மின்னல் தோன்றியதே...



பலத்த மழை. இருள் நனைந்த இரவுநேரம். ஊரே மின்சாரமற்று படுத்திருந்தது. தென் திசையில் கொடிமின்னல் தோன்றி மறைந்தது. ஈரம் பரவிய காற்றுக்கு வீரம் வந்ததுபோல் மரங்களைக் குலுக்கி, செடிகளை உலுக்கி, ருத்ர தாண்டவம் புரிந்துகொண்டிருந்தது.ஊர் எல்லைச்சாமி கோயிலின் வடக்குப் பக்க நுழைவாயிலைக் கடந்தவுடன் இரண்டு பர்லாங்கு தூரத்தில் இருந்தது அந்தக் குடிசை வீடு.

வீட்டில் சிறு திரியில் சீம எண்ணெய் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அடித்த காற்றில் ஓலைகள் எல்லாம் பிய்த்துக்கொண்டு காற்றில் பறந்துசென்றன.
குடிசைக்குள் கசிந்த விளக்கு வெளிச்சத்துக்குப் பின்னால் கற்சிலையாக சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் சக்திக்கனி. வாடிய முகமும் சிவப்பேறிய கண்களுமாக அந்த சிறு வெளிச்சத்திலேயும் மங்கிய உருவத்தோடு, இடத்திற்கு சற்றும் பொருந்தாமல் இருந்தது அவளுடைய தோற்றம்.  

அவள் மட்டும் தனியாக இல்லை. அவளுடன் மகன் பிச்சைமுத்து. தாயின் அருகில் கால்களை மடக்கி சுருண்டு கிடந்தான். ஏழு வயதுச்சிறுவன் பிச்சைமுத்துவுக்கு இரண்டு கைகளும் முழங்கைகளுக்குக் கீழே வளர்ச்சி இல்லாமல் சூம்பியிருந்ததுதான் வேதனைக்குரிய விஷயம். காலைக்கடனில் ஆரம்பித்து, உண்ணும் உணவைத்  தொடர்ந்து இரவு உறங்கும் வரை எல்லாவற்றுக்கும் தாயையே எதிர்பார்க்கும் பரிதாபத்துக்குரிய அவலநிலை.

இது இடையில் வந்ததல்ல, பிறவி ஊனம். இவனுக்கு முன்னால் பிறந்த மூணுபிள்ளைகளும் நீலம் பூத்த உடலோடு பிறந்த ரெண்டு மூணுநாளிலேயே போய்ச்சேர்ந்திட, குரும்பூரிலிருந்து நாசரேத்துக்குச் செல்லும் வழியில் எடையன்விளை கடையனூரில் இருக்கும் முனியராஜா கோயிலில் நேந்துக்கிட்டதில் தங்கியதுதான் நாலாவது பிள்ளை பிச்சைமுத்து.

‘மூணு பொட்டைக்கு பின்னால் நாலாவது ஆம்பிளைப் பிள்ளை’ என ஒரு பக்கம் சந்தோஷப்பட்டாலும் இந்த பிறவி ஊனத்தை நினைத்து... நினைத்து... சக்திக்கனி அழாத நாளே இல்லை. பிச்சைமுத்து பிறந்த ஒரு சில மாதத்திலேயே அவனுடைய அப்பங்காரனை அந்த ஊரு போலீஸ்காரர்கள் சந்தேகக் கேசில் பிடித்துச் சென்று அடித்துக் கொன்றுவிட்டார்கள். இவளும் அழுது புரண்டு போலீஸ்... கேஸ்... என்று நடையாக நடந்து பார்த்தாள். ஒன்றும் நடக்கவில்லை.

‘பச்ச உடம்புக்காரி அலைஞ்சது போதும்... போனவன் போயிட்டான்... அவன் விதி முடிஞ்சிபோச்சி... இனி உன் புள்ளையைப் பாரு சக்திக்கனி...’ என அக்கம் பக்கத்தில்  ஆறுதல் சொல்ல, மூலையில சோர்ந்து கிடந்தவள் வேறு வழியின்றி மெல்ல மனதைத் தேற்றிக்கொண்டு எழுந்து நடமாட ஆரம்பித்தாள்.  

