தலபுராணம்-கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகம்சென்னைவாசிகள் மட்டுமல்ல, தமிழகமே அறிந்த பெயர் கீழ்ப்பாக்கம்! ‘‘உன்னை எல்லாம் கீழ்ப்பாக்கத்துக்குதான் அனுப்பணும்...’’ என எத்தனையோ முறை கிண்டலாகவும், கோபமாகவும் இந்த வார்த்தைகளைச் சொல்லியிருப்போம் அல்லது கேட்டிருப்போம்.

அந்தளவுக்கு கீழ்ப்பாக்க மனநல மருத்துவமனைக்கு ஒரு தவறான புரிதலை ஏற்படுத்தி வைத்திருக்கிறது நம் பொதுச் சமூகம்.எப்படி பொது மருத்துவத்துக்கும், காசநோய்க்கும், நீரிழிவுக்கும், புற்றுநோய்க்கும் தனிப்பட்ட மருத்துவமனைகள் இருக்கிறதோ அப்படி மக்களின் மனநலத்துக்கு என்று அமைக்கப்பட்ட பிரத்யேக மருத்துவமனையே கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை.

எப்போது உருவானது? 1794ம் வருடம் அக்டோபர் 1ம் தேதி இந்தக் காப்பகம் புரசைவாக்கம் பகுதியில் தோற்றுவிக்கப்பட்டது. ஆம். ஆரம்பத்தில் இது மனநோயாளிகளுக்கான ஒரு காப்பகமாகவே தொடங்கப்பட்டது. அதுவும், தனியார் காப்பகமாக! பின்னாளில்தான் அரசு மனநல மருத்துவமனையாக மாறியது 1788ம் வருடம் டாக்டர் வாலன்டைன் கனோலி உதவி மருத்துவராக மெட்ராஸ் வந்து சேர்ந்தார்.
இங்கே உறவினர்களால் கைவிடப்பட்டு அலைந்து திரிந்த சில மனநோயாளிகளைப் பார்த்தார். மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிக்க அப்போது எந்தக் காப்பகமும் இங்கில்லை.இங்கு என்றில்லை. இந்தியா முழுவதுமே மனநோயாளிகளைப் பராமரிப்பதற்கென எந்தத் தனி விடுதியோ, காப்பகமோ முன்பு இருக்கவில்லை. ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பிறகே இத்தகைய காப்பகங்கள் தோன்றின.

முதலில், 1745ல் பம்பாயிலும், 1787ம் வருடம் கல்கத்தாவிலும் ‘Lunatic Asylum’ என்ற பெயரில் மனநலம் பாதித்தவர்களுக்கு என காப்பகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலையில்தான், இப்படிப்பட்டவர்களைப் பராமரிப்பதற்கு மெட்ராஸிலும் காப்பகம் தேவையென முதலில் அரசிடம் கோரிக்கை வைத்தார் மருத்துவர் கனோலி.

1793ம் வருடம் மருத்துவமனை வாரியத்தின் செயலாளராக கனோலி இருந்தபோது, மெட்ராஸின் கவர்னர் சர் சார்லஸ் ஓக்லேவுக்கு இந்தக் கோரிக்ைகயை வலுவாக முன்வைத்தார். அதில், மனநோயாளிகளுக்கான காப்பகத்தைத் தன் சொந்தச் செலவில் உருவாக்கிக் கொள்ளவும், அதற்கு அரசு இடம் தந்து உதவும்படியும் கேட்டுக் ெகாண்டார்.

சாந்தோம் அல்லது பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத ஓர் ஒதுக்குப்புறமான இடமாக இருந்தால் போதும் என்றும் தெரிவித்தார். மட்டுமல்ல. ஐரோப்பிய அதிகாரிகளும், மற்றவர்களும் அனுமதிக்கப்படும்போது அவர்களைப் பராமரிப்பதற்கான செலவுகளைக் காப்பகத்தைக் கண்காணிக்கும் மருத்துவரிடம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளையும் குறிப்பிட்டார்.

எல்லாவற்றையும் பரிசீலித்த கவர்னர் ஓக்லே, அதிகாரிகளாக இருந்து நோயாளியான ஐரோப்பியர்களைப் பராமரிக்க மாதம் 30 பகோடாக்களும், அதற்கடுத்த நிலையில் பணியாற்றியவர்களைப் பராமரிக்க மாதம் 25 பகோடாக்களும், மற்றவர்களுக்கு அவர்கள் வாங்கும் சம்பளம் மற்றும் இதர படிகளைப் பொறுத்தும் காப்பகத்துக்கு அரசு வழங்கும் எனச் சில நிபந்தனைகளுடன் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார்.

