லன்ச் மேப்-முனியாண்டி விலாஸின் கதை!தமிழகத்தில் 30 வயதைக் கடந்தவர்களுக்கு நிச்சயம் முனியாண்டி விலாஸ் ஹோட்டலைத் தெரியாமல் இருக்காது. இப்போதும் உள்ளது. குளிரூட்டப்பட்ட அறை இல்லை. சிறிய கட்டமைப்பு. சிவப்பு வண்ண போர்டில் வெள்ளி எழுத்துக்களால் அச்சிட்டு குமரி முதல் சென்னை வரை  வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும்.

ஒரு காலத்தில் ஊருக்கு ஓர் அசைவ உணவகம்தான் இருக்கும். சுற்றி சைவ உணவகங்கள். அசைவ உணவு என்றால் அது முனியாண்டி விலாஸ்தான். உலகிலேயே லைவ் மெனுகார்டை அறிமுகப்படுத்தியது இவர்கள்தான். பெரிய தட்டில் அனைத்து வறுவல், பிரட்டல், தொடுகறி, மீன், காடை... என அனைத்தையும் கொண்டு வந்து காட்டுவார் வெயிட்டர். எது வேண்டுமோ பார்த்து ஆர்டர் செய்யலாம்.

வேறெங்கும் இல்லாத இந்தப் பழக்கத்தை இப்போதும் தமிழகம் முழுதும் உள்ள முனியாண்டி விலாஸில் கடைப்பிடிக்கின்றனர்.முனியாண்டி விலாஸ் என்ற ஹோட்டல் உருவானதற்குப் பின்னால் ஒரு கதை உள்ளது. மதுரை வடக்கம்பட்டியில் முனீஸ்வரர் கோயில் உள்ளது. 1930ம் வருடம் வடக்கம்பட்டி சுற்றுவட்டாரத்தில் பஞ்சம் ஏற்பட்ட போது சுப்பையா என்பவர் முனியாண்டி கோயிலுக்குச் சென்று வேண்டிக்கொண்டு 1935ம் ஆண்டில் காரைக்குடியில் முதன்முதலாக முனியாண்டி விலாஸ் அசைவ ஹோட்டலைத் தொடங்கியுள்ளார்.

சென்னையில் 1955ல் முதல் முனியாண்டி விலாஸ் சீனிவாசன் என்பவரால் தியாகராய நகரில் தொடங்கப்பட்டது. ஆரம்பித்த சிலவருடங்களிலேயே எடுத்துவிட்டார்.  சைவப்பிரியர்கள் அதிகம் வாழ்ந்த பகுதி என்பதால் வியாபாரம் சரியாக இல்லை. பிறகு சென்னையில் ராமு என்பவர் ராஜாபாதர் தெருவில் மிகச்சிறிய அளவில் ஆரம்பித்தார். தொடர்ந்து வடமாவட்டம் முழுவதும் முனியாண்டி உணவகம் வர ஆரம்பித்தது.  

சுப்பையாவைத் தொடர்ந்து  ஊர் மக்கள் பிறரும் ஒன்றன் பின் ஒன்றாக முனியாண்டி சாமியிடம் வேண்டிக்கொண்டு தமிழகம் முழுவதும் சென்று ஹோட்டல் தொடங்கினார்கள். ஊர் மக்களின் பஞ்சம் பஞ்சாய் பறந்தது.

அனைத்து முனியாண்டி விலாஸ் ஹோட்டல் ஓனர்களும் வடக்கம்பட்டி கிராமம் அல்லது அதன் சுற்றுப் பகுதியைச் சேர்ந்தவர்கள்தான்! முனியாண்டி விலாஸ் உணவகம் தொடங்க விருப்பமுள்ளவர்கள் இந்த வடக்கம்பட்டியிலிருக்கும் முனியாண்டி கோயிலில் பூசைகள் செய்து அனுமதி கேட்பதுடன் இதற்காகக் கோயிலில் உணவகப் பெயரை ஊருடன் சேர்த்து பதிவும் செய்து கொள்கிறார்கள்.

இந்தக் கோயிலில் பதிவு செய்துகொண்ட உணவகங்களுக்கான அமைப்பின் நன்கொடையுடன் வருடம் தோறும் ஜனவரி 3ம் வாரம் நூற்றுக்கணக்கான ஆடுகளையும் கோழிகளையும் வெட்டி திருவிழா கொண்டாடப்படுகிறது. நாள்தோறும் முதல் வாடிக்கையாளர் கொடுக்கும் பணத்தை உண்டியலில் போடுகின்றனர். வடக்கம்பட்டி கோயில் திருவிழாவுக்கு ஆண்டுதோறும் இந்தப் பணம் செல்லும்.

இரவு  முழுவதும் கிடா வெட்டு நடைபெற்று சமையல் தொடங்கி அதிகாலை 4 மணியளவில் முனீஸ்வரருக்கு படையல் வைத்து, பூஜைகள் நடத்தி
சுற்றுவட்டாரத்தில் உள்ள 50 கிராம மக்களுக்கும் பிரியாணியை பிரசாதமாக வழங்குகிறார்கள்.   இந்த விழாவுக்கான முழு  ஏற்பாடுகளையும் முனியாண்டி விலாஸ் உரிமையாளர்கள் மற்றும் அவர்களின்  உறவினர்களே செய்கின்றனர். தமிழகம் முழுதும் உள்ள முனியாண்டி விலாஸ்  காரர்கள் தவறாமல் விழாவுக்கு வருகை தருகின்றனர்.

