தென்னிந்தியப் பெண்களைத் தாக்கும் கர்ப்ப கால சர்க்கரை நோய்! ஷாக் ரிப்போர்ட்‘‘அரிசி, மைதா போன்ற வெள்ளை உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்வதால் கர்ப்பிணிகளுக்கு சர்க்கரை நோய் வருகிறது. அதுவும் தென்னிந்தியப் பெண்கள்தான் இதில் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்...’’ என்ற குண்டைப் போடுகிறார்கள் பெண்கள் தொடர்பான மருத்துவர்கள். ‘‘கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற சர்க்கரை நோய் பிறக்கும் குழந்தையையும் பாதிக்கிறது...’’ என்று பீதியைக் கிளப்புகிறது சமீபத்திய ஆய்வு.

‘‘சர்க்கரை நோயை ‘டைப் ஒன்’, ‘டைப் டூ’ என இரண்டாகப் பிரிப்போம். இது எல்லோருக்கும் வரக்கூடியதுதான்...’’ என்று ஆரம்பித்தார் சென்னை காவேரி மருத்துவமனையின் சர்க்கரை நோய் மருத்துவரான பரணீதரன். ‘‘கர்ப்பம் தரித்தவர்களின் இரத்தத்தில் இயற்கையாகவே சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதைத்தான் கர்ப்ப கால சர்க்கரை நோய் என்று அழைக்கின்றனர்.

ஒரு காலத்தில் கர்ப்பம் அடைந்த நாளிலிருந்து 20வது வாரத்துக்குப் பிறகே சர்க்கரையின் அளவு உயர ஆரம்பிக்கும். ஆனால், இன்று கர்ப்பமான முதல் நாளிலேயே சர்க்கரை நோயின் அறிகுறிகள் தென்படுவதாக மருத்துவ ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அதிலும் வட இந்தியாவைவிட தென்னிந்தியப் பெண்களுக்குத்தான் இந்த நோய் அதிகமாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன...’’ என்று அதிர்ச்சியளித்த மருத்துவரிடம், ‘இந்தக் காலத்துக் கர்ப்பிணிகளை ஏன் ஆரம்ப கட்டத்திலேயே சர்க்கரை நோய் தாக்குகிறது..?’ என்றோம்.

‘‘கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களின் உற்பத்தியில் மாற்றங்கள் ஏற்படும். தாய், சேயின் உடல் தேவையை அடிப்படையாகக் கொண்டு இந்த ஹார்மோன்களின் உற்பத்தி அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும். பொதுவாக குழந்தையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டுதான் சில ஹார்மோன்கள் அதிகளவில் சுரக்கும். அதில் ஒரு ஹார்மோன்தான் இன்சுலின். உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்கு உதவுவதால் இன்சுலினை வளர்ச்சி ஹார்மோன் என்றும் சொல்வார்கள்.

கருவின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இன்சுலின் அதிகமாகச் சுரக்க வேண்டும். ஆனால், இன்றைய பெண்களுக்கு இன்சுலின் அதிகமாகச் சுரப்பதற்கான வழியில்லை. ஏனென்றால் உடல் உழைப்பு, உணவுப்பழக்கத்தில் அவர்கள் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள். அத்துடன் மன அழுத்தத்திலும் அவதிப்படுகிறார்கள்...’’ என்றவர் சில நொடிகளுக்குப் பிறகு தொடர்ந்தார்.

‘‘நாம் உண்ணும் உணவு சமமான சத்துள்ள உணவாக இருக்கும்போது ஹார்மோன்கள் சீராக வேலை செய்யும். இது மாறும்போது ஹார்மோன்களின் வேலை செய்யும் திறன் குறையும். உதாரணமாக நம் உணவுகளில் கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்புச்சத்து ஆகிய மூன்றும் சரிவிகிதத்தில் இருக்க வேண்டும். ஆனால், தென்னிந்தியர்கள் அதிகமாக கார்போஹைட்ரேட் என்கிற மாவுச்சத்து உள்ள உணவைத்தான் எடுத்துக்கொள்கிறார்கள்.

கார்போஹைட்ரேட் நமது உடலுக்குத் தேவைதான். அதுதான் உடனடியான சத்தை உடலுக்குக் கொடுக்கிறது. ஆனால், உணவை சத்தாக மாற்றக்கூடிய இன்சுலின் உடலுக்குள் போதுமான அளவில் இல்லாதபோது இந்த கார்போஹைட்ரேட் சர்க்கரையாகத் தேங்கிவிடும். இதுதான் கர்ப்ப காலப் பெண்களுக்கு நேர்கிற பிரச்னை...’’ என்ற பரணீதரன், கருவுறுகையில் ஏற்படுகின்ற பிரச்னைகளையும் பட்டியலிட்டார்.

‘‘தாயின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகும்போது அது தொப்புள்கொடி வழியாக கருவுக்கும் செல்லும். கரு வளர்ந்து குழந்தையாக வெளிவந்த பிறகுதான் அதன் உடலில் இன்சுலின் சுரக்கும். ஆனால், தாய் மூலம் கருவுக்குச் செல்லும் சர்க்கரையால் கருவிலேயே இன்சுலின் சுரக்க ஆரம்பிக்கும். இதனால் கருவானது அதிக எடையில் வளரும்.

இந்தக் கருவை ‘பிக் பேபி’ அல்லது பெரிய குழந்தை என்கிறார்கள். பெரிய குழந்தை என்றால் ஆரோக்கியமான குழந்தை என நினைத்து மகிழ்வார்கள். இது தவறானது. பெரிய குழந்தையால் சுகப் பிரசவம் தடைப்படலாம். குழந்தை பெரியதாக இருப்பதால் பிரசவம் நடக்கும்போது மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அது பிற்காலத்தில் வெவ்வேறான சிக்கல்களைக் கொண்டுவரலாம்.

அத்துடன் சர்க்கரையால் பெண்களுக்கு சிறுநீர்ப் பாதைகளில் தொற்றுநோயும் ஏற்படலாம்...’’ என்றவர் இந்தப் பிரச்னைகளுக்கு உரிய தீர்வுகளையும் அடுக்கினார்.‘‘வெள்ளை உணவுகளைத் தவிர்ப்பது மட்டுமே இதற்கு ஒரே தீர்வு. வெள்ளை உணவு என்னும்போது அரிசி, மைதா, சர்க்கரை போன்ற உணவுகளைக் குறைத்துக்கொண்டு வண்ணமயமான காய்கறிகளை அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அத்துடன் கர்ப்பிணிகள் அவ்வப்போது வீட்டிலோ அல்லது மருத்துவமனைகளிலோசர்க்கரையின் அளவுக்கு ஏற்ப உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. தவிர, மன அழுத்தத்துக்கு இடம் கொடுக்கவே கூடாது. மொத்தத்தில் தாயும் சேயும் நலமுடன் இருக்க கர்ப்பிணிகள் உணவிலும் மனதிலும் கொஞ்சம் கவனம் கொள்வது மிக முக்கிய தேவை...’’ என்கிறார் டாக்டர் பரணீதரன்.                          

டி.ரஞ்சித்