உயிர் பறிக்கும் சாலை விபத்துகள்! போதை… ஹெல்மெட்… சீட் பெல்ட்...சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. இந்திய அளவில் ஆண்டுதோறும் சராசரியாக ஐந்து லட்சத்துக்கும் அதிகமான விபத்துகள் நடக்கின்றன என்றால் அவற்றில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதில் கணிசமானவை தமிழகத்தில் நிகழ்கின்றன.

சாலை விபத்துகள் நடப்பதில் தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் ஆகியவை டாப் மூன்று மாநிலங்கள். இந்தியாவின் ஒட்டுமொத்த சாலை விபத்துகளில் இந்த மூன்று மாநிலங்களில் மட்டும் முப்பது சதவீதம் நிகழ்கின்றன என்று அதிர்கின்றன புள்ளிவிவரங்கள்.

மருத்துவம் மேம்பட்டிருக்கும் நவீன இந்திய சமூகத்தில் ஒருபுறம் மனிதனின் சராசரி ஆயுள் அதிகரித்து மரணம் தள்ளிப் போடப்பட்டிருக்க மறுபுறம் சாலை விபத்துகள் கொத்து கொத்தாகக் கொன்று கொண்டிருக்கின்றன.

இந்தியா முழுதும் இரண்டு கோடிக்கும் அதிகமான வாகனங்கள் உள்ளன. இதில் சராசரியாக ஆயிரம் வண்டிகளுக்கு ஒரு வண்டி விபத்தில் சிக்குகிறது என்கிறது ஓர் ஆய்வு.இதில் லட்சத்தில் ஒருவர் விபத்தால் மரணமடைய நேர்கிறது. அதிலும் தமிழகத்தில்தான் இந்த மரண விகிதம் அதிகமாக இருக்கிறதாம். இப்படி மரணமடைபவர்களில் ஐந்தில் ஒருவர் பெண்ணாக இருக்கிறார்!

இப்படியான விபத்துகளில் ஆண்களில் இருபது முதல் நாற்பது வயதுக்குட்டவர்களே அதிகம் மரணிக்க நேர்கிறது என்பது பெரும் துயரம்.இப்படியான விபத்துகளில் ஓர் இளம் வயது ஆண் இறக்கும்போது அவரது குடும்பமே சிதைந்துவிடுகிறது.

ஒரு தலைமுறையே பொருளாதார ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின் தங்க நேர்கிறது. மேலும், இப்படி இளைய தலைமுறை விபத்துகளில் இறப்பதால் அது அந்தக் குடும்பத்துக்கு மட்டும் நஷ்டமன்று. அரசுக்கும் அது ஒருவகையான இழப்பே. ஆம். அந்த இளவயதுக்காரர் பின்னாளில் நல்ல நிலைக்கு வந்து நாட்டின் பொருளாதாரம், சமூகம் எனப் பலவகைகளில் ஆக்கபூர்வமாக செயல்பட்டிருப்பாரே!

இப்படி எல்லாவகையிலும் துயரம் நிறைந்த சாலை விபத்து மரணங்களைத் தடுத்தே ஆக வேண்டியது நம் கடமை.சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் நடத்திய சர்வதேச அளவிலான கணக்கெடுப்பின்படி இந்தியாவில் லட்சத்தில் பதினேழு பேர் சாலை விபத்தைச் சந்திக்கிறார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

மற்ற வளரும் நாடுகளில் இந்த விகிதம் இருபத்தி நான்காக உள்ளது. நம்முடையது குறைவுதான் என்றாலும் நாம் வளரும் நாடுகளோடு ஒப்பிடும்போது மேலும் இதனைக் கட்டுப்படுத்த வேண்டியவர்களாகவே உள்ளோம்.நமது தலைநகரான தில்லி, லண்டனைப் போல் நாற்பது மடங்கு விபத்துகள் அதிகம் நடக்கும் நகரமாக உள்ளதாம். தில்லிக்கும் நமது சென்னைக்கும் இந்த விகிதத்தில் அதிக வித்தியாசம் இல்லை என்பதுதான் கவலை தரும் செய்தி.

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் நிகழும் விபத்துகளில் பெரும்பாலானவை இருசக்கர மற்றும் லாரி, மினி லாரி போன்ற வாகனங்களால் நிகழ்பவைதான். பீக் ஹவர் எனப்படும் காலை மற்றும் மாலை நேர சந்தடிகளால்தான் அதிகமான விபத்துகள் நிகழ்கின்றன என்றும் சொல்கிறார்கள். நெடுஞ்சாலைகளில் நிகழும் இரவு நேர விபத்துகளில் லாரிகளால் ஏற்படும் விபத்துகளே அதிகம்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு 59,277 பேர் சாலை விபத்துகளால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த மரண விகிதம் சுமார் இருபத்தைந்து சதவீதம் குறைவு என்றாலும் விபத்துகள் கிட்டத்தட்ட அதே அளவில்தான் நிகழ்ந்துள்ளன. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர், பெரம்பலூர், சென்னை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட விபத்துகள் அதிகரித்துள்ளன.

