நான் நடிகையாகப் போறேன்..!திருவாரூர் பாபு

சுவர்ணாவுக்கு பளிச்சென ஒரு விழிப்பு வந்தது. அது வழக்கமாக எப்போதும் வருகிற விழிப்பல்ல… உடலுக்குள் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வந்த விழிப்பு என்பதை மனசு சொல்லியது.

பெண்களுக்கே உரிய முன்ஜாக்ரதை உணர்வுடன் படுக்கையில் இருந்து எழுந்தாள். மணி பார்த்தாள். அதிகாலை ஐந்து.தொடர்ச்சியான படப்பிடிப்பு. சில நாட்களில் விடியவிடிய நடக்கிறது. அதன் காரணமாக ஏற்பட்ட அலுப்பில் இருபதாம் தேதி வரவேண்டிய மென்சஸ் முன்கூட்டியே வந்து விட்டதோ... சுவர்ணா யோசித்தபடியே ஹாலுக்கு வந்தாள்..``செண்பகம்...’’ டச்சப் பெண்ணை அழைத்தாள். குரல் கேட்டு ஹாலில் சுருண்டு படுத்திருந்த அவள் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள். ``மேடம்...’’
``நாப்கின் கொடு...’’

``மேடம்...’’
``நாப்கின் எடுன்னு சொன்னேன்...’’
``தீர்ந்துபோயிட்டு. உங்களுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு. இன்னைக்கு வாங்கிட்டு வரச்சொல்றேன்...’’
சுவர்ணா எரிச்சலானாள். ``வாங்கி வைக்க மாட்டியா..? இப்ப எனக்கு உடனே வேணும். மானேஜர கூப்பிட்டு ரெடி பண்ணு. அப்பதான் ஷூட்டிங் வர முடியும்...’’    

செண்பகா பரபரப்பானாள். செல்போன் எடுத்தாள்.சுவர்ணா அறைக்குள் வந்தாள்.சரியாக அரைமணி நேரம் கழித்து செண்பகா தயங்கியபடி உள்ளே வந்தாள். ``மேடம்…’’ என்ன என்பது போல பார்த்தாள்.``மானேஜர்கிட்ட பேசினேன். ஒரு கார்தான் இருக்காம். ஷூட்டிங்குக்கு டிரிப் அடிக்க வேணுமாம்… அதோட நாப்கின் வாங்கணும்னா காஞ்சிபுரம்தான் போகணுமாம். இங்க மெடிக்கல் ஷாப் எதுவும் கிடையாதாம்... ஒன்பது மணிக்கு கார் அனுப்பறேன்னு சொல்றாரு…’’

``அப்ப பத்து மணிக்குதான் நான் ஷூட்டிங் வரமுடியும் செண்பகா... புத்திசாலித்தனமா யோசிக்க மாட்டியா? கடை திறக்கறப்ப தொறக்கட்டும். இந்த ஊர்ல பொம்பளைங்களே இல்லையா… யார்கிட்டயாச்சும் வாங்க வேண்டியதுதானே...’’
``சரி மேடம்...’’

சுவர்ணா ஜன்னல் கதவுகளைத் திறந்துவிட்டாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப்பசேலென வயல்வெளிகள் கண்களில் அடித்தன. தென்னந்தோப்புகள் வரிசை கட்டி நின்றிருந்தன. ஆற்றுப்படுகையில் தண்ணீர் தளும்பி நின்றது. வேதநல்லூர் கிராமம் அவள் மனதோடு ஒன்றிப் போயிருந்தது. வெள்ளந்தியான மனிதர்கள். படப்பிடிப்புக்கு சிறிதுகூட இடையூறு செய்யாமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.  .
சரியாக அரைமணி நேரம் கழித்து செண்பகா வந்தாள்.

``மேடம்… எங்கேயும் கிடைக்கல. பக்கத்து ஊருக்கு அக்ரி படிக்கற ஸ்டூடண்ட்ஸ் கேம்புக்கு வந்திருக்காங்களாம். அவங்ககிட்டகேட்டு ஒண்ணே ஒண்ணு வாங்கிட்டு வந்திருக்காங்க...’’சுவர்ணா படப்பிடிப்புக்குப் புறப்படத் தயாரானாள்.அரசினர் உயர்நிலைப்பள்ளி அருகே இருந்த மைதானத்தில் படப்பிடிப்பு. சுவர்ணா கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாள்.

