தமிழ் சினிமா வெர்ஷன் 2.0யார் மறுத்தது..? அனுபவங்கள்தான் சிறந்த ஆசான். கடந்த காலங்களை நினைவு கூர்வதே நிகழ்காலத்தை சமாளிக்கவும் எதிர்காலத்துக்கு விதைகளைத் தூவவும்தான்.சந்தேகமென்ன..? பசி - பஞ்சம், நோய்கள், யுத்தங்கள்... இவை மூன்றும்தானே கல் தோன்றி மண் தோன்றாக் காலம் தொட்டே மனிதன் எதிர்கொள்ளும் பிரச்னைகளாக இருக்கின்றன. இவை மூன்றையும் தீர்க்கத்தானே காலம்தோறும் மனிதன் போராடுகிறான்..?
அதேநேரம் வெறும் கற்களை உரசி இன்று யாரும் நெருப்பை பற்ற வைப்பதில்லை. ஒரு தீப்பெட்டி அல்லது லைட்டர் போதுமானதாக இருக்கிறது.

ஏனெனில் நேற்று போல் தீயைக் கண்டு மனிதன் அஞ்சுவதில்லை. மாறாக அதை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அடக்கி ஆள்கிறான்.தீ என்பது அன்றும் இன்றும் என்றும் இருக்கும். ஆனால், அன்று இருந்த tool ஆன சிக்கிமுக்கி கல் இன்றில்லை! இன்றிருக்கும் லைட்டர் நாளை இருக்காது. But, தீ என்றும் இருக்கும்!

ஜிலேபி பிழிய வேண்டாம். லெட்ஸ் மேக் இட் சிம்பிள். காலம்தோறும் தொழில்நுட்பங்கள் வளருகின்றன; மனித வாழ்க்கையை மேம்படுத்துகின்றன. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை யார் தன் காலத்தின் tools ஆக பயன்படுத்துகிறாேனா - புது வெர்ஷனில் அறிமுகப்படுத்துகிறானோ - அவனே அவன் வாழும் காலத்தில் ராஜா! அதுவே தன் காலத்தின் தொழில்நுட்பங்களை tools ஆக பயன்படுத்த மறுப்பவன் எப்பேர்ப்பட்ட திறமைசாலியாக இருந்தாலும் அவன் கூஜாதான்!

இந்த அடிப்படையில் இப்போது தமிழ் சினிமா ராஜாக்களால் நிரம்பி வழிகிறது! கண்கூடான உதாரணம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’. ஃபேமிலி சென்டிமென்ட்தான் இப்படத்தின் அடிநாதம். ஒருவகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் பீம்சிங் தொடர்ந்து இயக்கிய ‘ப’ வரிசைப் படங்களின் எக்ஸ்டென்ஷன் ஆக ‘விஸ்வாசம்’ படத்தைச் சொல்லலாம்.

அதேநேரம் இக்காலத்திய தொழில்நுட்ப toolsஐ மட்டுமல்ல... இன்றைய மனிதக் கருத்தியலையும் அப்படத்தை எழுதி, இயக்கிய சிவா பயன்
படுத்தி இருந்தார். எடுத்துக்காட்டாக நயன்தாராவின் கேரக்டர் ஸ்கெட்ச். வெறும் கணவனுக்கு அடங்கிய மனைவியாக மட்டுமே அப்படத்தில் அவர் சித்தரிக்கப்படவில்லை. தனியாக ஒரு நிறுவனத்தை ஏற்று நடத்துகிறவராகவும் அப்படத்தில் வருவார். கணவனை எவ்வளவு நேசிக்கிறாரோ அவ்வளவு முரண்படுவார். அடங்கியும் போவார்; தனது தனித்தன்மையை விட்டுக் கொடுக்கவும் மாட்டார்.

இந்த குணாதிசயங்கள் அனைத்தும் இன்றைய பெண்களின் மனநிலையைப் பிரதிபலிப்பவை. அதனால்தான் அந்தக்கால சென்டிமென்ட்
ப்ராடக்ட்டை இந்தக் கால ஃப்ளேவருடன் - தயிர் வடையில் பூந்தி தூவுவது போல் - இயக்குநர் சிவா படைத்தபோது சினிமா ரசிகர்கள் அனைவரும் அதை ஏற்றார்கள்.கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ‘விஸ்வாசம்’ படத்தை இயக்கிய சிவாவுக்கு வயது 41 என்பது!
இதுதான் மேட்டர்! இதுவேதான் இந்த ஸ்டோரியும்!

