தந்தையின் வழியில் விவசாயம் செய்யும் மகள்!



ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியரின் கதை

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகில் உள்ள லோன்வாடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் விஜய் தவுந்த். இவருக்கு ஒரு கனவு இருந்தது. நன்கு படித்து வக்கீல் ஆகவேண்டும். அதுதான் லட்சியம். இதே பகுதியைச் சேர்ந்த லதாவுக்கும் ஒரு கனவு இருந்தது. மருத்துவராகி சேவை செய்ய வேண்டும்.
எல்லோருடைய விருப்பங்களும் அப்படியே நடந்துவிடுகிறதா என்ன? வாழ்க்கை விஜய் தவுந்தை ஒரு விவசாயி ஆக்கியது. தங்கள் முன்னோரின் தொழிலான விவசாயத்தை விட்டு வெளியேற முடியாத சூழலை அவருக்கு உருவாக்கியது.

12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற நிலையில் மேற்கொண்டு படிக்க முடியாத குடும்பச் சூழல் லதாவுக்கு நேர்ந்தது. வாழ்க்கை இவ்விரு கனவுக்காரர்களையும் கணவன் - மனைவியாக்கியது. தேவதை போல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. பெயர் ஜோஸ்த்னா. கொஞ்ச நாளில் ஒரு மகனும் பிறந்தான்.
விஜய் - லதா தம்பதிக்கு தங்கள் குழந்தைகளை நன்கு படிக்க வைத்து இந்த சமூகத்தில் அந்தஸ்தான ஒரு நிலைக்கு உயர்த்த வேண்டும் என்று ஆசை. அதற்காகக் கடுமையாக உழைத்தார்கள்.

நாம் ஒன்று நினைத்தால் வாழ்வொன்று நினைக்கும் அல்லவா? 1998ம் ஆண்டில் யாரும் எதிர்பாராத அந்தத் துயர சம்பவம் நடந்தது. அப்போது ஜோஸ்த்னாவுக்கு ஆறு வயது. விபத்து ஒன்றில் அவரின் தந்தை விஜய்க்கு காலில் பலத்த அடிபட்டு கால் முறிந்துபோனது.

முறிந்தது விஜய்யின் கால் மட்டும் அல்ல. அந்தக் குடும்பத்தின் எதிர்காலமும்தான். ஆனால், மனம் தளராத லதா அந்தக் குடும்பச் சுமையை ஏற்க களமிறங்கினார். தன் கணவரின் மருத்துவப் பணிவிடைகளுக்கிடையே தங்களது தோட்டத்தையும் கையில் எடுத்துக் கொண்டு விவசாய வேலைகளில் இறங்கினார்.

குட்டிப் பெண் ஜோஸ்த்னாவுக்கு அந்த பால் மணம் மாறாத வயதிலேயே வேலை வந்தது. தினமும் அம்மா அவரையும் பண்ணைக்கு அழைத்துச் செல்வார். அம்மா பண்ணையில் வேலை செய்யும்போது கூடமாட ஒத்தாசை செய்வதே அந்தக் குழந்தையின் விளையாட்டாக மாறிப்போனது.

12 வயதானபோது பண்ணை வேலையின் பெரும்பகுதி அந்தக் குட்டிச் சிறுமிக்கு அத்துபடியாகியிருந்தது.

‘‘நான் தினமும் காலையில் பள்ளி செல்லும் முன்பும் பள்ளிக்குச் சென்றுவந்த பின்பும் பண்ணைக்குச் சென்றுவிடுவேன். அங்கு எனக்கு வேலைகள் காத்திருக்கும். படிப்பும் பண்ணை வேலையும் என்னிரு கண்களாக எனக்கு பால்யத்தில் இருந்தன. விடுமுறை நாட்களில் அம்மாவுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு நான் களமிறங்கிவிடுவேன்...’’ என்கிறார் ஜோஸ்த்னா.

ஒரு கட்டத்தில் குடும்பச் சூழல் கொஞ்சம் முன்னேறியது. 2005ம் ஆண்டுவாக்கில் தந்தையின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணவே ஜோஸ்த்னாவுக்கு பண்ணை, படிப்பு என்ற இந்த இரட்டை மாட்டுச் சவாரியிலிருந்து விடுதலை கிடைத்தது. படிப்பில் முழுக் கவனம் செலுத்த முடிந்தது.

‘‘எங்கள் வாழ்வின் மிகச் சிறந்த நாட்கள் என்று நான் அவற்றையே சொல்வேன். அப்பாவுக்கு பழையபடிக்கு நடக்க முடிந்தது. பண்ணை வேலைகளை எல்லாம் மீண்டும் எடுத்துக் கொண்டார். அம்மா வீட்டில் நிம்மதியாக இருந்தார். நானும் தம்பியும் படிப்பில் கவனம் செலுத்த முடிந்தது. அனைத்தும் நன்றாக இருந்தன...’’ என்று அந்நாட்களை நினைவுகூர்கிறார்.

2010ம் ஆண்டு அது. பருவம் தப்பிப் பெய்த பேய் மழை லோன்வாடி கிராமத்தை நீர்க் காடாக மாற்றியதில் ஜோஸ்த்னாவின் பண்ணை நிலைகுலைந்து போனது. கடுமையான நஷ்டம். விஜய் எஞ்சிய திராட்சைப் பழங்களை மட்டுமாவது காப்பாற்ற உரம் வாங்குவதற்கு அருகிலிருக்கும் நகரத்துக்கு ஓடினார்.

