தண்ணீர் நெருக்கடி அதிகம் உள்ள நாடாக இந்தியா மாறப் போகிறது!கழிவுநீர் மேலாண்மையே இதைத் தடுக்கும்

நன்னீர் ஆறுகளும், குளங்களும், ஏரிகளும், குட்டைகளும் சாக்கடை நீராக ஆக்கப்பட்டுவிட்டன. நிலத்தடி நீரை ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து உறிஞ்சுவதோடு நிலப்பரப்பில் ரசாயனங்களைத் தூவி குடிப்பதற்கு தகுதியில்லாத நீராக மாற்றிவிட்டோம். பின்னர் அந்த கழிவுநீரையே சுத்திகரித்து குடித்துக்கொண்டும் இருக்கிறோம்.

இதற்கெல்லாம் கழிவுநீர் மேலாண்மையை சரியாகச் செய்யாததே காரணம் என்கிறார் சமூக செயற்பாட்டாளர் சு.மூர்த்தி. அவர் நம்மோடு பகிர்ந்துகொண்ட கருத்துக்களைப் பார்ப்போம்....நீரின்றி அமையாது உலகு என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் உருவான வாழ்வியல் இலக்கியமான வள்ளுவம் கூறியது. 2010ல் ஐக்கிய நாடுகள் சபை பாதுகாக்கப்பட்ட தூய்மையான குடிநீர்கிடைக்கச் செய்வது எல்லா மனிதர்களுக்குமான அடிப்படை உரிமை என அறிவித்தது.

ஐக்கிய நாடுகளின் அவை 2015ல் அறிவித்த நிலையான வளர்ச்சி இலக்கு 6; 2030ம் ஆண்டுக்குள்அனைவருக்கும் பாதுகாப்பான தூய்மையான நீரை வழங்கவேண்டும் என நிர்ணயித்துள்ளது.  ஆனால், இன்று பில்லியன் கணக்கான மக்கள் பாதுகாப்பான நீர் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். உலகில் 100 மில்லியன் மக்களுக்குச் சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. வாழ்விடங்கள், பள்ளிகள், பணியிடங்கள், வேளாண்மை நிலங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற எல்லா இடங்களிலும் மக்கள் நீருக்காக அவதிப்படும் நிலை உள்ளது.

பணம் கொடுத்து நீரை வாங்க முடியாதவர்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். உணவும் உடையும் போல நல்ல குடிநீர் கிடைப்பதும் கூட ஒரு வாழ்க்கை வசதியாக மாறிவிட்ட அவலம் இன்று ஏற்பட்டுள்ளது. ஒரு நபருக்கு ஓர் ஆண்டுக்குக் கிடைக்கும் தண்ணீர் 1700 கன மீட்டருக்குக் குறைவாக இருக்குமானால், தண்ணீர் பற்றாக்குறை உள்ளது என உலக வங்கி கூறுகிறது.

2030ல் தண்ணீர் பற்றாக்குறை மனித உயிர்களை மட்டுமல்லாமல் தாவரங்கள், பறவைகள், விலங்குகள் என எல்லாவற்றின் அழிவிற்கும் இட்டுச்செல்லும். இப்பொழுதே தண்ணீர் இல்லாத நகரமாக தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெங்களூர் நகரமும் தண்ணீர் இல்லாத நகரமாக அறிவிக்கப்படும் நிலை விரைவில் வர உள்ளது. இந்தியா, உலகில் தண்ணீர் நெருக்கடி அதிகம் உள்ள நாடாக மாறப் போகிறது!  
நீரை நாம் முறையாகப் பயன்படுத்தாமையும், பயன்படுத்திய நீரை சரியாக மறுசுழற்சி செய்யாமையும் தான் இன்றைய சிக்கல்களுக்கு முதன்மையான காரணங்கள்.

ஒரு குடும்பம் மட்டும் பயன்படுத்தப்போகும் ஒரு மகிழ்வுந்தை உற்பத்தி செய்ய பல குடும்பங்கள் பல நாட்களுக்குப் பயன்படுத்தும் நீரை வீணாக்குகிறோம். இது சரியான வளர்ச்சியா... அனைவருக்குமான வளர்ச்சியா... என்ற கேள்வி எழுப்பவேண்டிய நிலை இன்றுள்ளது. ஆற்று நீரை புனிதம் என்று போற்றும் நம்முடைய நாட்டில்தான் எல்லாவகையான கழிவு நீரையும் ஆற்றில் கலக்கிறோம்.

குளம், குட்டைகள், ஆறுகளைஆழப்படுத்துவது ஒருபுறம் இருந்தாலும், தண்ணீர் சிக்கனம் என்பது தவிர்க்க முடியாததாக உள்ளதால், கழிவு நீரைக் கூட ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தியாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அவ்வகையில், வீட்டுக் கழிவு நீர் முதற்கொண்டு எல்லாவற்றையும் நாம் ஆக்கபூர்வமான பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தாக வேண்டும்.

