பகவான்-30



Hunt Rajneeshees!

ஒரு சாமியாருக்கு சுரங்க வீடு அவசியமா?

பொதுவாக போர்ச்சூழல் நிலவும் இடங்களில்தான் சுரங்க வீடு அமைப்புகள் அமைக்கப்படும். போரில் ஒரு முக்கியமான தலைவரையோ, தளபதியையோ பாதுகாக்க இதுபோன்ற சுரங்க அமைப்புகள் உருவாக்கப்படும். ஹிட்லர், சதாம் உசேன் போன்றவர்கள் இதுபோன்ற சுரங்க வீடுகளில் தங்கியிருக்கிறார்கள் என்று வரலாற்றில் வாசித்திருக்கிறோம்.

ஆனால், அன்பையும், அறநெறியையும் போதிக்கும் பகவானுக்கு எதற்கு சுரங்கவீடு, ரஜனீஷ்புரத்தில் என்ன போரா நடந்துகொண்டிருந்தது என்பதைப் போன்ற கேள்விகள் உங்களுக்கு எழலாம்.

ஆமாம். கிட்டத்தட்ட போர்தான் நடந்துகொண்டிருந்தது.அமெரிக்க அரசு, அறிவிக்கப்படாத ஒரு போரை ரஜனீஷ்புரம் மீது கட்டவிழ்த்து விட்டிருந்தது. நேரடியாகத் தாங்கள் தலையிடாத மாதிரி காட்டிக்கொண்டாலும் உள்ளூர் மக்களை ரஜனீஷ்புரத்துக்கு எதிராக அணிதிரட்டி போராட வைத்துக் கொண்டிருந்தது.

ரஜனீஷ்புரத்தின் பாதுகாவலர்கள் ஆயுதம் ஏந்தி, பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டதை சுட்டிக்காட்டி, அவர்கள் நம்மை ஆக்கிரமிக்க வருகிறார்கள் என்று உள்ளூர் மக்களை அச்சப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.உண்மையில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத்தான் சன்னியாசிகள் ஆயுதம் ஏந்தவேண்டிய நிலைமை வந்ததே தவிர, யாரையும் அச்சுறுத்த அல்ல.

எனினும், ஒரேகான் மாகாணத்தில் பண்ணைத் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்களையும், அவர்களிடம் பணியாற்றும் பணியாளர்களையும் அரசியல்வாதிகள் ஏகத்துக்கும் பயமுறுத்தி வைத்திருந்தார்கள்.

எனவே, பண்ணையில் வேலை பார்க்கும் கவுபாய்கள், ‘நெருக்கடி’ ஏற்படும் பட்சத்தில் போருக்குத் தயாராக இருந்தார்கள்.அவர்களுக்கு தாராளமாக துப்பாக்கிகள் சப்ளை செய்யப்பட்டன. குறி பார்த்துச் சுடுவதற்கு ஏதுவாக ரஜனீஷின் படம் அச்சிடப்பட்டிருந்த போஸ்டர்கள் வழங்கப்பட்டன.

ரஜனீஷை சுட்டு துப்பாக்கியை இயக்கப் பழகிக் கொண்டிருந்தார்கள்.ஊரெங்கும் ‘Don’t Hunt Deer - Hunt Rajneeshees’ என்று வன்முறையைத் தூண்டும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. சுவர்களில் இந்த வாசகங்களை எழுதினார்கள். அதாவது ‘மான்களை வேட்டையாடாதீர்கள்! பதிலாக ரஜனீஷ் ஆசிரமத்திலிருப்பவர்களை சுடுங்கள்’ என்று நேரடியாகவே உள்ளூர் ஆட்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டார்கள்.

இதைத் தட்டிக் கேட்க வேண்டிய போலீஸ்காரர்களோ, “அவங்க கிட்டே கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருங்க...” என்று ஆசிரமத்து ஆட்களைத்தான் காப்ரா செய்து கொண்டிருந்தார்கள்.பிற்பகல் வேளைகளில் ரோல்ஸ்ராய்ஸ் காரை ஓட்டிக்கொண்டு பகவானே நகர்வலம் வருவது வழக்கம். ஆரம்பத்தில் தனியாகத்தான் போய்க் கொண்டிருந்தார்.