செல்ஃபி எடுத்து முழு கெட்டப்பையும் பார்த்துக்கொண்டாள். வித்தியாசமாக இருந்தது.
கலெக்டர் கேரக்டர். வெள்ளை நிற கைத்தறிப் புடவையில் வெளிர் நீல பார்டர் போடப்பட்டிருந்தது. கலெக்டருக்கு யூனிஃபார்ம் உண்டா என்று தெரியவில்லை. ஆனால், படம் முழுக்க இதுதான் அவளது காஸ்ட்யூம் என்று டைரக்டர் சொல்லி விட்டார். அவளுக்கும் பிடித்திருந்தது
``மேடம்... ஷாட் ரெடி!’’ அருகில் வந்தார் டைரக்டர் பிரசாந்த்``இன்னைக்கு மனுநீதிநாள். கலெக்டர் ஆபீஸ்ல பொதுமக்கள்கிட்ட மனு வாங்கறீங்க... அதுதான் ஸீன்…’’  

``ம்...’’ சிரித்தபடி ஷாட் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்தாள். சிம்பிளாக ஆனால் சிறப்பாக இருந்தது அந்த மனுநீதிநாள் செட்டப். பெரிய மேஜை. பக்கத்தில் டவாலி. அவளைச் சுற்றி அதிகாரிகள். மனசுக்குள் நிஜமாகவே கலெக்டராகி விட்ட மாதிரி ஓர் உணர்வு. ஸ்டில் போட்டோகிராபரிடம் தனது செல்போனைக் கொடுத்தாள். ``ஒரு ஸ்டில் எடுங்க… இந்த செட்டப்போட என் கெட்டப் அப்படியே வரணும்!’’
அதேமாதிரியே எடுத்துக் கொடுக்க... பார்த்து திருப்தியாகத் தலையாட்டினாள். புகைப்படத்தை அம்மாவுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினாள். அடுத்த நிமிடம் செல்போன் ஒலித்தது. அம்மா அழைத்தாள்.

``என்னம்மா..’’
``போட்டோ அனுப்பிருக்கே... என்ன போட்டோம்மா?”
``ஒரு படத்துல கலெக்டரா நடிக்கிறேன்...’’``அப்படியா..!’’
அம்மா சந்தோஷமாக சிரிப்பதை இங்கே உணர்ந்தாள்.

``அருமையா இருக்கும்மா. பார்க்கறதுக்கு அப்படியே கலெக்டர் மாதிரியே இருக்கே… எனக்கு ஏதேதோ ஞாபகம் வந்துட்டு...’’
``தெரியும்! அதுக்குதான் உனக்கு அனுப்பிச்சேன்...’’``நான் ஆசைப்பட்ட மாதிரி நீ கலெக்டர் ஆகைலயேம்மா...’’ குரல் ஆதங்கமாக ஒலித்தது.
``என்னம்மா பண்றது… நீ என்னை கலெக்டராக்கணும்னு ஆசைப்பட்ட. ஆனா, அப்பா அவரோட ஆசைய நிறைவேத்திக்கிட்டாரு. பரவால்லம்மா உனக்காகத்தான் இந்தப் படத்தையே ஒப்புக்கிட்டேன். கம்மியான சம்பளம். ஆனா, படத்துல நடிக்க நடிக்க ரொம்ப திருப்தியா இருக்கு. இந்த காஸ்ட்யூம், என் கேரக்டர், நான் பேசற டயலாக் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும்மா.

வழக்கமா ஷூட்டிங் முடிச்சிட்டு வந்து டயர்டுல தூங்கிடுவேன். ஆனா, இந்தப் படத்தோட ஷூட்டிங் முடிச்சிட்டு வந்தா தூங்க முடியாம ஒரு மாதிரி டிஸ்டர்ப்டா இருக்கு. என் கேரக்டர் மட்டுமில்ல… கூட நடிக்கறவங்க கேரக்டர், டைரக்டர் ஷூட் பண்ற விதம்... ஸீன்ல இருக்கற ஸீக்வென்ஸ் எல்லாம் மனச ஏதோ பண்ணிக்கிட்டே இருக்கும்மா... என் லைஃப் டைத்துல த பெஸ்ட் ஃபிலிமா இது இருக்கும்!’’

``அதெல்லாம் இருக்கட்டும்... லைஃப்ன்னா எதையாச்சும் சாதிக்கணும் சுவர்ணா... பேபிம்மான்னா தெலுங்கானா பெத்தபெட்டுல இருக்கற அவ்வளவு பொம்பளைகளுக்கும் தெரியும். இருபது வருஷ சர்வீஸ். நாலாயிரம் பிரசவம் பார்த்திருக்கேன்… உன் நடிப்புத் தொழில்ல அது வராதே…’’
``மேடம் ரெடி...’’ டைரக்டர் குரல் கேட்டது.