இன்று தமிழ் சினிமா யூத்துகளால் ஆளப்படுகிறது. இவர்கள்தான் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லப் போகிறார்கள்.
இதில் பலவீனங்களே இல்லையா..? வெறும் தொழில்நுட்ப tools மட்டுமே ஒரு படைப்புக்கு - சினிமாவுக்கு - போதுமானதா..?
போதாதுதான். பழமையை அகற்றிவிட்டு புதிதாக எதையும் உருவாக்க முடியாதுதான்.

ஆனால், அந்தப் பழமையையே புது வெர்ஷனாக மாற்ற முடியும் அல்லவா..? மாற்ற வேண்டுமல்லவா..? அதைத்தான் இந்த இளைஞர் பட்டாளம் கனகச்சிதமாகச் செய்து வருகிறது.அவ்வப்போது சறுக்கல் ஏற்படும். ஆனால், சறுக்கியவர்கள் மீண்டும் எழுந்து தங்கள் தவறுகளைச் சரிசெய்துகொண்டு
மீண்டும் ஏறுவார்கள்.

யெஸ். எவரெஸ்ட்டில் நிற்பதல்ல... எவரெஸ்ட்டில் ஏறுவதே சாதனை! ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவர் ஏறும்போதும் முன்பு ஏறியவர்களின் அனுபவங்களே அவர்களுக்கு துணை நிற்கிறது. அப்படித்தான் இதுவும். கடந்த காலங்களில் சாதனைகளை நிகழ்த்தியவர்களின் தோளில் அமர்ந்தபடிதான் இன்றைய தமிழ் சினிமா இயக்குநர்கள் தங்கள் படங்களை இயக்குகிறார்கள்.

இந்த ஃப்ரெஷ்னெஸ்ஸே தமிழ் சினிமாவின் சீக்ரெட் ஆஃப் எனர்ஜி.இங்கிருக்கும் பட்டியல்கள் அதையே உணர்த்துகின்றன. டாப் ஹீரோக்களின் படங்களை இயக்கி வருபவர்களின் வயதை பிராக்கெட்டில் பாருங்கள். ப்ளஸ் ஆர் மைனஸ் 40. வெல்கம் பாய்ஸ்! தமிழ் சினிமா உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறது!

அஜித்
கடைசியாக நடித்து
வெளியான
படம்:
‘விஸ்வாசம்’ -
இயக்குநர்
சிவா (41)
நடிக்கும் படம்: ‘நேர்கொண்ட
பார்வை’ -
இயக்குநர்
எச்.வினோத் - (36)

விஜய்
கடைசியாக
நடித்து
வெளியான படம்:
‘சர்கார்’ -
இயக்குநர் ஏ.ஆர்.
முருகதாஸ் (44)
நடிக்கும் படம்: விஜய் 63-
இயக்குநர்
அட்லீ (32)

கார்த்தி நடிக்கும் படங்கள்: ‘கைதி’ - லோகேஷ் கனகராஜ் (33)
கமிட் ஆகியிருக்கும் இயக்குநர்: ‘ரெமோ’ பாக்யராஜ் கண்ணன் (32)

சூர்யா
நடிக்கும் படங்கள்: ‘என்.ஜி.கே.’ - இயக்குநர் செல்வராகவன் (38)
‘சூரரைப் போற்று’ - இயக்குநர் சுதா கொங்கரா (47)

சிவகார்த்திகேயன்
நடிக்கும் படங்கள்: ‘மிஸ்டர் லோக்கல்’ - இயக்குநர் எம்.ராஜேஷ் (43)
‘எஸ்.கே.14’ - ‘நேற்று இன்று நாளை’ ஆர்.ரவிக்குமார் (36)
‘ஹீரோ’ - இயக்குநர் பி.எஸ்.மித்ரன் (36)
கமிட் ஆகியிருக்கும் இயக்குநர்கள்: விக்னேஷ்சிவன் (33),
பாண்டிராஜ் (42)

விஜய்சேதுபதி
நடிக்கும் படங்கள்: ‘கடைசி விசா
ரணை’ - இயக்குநர் ‘காக்கா முட்டை’ எம்.மணிகண்டன் (38)
‘சிந்துபாத்’ - இயக்குநர் எஸ்யூ.அருண்குமார் (36)
‘சங்கத்தமிழன்’ - இயக்குநர் விஜய்சந்தர் (38)
‘மாமனிதன்’ - இயக்குநர் சீனுராமசாமி (43)

ஜெயம் ரவி
நடிக்கும் படங்கள்: ‘கோமாளி’ - இயக்குநர் பிரதீப்
ரங்கநாதன் (35)

விக்ரம்
நடிக்கும் படங்கள்: ‘கடாரம் கொண்டான்’ - இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா (38)
‘மகாவீர் கர்ணா’ (இந்தி, தமிழ்) - இயக்குநர் பி.எஸ்.விமல் (40)

கே.என். சிவராமன்