அதிலும் கன்னியாகுமரியில் பதினாறு சதவீதமும் திருநெல்வேலியில் பத்து சதவீதமும் தூத்துக்குடியில் ஒன்பது சதவீதமும் அதிகரித்துள்ளன. மேற்சொன்ன மாவட்டங்களைத் தவிர கரூர், தர்மபுரி, ரமநாதபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சாலை விபத்துகள் சற்றே அதிகரித்துள்ளன. மற்ற மாவட்டங்களில் சென்ற ஆண்டின் விகிதத்தில் விபத்துகள் நடந்துள்ளன.

போன ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் உள்ள மாவட்டங்களில் கோவை, சேலம், ஓசூர் போன்றவை இருப்பதை கவனியுங்கள். தொழில் நகரங்களான இவற்றில் விபத்துகள் எண்ணிக்கை அதிகரிக்காவிட்டாலும் குறையாமல் இருப்பதும் மோசமான விஷயம்தான்.
வாகன விபத்துகளுக்கு குடிபோதையில் வண்டி ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் இருப்பது, சீட் பெல்ட் பொருத்தாமல் இருப்பது, உறங்காமல் பின்னிரவுகளில் வாகனம் ஓட்டுவது போன்றவை முக்கியமான காரணங்களாக உள்ளன.

அரசு இது குறித்து எவ்வளவு விழிப்புணர்வுப் பிரசாரங்கள் செய்தாலும் இப்படியான வாகன விபத்துகளைத் தவிர்க்க இயலவில்லை என்பதுதான் சோகம். நெரிசல் நிறைந்த நகர சாலைகளில் பீக் ஹவரில் போனில் பேசிக் கொண்டே வண்டி ஓட்டிச் செல்வது, சாலை விதிகளை மதிக்காமல் செல்வது, அதிவேகத்தில் வண்டி ஓட்டுவது ஆகிய சேட்டைகளும் விபத்தை வம்படியாக வரவைக்கும் காரணிகள்தான்.

அதிகரித்து வரும் வாகனப் பெருக்கம், தரமற்ற சாலைகள், பீக் ஹவரில் குவியும் வாகனங்கள் போன்ற சமூகக் காரணங்களும் இப்படியான விபத்துகளின் பின்னே உள்ளன. வாகனப் பெருக்கத்தைக் குறைப்பது அரசின் கைகளில் இல்லை. அது மக்களாக முன்வந்து எடுக்க வேண்டிய முடிவு.

பள்ளி, கல்லூரி, அலுவலகம், பணிமனைகள் என அனைத்தும் காலையில் குறிப்பிட்ட நேரம் தொடங்குவதால்தான் நெரிசலும் விபத்தும் ஏற்படுகின்றன. இதனால், சென்னை போன்ற நகரங்களில் சில தனியார் நிறுவனங்கள் வேலை நேரத்தை மாற்றி அமைத்தும் கைமேல் பலன் இல்லை.

இதுபோன்ற முயற்சிகளை பெரிய மக்கள் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் நல்ல பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.
அதுபோலவே, நெரிசலான நேரத்தில் ஒரே ஒரு நபர் செல்வதற்கு ஒரு கார் என்பதைப் போன்ற மனநிலைகள் மாற வேண்டும். இப்படியான வீண் ஜம்பங்களும் படாடோபங்களும்தான் விபத்தை விருந்துக்கு அழைக்கின்றன.

தமிழகத்தில் பல சாலைகள் மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கின்றன. பல நூறு கிலோ மீட்டர்கள் நீளும் நெடுஞ்சாலைகள் முதல் சாதாரண ஊர் சாலைகள் வரை பலவற்றின் பராமரிப்பும் கேள்விக்குறியாக உள்ளன. சாலைகளை முறையாகப் பராமரிக்காமல் என்னதான் டெக்னாலஜியில் மேம்பட்ட வாகனத்தில் சென்றாலும் விபத்தைத் தடுக்க இயலாது.

எனவே, தரமான சாலைகளைத் தர வேண்டியது அரசின் கடமையாகவும் உள்ளது. ஹெல்மெட் இல்லாமல் பயணிப்பவர்கள், சீட் பெல்ட் அணியாதவர்கள் ஆகியோருக்கு கறாரான சட்டரீதியான நடவடிக்கைகள் தேவை. தென் மாவட்டங்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது மிக இயல்பாக நடைபெறுகிறது. இவற்றை எல்லாம் கட்டுக்குள் கொண்டுவராமல் சாலை விபத்துகளைத் தடுப்பது கடினம்.                

இளங்கோ கிருஷ்ணன்