``அப்புறமா பேசறேம்மா...’’ லைனை கட் செய்தாள்.படப்பிடிப்பை வேடிக்கை பார்ப்பதற்கு ஏராளமான பள்ளி மாணவிகள் அங்கே நின்றிருந்தார்கள். தயங்கித் தயங்கி அவள் அருகில் வந்தார்கள். ``மேடம்... உங்களோட போட்டோ எடுத்துக்கலாமா..?’’
தலையாட்டினாள்.செல்போனில் படம் எடுத்துக் கொண்டார்கள். பள்ளி மணி அடிக்க... அனைவரும் ஓடினார்கள்.
சில மாணவிகள் மட்டும் போகாமல் நின்றிருக்க… சுவர்ணா அவர்களைப் பார்த்தாள். ``ஏம்மா… நீங்கல்லாம்
ஸ்கூலுக்குப் போகலியா..?’’

அவர்கள் பதில் சொல்லாமல் தங்களுக்குள் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள். ‘போகல’ என்பதாய் தலையாட்டினார்கள்.
``மேடம் ஷாட் ரெடி...’’ குரல் வர சுவர்ணா எழுந்து நடந்தாள்.ஷாட் முடித்து திரும்ப வந்து சேரில் அமர்ந்தாள். அதே மாணவிகளை கவனித்தாள். சத்தமாக அழைத்தாள். ``பாப்பா... இங்க வாங்க!’’அவர்கள் தயங்கித் தயங்கி அருகில் வந்தார்கள்.

``ஏன் ஸ்கூலுக்குப் போகாம இங்க நிக்கறீங்க… ஷூட்டிங் சாயங்காலம் வரைக்கும் இங்கதான் நடக்கும். நீங்க ஸ்கூல் முடிஞ்சு திரும்ப வந்து வேடிக்கை பார்க்கலாம்...’’பதின்மவயதில் ஒரு பெண் அருகில் வந்தாள், தயங்கித் தயங்கிப் பேசினாள். ``மேடம்... அதில்ல... இன்னைக்கு நாங்க ஸ்கூலுக்கு போகக்கூடாது...’’ ``ஏன்..?’’``எங்களுக்கு மென்சஸ்...’’``அதனாலே..?’’அந்தச் சிறுமி தயங்கினாள்.

சுவர்ணாவுக்கு அவள் தயக்கத்தில் ஏதோ செய்தி இருப்பது போலப்பட்டது. ``சும்மா தயங்காம சொல்லும்மா...’’
அந்தப் பெண் தயங்கியபடி சுற்றும்முற்றும் பார்த்தபடி முகத்தில் கலக்கத்தோடு பேசியது. ``எங்ககிட்ட நாப்கின் வாங்க எல்லாம் பணம் கிடையாது. அதனால துணிதான் யூஸ் பண்ணுவோம். சமயத்துல மென்சஸ் அதிகமாயி பெஞ்சுல பட்டுட்டா சார், டீச்சர் எல்லாம் திட்டுவாங்க. அடிப்பாங்க. அதனால பீரியட் நேரத்துல ஸ்கூலுக்கு வரக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க...’’

சுரீரென ஆன்மாவில் அறைந்தது போல இருந்தது சுவர்ணாவுக்கு. இதென்ன அக்ரமம்… பளிச்சென மனசுக்குள் ஒரு ஆவேசம் எழுந்தது. ``ஸ்கூல்ல… பொதுவா எல்லாருக்கும் இப்படித்தானா..?’’ அந்தப் பெண் மற்றவர்களைப் பார்த்தாள். பிறகு தயங்கியபடி சொன்னாள். ``இல்ல மேடம்... எங்களுக்கு மட்டும்தான்…’’அவள் கூறியதன் பொருள் சுவர்ணாவுக்குப் புரிந்தது. கண்களை மூடிக் கொண்டாள். மனசு முழுதும் ஒரு வேதனை வந்து அப்பிக் கொண்டது. அந்தத் தகவலை கிரகித்துக்கொள்ள அவளுக்கு அவகாசம் தேவைப்பட்டது.

