கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-12



வறுத்த பயறை முளைக்கவைக்கும் மரகதவல்லிவிஜயராகவ பெருமாளுக்கு செய்து தந்தது போல எனக்கும் ஒரு குதிரை பொம்மை செய்து தா என்று மன்னன் கேட்கவும் ‘அந்த மாலவனுக்காக உழைத்த கை மனிதர்களுக்காக உழைக்காது மன்னா’ என்று தச்சர் பதில் உரைத்தது கோயிலில் இருந்த அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

ஆயிரம் பொன் எதிரில் இருந்தும் அதன் மீது ஆசையில்லாமல் இருக்க யாரால் முடியும்? மன்னனும் சற்று வியந்துதான் போனான். இருப்பினும் சாதாரண ஒரு தச்சர் அரசனான தன்னை எதிர்த்துப் பேசலாமா என்ற ஆணவ எண்ணம் அதை முறியடித்தது. பொன்னை ஏறெடுத்தும் பாராமல் திரும்பிச் சென்ற தச்சரை நோக்கி மன்னன் பேசினான்.
‘‘நில்! அரசனும் மாதவனும் ஒன்று என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஆகவே எனக்கு குதிரை செய்து தருவதில் எந்த பாதகமும் வராது. நாளை காலை ஒரு பல்லக்கு உன் வீட்டிற்கு வரும். அதில் ஏறி அரண்மனைக்கு வா. அங்கு உனக்கு வேண்டிய வசதிகள் செய்து தரப்படும்!’’ கட்டளையிட்டுவிட்டு கோயிலில் இருந்து தன் அரண்மனைக்கு புறப்பட்டார் மன்னர்.

தச்சருக்கோ மன்னன் சொல்படி நடந்தால் விஜயராகவனைப்பிரிய நேருமே என்ற கவலை. கனத்த மனத்துடன் வீடு திரும்பினார் அந்த தச்சர். மனம் முழுவதும் எப்படி இந்த அரசரிடமிருந்து தப்பிப்போம் என்ற கவலை வாட்டி எடுத்தது. மறுநாள் பொழுதும் விடிந்தது. விஜயராகவனையும் தாயார் மரகதவல்லியையும் இறுதியாக சேவிக்க கோயிலுக்குச் சென்றார். ‘‘ஹே விஜயராகவா! அம்மா மரகதவல்லி! என்னையே தங்களுக்கு அர்ப்பணித்து விட்டேன். இனி இந்த ஏழை தங்களின் சொத்து. தங்கள் சொத்தை மாற்றான் கவர்ந்து செல்லப் பார்க்கிறான்.

அதை பாதுகாப்பது உங்கள் கடமை!
என் பக்தியும் அர்ப்பணிப்பும் உண்மையானது என்றால் என்னைத் தடுத்தாட்கொள்ள நீங்கள் இருவரும் வரவேண்டும்! தவறினால் இந்த ஜீவன் இந்த உடலில் தங்காது! வருகிறேன்...’’ என்று பெருமானிடம் உரிமையோடு வேண்டி விட்டு வீடு திரும்பினார்.

வழியெங்கும் ‘‘அடிச்சது பார் இந்த தச்சனுக்கு ராஜ யோகம்...’’ என்ற  வம்பு பேச்சுக்கள் காதில் விழுந்து அவரை வாட்டி எடுத்தது.அவர் வீட்டிற்கு வரவும் அரண்மனையிலிருந்து பல்லக்கு வரவும் சரியாக இருந்தது. ‘‘தங்களை அழைத்து வரச் சொல்லி மன்னரின் உத்தரவு...’’ என்றான் வீரன்.‘‘மறுத்தால்..?’’