வீட்டில் வறுமை தலைவிரித்து ஆட, தாய்க்கும் பிள்ளைக்கும் சோத்துக்கே திண்டாட்டமாகிப் போனது. இனியும் இப்படியே இருந்தால் சரிப்பட்டு வராது என சக்திக்கனி பூ வியாபாரத்தில் இறங்கினாள்.   அது பொறுக்காமல் அதுக்கும் ஆப்பு வைத்தாள் எதிர் வீட்டுக் காரி சுந்தரி. நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டும், தழையப் பின்னிய ஜடையில் மல்லிகைப் பூச் சரமுமாக சுந்தரி  பூக்கடைக்கு முன்னால் வந்து அமர்ந்தால் மொத்தக்
கூட்டமும் அவள் பக்கம்தான் திரும்பியது. வியாபாரம் ஓஹோ என களை கட்டியது.  

ஆனால், சக்திக்கனிக்கோ விலைபோகாத பூக்கள்தான் வீடு தேடி வந்தது. வெற்று நெத்தியும் வெறுமையான கழுத்தும் சோகமே உருவான முகமும் பார்ப்பவர்களுக்கு எப்படி இருந்ததோ... ஓரிருவரைத் தவிர மற்ற வியாபாரம் எல்லாம் அந்த எதிர் வீட்டுக்காரியிடமே போனது.

பல நாட்கள் சோர்ந்துபோன முகமும், காய்ந்துபோன வயிறுமாக சுருண்டு படுத்துக்கொள்வாள்.

பாவம் பச்சைக்குழந்தை பிச்சைமுத்து, தாயைக் கண்டவுடன் முகம் மலருவான். பிள்ளையின் முகம் பார்த்தவுடன் பசி வயிற்றையும் மீறி பால்சுரக்கும். பிள்ளையின் பசியைப்போக்கிவிட்டு திருப்தியோடு சக்திக்கனி சாய்ந்துகொள்வாள். இப்படியாக நாட்களும் கடந்தன.

பிச்சைமுத்துவுக்கு பள்ளிக்குப்போகும் வயது வந்தது. அதுவரை எப்படியோ காலத்தைத்தள்ளியவள், பள்ளியில் சேர்க்கப் போனபோதுதான் முதல் முறையாக மனம் உடைந்தாள். ‘‘இரண்டு கைகளும் வளர்ச்சி இல்லாத குழந்தையை எப்படி பள்ளியில்  சேர்ப்பது? அவனால் எப்படி எழுத முடியும்? மற்ற பிள்ளைகளும் படிக்காமல் அவனைத்தான் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பார்களே தவிர பாடத்தை கவனிக்க மாட்டார்கள். அதனால் அவனை வேற பள்ளியில சேருங்கள் அல்லது வீட்டிலேயே வைத்துக்கொள்ளுங்கள்’’ என ஒரேடியாக மறுத்துவிட்டார் தலைமை ஆசிரியர்.

“அவனுக்கு ‘கை’ இல்லன்னா என்னாங்க ஐயா..? மத்தவங்க கையால செய்யிற வேலையெல்லாம் என் மவன் காலால செய்வாங்கையா. கொஞ்சம் கொஞ்சமா எழுத கத்துக்கொடுத்தா அவன் காலாலையே எழுதி பழகிக்குவான் ஐயா...” கண்ணீரும் கம்பலையுமாகக் கெஞ்சினாள் சக்திக்கனி.
“அதெல்லாம் சரிப்பட்டு வராதும்மா... நீங்க பையனைக்கூட்டிட்டு போங்க...” மறுபேச்சுக்கே இடமில்லை என்பது போல கடுமையாகப் பேசி அனுப்பினார் அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர்.