சுவர்ணா முகத்தில் காட்டிய உணர்ச்சியைக் கவனித்த அந்தச் சிறுமி பேசினாள். ``இது பல வருஷ பிரச்னை மேடம். எங்க அப்பால்லாம் சேர்ந்து போராடி பார்த்துட்டாங்க. எல்லாருக்கும் மனு அனுப்பிட்டாங்க. அப்பப்ப கவர்மெண்ட் ஆபீஸர்ஸ் வந்து விசாரிப்பாங்க. சமயத்துல ஸ்கூலுக்கு போலீஸ் கூட வரும். ஏதாவது நடக்கற மாதிரி இருக்கும்... ஆனா, ஒண்ணும் நடக்காது…’’

அந்தச் சிறுமிகள் அனைவரும் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்தான விழிப்புணர்வு சிறிதுமின்றி வெள்ளந்தியாய் சிரித்தார்கள்.
சுவர்ணா யோசித்தாள். ஒரு நடிகையாக இதை ஒரு சாதாரண விஷயமாகக் கருதி கடந்து போக அவள் விரும்பவில்லை. செல்போன் எடுத்தாள். வேண்டப்பட்ட ஓர் ஆங்கில செய்தித்தாள் நிருபருக்கு கால் செய்தாள். ``சுரேஷ்… இப்ப நான் காஞ்சிபுரம் பக்கத்துல வேதநல்லூர் கிராமத்துல ஷூட்ல இருக்கேன். இங்க ஒரு பள்ளிக்கூடம் பக்கத்துல ஷூட்டிங்...’’ சரசரவென விஷயத்தைச் சொன்னாள்.

சுரேஷ் பேசினான். ``மேடம்... கிராமத்து பள்ளிக்கூட பிள்ளைங்களுக்கு இலவசமா நாப்கின் தரணும். ஸ்கூல்லயே அத ஸ்டாக் வச்சுக்கணும். அதோட நாப்கின் தேவைப்படற பிள்ளைகள கணக்கெடுத்து அந்த டீடெயில்ஸ் டீச்சர் அல்லது இதுக்குன்னே ஹெட்மாஸ்டர் நியமிச்சிருக்கற ஒரு கோ-ஆர்டினேட்டர்கிட்ட இருக்கணும். அவங்க குறிப்பிட்ட அந்த பிள்ளைங்களோட தொடர்புல இருக்கணும்… அதோட சில ஸ்கூல்ல ஆட்டோமேட்டிக் வெண்டிங் மெஷின், டிஸ்போஸல் மெஷினும் கூட இருக்கு.

இதுக்குன்னு சென்ட்ரல் கவர்ண்மெண்ட் ஸ்கீம் இருக்குன்னு நெனக்கிறேன்... டைரக்டா கலெக்டர் கன்ட்ரோல்ல வரும். நீங்க சொல்ற இன்னொரு விஷயம் மிகப்பெரிய அட்ராசிட்டி மேடம்... நான் ஏரியா ரிப்போர்ட்டர்கிட்ட சொல்லி விசாரிக்கச் சொல்றேன்…’’

சுவர்ணா லைனை கட்செய்தாள். அழகான இந்த கிராமத்து பள்ளியில் இப்படி ஓர் ஏற்றத்தாழ்வா... உடற்கூறு தொடர்புடைய ஒரு விஷயத்தை முன்னிறுத்தி சிறுமிகள் மீது சித்ரவதை... இலவச நாப்கின் எங்கே..? அது ஏன் குறிப்பிட்ட சில குழந்தைகளுக்கு வழங்கப்படவில்லை? அவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த திட்டத்தையே கிடப்பில் போட்டு விட்டார்களா… ஏன் மென்சஸ் நாட்களில் பள்ளிக்கு சிறுமிகளை வரக்கூடாது என்று சொல்கிறார்கள்…

அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் உடம்பு என்ன பாடுபடுத்தும். முப்பது வயது தொட்ட எனக்கே படப்பிடிப்பில் கலந்து கொள்ள இயலவில்லை. சோர்வு வந்து அப்புகிறது. உள்ளுக்குள் ஒரு தடுமாற்றத்தை உணர்கிறேன். சென்னையில் இருந்தால் கட்டாய ஓய்வுதான். இவர்கள் சிறுமிகள்... உடல் உபாதை ஒருபுறமென்றால் இந்த புறக்கணிப்பு அவர்களை உளவியல் ரீதியாக பாதிக்குமே…   