‘‘குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு வர உத்தரவு!’’
வேறு வழியின்றி தச்சர் பல்லக்கில் ஏறினார். பல்லக்கு நகரத் தொடங்கியது. தச்சரும் நாராயண நாமத்தை ஜபிக்கத் தொடங்கினார். அன்று ஆதிமூலமே என்று ஒரு யானை அழைத்ததும் ஓடிவந்த தயாபரன், இந்த தீனனின் குரல் கேட்டு வராமல் இருப்பானா?கருட வாகனம் ஏறி திருமகளாம் மரகதவல்லியை மடியில் அமர்த்திக்கொண்டு அழகாகக் காட்சி தந்தான்! அது நீல மேகத்தின் மீது மரகதக் கொடி படர்ந்தது போல இருந்தது. அந்த அற்புத தோற்றம் கண்டு அடியவர் உருகினார். மாலவனின் எழிலுருவை பலவிதமாகப் போற்றினார்.

‘‘முழுமுதலே! தேவர் பெருமானே! தங்கள் திருவடிகளைத் தவிர வேறொன்றும் எனக்கு வேண்டாம். எனக்கு இந்த உலகமே வெறுத்துவிட்டது. மோட்சம் தந்து அருளுங்கள்...’’ என பலவாறு மாதவனை அந்த அடியார் பணிந்தார்.

அவ்வளவுதான். நொடியில் தச்சர் ஜோதி வடிவாகி பெருமானோடு கலந்தார். இந்த அற்புத சம்பவத்தை ‘போரேற்றம் பெருமாள் கோயில்...’ என்றும் ‘சித்தன்னவேலி பெருமாள் கோயில்...’ என்றும் இக்கோயில் கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன.

‘‘இன்னிக்கும் இந்தக் குதிரை வாகனத்தை திருப்புட்குழில சேவிக்கலாம். இந்த திருக்கோயில்ல எட்டாம் நாள் உற்சவத்தைப் பார்க்க கூட்டம் அலை மோதும். ஏன்னா அன்னிக்கிதான் பெருமாள் அந்த தச்சர் சமர்ப்பிச்ச குதிரை வாகனத்தில பவனி வந்து பக்தர்களுக்கு அருள்புரிவார்.

பெருமாள் எப்பவுமே முக்கியமான வீதில மட்டுமே உலா வருவார். ஆனா, இந்தக் குதிரை வாகனத்தில பவனி வரும்போது, வழக்கமான வழில போகாம வேற வழில போவார். வேற எங்கயும் இல்ல... அந்த தச்சரோட குடிசைக்குதான்!

அங்க போனதும் அந்த தச்சரோட வம்சாவளியைச் சேர்ந்தவங்ககிட்ட பெருமாளுக்கு அணிவிச்ச மாலை முதல்கொண்டு எல்லா பிரசாதமும் கொடுப்பாங்க. தன் உடல் நோகுமேன்னு வருத்தப்பட்ட பக்தனுக்கு மட்டுமில்ல... அவனோட வம்சாவளிக்கே பெருமாளும் தாயாரும் இப்பவரைக்கும் அருள் செய்யறாங்க...’’ பக்திப் பரவசத்துடன் தழுதழுத்தபடி நிறுத்தினார் நாகராஜன்.

‘‘கேட்கவே பிரமிப்பா இருக்கு மாமா... செய்யும் தொழிலே தெய்வம்னு ஏன் பெரியவங்க சொல்றாங்கனு இப்ப புரியுது...’’ லதா நெகிழ்ந்தாள். ‘‘சரியா சொல்லிட்ட லதா... இதையேதான் கிருஷ்ண பரமாத்மா கீதைல கர்ம யோகம்னு சொல்றார். அதாவது, பலனை எதிர்பார்க்காம நம்ம கடமைய செய்தா கடவுள் கண்டிப்பா அருள் செய்வார்னு அர்த்தம்...’’ தன் கணவர் நாகராஜனின் அருகில் அமர்ந்தபடி ஆனந்தவல்லி சொன்னாள்.‘‘தாத்தா...’’ என்றபடி கண்ணன் இடையில் புகுந்தான். ‘‘மேல சொல்லுங்க...’’