பின்னர், காப்பகத்திற்கு ப்ளாக்டவுனுக்கு வடக்குப் பக்கமாக இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், மருத்துவர் கனோலி புரசைவாக்கம் பகுதி தகுந்ததாக இருக்குமென கேட்டுக் கொண்டார். இப்படியாக, புரசைவாக்கம் ஏரியாவில் காப்பகம் அமைக்க இடம் வழங்கப்பட்டது. ‘‘மொத்தம் 45 ஏக்கர் நிலம். அதற்கு, வருடத்திற்கு 51 பகோடாக்கள் எனப் பெயரளவில் வாடகை போடப்பட்டது. ஏனெனில், மக்களுக்கு உதவும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்டதால் வாடகைப் பணம் கட்டாயப்படுத்தப்படவில்லை...’’ என ‘Vestiges of Old Madras- Vol 3’ இல் குறிப்பிடுகிறார் கர்னல் லவ்.

முதலில் இந்தக் காப்பகம் மனநலம் பாதிக்கப்பட்ட ஐரோப்பியர்கள் மற்றும் ஐரோப்பிய இந்தியர்களுக்காக (ஆங்கிலோ இந்தியன்) மட்டுமே திறக்கப்பட்டது. பின்னரே உள்ளூர்வாசிகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

பிறகு கனோலி, நான்காம் மைசூர் போரில் பங்கெடுக்கச் சென்றதால், மருத்துவர் மௌரிஸ் ஃபிட்ஸ்ஜெரால்டு காப்பகத்தை நடத்தினார். 1803ம் வருடம் வரை அவர் காப்பகத்தை பார்த்துக்கொண்டார். பின்னர், மருத்துவர் ஜான் கோல்ட் ஏற்று நடத்தலானார். இந்நேரம், இருபது பேர் காப்பகத்தில் இருந்து வந்தனர்.

ஆனால், ‘‘கனோலி பொதுமக்களின் நலனுடன் தன் சொந்த லாபத்திற்காகவும் இந்தக் காப்பகத்தை நடத்தி வந்தார்...’’ என ‘The Madras Lunatic Asylum in the Early Nineteenth Century’ என்கிற ஆய்வுக் கட்டுரையில் ஜெர்மன் மருத்துவ வரலாற்றுப் பேராசிரியையான வால்ட்ரட் எர்ன்ஸ்ட் குறிப்பிடுகிறார்.

ஏனெனில், அவர் காப்பகத்தைவிட்டு விலகும்போது, வாங்கிய மதிப்பைவிட மூன்று மடங்கு அதிக விலைக்கு காப்பகத்தை விற்று லாபம் பார்த்துள்ளார்.

அதுமட்டுமல்ல. அடுத்தடுத்து அதை விற்றவர்களும் கூட மூன்று மடங்கு லாபம் பார்த்துள்ளனர். அதை வாங்கிய மருத்துவர்களும் நல்ல வருமானம் வரக்கூடியது என்றே காப்பகத்தை ஏற்று நடத்தி வந்தனர் என அந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறார் எர்ன்ஸ்ட்.

தொடர்ந்து, 1807ம் வருடம் மருத்துவர் டால்டன் இந்தக் காப்பகத்தைப் ெபற்று அதன் கண்காணிப்பாளரானார். கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் காப்பகத்தை ஏற்று நடத்தியதுடன் மறுகட்டுமானமும் செய்தார். அன்றிலிருந்து அது ‘டால்டன் மனநல மருத்துவமனை’, ‘டால்டன் ஹவுஸ்’ என மக்களால் அழைக்கப்பட்டது.

டால்டன் ஓய்வு பெறும் போது அங்கே 54 நோயாளிகள் இருந்தனர். அதுவரை காப்பகத்தின் எந்த விஷயங்களிலும் அரசு தலையிடவில்லை. அவர் விடைபெறும் 1815ம் வருடம் காப்பகத்தை விற்க முற்பட்டார். அப்போது அரசு தலையிட்டு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. காரணம், கட்டடத்திற்கு மட்டுமல்லாமல் அதனுள் இருக்கும் நோயாளிகளுக்கும் சேர்த்தே விற்பனை நடைபெறுகிறது என்பதாலும், இதுவொரு வணிகமாக மாறக் கூடாது என்பதற்காகவும்தான்.  

இதனால் திடுக்கிட்ட டால்டன், காப்பகத்தை மருத்துவ வாரியத்தால் பரிந்துரை செய்யப்பட்ட மருத்துவரிடம் கொடுத்துவிட்டு ஐரோப்பாவிற்கு நடையைக் கட்டினார். 1823ம் வருடம் அவர் இறந்ததும் அவரின் வாரிசுகள் இங்கே ஒரு ஏஜென்டை நியமித்தனர். டால்டனின் சொத்துகளை நிர்வகிக்கவும், அரசிடம் பேரம் பேசுவதற்கும் இந்த ஏஜென்ட் உதவியாக இருந்தார். இதனால், பிரச்னையின்றி சுமுகமாகக் காப்பகம் நடந்து வந்தது.  

இதன்பிறகு, நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, இடப்பற்றாக்குறை ஆனது. இதனால், பிரச்னை செய்யாத, சொல்வதை அமைதியாகக் கேட்டு நடந்த நான்கு நோயாளிகளை மட்டும் ராயபுரம் மணியக்காரர் சத்திரத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அங்கிருந்து மீண்டும் அவர்கள் கீழ்ப்பாக்கத்திற்கு அழைத்துக்கொள்ளப்பட்டனர். இந்த நடவடிக்கையால், அந்தச் சத்திரத்திலும் ஒரு காப்பகம் உருவாக வழிகோலியது. இதன்பிறகு, மெட்ராஸ் அரசே ஒரு புதிய காப்பகத்தை உருவாக்கத் தீர்மானித்தது.