திரும்ப ஷாட் முடித்து விட்டு நாற்காலிக்கு வந்தவள், செல்போனை எடுத்து டுவிட்டர் பக்கத்துக்கு வந்தாள். வார்த்தைகளைக் கோர்த்து அழகான ஆங்கிலத்தில் பதிந்தாள். `ஒரு கிராமத்தில் மாதவிடாய் சமயத்தில் குறிப்பிட்ட சில சிறுமிகள் பள்ளிக்குப் போவதில்லை. வகுப்பறைக்குள் அவர்களுக்கு அனுமதி இல்லை என்று கூடச் சொல்லலாம். சென்னையிலிருந்து ஐம்பது கிலோ மீட்டர் தூரத்தில் வேதநல்லூர் என்கிற கிராமத்தில் இப்படி ஒரு சமூக அவலம்…’``மேடம்.. ஷாட் ரெடி…’’

டுவிட் செய்துவிட்டு செல்போனை செண்பகாவிடம் கொடுத்துவிட்டு நகர்ந்தாள்.ஷாட் முடித்து திரும்பி வந்தபோது, செல்போன் ஒலித்தது. பேனல் பார்த்தாள். டுவிட்டரில் அவளை ஃபாலோ செய்யும் தமிழக எம்பி.``சுவர்ணா... என்ன டுவிட் இது..?’’
சொன்னாள். அமைதியாக கேட்டுக் கொண்டார். `அப்படியா... அப்படியா...’ என்றார் வியப்பாய்.
``மேடம்... ஷாட் ரெடி!’’

நடித்தாள். திரும்ப வந்து சேரில் அமர்ந்தபோது, மறுபடி கால். புது நம்பர். ``மிஸ் சுவர்ணா..?’’
``யெஸ்...’’``நான் டிஸ்டிரிக்ட் கலெக்டர் ராம்நாத் சாரங்கன்...’’
சுவர்ணாவுக்கு ஆச்சரியம். ``சொல்லுங்க சார்...’’
``உங்களைப் பார்ப்பதற்கு
ஆர்டிஓ வருகிறார். அவரைச்
சந்திக்க முடியுமா..?’’

``எதுக்குன்னு தெரிஞ்சுக்கலாமா..?’’
``நீங்க போட்டிருந்த டுவிட் தொடர்பா எம்பி என்கிட்ட பேசினார். ஆர்டிஓ உங்ககிட்ட சில விஷயங்கள் கிளாரிஃபை செய்வார்...’’
``சந்திக்கிறேன்…’’``மேடம்... ஷாட் ரெடி!’’சுவர்ணா பொஸிஷன் நோக்கி நகர்ந்தாள்.

``அம்மா தாயே… மூணு மாசமாச்சிம்மா என் பொண்ணு காணாமப் போயி… யாரோ ஒரு பையன்கூட பழகினாளாம்… ரெண்டு பேரையுமே காணோம்மா... போலீஸ் ஸ்டேஷனுக்கு போனா புகார் வாங்க மாட்டேங்கிறாங்க... நீதாம்மா கண்டுபிடிச்சித் தரணும்...’’
``எஸ்.பி சார்... இது என்னான்னு பாருங்க… நீங்களே டைரக்டா விசாரிங்க. எனக்கு நாளைக்கு ஃபீட்பேக் கொடுங்க...’’
``ஷாட் ஓகே!’’

சுவர்ணா திரும்ப நாற்காலிக்கு வந்து செல்போன் பார்த்தாள். அந்த டுவிட்டுக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ். நிறைய பேர் ரீ டுவிட் செய்திருந்தார்கள். லைக்ஸ் ஏறிக்கொண்டே இருந்தது. வைரலாகிக் கொண்டிருக்கிறது என்பது புரிந்தது.படப்பிடிப்புத் தளத்திற்குள் அந்த ஜீப் வேகமாக வந்து நின்றது. பேண்ட், முழுக்கை சட்டை அணிந்து ஜீப்பிலிருந்து இறங்கிய அதிகாரி அநேகமாக ஆர்டிஓவாக இருக்க வேண்டும்.
அருகே வந்தார். ``மேடம் நான் கோவிந்தசாமி... ஆர்டிஓ...’’``சொல்லுங்க...’’
``கலெக்டர் உங்களைப் பார்க்கச்சொன்னார்...’’
``என்ன விஷயம்?’’

