தமிழ் சினிமா ஹீரோஸ் கெட்டுப் போயிட்டாங்க! ஆதங்கத்தில் கோடம்பாக்கம்‘‘டாப் ஹீரோஸ் படங்களுக்கு சூப்பரான ஓப்பனிங் இல்ல... சுமாரான ஓப்பனிங் கூட இப்ப கிடைக்கறதில்ல. முன்னாடி ரிப்பீட் ஆடியன்ஸ் இருப்பாங்க. ஒரு படம் சில்வர் ஜூப்ளியோ நூறு நாட்களோ ஓட இவங்கதான் காரணம்.

இப்ப அப்படி திரும்பத் திரும்ப தியேட்டர்ஸுக்கு ரசிகர்கள் வர்றதில்ல. ஹீரோஸும் ரசிகர்களை சந்திக்கறதில்ல. ரசிகர் மன்றங்களை கண்டுக்கறதில்ல. இதனால மக்களை விடுங்க... ரசிகர்கள் தங்ககிட்ட என்ன எதிர்பார்க்கறாங்க என்பது கூட ஹீரோஸுக்கு தெரியறதில்ல!’’கோடம்பாக்கம் முழுக்க இதுதான் பேச்சாக இருக்கிறது.

கூடவே படம் வெளியாகும்போது ஹீரோஸ் தியேட்டர் விசிட் அடித்து மக்களின் ரசனையை நேருக்கு நேர் அறிவதில்லை... தங்களை அப்டேட் செய்து கொள்வதில்லை... போன்ற ஆதங்கமும் எட்டுத் திசையிலும் பரவி இருக்கின்றன. ‘‘அத்தனையும் உண்மை...’’ என்றபடி சீரியஸாக பேச ஆரம்பிக்கிறார் தயாரிப்பாளரும், நடிகருமான சித்ரா லட்சுமணன்.

‘‘முன்னாடி எம்ஜிஆர் - சிவாஜி; ரஜினி - கமல்னு பல டாப் ஹீரோஸுக்கும் ரசிகர்களுக்குமான பிணைப்பு எல்லாருக்குமே தெரியும். ஒரு படத்துக்கு பிரமாண்டமான ஓப்பனிங் அமைய அப்பட ஹீரோவின் ரசிகர்கள்தான் காரணம். ஒரு குக்கிராமத்துல தன் ஹீரோ நடிச்ச படத்தைப் பார்த்துட்டு விசில் அடிக்கற ரசிகன் கொடுக்கிற டிக்கெட் காசுதான் அந்த ஹீரோவுக்கு கோடிக்கணக்கான சம்பளமா மாறுது! முதல்நாள் முதல் ஷோ பார்த்துட்டு படத்தைப் பத்தின மவுத் டாக்கை மக்கள்கிட்ட பரவ விடுவது இவங்கதான்.

அந்தக் காலத்துல... விடுங்க, சில வருஷங்களுக்கு முன்னாடி கூட டாப் ஹீரோஸை ரசிகர்கள் சந்திச்சுட்டு இருந்தாங்க. அழகான ரிலேஷன்ஷிப் அவங்களுக்குள்ள இருந்தது. படப்பிடிப்பு இல்லாத நாட்கள்ல தமிழகம் முழுக்க பரவியிருக்கிற தங்கள் ரசிகர்களோடு தொடர்பு கொண்டு பேசுவாங்க. எந்தப் படம் ஓடுது... ஏன் ஓடுது... மக்கள் அதை எப்படி வரவேற்கறாங்கனு கேட்டுத் தெரிஞ்சுப்பாங்க.

இந்தளவுக்கு ஹீரோக்களுக்கும் ரசிகர்களுக்குமான இடைவெளி அதிகரிச்சிருக்குனா... ஹீரோ - தயாரிப்பாளர் ரிலேஷன்ஷிப் மோசமாகி இருப்பது மறுபக்கம். தங்களை வைச்சு படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களோடு நல்ல உறவுல இருக்கணும்னு இப்ப எந்த ஹீரோவும் நினைப்பதில்லை.
உதாரணமா, ‘நான் கடவுள்’ உட்பட பல படங்களைத் தயாரிச்சவர் கே.எஸ்.சீனிவாசன். இப்பவும் பிரபுதேவா, சந்தானத்தை வைச்சு படம் எடுத்துக்கிட்டு இருக்கார். இவருடைய பெண்ணுக்கு திருமணம் நடந்தது. இவர் தயாரிப்புல நடிச்ச ஹீரோக்கள் யாரும் ரிசப்ஷனுக்கு வரலை. இதுதான் எதார்த்தம்!