ஆனால், சூழல் எதிராகப் போய்க்கொண்டிருக்கும் நிலையில் பகவானின் காருக்கு முன்பாகவும், பின்பாகவும் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுக்கத் தொடங்கின. அந்த வாகனங்களில் ராணுவச் சீருடையில் சன்னியாசிகள் துப்பாக்கி ஏந்தி வலம்வரத் தொடங்கினார்கள்.இந்தக் காட்சியைக் காண்பதற்கு ஏதோ ஒரு நாட்டின் அதிபருடைய ‘கான்வாய்’ வாகனம் செல்வதைப் போலத் தெரியும்.“இவ்வளவு ஆடம்பரமெல்லாம் தேவைதானா ஷீலா?” பகவான் அமைதியாகக் கேட்டார்.

“இதைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்படாதீர்கள். புதிய மனிதனை உருவாக்கும் இலட்சியத்தில் நீங்கள் உறுதியாக நில்லுங்கள்!”

இந்த காலக்கட்டத்தில் ஷீலாவின் தொனி நிறையவே மாறியிருந்தது.தன்னை ‘பகவான் 2.0’ என்கிற மாதிரியாகவே அவர் நினைத்துக் கொண்டார். முன்பெல்லாம் ஒரு வேலை ஆகவேண்டும் என்றால் கோரிக்கைதான் வைப்பார். இப்போதோ ஆசிரமத்தில் அனைவருக்கும் உத்தரவிட ஆரம்பித்தார்.

பகவானுடன் ஆரம்பக் காலங்களில் இருந்தே பயணித்து வரும் சீனியர்கள் கூட ஷீலாவின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டிய நிலைமை. அந்த அளவுக்கு அவரது அதிகாரம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது.

அவர் குறித்து யாரேனும் பகவானுக்கு அனுப்பும் புகார்க் கடிதங்கள்கூட ஷீலாவாலேயேதான் பிரித்து வாசிக்கப்பட்டன. புகார் கொடுத்தவரின் மீதே ஏதோ பொய்ப்புகார் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.ரஜனீஷ்புரத்தில் தனக்குத்தானே வானளவு அதிகாரத்தை ஷீலா வழங்கிக் கொண்டதால் அவருக்குப் பின்னாலும் அல்லக்கைகள் திரள ஆரம்பித்தார்கள்.

சில உண்மையான பக்தர்களோ, அமெரிக்க அரசை பகவான் பகைத்துக்கொள்ள ஷீலாவின் தடாலடியான அவசர நடவடிக்கைகளே காரணம் என்று தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர். தாங்கள் ஆன்மீகத்தை பரப்பிக் கொண்டிருக்கிறோமா அல்லது புதியதாக ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்டிருக்கிறோமா என்கிற சந்தேகம் அவர்களுக்குள் எழுந்தது.

உள்ளூர் நடப்பு பகவானுக்கு எந்த அளவுக்கு தெரியும் என்று எவருக்குமே தெரியவில்லை.“அன்பும், சுதந்திரமும் ரஜனீஷ்புரவாசிகளுக்கு முழுமையாக வழங்கப்படுகின்றன. அளவில்லா மகிழ்ச்சியை இங்கு வாழ்பவர்கள் அனுபவிக்கிறார்கள். இங்கு வசிக்கும் ஒவ்வொருவரும் தங்களுக்குள் உதவிக்கொண்டு ஒற்றுமையாக வாழ்கிறார்கள். ஒரு புதிய சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ரஜனீஷ்புரம் திகழ்கிறது...” என்று ஊடகங்களிடம் பேசினார் ஓஷோ.

அப்போது அமெரிக்க அதிபராக இருந்தவர் ரொனால்டு ரீகன். நடிகராக இருந்து நாட்டின் அதிபராகி சாதனை படைத்தவர். இளம் வயதில் கம்யூனிஸ்டு சிந்தனைகளோடு இருந்த ரீகன், அப்படியே யூ-டர்ன் அடித்து பழமைவாத அரசியலைக் கையிலெடுத்து பெரும் செல்வாக்கு பெற்றார். இன்றளவும் உலகில் பழமைவாதிகளின் ஹீரோவாக ரீகன் பார்க்கப்படுகிறார்.