தாயும், பிள்ளையும் வாடிய முகத்தோடு வீடு திரும்பினார்கள். அதன்பிறகு பிள்ளையை பள்ளிக்கு அனுப்பாமல் தன்னுடனே வைத்துக்கொண்டாள் சக்திக்கனி. பூ விற்கப்போகும்போது அவனைத் தன்னுடன் அழைத்துச்செல்வாள். சும்மா இருக்கும் நேரங்களில் தனக்குத் தெரிந்த தமிழ் எழுத்துக்களை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தாள்.

பிச்சைமுத்துவும் அம்மா சொல்லிக் கொடுத்ததை மனதில் இருத்திக் கொண்டு கவனமாகப் படிக்க ஆரம்பித்தான். அத்துடன் படித்ததை தன் காலில் பேனாவை செருகி எழுதியும் காட்டினான்.இப்படியே நாட்கள் நகர்ந்து மாதங்கள் கடந்தன. ஐந்து வயது முடிந்து ஆறாவது வயதுக்கு அடியெடுத்து வைத்தான் பிச்சைமுத்து. தாய்க்கு உதவியாக பூக் கடையில் அமர்ந்திருந்தவனைப் பார்த்து பரிதாபப்பட்டு அந்த வழியாகச் சென்றவர்கள்
சில்லறையைப் போட்டுவிட்டுச் சென்றனர்.

இது சக்திக்கனிக்கு கோபத்தை உண்டாக்கியது. ‘‘நீ என்ன பிச்சக்காரனா? இலவசமா யார் என்ன கொடுத்தாலும் இனி வாங்கக் கூடாது. யாராவது காசு போட்டா வேண்டான்னு சொல்லி எடுத்துட்டு போகச்சொல்லு...’’ என்று கண்டிப்புடன் சொன்னாள். அத்தோடு மட்டும் அவள் விட்டுவிடவில்லை. பிச்சைமுத்துவை எதிரில் இருக்கும் ஒரு பால்வாடிக்கு அழைத்துச்சென்றாள்.

பால்வாடி டீச்சர் தெரிந்தவர் என்பதால் அவரிடம் கெஞ்சிக் கூத்தாடி, “என் பையனை கொஞ்சம் இங்க உட்கார வச்சிக்குங்க டீச்சர். அவனால உங்களுக்கு எந்த தொந்தரவும் வராது... நீங்க சொல்லிக் கொடுக்குற பாடத்தை அவன் ஓரமா உட்காந்து காதால கேட்டுக்கிட்டு இருக்கட்டுமே... கொஞ்சம் தயவு பண்ணுங்க” என்று கெஞ்சினாள்.

“நான் பார்த்துக்குறேன் பிச்சமுத்தம்மா... அவனும் என் பிள்ளை மாதிரிதான். நீங்க கவலைப்படாம போங்க...” என்று தைரியம் சொல்லி அனுப்பி வைத்தார் அந்த பால்வாடி டீச்சர் சுமதி.அதன்பிறகு தினமும் மகனை அழைத்து வந்து பால்வாடியில் விட்டுவிட்டு பூ வியாபாரத்தை கவனிக்க ஆரம்பித்தாள் சக்திக்கனி. பிச்சைமுத்துவும் அவர்கள் சொல்லித்தரும் பாடங்களை மனதில் பதியவைத்துக் கொண்டான். ஓய்வு நேரங்களில் பாடங்களை கால்களால் எழுதிப்பார்த்ததோடு, படங்கள் வரையவும் பழகிக்கொண்டான்.

அவன் தன் கால்களால் வரைந்த படங்களை எல்லாம் எடுத்துச்சென்று டீச்சரிடம் காட்டினான். அதைப் பார்த்த டீச்சர் அசந்து போனார். பிச்சைமுத்துவிடம் இவ்வளவு பெரிய திறமை இருப்பதை நினைத்து அவனைப்பாராட்டியதோடு கலர்பென்சில், நோட்டுப் புத்தகம் எல்லாம் வாங்கி அவனிடம் கொடுத்து, வீட்டில் இருக்கும்போது வரைந்து எடுத்து வரும்படி ஊக்கப்படுத்தினார்.