முன்னாடி ஒரு படம் சரியா போகலைனா திரும்ப அந்தத் தயாரிப்பாளரைக் கூப்பிட்டு அதே ஹீரோஸ் கால்ஷீட் கொடுத்து அவங்களைக் கைதூக்கி விடுவாங்க. இதுல மம்மூட்டி இன்னும் ஒரு ஸ்டெப் மேல இருப்பார். படத்தோட இயக்குநரையும் அவரே ஃபிக்ஸ் பண்ணிக் கொடுத்து படத்தைத் தொடங்கி வைப்பார்!

தேவர் ஃபிலிம்ஸுக்கு எம்ஜிஆரும், பீம்சிங்கிற்கு சிவாஜியும் தொடர்ந்து படம் செய்து கொடுத்தாங்க. இப்ப அஜித் அந்த வழியை ஃபாலோ பண்றார். ‘விவேகம்’ ஃப்ளாப் ஆனதும், அஜித்தே சத்யஜோதியைக் கூப்பிட்டு அடுத்த படம் கொடுத்தார். வழக்கமா அவர் வாங்கற பேமென்ட்டையும் குறைச்சிக்கிட்டார். மறுபடியும் சிவாவையே நம்பி ‘விஸ்வாசம்’ கொடுத்தார்! எந்தளவுக்கு இந்தப் படம் வசூல் ரீதியா லாபகரமா இருந்ததுனு நான் சொல்லாமயே உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்...’’ என்ற சித்ரா லட்சுமணன், கேரவன் குறித்தும் விளக்கினார். 

‘‘டிரெஸ் மாத்தத்தான் கேரவன். ஆனா, இப்ப ஒரு ஷாட் முடிச்சதுமே கேரவன்ல போய் புகுந்துக்குறாங்க. அடுத்த ஷாட் ரெடினு தயங்கித் தயங்கி ஹீரோகிட்ட சொல்ல வேண்டியிருக்கு. இதனால ஒவ்வொரு நாளும் எவ்வளவு மணி நேரங்கள் வீணாகுதுனு எந்த ஹீரோவும் யோசிப்பதில்லை.

முன்னாடி ஷூட்டிங் ஸ்பாட்டுல எல்லா நட்சத்திரங்களும் உட்கார்ந்து கலகலப்பா பேசுவாங்க. ஓர் உறவு இருந்தது. இப்ப எல்லாரும் தனித்தனி தீவா ஒதுங்கி இருக்காங்க...’’ என தன் ஆதங்கத்தை சித்ரா லட்சுமணன் கொட்டித்தீர்த்தார்.

‘‘அவர் சொல்றதெல்லாம் சரி. அதே நேரம் இப்ப ரசிகர்களை ஹீரோஸ் சந்திக்காம இருக்க இன்னொரு காரணமும் இருக்கு!’’ என நம் காதைக் கடித்தார் ஒரு அப்கம்மிங் ஹீரோ.‘‘படம் ரிலீசாகும்போது தியேட்டர்ல கட் அவுட் வைக்கணும். போஸ்டர் ஒட்டணும். மன்றத்துல இத்தனை பேர் இருக்கோம். சாப்பாடு செலவு இருக்கு. பஸ் செலவு, பைக் பெட்ரோல் செலவுனு பல செலவுகள் இருக்குனு பில்லை வந்து நீட்டுவாங்க. அந்தப் பணத்தைக் கொடுத்தாதான் அடுத்த படத்துக்கும் இதே மாதிரி உழைப்பாங்க.

தவிர தமிழ்ல இருக்கிற பெரும்பாலான ஹீரோஸுக்கு இப்ப அரசியல் ஆசை இருக்கு! அதனாலயே ரசிகர்கள் விலகிடறாங்க!’’ என்றார்.
இது குறித்து திரையரங்க உரிமையாளர்களிடமும் ஆதங்கம் இருக்கிறது. ‘‘தியேட்டர் விசிட் கலாசாரத்தையே நம் ஹீரோஸ் மறந்துட்டாங்க...’’ என வருத்தத்துடன் பேசத் தொடங்கினார் மதுரையில் உள்ள ஒரு தியேட்டர் அதிபர். 

