மாணவர்களின் மாதிரி பாராளுமன்றம் இதுல இருக்கு...அடுத்த சாட்டை அதிரடி



“என்னோட அக்கறை, நினைவு, பயணம்னு எல்லாமே கவனிக்கப்படாத மக்கள் கூட்டத்தை நோக்கித்தான் இழுத்திட்டுப் போகுது. நிறைய இயலாமைகளுக்கு நடுவுல சின்னச் சின்ன பங்களிப்புகளை பண்ணணும்னு ஒரு நினைவு துரத்திக்கிட்டே இருக்கு. ‘அடுத்த சாட்டை’ அப்படி ஒரு பங்களிப்பு. காமெடிகளை எல்லாம் சீரியஸாகவும், சீரியஸ்களை எல்லாம் காமெடியாகவும் பார்த்துப் பழகிட்ட சமகால சமூகத்தைப்பத்தின கதைதான். அதுவும் கல்லூரி மாணவர்களைப்பத்தின கதைதான்.

மாணவர்களோடு களப்பணியாற்றுகிற பேராசிரியர்கள்... வாழ்க்கையோடு கல்வி எப்படி அமைஞ்சிருக்கு… வாழ்க்கைைய எதிர்கொள்ள அந்தக்கல்வியே போதுமானதாக இருக்குமான்னு அப்படியே சுவாரஸ்யமா படம் சொல்லிட்டுப்போகும். ஒரு கதைக்காக சில ஆரம்பப்புள்ளிகள் கிடைக்கும். அது சினிமாவாக மாறுவதற்கு அதற்கான பின்னல்கள் சரிவர அமைய வேண்டும்.

இப்படி இந்தக் கதைக்கான அடித்தளத்தைப் போட்டது சமுத்திரக்கனி சார். இது அசலான மாணவர்களின் கதைதான். இதை முழுச் சுதந்திரத்தோட சினிமாவாக்க முதல் காரணம் என் தயாரிப்பாளர்கள் டாக்டர் பிரபு திலக்கும், சமுத்திரக்கனியும்தான். அவர்களின்றி ஓர் அணுவும் அசைந்திருக்காது...’’ ஆர்வத்தைத் தூண்டுகிறார் இயக்குநர் எம்.அன்பழகன். ‘சாட்டை’, ‘ரூபாய்’ என நிஜ சினிமாவில் கவனம் ஈர்த்தவர்.

‘சாட்டை’ மிகவும் பரவலாகப் பேசப்பட்டது...இப்போதான் ‘சாட்டை’யை இணையதளத்தில் ஏற்றினோம். கொஞ்ச நாளிலேயே 1.5 மில்லியன் பேர் பார்த்திருக்காங்க. அதில் பள்ளி மாணவர்களாக இருந்தவர்களை இதில் கல்லூரி லெவலுக்கு கொண்டு வந்திருக்கோம். டவுன்ஷிப்பில் நடக்கிற கதை. இதில் தமிழ்ப் பேராசிரியராக சமுத்திரக்கனி பிரமோட் ஆகி வந்திருக்கார். அதுல பார்த்த தயாளனை விட இன்னும் கனிஞ்சு வந்துருக்கார். கல்லூரியை எப்படியாவது முதல் இடத்திற்குக் கொண்டு வரத் துடிக்கிற எத்தனிப்பு அங்க நிறைய இருக்கு.

அதனால் நிர்வாகம் ஆசிரியர்களுக்கு கொடுக்கிற நெருக்கடி, விளைவாக அவர்கள் மாணவர்கள் மீது திணிக்கிற பிரஷர்... உடன் மாணவர்கள் படுகிற மனஅழுத்தம்... அதனால் மாணவர்கள் வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்ளத் தெரியாமல் ரோபோ மாதிரி ஆகிவிடக்கூடிய சூழல் எல்லாம் இதில் மனதிற்கு நெருங்கியும், உள்ளபடியும் சுவாரஸ்யமாகவும் வந்திருக்கு.

மாணவர்கள் வயதின் இடையறாத வியப்புகள், தொடர் ஆச்சர்யங்கள், புதிய புதிய புரிதல்கள் பதிவாகியிருக்கு. முற்றிலும் புதிதான மாணவர்களின் மாதிரி பாராளுமன்றம் இதில் இருக்கு. நிச்சயம் இந்த விஷயம் மிகப்பெரிய அளவில் கவனத்திற்கு வரும்னு நினைக்கிறேன். மாணவர்கள், பேராசிரியர்களின் மனப்போக்கு, கல்லூரிகளில் சூழ்ந்திருக்கிற லோக்கல் அரசியல், சாதிப்பிரச்னைகள் எல்லாமும் அசலாக இருக்கு. வெறும் படிப்பு, வகுப்பறை தாண்டி சந்திக்க வேண்டிய நிஜங்கள் வெளியேதான் இருக்கு.