‘‘குழந்தைக்கு கதை கேட்கற ஆர்வம்!’’ நாகராஜன் சிரித்தார். ‘‘திருமங்கை ஆழ்வார் இந்த தலத்துக்கு வந்து சுவாமி தரிசனம் பண்றார். அப்போ இந்த தலத்து தாயார் மரகதவல்லியோட கருணையும் அழகும் அவரைக் கட்டிப் போட்டது. உடனே தாயார் மேல பாசுரம் பாடிட்டார். உண்மைல இது விசேஷம். ஏன்னா, மத்த எல்லா தலத்துலயும் பெருமாளுக்கு மட்டுமே திருமங்கை ஆழ்வார் பாடியிருக்கார்.

தாயாரையும் சேர்த்து பாசுரத்துல அவர் பாடின தலங்கள்ல இதுவும் ஒண்ணு!’’ ‘‘அட... அது என்ன பாசுரம் தாத்தா?’’ கண்ணன் துள்ளினான்‘‘இந்த பாசுரம் ‘பெரிய திருமடல்’ல இருக்கு. பெயருக்கு ஏற்றாற்போல பாசுரம் ரொம்ப பெருசு. அதனால முக்கியமான வரிகளை மட்டும் சொல்றேன்...’’ என்றபடி கண்களை மூடி கரம் குவித்த நாகராஜன், கணீர் குரலில் பாடத் தொடங்கினார்...

‘‘என்னுடைய இன்னமுதை எவ்வுள் பெருமலையை
கன்னி மதில் சூழ் கண மங்கைக் கற்பகத்தை
மின்னை இருசுடரை வெள்ளறையுள் கல்லறைமேல்.
பொன்னை மரகதத்தை புட்குழி எம் போரெற்றை
மண்ணும் அரங்கத்து எம் மாமணியை...

- இதுல மரகதம்னு திருமங்கை ஆழ்வார் சொல்லியிருப்பது திருப்புட்குழி மரகதவல்லி தாயாரைத்தான்...’’‘‘அந்தளவுக்கு அந்தக் கோயில்ல தாயார் ஸ்பெஷலா மாமா..?’’ லதா சட்டென கேட்டாள். ‘‘ஆமா..! தன்னோட மாபெரும் கருணையால வறுத்த பயறைக் கூட முளைக்க வைப்பா!

இதனாலயே இந்தத் தாயாருக்கு ‘வறுத்த பயறை முளைக்க வைக்கும் மரகதம்’னு திருநாமமே வந்தது! குழந்தை பாக்கியம் வேணும்னு பிரார்த்தனை பண்ற திருமணமான பெண்கள் எல்லாம் அமாவாசை அப்ப திருப்புட்குழிக்கு போயி விடியற்காலைல அங்குள்ள குளத்துல நீராடி பெருமாளையும் தாயாரையும் வணங்கினா கண்டிப்பா புத்திர பாக்கியம் கிடைக்கும். அன்று முழுக்க விரதம் இருப்பது இன்னும் நல்லது!

இந்த பூஜையோட ஓர் அங்கமா பயறை வாங்கிட்டுப் போய் தாயார் சன்னதில கொடுப்பாங்க. பட்டர் அதை ஊற வைச்சு திருப்பிக் கொடுப்பார். குழந்தை வரம் கேட்டு வந்த பெண்கள் அதை பக்தியோடு வாங்கி தங்கள் முந்தானைல முடிஞ்சுட்டு அன்று இரவு தூங்கினா கண்டிப்பா அவங்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும்!’’ அழுத்தம்திருத்தமாக சொன்னார் நாகராஜன்.

‘‘ரொம்ப நன்றி மாமா... மனபாரம் இறங்கின மாதிரி இருக்கு. உடனே என் பையனையும் மருமகளையும் திருவெண்காட்டுக்கும் திருப்புட்குழிக்கும் போய் வேண்டிக்க சொல்றேன்..’’ எழுந்த லதா, கையெடுத்து நாகராஜனையும் ஆனந்தவல்லியையும் கும்பிட்டாள்.