‘‘அறிமுக நட்சத்திரங்கள் யாராவது தங்கள் படம் ரிலீஸ்ஆகறப்ப தியேட்டர் ரவுண்ட் வரலாம் அல்லது வந்திருக்கலாம். ஆனா, பெரிய, மாஸ்நட்சத்திரங்கள்? ‘தனிஒருவன்’ வெளியானப்ப சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டருக்கு முதல் நாள் மாலைக் காட்சிக்கு அரவிந்த்சாமி வந்திருந்ததா சொன்னாங்க.

உண்மைல 1990 மத்தி வரை இப்படி ஹீரோஸ் தமிழகம் முழுக்க ரவுண்ட் அடிச்சாங்க. தியேட்டர் தியேட்டரா போய் ஆடியன்ஸ் பல்ஸை அறிஞ்சாங்க.
அப்புறம், டிவில பேட்டி கொடுத்தா போதும்னு காலரை உயர்த்தினாங்க. இப்ப நிலமை இன்னும் மோசம். தங்கள் டுவிட்டர் பக்கத்துல சும்மா ஒரு டுவிட் போட்டா போதும்,  இல்லைனா செல்போன்ல பேசி செல்ஃபி வீடியோவா வெளியிட்டா போதும்னு நினைக்கறாங்க.

இதனாலயே ரசிகர்களும் மக்களும் தங்ககிட்ட என்ன எதிர்பார்க்கறாங்கனே ஹீரோஸுக்கு தெரியறதில்ல. எந்த மாதிரிப் படங்களை மக்கள் ரசிக்கறாங்கனும் புரியறதில்ல. ஒரு படம் ஓடினா உடனே அந்தப் பட இயக்குநரை புக் பண்றாங்க. ஆனா, அந்தப் படம் ஏன் சக்சஸ் ஆச்சுனு ஆராய்ந்து பார்க்கறதில்ல!

இதனாலதான் தரமான கமர்ஷியல் படங்கள் இப்ப வர்றதில்ல. ஸ்டோரி நாலேஜ் சுத்தமா எந்த ஹீரோஸுக்கும் இல்ல. வெறும் சம்பளம் + சக்சஸ் கொடுத்த டைரக்டர் காம்பினேஷன் = ரூபாய் 100 கோடி வசூல்னு அந்தரத்துல கணக்கு எழுதுறாங்க.

இந்த நிலை மத்த மொழி இண்டஸ்ட்ரில இல்ல. தெலுங்குல இப்பவும் டாப் ஹீரோஸ் டுவிட் போடறாங்க, டிவில பேட்டி தர்றாங்க, யூ டியூப்ல பேசறாங்க, ரசிகர்களை சந்திக்கறாங்க; அதேநேரம் தியேட்டர் விசிட்டும் அடிக்கறாங்க. அதுவும் படம் வெளியான நான்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு!

சமீபத்துல, தான் நடிச்ச ‘மஹரிஷி’ படத்துக்காக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு இப்படித்தான் தொடர்ந்து 10 நாட்கள் சீமாந்திரா, தெலுங்கானா முழுக்க தியேட்டர் விசிட் அடிச்சார்!

தமிழ் ஹீரோஸை கூப்பிட்டா அதுக்கு தனி சம்பளம் கேட்கறாங்க! ‘ஒரேயொரு முறைதான் ப்ரொமோஷனுக்கு வருவேன்’னு கண்டிஷன் போடறாங்க! சென்னையைத் தவிர தமிழகத்தின் மத்த பகுதி தியேட்டர்ஸுக்கு அவங்க வர்றதே இல்ல. மதுரை, கோவை, திருச்சி, சேலம், ராமநாதபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, நாகர்கோவில், விருதுநகர்ல எல்லாம் தங்கள் படத்தை மக்கள் எப்படி ரசிக்கறாங்க என்பது கூட இப்ப இருக்கிற தமிழ் ஹீரோஸுக்குத் தெரியாது! இந்த நிலை மாறினாதான் தமிழ்ல தரமான கமர்ஷியல் படங்கள் வரும்!’’ என்கிறார் அந்தத் தியேட்டர் அதிபர். தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் அதுதான். இனியாவது நம் ஹீரோக்கள் விழித்துக்கொள்வார்களா?                           

மை.பாரதிராஜா