அவசரம் விபத்தின் நண்பன் அல்லவா? பட்டகாலிலேயே படும் கெட்ட குடியே கெடும் என்பதற்கு ஏற்ப மீண்டும் விஜய்க்கு காலில் அடிபட்டு ஏற்கெனவே முறிந்து சரியாகி இருந்த கால் நிரந்தரமாகச் செயல் இழந்தது.‘‘கொட்டும் மழையில் அப்பாவைப் பார்க்க அழுகையும் புலம்பலுமாய் சென்ற அம்மாவிடம் அப்பா வேறு எதைப் பற்றியும் சிந்தையற்றவராக அழுகிக் கொண்டிருக்கும் திராட்சைக் குலைகளைக் காப்பாற்ற மருந்தைத் தந்து அனுப்பிய அந்த நாள் இன்னமும் நினைவில் உள்ளது!

படுக்கையில் இருந்தபடியே அப்பா பண்ணையில் செய்ய வேண்டிய ஒவ்வொரு வேலையையும் எனக்குச் சொல்ல நான் அவற்றை ஒவ்வொன்றாகச் செய்தேன். இப்படியாக அந்த சேதத்திலிருந்து பொருளாதார ரீதியில் மீண்டோம். ஆனால், அப்பாவின் கால் போனது போனதுதான்...’’ வருத்தத்துடன் சொல்கிறார் ஜோஸ்த்னா.

லோன்வாடி ஒரு சின்னஞ்சிறு கிராமம். ஜோஸ்த்னா படித்த கல்லூரி பிம்பல்கானில் உள்ளது. இரண்டுக்கும் இடையே 18 கிலோமீட்டர் தொலைவு. இரண்டு பேருந்துகள் மாறி இரண்டு கிலோ மீட்டர்கள் நடந்துதான் தினமும் கல்லூரியை அடைய முடியும். ஜோஸ்த்னா தினமும் பண்ணை வேலைகளைச் செய்துகொண்டே கல்லூரிக்கும் செல்லத் தொடங்கினார். மீண்டும் அதே பழைய போராட்ட வாழ்வு. இம்முறை கொஞ்சம் வளர்ந்து விட்டதால் முதிர்ச்சி அதிகமாகியிருந்தது. அவ்வளவே.

கணிப்பொறி படிப்பில் முதுகலைப்பட்டம் பெற்ற பிறகு நேர்முகத் தேர்வில் நாசிக்கில் உள்ள ஒரு நிறுவனத்தில் கணிப்பொறியாளர் வேலையில் சேர்ந்தார் ஜோஸ்த்னா. ஆனால், அவர் மண்டைக்குள் எப்போதும் அவரது குடும்பத்தின் பாரம்பரியமான பண்ணை வேலைகள் அலாரம் அடித்துக்கொண்டே இருந்தன.

விடுமுறையில் பண்ணையைப் பார்ப்பது, எஞ்சிய நாளில் அலுவலகம் போவது என்று இருந்தார். ஒரு கட்டத்தில் இரண்டில் ஒன்றுதான் சாத்தியம்... எது என்ற கேள்வி எழ, மறுயோசனையின்றி இந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் விவசாயத்தை டிக் அடித்தார்!2017ம் ஆண்டு அது. பணிக்குச் சென்றதில் கையில் சேர்ந்த சேமிப்பை தன் தம்பியின் கல்விச் செலவுக்கும் வீட்டுச் செலவுக்கும் வைத்துக்கொண்டு தன் அப்பாவின் நிலத்தைக் கையில் எடுத்தார் ஜோஸ்த்னா.

அடுத்த ஆறு மாதங்கள் கடுமையான பணிச்சுமை. மின்சாரம்தான் அங்கு பெரிய பிரச்னை. சில சமயங்களில் இரவில் சில மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருக்குமாம். அதனால், இரவும் பகலும் மின்சாரம் கிடைப்பதற்கு ஏற்ப தன் தூக்கத்தை தியாகம் செய்து வேலை செய்தார்.

ஜோஸ்த்னாவின் உழைப்புக்கு பயன் இருந்தது. வழக்கமாக ஒரு கொத்தில் 15 - 17 பழங்கள் இருக்கும். ஜோஸ்த்னாவின் கடின உழைப்பால் இது 25 - 30 என இரு மடங்காக உயர... அமோக விளைச்சல், நல்ல லாபம் தந்தது.

பண்ணையில் செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட்டுப் பிரித்துக் கொண்ட ஜோஸ்த்னா, இப்போது ஒரு பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ‘‘திட்டமிட்டுப் பணியாற்றினால் நேரம் ஒரு பிரச்னையே இல்லை. அதை வகுத்துக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது...’’ என்று சொல்லும் ஜோஸ்த்னா கிரிஸிதோன் சிறந்த பெண் விவசாயி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.

தன் மகள் தன்னைவிட சிறந்த விவசாயியாக மாறி தன்னைப் பெருமைப்படுத்தியுள்ளார் என மகிழ்கிறார் ஜோஸ்த்னாவின் தந்தை விஜய்!வாழ்க்கைதான் எவ்வளவு சுவாரஸ்யமானது... அந்த சுவாரஸ்யம்தான் எவ்வளவு ரணமானது. அந்த ரணம்தான் எவ்வளவு மகத்துவமானது!l

இளங்கோ கிருஷ்ணன்