அவர்களின் ஊக்கம் அவனை அதிகமாக வரையத் தூண்டியது. பக்கம் பக்கமாக வரைந்து தள்ளினான். ‘‘என்னடா எப்ப பார்த்தாலும் படத்தையே வரைஞ்சிக்கிட்டு இருக்கே...’’ என்று கேட்டாள் சக்திக்கனி.“அம்மா டீச்சர்தாம்மா வரைய சொன்னாங்க...

இதோ பாரு இதெல்லாம் நான் வரைஞ்சதுதான்...”மகன் காட்டிய படத்தைப் பார்த்து சக்திக்கனியே அசந்துபோனாள். தன் தாய் ரோட்டோரத்தில் அமர்ந்து பூ கட்டுவதுபோல் அப்படியே தத்ரூபமாக வரைந்திருந்தான்.

“என் தங்கமே! இவ்வளவு அழகாக வரஞ்சிருக்கீயே! இத்தனைநாளும் இது எனக்குத் தெரியாமப் போச்சே!” என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். ‘‘ஆனாலும் படத்தைவிட பாடந்தான்டா முக்கியம். நீ நாலு எழுத்து படிச்சிக்கோ. உனக்கு பெரிய வேலை எல்லாம் கிடைக்கும்...’’ என்று படிப்பின் அருமையை மகனுக்கு வலியுறுத்தினாள்.

அம்மாவின் கஷ்டத்தை அருகிலிருந்து பார்த்தவனல்லவா..? அவளை கஷ்டப்படுத்த நினைப்பானா? “அம்மா... நான் நல்லா படிச்சி பெரிய வேலைக்குப் போயி உன்னை நல்லா பாத்துக்குறேன்மா. உன்னை கார்ல எல்லாம் கூட்டிட்டு போறேன்மா... கவலைப்படாதே...” என்று பெரிய மனுஷன்போல பேசி அம்மாவின் கண்ணீரைத் துடைத்தான் மகன்.

யாருடைய உதவியும் இல்லாமல் கால்வயிறு அரைவயிறு கஞ்சியைக் குடித்துக்கொண்டு எப்படியோ காலம் ஓடியது.ஒரு நாள் தூத்துக்குடி நூலகத்திலிருந்து நூலகர் ஒருவர் வந்தார். ஐந்து வயது முதல் பதினைந்து வயதுவரை உள்ள மாணவருக்கான பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி,   ஓவியப்போட்டி என நடத்தினார்.

அதில் ஓவியப்போட்டியில் பிச்சைமுத்து கலந்துகொண்டான். முதலில் பிச்சைமுத்துவைச் சேர்த்துக்கொள்ளத் தயங்கினார்கள். பள்ளியில் படிக்காத, அதுவும் கை வேறு ஊனமாக இருக்கும் பையனை இந்தப் போட்டியில் சேர்த்துக்கொள்ள முடியாது என்று கூடக் கூறினார்கள். ஆனால், பால்வாடி டீச்சர் சுமதியின் உதவியால் போட்டியில் கலந்துகொண்டான் பிச்சைமுத்து.

முதல் நாள் இரவு பெய்த கனமழையில் நைந்துபோன ஓலைக் குடிசைக்குள் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நின்றது. ஒழுகாத இடம் சமையல்கட்டில் இருக்கும் சாணம் மெழுகிய அடுப்பு மேடை மட்டும்தான். அதனால் அந்த எரியாத அடுப்பு மேடை  மீது மகனை அமர வைத்திருந்தாள் சக்திக்கனி. இரவு முழுவதும் அவன் சுருண்டு கிடந்தது அந்த மேடையின் மேல்தான். அதனால் அந்தக் காட்சியையே கண்முன் கொண்டுவந்து அப்படியே வரைந்து முடித்தான் பிச்சைமுத்து.