இதற்காக பழைய காப்பகத்திலிருந்து வடமேற்காக ஒரு மைல் தூரத்தில் இருந்த லோகாக்ஸ் கார்டன் தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்போது நகராட்சி எல்லைக்கு வெளியே இருந்த தோட்டப் பகுதி அது. 1867ம் வருடம் ஜனவரி 7ம் ேததி, இந்த கார்டனில் இருந்த அறுபத்தி ஆறரை ஏக்கர் நிலத்தில் காப்பகத்தை அமைக்க அரசு உத்தரவு போட்டது. கட்டுமானங்கள் எல்லாம் முடிய நான்கு வருடங்களானது.

1871ம் வருடம் மே 15ம் தேதி புதிய இடத்தில் இருந்து காப்பகம் செயல்படத் தொடங்கியது. அதுவே, இன்றுள்ள அரசு மனநல மருத்துவமனை. இதற்கு முன்பு புரசைவாக்கம் பகுதி டால்டன் ஹவுஸ், பின்னர் ெமட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் மில்லரால் ‘காலேஜ் பார்க்’ என்ற பெயரில் கட்டப்பட்டது.

‘‘முதலில், அங்கு மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் பணியாளர்களின் குடியிருப்புகள் இருந்தன. தற்போது அந்த இடம் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் விடுதியாக மாறிவிட்டது...’’ என 1939ம் வருடம் வெளிவந்த ‘The Madras Tercentenary Commemoration Volume’ நூலில் குறிப்பிடுகிறார் டாக்டர் ஏ.லட்சுமணசுவாமி முதலியார்.  

அரசு மனநலக் காப்பகம் உருவானதும் அதன் கண்காணிப்பாளராக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜான் முர்ரே நியமிக்கப்பட்டார். அவருக்கு வளாகத்தின் உள்ளேயே குடியிருப்பும் வழங்கப்பட்டது. அன்று 145 நோயாளிகள் காப்பகத்தில் இருந்தனர். நோயாளிகளின் பாதுகாப்புக் கருதி சுற்றிலும் கோட்டைச் சுவர் எழுப்பப்பட்டது.

அத்துடன், கட்டடங்கள் எல்லாம் தனியறைகள் கொண்ட தொகுதிகளாகக் (block) கட்டப்பட்டன. ஒரு தொகுதியில் 12 முதல் 15 பேர் வரை தங்கும்படி கட்டப்பட்டது. குடிநீருக்காக உள்ளேயே கிணறுகள் அமைக்கப்பட்டன. 1896ம் வருடம் நகராட்சி குடிநீர் பொறுப்பை ஏற்கும் வரை கிணற்று நீரே பயன்படுத்தப்பட்டது.

இதற்கிடையே 1892ம் வருடம், மாவட்டங்களில் இருந்தெல்லாம் நிறைய ‘கிரிமினல்’ மனநோயாளிகள் இங்கே கொண்டு வரப்பட்டனர். இதனால், பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அத்துடன், புதிதாகக் கட்டடங்களும் கட்டப்பட்டன. இதில், நோயாளிகள் பணம் கொடுத்துத் தங்குவதற்கான தனி காட்டேஜ்களும் அடக்கம்.

இந்நேரத்தை, ‘பொறுப்பாக பாதுகாத்த காலம்’ என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனெனில், நோயாளிகள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்ளாமல் இருக்கவும், பிறருக்குத் துன்பம் கொடுக்காமல் இருக்கவும், காப்பகத்திலிருந்து தப்பிக்காமல் இருக்கவும் கைவிலங்குகளும், சங்கிலிகளும் பூட்டப்பட்ட காலமாம் இது!

தவிர, அன்று குறைந்த அளவிலான நோயாளிகளே முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். பெரும்பாலானவர்கள் இங்கேயே தங்கி தங்கள் வாழ்நாளைக் கழித்துள்ளனர். இதனால், ‘காப்பகம்’ என்ற சொல் மோசமான வார்த்தையாகப் பார்க்கப்பட்டிருக்கிறது.  இதனாலயே, 1922ம் வருடம் அரசு மனநலக் காப்பகம் என்பது அரசு மனநல மருத்துவமனை எனப் பெயர் மாற்றமானது.

சரி, இதன்பின்னர் என்னென்ன மாற்றங்கள் நடந்தன? அப்போது நோயாளிகளைக் குணப்படுத்த மருந்துகள் இருந்ததா? இந்த மருத்துவமனையின் கண்காணிப்பாளராக இருந்த இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவரான சாரதாமேனன் பேட்டி… இப்போது எப்படி இயங்கி வருகிறது மருத்துவமனை... எல்லாம் அடுத்த வாரம் பார்ப்போம்.            

பேராச்சி கண்ணன்

ஆ.வின்சென்ட் பால்

ராஜா