சுவர்கள் இல்லாத வகுப்பறைகளில் நாம் கற்க வேண்டியது ஏராளம்னு எடுத்துக் காட்டியிருக்கிறோம். நாம் உலக சினிமான்னு அவதானிக்கிற ஈரானிய சினிமாவெல்லாம் அந்தந்த நாட்டில் உள்ளூர் சினிமாதான். இரண்டு கைதிகள் சிறையில் இருந்தார்கள். ஒருநாள் சாளரத்தின் கதவு திறந்து வெளியே பார்க்க அவர்களுக்கு வாய்ப்பு வந்தது. ஒருத்தன் சாக்கடையைப் பார்த்தான்.

இன்னொருத்தன் வானத்தையும், நட்சத்திரங்களையும், மேகத்தையும் பார்த்தான். நாங்க இதில் பார்த்தது மாணவர்களின் உலகம். அதில் இருக்கிற உண்மைகளை சுவாரஸ்யத்ேதாடு படிப்பினை மாதிரி எடுத்தெடுத்து வைக்காமல் இயல்பில் சொல்லியிருக்கோம்.சமுத்திரக்கனி எப்படி..?‘சாட்டை’ வரும்போது கனி சார் இந்த அளவுக்கு இல்லை.

ஆனால், இப்போ அவர் மக்களிடம் கனிவாக எது சொன்னாலும் காது கொடுக்குறாங்க. நானே அதை இப்போ அனுபவத்தில் உணர்ந்தேன். நல்லது சொல்றதும், அதை மனப்பூர்வமாகக் கொண்டு போறதும் அவரது இயல்பாகவே ஆகிவிட்டது.

வியாபாரமாக இருந்தாலும், வேடிக்கைகளில் ஈடுபடும் எண்ணம் அவரிடம் இல்லை. இங்கே சொல்ல வேண்டியதை, சொல்லாமல் இருப்பதை நம் வரையிலாவது சொல்லலாம் என்பதே அவரது எண்ணம். மாணவர்கள் அமைதியற்று வாழ வேண்டியதில்லை என்று அவரே உணர்ந்திருக்கிறார்.

யுவன், அதுல்யா ரவி, தம்பி ராமையான்னு முக்கியமாக வர்றாங்க. ராஜ் பொன்னப்பா கனிக்கு இணையாக வருகிறார். எங்கேயோ ஓர் இடத்தில் அவர் உங்கள் வீட்டு மனுஷியை அடையாளம் காட்டி விடுவார். அவரை உங்களுக்கு கண்டிப்பாக பிடித்துவிடும்.

தம்பி ராமையாவும், கனியும் படத்தை நடத்திச் சென்ற விதம் யூனிட்டிற்கே உத்வேகமாக இருந்தது. சில காட்சிகளில் 3000 மாணவர்கள் வரைக்கும் திரையில் இருக்காங்க. கும்பகோணத்தின் கல்லூரி நிறுவனர் ஹுமாயுன் தந்த பெரும் ஆதரவும் முக்கியமானது. படப்பிடிப்பு முடிந்து திரும்பும்போது பிரிய மனதில்லாமல் பிரிந்தோம். அன்பால் கட்டுண்ட இடங்கள் அவை. அங்கே சினிமா எடுக்கத்தான் போனோம். ஆனால், தீராத அன்பைச் சுமந்து திரும்பினோம்.

பாடல்கள் ரொம்ப நல்லாயிருக்கு... எனக்கென ஜஸ்டின் பிரபாகரன் விசேஷமான ட்யூன்கள் வைத்திருப்பார். எங்களுக்கான பாடல்களின் பக்குவத்தையும் அவர் அறிந்திருப்பார். ‘எங்க கையில் நாட்டைக் கொடுங்க, எல்லாத்தையும் மாத்தறோம், ஓட்டை வாங்கி ஏமாத்தாமல் உங்களை மேலே ஏத்துறோம்’னு யுகபாரதியின் பாட்டு இணையத்தில் வெளியிட்டு அதிரி புதிரியாய் வெற்றியடைஞ்சிருக்கு.

கல்லூரி வாழ்க்கை இந்த மொத்த வாழ்க்கையின் ஒரு சின்ன பகுதிதான். நிறைய விஷயங்கள் மீதி இருக்கு. எனக்காகவும், உங்களுக்காகவும் முகம் தெரியாத யார் யாரோ அவங்களால முடிஞ்சதை செய்யிறதாலதான் இந்த உலகம் இன்னும் உயிர்த்திருக்கு.
நாமளும் அப்படி ஏதாவது செய்யுறதுதான் முதல் வேலை! மத்ததெல்லாம் அப்புறம்தான்!

நா.கதிர்வேலன்