``அந்த டுவிட்டை ரிமூவ் செய்ய முடியுமா?’’
``ஏன்..?’’
``மேடம்... இந்த சானிடரி நாப்கின் யுனிசெஃப் விவகாரம். அவர்கள் ஃபண்ட் புரொவைட் பண்றாங்க. அதுலதான் கொடுக்கறோம். சமயத்துல ஃபண்ட் வர லேட்டாகும். அதனால கொடுக்க முடியறதில்லை… இப்ப உங்க டுவிட்டால கலெக்டர தில்லிலேந்து கூப்பிட்டு வறுக்கறாங்க
மேடம்…’’

‘‘பொய் சொல்றீங்க. நீங்க சொல்றத என்னால ஏத்துக்க முடியாது. அந்த திட்டமே இங்க அமுல்ல இல்ல. அதுதான் உண்மை. என்னால் டுவிட்டை ரிமூவ் செய்ய முடியாது. நாப்கின் விவகாரத்தை விடுங்கள். மென்சஸ் நேரத்துல குறிப்பிட்ட சில பிள்ளைங்கள பள்ளிக்கு வரக்கூடாதுன்னு சொல்றாங்களாமே..?’’

``அது... அது... தாசில்தார் என்கொயரில இருக்கு மேடம். நானும் விசாரிக்கிறேன்… பிறகு, மேடம்... இந்த இடம் ஒருமாதிரியான இடம். நீங்க ஷூட்டிங்குக்கு வந்திருக்கீங்க. ரொம்ப சென்சிடிவ் இஷ்யூ… அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்… ப்ளீஸ் புரிஞ்சுக்குங்க!’’
``மேடம்... ஷாட் ரெடி!’’சுவர்ணா அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
``மேடம்... அந்த டுவிட்..?’’

``ரிமூவ் செய்யமாட்டேன்!’’ உறுதியாகப் பேசினாள்.
ஷாட் முடிந்து வந்ததும் கிராமத்து எக்ஸ்டீரியரை செல்போனில் போட்டோ எடுத்தாள். தூரத்தில் தெரிந்த பள்ளியை ஜூம் செய்து படம் பிடித்தாள்.

டிசைனர் தம்ஸ்!

சீனியரோ ஜூனியரோ எந்த நடிகையின் காஸ்ட்யூமாவது பிரமாதமாக இருந்தால் ஒருவேளை அதை டிசைன் செய்தது தமன்னாவாக இருக்கலாம் என்ற கோணத்திலும் இனி யோசித்துப் பாருங்கள். யெஸ். பெரும்பாலான நடிகைகள் தமன்னாவிடம்தான் காஸ்ட்யூம் டிப்ஸ் கேட்கிறார்கள். காரணம், நடிக்க வருவதற்கு முன் காஸ்ட்யூம் டிசைனராக தமன்னா இருந்தார்!

மொழிப் பெண்!

பல மொழிகளில் சமந்தா நடிக்கிறார் என்று மட்டும்தானே உங்களுக்குத் தெரியும்! அடிஷனலாக இவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் சரளமாக சமந்தா பேசுவார்! தமிழ், தெலுங்கு, ஆங்கிலத்தில் எழுதவும் படிக்கவும் அவருக்குத் தெரியும்!

நல்ல பழக்கம்!

நயன்தாராவிடம் இருக்கும் குட் ஹேபிட்டுகளில் முதன்மையானது முடிந்துவிட்ட நட்புகளைக் குறை சொல்லாமல் இருப்பது! எங்காவது சந்தித்துக் கொண்டால் ஒரு புன்னகைக்காவது வழியிருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்!

வாலு!

வெளியே பார்க்கத்தான் த்ரிஷா அமைதி. உண்மையில் பயங்கர வாலு! சர்ச் பார்க்கில் படிக்கும்போது யூனிஃபார்மில் மரத்தில் தலைகீழாகத் தொங்கிய ஒரே பெண் என்ற சர்டிபிகேட்டை வைத்திருக்கிறார்!

ஸ்மைல் ப்ளீஸ்!

‘என்ன இந்தப் பொண்ணு எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கு..?’ என கீர்த்தி சுரேஷை கலாய்க்காதவர்கள் இல்லை. ஆனால், கீர்த்தியின் புன்னகைதான் அவருக்கு தொடர் வாய்ப்புகள் கிடைக்கக் காரணமாம்! யார் சொன்னார்..? கீர்த்தியே சொன்னார்!யெஸ். தமிழ், தெலுங்கு என நடித்து வரும் இவர் இப்போது போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன் நடிக்கும் இந்திப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஆக, பாலிவுட்டிலும் கீர்த்தி சிரிப்பாக சிரிக்கப் போகிறார்!(அடுத்த இதழில் முடியும்)