போட்டியின் முடிவை ஒரு மாதத்துக்குப் பிறகுதான் தெரியப்படுத்துவோம் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்கள். ஏதோ தன் மகனும் போட்டியில் கலந்துகொண்டான் என்ற சந்தோஷத்தோடு பிச்சைமுத்துவை வீட்டுக்கு அழைத்து வந்தாள் சக்திக்கனி. அத்தோடு அந்த விஷயத்தை மறந்தும் போனார்கள்.

ஒரு மாதத்திற்குப் பிறகு, சுதந்திரதினத்துக்குக் கொடியேற்ற அந்த ஊருக்கு கலெக்டர் வந்தார். அப்போது, போட்டியில் பரிசுபெற்ற மாணவர்களுக்கு அவர் கையால் பரிசு வழங்கப்போவதாகவும் தெரிவித்தார்கள். சீக்கிரமே பூ வியாபாரத்தை முடித்துவிட்டு மகனை அழைத்துக்கொண்டு விழாவுக்கு வந்தாள் சக்திக்கனி. மேடையில் ஒலிபெருக்கியில் பரிசுபெற்றவர்களின் பெயர்களை அறிவித்தார்கள்.

‘‘ஓவியப்போட்டியில் முதல் பரிசு பிச்சைமுத்து...’’ என்று சொல்லவே, கேட்ட சக்திக்கனிக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. மகனை அழைத்துக்கொண்டு மேடையில் ஏறினாள். பரிசு கொடுப்பதற்காக நின்ற கலெக்டருக்கு ஒரே அதிர்ச்சி.“நீ எப்படிப்பா இப்படி ஓர் அழகான  படத்தை  வரைஞ்சே...?” என்று ஆச்சரியத்தோடு கேட்டார் கலெக்டர்.

அவர் அப்படி கேட்கவும் அம்மாவுக்கும் பிள்ளைக்கும் அளவுகடந்த ஆனந்தம் தோன்றியது. மகனை பெருமையோடு பார்த்தாள் சக்திக்கனி. பிச்சைமுத்துவுக்கு முகமெல்லாம் புன்னகை மலர்ந்தது. தாயின் முகத்தை ஏறிட்டுவிட்டு சங்கோஜத்தோடு கலெக்டரின் பக்கம் திரும்பி தன் இரண்டு கால்களையும் சுட்டிக்காட்டி பதில் சொன்னான்.

“காலால் வரைந்தேன் சார்..!”அதைக் கேட்டவுடன் கலெக்டர், பிச்சைமுத்துவை அன்போடு தழுவிக்கொண்டார். “அப்படியா...? வெரிகுட். எந்தப் பள்ளியில் படிக்கிறே?...”அவர் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அவன் தன் தாயைப் பார்க்க, அதற்கு சக்திக்கனி பதில் கூறினாள். பிச்சைமுத்துவை பள்ளியில் சேர்த்துக்கொள்ள மறுத்து தலைமை ஆசிரியர் திருப்பி அனுப்பிய விஷயத்தைக் கூறினாள்.

உடனே கலெக்டர் அந்த ஆசிரியரை மேடைக்கு வருமாறு அழைத்தார். சற்று நேரத்தில் குனிந்த தலையோடு மேடைக்கு வந்தார் தலைமை ஆசிரியர்.
‘‘மாணவர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டாமல் அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து ஊக்கப்படுத்தி உயர்த்துவதுதான் ஆசிரியரின் கடமை. நீங்கள் கடமையைச் சரியாகச் செய்யவில்லை...’’ என்று ஆசிரியரை கடுமையாகக் கண்டித்தார் கலெக்டர்.

