சனா என்னும் வைரஸ்!எனக்கே ஆச்சர்யமா இருக்கு. மலையாளத்தை விட தமிழ்லதான் என்னை அதிகம் கொண்டாடறாங்க!

ஆமாம். 1994ம் ஆண்டு மோகன்லால் - ஷோபனா நடிப்பில் வெளிவந்த ‘தென்மாவின் கொம்பத்து’ (ரஜினி நடித்த ‘முத்து’ படத்தின் ஒரிஜினல்) மலையாளப் படத்தில் இடம்பெற்ற ‘கருத்த பெண்ணே...’ பாடல்தான் இப்போது இணையத்தில் வைரல்!
ம்ஹும். அதே பாட்டு அல்ல. இக்கால ஸ்டைலில் ராப் கலந்து சனா மொய்டுட்டி என்ற கேரளப் பெண் பாடிய வெர்ஷன்தான் இப்போது பட்டையைக் கிளப்புவது!

போதாதா..? சனா ஆர்மி, ஃபேன் பேஜ், கருத்த பெண்ணே ஆர்மி... என இளசுகள் தொடை தட்டுவது ஒரு பக்கம் என்றால்... இதே பாடலுக்கான வடிவேலு வெர்ஷன், மீம்ஸ் என அதகளப்படுவது மறுபக்கம்! யார் இந்த சனா..?‘24’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘மெய் நிகரா...’ பாடலைப் பாடிய அதே பெண்தான்! ‘‘எனக்கே ஆச்சர்யமா இருக்கு. மலையாளத்தை விட தமிழ்லதான் என்னை அதிகம் கொண்டாடறாங்க! ஆக்சுவலா நான் கேரளால பிறந்து மும்பைல வளர்ந்தவ. கம்ப்யூட்டர் இன்ஜினியர். டான்ஸ், கவிதை, போட்டோகிராஃபி... இப்படி எதையும் விட்டு வைக்கலை. எப்பவும் இயற்கையோடுதான் நேரத்தைக் கழிப்பேன்.

அம்மா நல்லா பாடுவாங்க. அதனால 5 வயசுலயே இசையை கத்துக்க ஆரம்பிச்சேன். இந்திய சினிமா பாடல்களை கேட்பது ஹாபி. அதை நானே பாடி ரிக்கார்ட் பண்ணிப்பேன். ஏ.ஆர்.ரஹ்மான் சார் பாடல்கள்னா அவ்வளவு பிடிக்கும்...’’ என்று சொல்லும் சனா, வனிதா விருது, ஏஷியன் விஷன் விருது... உட்பட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். ‘மெய் நிகரா...’ மட்டுமல்ல ‘மொகஞ்சதாரோ’ இந்திப் படத்தில் இடம்பெற்ற ‘து ஹை...’ பாடலும் இவர் பாடி ஹிட் அடித்ததுதான்.  

‘‘நிறையப் பாடணும், சினிமா டைட்டில்ல என் பெயர் வரணும்... இதெல்லாம் என் ஆசை! ஒரு மியூசிக் ட்ரூப் வைச்சிருக்கேன். அதுல இருக்கிற எல்லாருமே தமிழகத்தைச் சேர்ந்தவங்கதான். அவங்க அடிக்கடி ‘வேற லெவல்’னு சொல்லுவாங்க.அந்த சொல் எனக்குப் பிடிச்சிருந்தது. அதை அப்படியே எடுத்து ‘கருத்த பெண்ணே...’ ஒரிஜினல் வெர்ஷனுக்குள்ள ‘கருப்புதான் ரொம்ப அழகு’ என்கிற வரிகள் வர்ற மாதிரி ராப் வரிகளை சேர்த்தேன்.

இந்தியா முழுக்க இப்ப அதைப் பத்தி பேசறாங்க. சந்தோஷமா இருக்கு!’’ என்று சொல்லும் சனா, மராத்தி, இந்தி உட்பட பல இந்திய மொழித் திரைப்படங்களில் பாடியிருக்கிறார்; பாடி வருகிறார்.

ஷாலினி நியூட்டன்