3 நாட்களுக்கு ஓர் அரசியல் கொலை இந்தியாவில் நடக்கிறது! ஷாக் ரிப்போர்ட்
மகாத்மா காந்திக்கும் இப்போது பரவலாக நடந்து வரும் அரசியல் படுகொலைகளுக்கும் தொடர்பிருக்கிறது. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடவில்லை. நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் அதைத்தான் உணர்த்துகின்றன.
 தேசப்பிதா என்று போற்றப்படும் மகாத்மா காந்திக்கு எதிராக இந்தியாவிலும் வெளியிலும் அவதூறுகளை எழுதியும் பேசியும் வருபவர்கள் அடிப்படைத் தகவல்களைப்பற்றியோ, குறைந்தபட்ச தர்க்கரீதியான ஒழுங்கைப்பற்றியோ அல்லது சாதாரண அறநெறிகளைப் பற்றியோ கொஞ்சம்கூட கவலைப்படுவதில்லை.  மாறாக ‘காந்திக்கு எதிராக அவதூறுகள் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்க வேண்டும்’ என்று நினைத்து இயக்கமாகவே செயல்பட்டு வருகின்றனர்.ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற 165வது நாள் அல்லது ‘இந்தியா மதச்சார்பற்ற நாடு’ என்று காந்தி சொன்ன 53ம் நாள், 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி, நாதுராம் கோட்சேவினால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இன்றும் ‘காந்தி’ என்ற தனிமனிதர் போற்றப்படுகிறாேரா இல்லையோ, ‘காந்தியம்’ குறித்து அவதூறுகளும் சர்ச்சைகளும் கிளப்பப்பட்டு வருகின்றன. ‘காந்தியைக் கொன்றது ஓர் இந்து தீவிரவாதி’ என்றும், ‘காந்தி ஓர் இந்து தீவிரவாதி; காந்தியைக் கொன்ற கோட்சே பயங்கரவாதி’ என்றும் புதுப்புது வியாக்கியானங்கள் இன்றைய தலைமுறைக்கு திணிக்கப்பட்டு வருகின்றன.
இதன் வழியாக ‘காந்தியம்’ மறைக்கப்பட்டு வருகிறது!ஒரு மாபெரும் அரசியல் தலைவரைக் கொலை செய்த குற்றவாளியின் பின்னணி என்ன? எது அவரைக் குற்றச் செயல்களைச் செய்யத் தூண்டியது? எப்படிப்பட்ட குற்றங்களில் அவர் ஈடுபட்டார்? அவருடைய வாழ்க்கை முறை... பின்னணி என்ன? அவர் பிடிபட்டது எப்படி? பிறகு என்ன ஆனது? குற்றவாளிகளைத் தண்டிப்பதன் மூலம் மட்டும் நீதி கிடைத்துவிடுமா? இவர்கள் உருவாகக் காரணமாக இருந்த சமூக அரசியல் சூழலை எப்படிச் சீர்திருத்துவது..?
இத்தனை கேள்விகளுக்கும் பின்னணியில் பழமைவாதம், மதம், சாதி, சமூகம், அரசியல் என்று பல்வேறு கட்டமைப்புகள் பின்னியுள்ளன.உணர்ச்சி வேகத்தில் செய்யக்கூடிய கொலைகள், ஆதாயத்தை நோக்கிச் செயல்படும் கொலைகள், லட்சியக் கொலைகள், மனப்பிறழ்வுக் கொலைகள் போன்ற அனைத்து வகை கொலைக் குற்றங்களையும் ஆராய்ந்தால் ஓர் உண்மை புலப்படும். அது, எந்த வகைக் கொலையையும் செய்பவர்கள் மரணதண்டனைக்கு அஞ்சி நிற்பதில்லை என்பது.
எத்தனையோ அரசியல் கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் தேடிக்கொண்டே இருக்கின்றனர். இது ஒரு பக்கம் என்றால்... அரசியல் வக்கிரத்தால் அரங்கேற்றப்படும் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட சாட்சிகள் மாயமாவதும், மர்மமான முறையில் மரணமடைவதும் நிகழ்ந்தபடியே இருப்பது மறுபக்கம்.