அத்துடன், இனி இந்தப் பையனுக்கு இலவசக் கல்வியைக் கொடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டார். ஆசிரியரும் தன்னுடைய தப்பை எண்ணி வருந்தினார். பள்ளியில் சேர்த்துக் கொள்வதாக உறுதியளித்தார்.பிச்சைமுத்து கல்லூரி முடிக்கும்வரை மொத்த செலவையும், தானே ஏற்பதாக கலெக்டர் வாக்கு கொடுத்தார். நெகிழ்ந்துபோனாள் சக்திக்கனி. பிச்சைமுத்துவின் கண்களில் மின்னல் தோன்றி மறைந்தது. கண்முன்னால் கலெக்டர் மட்டுமல்ல, தன் தாயும் கடவுளாகத் தெரிந்தாள்!        

நடிகரை மிரட்டிய நடிகை!

மராத்தி பட உலகில்தான் இந்தக் கூத்து. சுபாஷ் யாதவுக்கு வயது 28. மராத்திய நடிகரான இவர், ரோகிணி மானே என்ற நடிகையைக் காதலித்துள்ளார்.ரோகிணி மானேவுக்கு இதில் விருப்பமில்லை. மறுத்துவிட்டார். ஆனால், சுபாஷ் யாதவ் தன்னை விடாமல் காதலிக்கச் சொல்லி வற்புறுத்துவதாகவும் அடிப்பதாகவும் போலீசில் சில நாட்களுக்குப் பின் ரோகிணி புகார் அளித்தார்.

அத்துடன் சமூக வலைத்தளங்களில் தன்னை அசிங்கப்படுத்துவதாகவும் சொன்னார். இதன் பிறகு மராத்தி திரையுலகம் இந்த விஷயத்தில் தலையிடவே... சுபாஷ் யாதவ் மன்னிப்புக் கேட்டார். இந்நிலையில்தான் ஒரு டுவிஸ்ட். ரோகிணி மானே தன் சக நடிகையான சாராவுடன் இணைந்து, ரூ.15 லட்சம் தரச் சொல்லி சுபாஷ் யாதவை மிரட்டத் தொடங்கினார்.

பணம் தரவில்லை என்றால் சுபாஷ் குறித்த வீடியோவை வெளியிட்டு விடுவதாக அச்சுறுத்தி இருக்கிறார்.இப்போது சுபாஷ் யாதவ் புகார் தர... ரோகினியும் சாராவும் கைது செய்யப்பட்டுள்ளனர்!

நோ!

எட்டி எனப்படும் ராட்சத பனிமனிதன் இமயமலை பனிச்சரிவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. நேபாள மக்கள் இந்தப் பனிமனிதனை கடவுளாகவே கருதுகின்றனர். ஆச்சா! இந்த நிலையில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள் கடந்த மாதம் மர்மமான முறையில் ராட்சத அளவிலான கால் தடங்களைப் பார்த்துள்ளனர்.

அவை 32க்கு 15 அங்குலம் கொண்டவையாக இருந்தன. இதை அப்படியே புகைப்படமாக எடுத்து அதிகாரபூர்வமாக வெளியிட்டனர். இந்தக் கால்தடம் மகாலு முகாம் அருகே இருந்ததாகவும் கூறினர். இதனைத் தொடர்ந்து அது எட்டியின் கால் தடம் என பரவலாக பேச்சு எழுந்தது.

ஆனால், நேபாள ராணுவ செய்தித் தொடர்பாளர் பிக்யான் தேவ் பாண்டே இதை மறுத்துள்ளார். ‘அது வெறும் காட்டுக் கரடியின் கால் தடம்!’

மீண்டும் ப்ரியாமணி!

ஆமாம்... என்ன செய்கிறார் என இனி யாரும் ப்ரியாமணி குறித்து விசாரிக்க முடியாது. யெஸ். ‘விராட பர்வம் 1992’ தெலுங்குப் படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் நடித்து வருகிறார். அதாவது இந்தப் படத்தில் ப்ரியாமணி ஹீரோயின் இல்லை! சாய் பல்லவிதான் கதாநாயகி. என்றாலும் முக்கிய வேடமாம் ப்ரியாமணிக்கு!

டெய்சி மாறன்