அமெரிக்காவின் சியாட்டலை மையமாகக் கொண்டு செயல்படுகிறது ஜானிக்கி உயிரி சக்தி ஆலை. மனிதக் கழிவைச் சுத்திகரிப்பு செய்து அதிலிருந்து குடிநீரைத் தயாரிக்கிறது. இதில் தயாரான குடிநீரை பில்கேட்ஸ் குடித்துவிட்டு “இந்தத் தண்ணீர் மிகவும் சுவையாக இருக்கிறது. இதற்கு முன் நான் பருகிய குடிநீரைவிட இதுவே சிறந்ததாக இருக்கிறது. தினமும் இதனைப் பயன்படுத்த நான் விரும்புகிறேன்” என்றார்.

அறிவியலின் முன்னேற்றங்களை நாம் எப்படி எப்படியோ பயன்படுத்தவேண்டிய நிலையில் உள்ளோம்.கடந்த முன்னூறு ஆண்டுகளாக தொழிற்புரட்சி யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்த தொழிற்புரட்சி யுகம் அளித்த பெரும் கேடுதான் நீர் மாசுபாடும் நீர்ப் பற்றாக்குறையும்.

வளர்ந்த நாடுகள் எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு கொள்கைகளை உருவாக்குகிறார்கள். சுற்றுச் சூழலைப் பாதிக்கும் தொழிற்சாலைகள் வளர்ந்த நாடுகளில் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், வளர்ந்த நாடுகளில் அனுமதிக்கப்படாத தொழிற்சாலைகளை அந்நிய முதலீடு என்று வரவேற்கிறோம். திருப்பூரில் இயங்கும் பின்னலாடை நிறுவனங்களுக்கான எல்லா இயந்திரங்களும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்த இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நாடுகளால் அங்கேயே பின்னலாடைகளை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், சுற்றுச் சூழலைக் கவனத்தில் கொண்டு இதைச் செய்வதில்லை. பின்னலாடைகளை இந்தியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்கின்றன.

பின்னலாடை மட்டுமல்ல, மாட்டிறைச்சி முதற்கொண்டு இப்படித்தான் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இன்னொரு புறம் உள்நாட்டில் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் மீது அச்சுறுத்தல் உருவாக்கப்படுகிறது.  நம்முடைய நாட்டில் உள்ள நீராதாரங்களைக் கெடுத்துவிட்டோம்.

வீடுகளில் சுத்திகரிப்புக் கருவிகளைப் பயன்படுத்துகிறோம். இதுவும் கூட நாகரிகம் என்றும் வசதி வாய்ப்பு என்றும் பார்க்கப்படுகிறது. நீரை மாசுபடுத்திவிட்டு, தூய்மையாக்கும் கருவிகளை உற்பத்தி செய்வதும் வாங்கிப் பயன்படுத்துவதை நாகரிகமாகக் கருதுவதும் நமது வாழ்வியல் அவலம் என்றுதான் கூறவேண்டும்.

ஆண்டுக்கு ஆண்டு மழை பொழிவது குறைகிறது. இதனால் நிலத்தடி நீரின் அளவும் வெகு வேகமாகக் குறைகிறது. நகரங்களில் மக்கள் ஓரிடத்தில் மிக அதிகமாகக் குவியும் நிலை. எனவே, நீர் மேலாண்மை குறித்து ஆட்சியாளர்கள் மிகுந்த அக்கறையோடு கொள்கைகளை வகுத்துச் செயலாற்றவேண்டும்.   

ஆறுகளில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்படவேண்டும். ஆறுகளில் கழிவுநீர் கலந்து தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசும் நிலை உள்ளது. இதையெல்லாம் தடுப்பதற்கென்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளது. நமது நாட்டில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியக் கொள்கைகளே மாசடைந்துவிட்டன. எல்லா இடங்களிலும் லஞ்சம், ஊழல் பரவி விட்ட நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் மட்டும் மாசற்றவர்களாக மாறிவிட்டனர்.  

தமிழகத்தில் பெரும் நீர் ஆதாரங்களான காவிரி, வைகை, நொய்யல், பவானி, தென்பெண்ணை, பாலாறு மற்றும் பல சிற்றாறுகள் இருந்தாலும் அனைத்திலும் அந்த நகரங்களைச் சுற்றியுள்ள தொழிற்சாலைக் கழிவுகள், மனிதக் கழிவுகள் போன்றவை முறைப்படி சுத்திகரிக்கப்படாமல் நமது நீர் ஆதாரங்களில் கலந்துவிடுவதால் அதன் சுகாதாரம் பெரும் கேள்வி–்க்குறியாகி உள்ளது.நாட்டை ஆள்பவர்களும் நாட்டை நிர்வகிப்பவர்களும் தூய்மையானவர்களாக மாறவேண்டும். இது நடக்காமல் நீர் மாசடைவதைத் தடுப்பதும் ஆறுகள் தூய்மையடைவதும் சாத்தியமில்லை.

தோ.திருத்துவராஜ்