இதுதவிர கொலை வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு அதிகபட்ச தண்டனையும் வழங்கப்படாமல் வழக்குகள் தள்ளுபடியாவது தனிக்கதை. இதன் பின்னணியில் எத்தனை எத்தனை முடிச்சுகள்... மர்மங்கள்... மிரட்டல்கள் உள்ளன?
நாடு முழுவதும் அரசியல் கொலைகள் எவ்வாறு நடக்கின்றன... அதன் பின்னணி என்ன... என்பது குறித்து தனியார் அமைப்பு ஒன்று சமீபத்தில் நடத்திய சர்வேயில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2007 - 2016ம் ஆண்டுகளில், அதிகபட்சமாக நடந்த அரசியல் கொலைகள் மேற்கு வங்கத்தில் 215, பீகாரில் 187, ஆந்திரப் பிரதேசத்தில் 167, மத்தியப் பிரதேசத்தில் 118, கேரளாவில் 95 என நீளுகிறது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வௌியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி ஆண்டுக்கு சராசரியாக 117 அரசியல் படுகொலைகள் அரங்கேற்றப்படுகின்றன. அதாவது கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு 3 நாட்களுக்கும் ஓர் அரசியல் கொலை நடப்பதாகவும், மொத்தமாக 1,178 படுகொலைகள் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் 18% அரசியல் படுகொலைகள் மேற்குவங்க மாநிலத்தில்தான் 2016ம் ஆண்டு வரை நடந்துள்ளது.அம்மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவாளர்கள், தொண்டர்களே அதிகபட்சமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். உதாரணமாக 2018ல் மேற்குவங்கத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் மட்டும் பாஜக தரப்பில் 52 பேரும், திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் 14 பேரும் அரசியல் காரணங்களுக்காகக் கொல்லப்பட்டனர்.
இதேபோல், பீகார், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அரசியல் கொலைகள் அதிகளவில் நடந்து வருகின்றன.கடவுளின் தேசம் என வர்ணிக்கப்படும் - கல்வியறிவு அதிகமுள்ள மாநிலமாகப் போற்றப்படும் - கேரளாவில், எளிமையான அரசியல்வாதிகள் பலர் உள்ளனர். நிறைய பெருமைகளைக் கொண்ட இம்மாநிலத்தில்தான் அரசியல் கொலைகள் அதிகம் நடக்கின்றன!
கடந்த காலங்களில் இடதுசாரி - காங்கிரஸ் இடையே இருந்த மோதல், இப்போது பாஜக மற்றும் அதன் சார்பு அமைப்புகளுடனான மும்முனை வன்முறைக் களமாக மாறி அரசியல் படுகொலைகள் நடப்பது சர்வசாதாரணமாகிவிட்டது. குறிப்பாக 2016 சட்டசபைத் தேர்தலுக்குப் பின் கடந்த பிப்ரவரி வரை 20 அரசியல் படுகொலைகள் நடந்துள்ளன. இதில், 2016ல் 9 பேர், 2017ல் 5 பேர், 2018ல் 4 பேர், 2019ல் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட அரசியல் ெகாலைச் சம்பவங்களின் பின்னணியில் இருக்கும் குற்றவாளிகளைப் பார்த்தால் அவர்களுக்கு தொழிலே கொலை செய்வதுதான்... யாரைக் கொலை செய்ய வேண்டும் என்று அடையாளம் காட்டிவிட்டால் காரியத்தைக் கச்சிதமாக முடித்துவிடுவர்... என்று புரியும்.
அரசியல் பின்னணியுடன் இயங்கும் இவர்களைக் கூலிப்படை என்கின்றனர். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனின் ‘ஹிட்’ லிஸ்ட்டிலும் அடைமொழி பெயருடன் உள்ள இவர்கள், கொலையால் பாதிக்கப்படுவோரின் வலியையும், வேதனையையும் உணர்வதில்லை.
