.  

‘‘ஒரு ஹைட்ரஜன் நிரப்பும் ஃபில்லிங் ஸ்டேஷன் அமைக்க ரூ.15 கோடி வரை செலவாகும். அதுல 300 கி முதல் 400 கி வரை மட்டுமே சேமிக்க முடியும். ஆனா, நான் கண்டுபிடிச்சிருக்கிற இன்ஜினுக்கு எந்த ஃபில்லிங் ஸ்டேஷனும் வேண்டாம்! வெறும் ஃபேக்டரிகள்ல பயன்படுத்துற டிஸ்டில்டு வாட்டர் ஊத்தினாலே இந்த இன்ஜின் ஹைட்ரஜனை உற்பத்தி செய்துடும்!

100சிசி வண்டிக்கு 10 லிட்டர் டிஸ்டில்டு வாட்டர் போதும். ஒரு கிலோ ஹைட்ரஜனை உற்பத்தி செய்துக்கும்! 10 லிட்டர் டிஸ்டில்டு வாட்டர் ரூ.50 முதல் ரூ.70 மட்டுமே. இது டூவீலருக்கு 200 கிமீ வரை மைலேஜ் கொடுக்கும். லாரி, பஸ்ஸுக்கு 10 முதல் 15 கிமீ கொடுக்கும். இதை கப்பல்
களுக்கும் பயன்படுத்தலாம்.

முக்கியமான விஷயம், இதுல கார்பன் கிடையாது. அதனால சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாது. விரைவில் ராயல்டி அடிப்படைல மோட்டார் கம்பெனிகளுக்கும் பிற நாடுகளுக்கும் இதை விற்பனை செய்யப் போறோம்!’’ என்று சொல்லும் சவுந்தரராஜன், பெரிய அளவில் இதை உற்பத்தி செய்ய தன்னிடம் பணமில்லை என்றும், இதை அறிந்த ஜப்பான் அரசு எவ்வித கேள்வியும் இன்றி தனக்கு உதவ முன்வந்திருப்பதாகவும் சொல்கிறார்.