‘‘கண்டிப்பா உனக்கு பேரனோ பேத்தியோ பிறப்பாங்க லதா... கோயிலுக்குப் போய் சாமியை வேண்டிக்கிற அதேநேரம் டாக்டர்கிட்டயும் அவங்களை கூட்டிட்டுப் போ. ‘தெய்வம் மனுஷ ரூபேனா’னு பெரியவங்க சொன்னதோட அர்த்தம்... பிரார்த்தனை பண்ற அதேநேரம் முயற்சியையும் கைவிடாத என்பதுதான்...’’ என்றபடி லதாவுக்கு குங்குமம் இட்டாள் ஆனந்தவல்லி.

பெரியவர்களான நாகராஜனையும் ஆனந்தவல்லியையும் நமஸ்கரித்துவிட்டு நிம்மதியுடன் லதா புறப்பட்டுச் சென்றாள்.ஏதோ நினைவு வந்ததுபோல் கண்ணன் துள்ளினான். ‘தாத்தா... இந்த திருப்புட்குழிலதானே ராமானுஜர் குருகுல வாசம் பண்ணினார்?’’ ‘‘சென்ட் பர்ெசன்ட் கரெக்ட் கண்ணா! இரு... இதைப் பத்திதானே சொல்லச் சொல்ற..?’’ சிரித்த நாகராஜன், ‘‘சொல்றேன்...’’ என்றபடி ஆரம்பித்தார்.

‘‘இளமைப் பருவத்துல திருப்புட்குழிக்கு போயி அங்க இருந்த யாதவ பிரகாசர் என்ற பண்டிதர்கிட்ட ராமானுஜர் பாடம் படிச்சார். அப்ப வேதத்துக்கு பண்டிதர் சொன்ன விபரீதமான அர்த்தங்களை மறுத்து உலகமே ஏத்துக்கக் கூடிய உண்மையானபொருளை ராமானுஜர் சொன்னார்.

இதனால ராமானுஜர் மேல யாதவ பிரகாசருக்கு கோவம் வந்தது. ஆனா, வெளில காட்டிக்கலை. இந்த நிலைல அந்த நாட்டு மன்னன் மகளுக்கு திடீர்னு பிரம்ம ராட்சஸ் பிடிச்சிருச்சு! யாதவ பிரகாசர் எவ்வளவோ மந்திரங்கள் சொல்லியும் அது போகலை. ‘ராமானுஜர் தன் பாதங்களை என் தலைல வைச்சாதான் போவேன்’னு அடம் பிடிச்சது!

வேறு வழி இல்லாம ராமானுஜர் தன் பாதங்களை அந்த இளவரசி தலைல வெச்சார். உடனே அந்த பிரம்ம ராட்சஸ் ஓடியே போயிருச்சு! இதைப் பார்த்த யாதவ பிரகாசர், ஆத்திரம் மேலிட ராமானுஜரைக் கொல்ல திட்டம் தீட்டினார்.

அந்த சதித் திட்டத்துல இருந்து காஞ்சி வரதராஜ பெருமாள்தான் ராமானுஜரைக் காப்பாற்றினார். ராமானுஜர் சன்யாசம் வாங்கினபிறகு இந்த யாதவ பிரகாசர் தன் தவறை உணர்ந்து ராமானுஜருக்கே சீடரானார்!’’ ‘‘மைகாட்! திருப்புட்குழி கோயிலுக்கு இவ்வளவு மகிமையா..?’’ கண்ணன் வியந்தான்.

கோயிலின் பெயர்:
திருப்புட்குழி விஜய ராகவ பெருமாள் கோயில்.
இது 108 திவ்ய தேசங்களில் 57வது திவ்ய தேசம்.
காஞ்சிபுரத்தில் இருந்து 11 கி.மீ தூரத்தில் உள்ள
பாலுசெட்டிசத்திரத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
ஆலயம் திறந்திருக்கும் நேரம்:
காலை 7:00 மணி முதல் மதியம் 12 மணி வரை
மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை

(கஷ்டங்கள் தீரும்)

ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்