விரோதியைக் கொல்ல கூலிப்படையை அனுப்பிவிட்டு, ‘அந்தக் கொலை செய்யும் பாவம் தன்னைச் சேராது; கொன்றவர்களைத்தான் சேரும்’ என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்கின்றனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், கவுரவக் கொலைக்கு ஒரு விலை, அரசியல் கொலைக்கு ஒரு விலை, கணவன் - மனைவி, காதலன் - காதலிக்கு ஒரு விலை என்று பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு ‘ரேட் ஃபிக்ஸ்’ செய்து கூலிப்படையினர் அரங்கேற்றுகின்றனர் என்பதுதான். கொலைகளைச் செய்யக்கூடியவர்களில் 25 வயதுக்கும் குறைவான இளைஞர்களே அதிகமாக உள்ளனர். பகை உணர்ச்சி, பழி வாங்குதல் என்று ஆயுதங்களுடன் திரியும் இவர்களில் சிறார்களும் உண்டு. அப்படியே போலீஸ் கொலையாளிகளைப் பிடித்து சிறையில் போட்டாலும், அவர்களுக்கு ஏற்பட்ட சிறை அனுபவமும், சமுதாயத்தின் புறக்கணிப்பும் மீண்டும் அவர்களைக் குற்றம் செய்யவே தூண்டுகின்றன. சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள் மீண்டும் கொலை பாதகங்களைச் செய்து சிறையிலேயே அடைபட்டுக் கிடக்கின்றனர்.
ஒழுங்கற்ற தலைமுடி அலங்காரம், உடை, நடவடிக்கைகள் போன்றவை இவர்களை அடையாளம் காட்டினாலும், அடுத்த தலைமுறை அரசியல்வாதியாகவும் உருவெடுக்கிறார்கள். தேர்தலில் நின்று ஜெயித்து மக்களின் பிரதிநிதிகளாக வலம் வருகின்றனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் கொலை, ஊழல், ஆட்கடத்தல், வெறுப்பு பேச்சு, பெண்களுக்கு எதிரான குற்றம் போன்ற பல குற்றப்பின்னணி உள்ளவர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.
அதில், ஜனநாயக சீர்திருத்த சங்கம் மேற்கொண்ட ஆய்வின்படி 19% வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. 2009 தேர்தலில் 15%வும், 2014 தேர்தலில் 17 %வும் இருந்து இத்தேர்தலில் 2% அதிகரித்துள்ளது.
இதனை மேற்கோள் காட்டி உலகளவிலான பிரபல செய்தி நிறுவனமான ‘ராய்ட்டர்ஸ்’, ‘இந்திய தேர்தல்களில் கொலை, ஊழல், ஆட்கடத்தல் ேபான்ற குற்றத்ெதாடர்புடையவர்கள் போட்டியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை’ என்று கிண்டலடித்துள்ளது.காந்தியத்தின் தேவை இங்குதான் முதன்மை பெறுகிறது. அதனால்தான் ‘காந்தியம்’ பரவாமல் பார்த்துக் கொள்கிறார்கள்! என்னைக் கொல்ல சதி நடக்கிறது!
தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ‘‘முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைப் போன்று நானும் ஒரு நாள் கொல்லப்படுவேன்.
என்னுடைய தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் மூலமே என்னைக் கொல்வதற்கு பாஜக திட்டமிட்டுள்ளது. என்னுடைய பாதுகாப்பு அதிகாரிகள் மூலமே என்னுடைய அறிக்கைகள் பல பாஜக வசம் செல்கிறது...’’ எனக் குற்றம்சாட்டியுள்ளார். இவர் முதல்வராகப் பதவியேற்ற பின் 5 முறையும், மற்ற தருணங்களில் 4 முறையும் சேர்த்து தனது அரசியல் பயணத்தில் 9 முறை செருப்பு வீச்சு, இங்க் வீச்சு, கையால் தாக்குதல் போன்றவற்றுக்கு ஆளாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செ. அமிர்தலிங்கம்
|