ரஜனீஷ்புரம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டபோது அவர் அதிபராக இருந்தது, பகவானுக்கு பெரும் பின்னடைவாக ஆகிப்போனது. ஆன்மீகத்தில் புதிய, புரட்சிகரமான கருத்துகளை பகவான் சொல்லிவந்ததை பழமைவாத ரீகனால் ரசிக்கமுடியவில்லை.ரஜனீஷ்புரத்தில் என்னென்ன விதிமுறைகள் மீறப்படுகின்றன, சட்டத்தை எப்படி அவர்கள் வளைக்கிறார்கள் என்று கண்டறிந்து அறிக்கை தருமாறு கிட்டத்தட்ட இருபது அமைப்புகளுக்கு ரகசியக் கட்டளை இட்டிருந்தார் ரீகன்.

ஒரு சிறிய வாய்ப்பு கிடைத்தால் போதும், பகவானையும், அவரது பக்தர்களையும் ஒட்டுமொத்தமாக காலி செய்துவிடலாம் என்று மீனுக்குக் காத்திருக்கும் கொக்கு மாதிரி காத்திருந்தார்.

அப்போது அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரலாக இருந்த எட்வின் மீசே, வெளிப்படையாகவே பகவான் மீது வெறுப்பினைக்  கக்கினார். “அந்த இந்திய சாமியாரின் பெயர் என் காதில் விழும்போதெல்லாம் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது மாதிரி எரிகிறது” என்றார்.

அவருக்கு மேலும் எரிச்சல் ஊட்டும் விதமாக அவ்வப்போது ஊடகங்களைக் கூட்டி தங்கள் ராணுவ பலத்தைக் காட்டிக்கொண்டிருந்தார் ஷீலா.ராணுவ அணிவகுப்பு, நவீன ஆயுதங்கள், அவற்றைக் கையாளுவதற்கு முறையான பயிற்சி பெற்றவர்கள் என்று திரும்பத் திரும்ப ராணுவப் பெருமை பேசிக்கொண்டிருந்தார் ஷீலா.

“இதெல்லாம் நல்லதுக்கு இல்லை. பகவான்தான் நம்மை காப்பாத்தணும்...” என்று சில அமைதி விரும்பிகள் பகவான் காதுபடவே சொன்னார்கள்.அதன்பிறகுதான் ஷீலாவைக் கட்டுப்படுத்த ஓஷோ முயற்சித்தார்.“ஷீலா, நாம் வன்முறையாளர்கள் அல்ல.

நாம் ஆயுதம் ஏந்த வேண்டியது காலத்தின் கட்டாயமே தவிர, நமக்கு அதிகாரப் பசி இல்லை. இதை அமெரிக்க அரசுக்கும், மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டியது நம்முடைய கடமை. நம்மில் ஆயுதம் ஏந்தும் யாரும் கோபத்தோடு ஏந்தவில்லை. எவரையும் காயப்படுத்தும், உயிரெடுக்கும் நோக்கம் நமக்கு இல்லை...” என்றார்.

எனினும் ஷீலா, தன்னை ராணுவப்படையின் தளபதியாகவே கருதிக்கொண்டு மேலும் மேலும் இராணுவத்தை பலமாக்கிக் கொண்டிருந்தார்.ஒருகட்டத்தில் அமெரிக்க அரசை சமாளிப்பதைவிட ஷீலாவைக் கட்டுப்படுத்தவதே பெரும் சிரமமாகப் போகலாம் என்று பகவானுக்குத் தோன்றியது.எனவே, அவரே ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களின் அணிவகுப்பின் போது பேசத் தொடங்கினார்.

ஆயுதப்பயிற்சி எடுப்பதற்கு முன்பாக ஒவ்வொருவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்கிற நடைமுறையைக் கொண்டு வந்தார்.ரஜனீஷ்புரத்தைப் பாதுகாக்கும் பாதுகாவலர்கள் நவீன ராணுவமாக அல்லாமல் பழங்கால சீன தற்காப்புக் கலை அறிந்த துறவிகளைப் போல உருவெடுக்க வேண்டுமென்று பகவான் விரும்பினார்.தன்னுடைய பணிகளில் பகவான் தலையிடுகிறார் என்று ஷீலா முணுமுணுக்கத் தொடங்கினார். அவரது அல்லக்கைகள் வேறு அவரை ஏற்றிவிடத் தொடங்கினர்.விளைவு?

(தரிசனம் தருவார்)

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்