அதிகாலை வழங்கப்படும்  பிரியாணி பிரசாதத்தை சாப்பிடுவதன் மூலம் குழந்தை வரம், கல்யாண வரம், வீடு,  வாகனம் போன்ற வசதிகளும், தீர்க்க முடியாத நோய்கள் தீரும் என்ற நம்பிக்கையும் இவர்களிடம் உள்ளது. கால மாற்றத்தில் சில சமூகப் பிரிவினை காரணமாக இந்தக் கோயில் மூன்றாகப் பிரிந்து வடக்கம்பட்டி, அச்சம்பட்டி, புதுப்பட்டி என மூன்று முனியாண்டி சுவாமி கோயில்களாக மாறியுள்ளன. அந்தந்த கோயிலின் பெயர்களில் உணவகம் நடத்துபவர்கள் மூன்று அமைப்புகளாக இன்று வலம் வருகின்றனர்.

என்றாலும் தாங்கள் தொடங்கும் உணவகங்களுக்கு மூன்று பிரிவினருமே ‘மதுரை முனியாண்டி விலாஸ்’ என்றே பெயர் வைக்கின்றனர்.
பொதுவாக மற்ற உணவகங்களில் குளிர்சாதனப்பெட்டி இருக்கும். இன்றும் முனியாண்டி விலாஸில் இதைப் பார்க்க முடியாது. அதாவது குளிர்சாதனப் பெட்டியில் எந்தப் பொருளையும் தேக்கி வைத்து வாடிக்கையாளர்களுக்கு இவர்கள் தருவதில்லை. அன்றன்று சமைக்கப்படும் அசைவ உணவுகள் அன்றன்றே தீர்ந்துவிடும்.

முனியாண்டி விலாஸ்காரர்கள் பெரும்பாலும் சாப்பாட்டைத்தான் விற்பனை செய்ய விரும்புவார்கள். மதியமும் இரவும் சாப்பாடுதான் பிரதானம். ஏனெனில், ‘அந்தக் கடையில் சாப்பாடு நல்லா இருக்கு...’ என்றுதான் மக்கள் பேசிக் கொள்வார்களே தவிர, ‘டிபன் நல்லா இருக்கு...’ என பெரும்பாலும் கூறுவதில்லை. அசைவத்தில் மட்டன் ரெசிப்பிகள்தான் அதிகம். சுக்கா வறுவல், தலைக்கறி, காடை, நண்டு, குடல் வறுவல் தவிர வத்தக்
குழம்பும் ரசமும் இவர்களின் ஸ்பெஷல்.

ஆட்டுக்கறியின் எலும்பை நன்றாகக் கொத்திப் போட்டு மசாலா சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டுவார்கள். இந்த வடிகட்டிய மஜ்ஜை கலந்த நீரில் தக்காளி, சீரகம், மிளகை அதிகம் சேர்த்து ஈயம் பூசிய சட்டியில் ரசம் வைப்பார்கள். காலம் மாற மாற நவீன தொழில் கருவிகள் சமையலுக்கு வர வர... அதை எல்லாம் பயன்படுத்த வேண்டுமா... என இவர்கள் தயங்கியதன் விளைவே இன்று மற்ற அசைவ உணவகங்கள் அதிகரிக்கக் காரணம்.

முதன் முதலாக கிரைண்டர் வந்தபோது இட்லி மாவை மட்டுமே அரைக்க வேண்டும்... தேங்காயை அரைத்தால் சுவையாக இருக்காது என நம்பினார்கள். கேஸ் அடுப்பு பயன்பாட்டுக்கு வந்தாலும் விறகடுப்பில் வெந்தால்தான் கறியில் மசாலா இறங்கும் எனக் கூறுகிறார்கள்.

என்றாலும் இப்போதும் முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள் ஆர்ப்பாட்டமில்லாமல் முக்கிய நகரங்களில் இயங்கி வருகின்றன. அதற்கென்று ஒரு வாடிக்கையாளர் கூட்டமுள்ளது. நியாயமான விலை, வீட்டுச் சாப்பாடு போன்ற உணர்வு, கலப்படமில்லாத செய்முறை, பணத்துக்கு உணவு விற்றாலும் அதில் அறத்துடன் நடந்து கொள்ளும் விதம்... ஆகியவை அன்றும் இன்றும் என்றும் இவர்களை இயங்க வைக்கிறது; வைக்கும்!

முனியாண்டி விலாஸ் அசைவ ரசம்

நல்லி எலும்புத் துண்டுகள் -
1/2 கிலோ
சின்ன வெங்காயம் -
8 (பொடியாக நறுக்கியது)
தக்காளி, பச்சைமிளகாய் -
தேவையான அளவு
மஞ்சள்தூள் - 1/2 சிட்டிகை
தனியாத்தூள் - 1 சிட்டிகை
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
எலுமிச்சை - அரை மூடி
உப்பு - தேவையான அளவு
மசாலா அரைக்க:
மிளகு, சீரகம் - 1 தேக்கரண்டி
பூண்டு - 10
கறிவேப்பிலை - சிறிதளவு

பக்குவம்: அரைக்க வேண்டியவற்றை லேசாக சிறிய உரலில் போட்டு இடிக்கவும். நல்லி எலும்புத் துண்டுகளை தண்ணீரில் நன்றாக அலசி அம்மியில் அசுக்கி வேகவைக்கவும். பின்னர் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து தக்காளியை கைகளால் கரைத்து மூடி வைக்கவும்.

நன்றாக வெந்தபிறகு மூடியைத் திறந்து தனியாத்தூள், மஞ்சள்தூள், அரைத்த மசாலா ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். இறுதியில் எலுமிச்சைச்சாறு சேர்த்து கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கவும்.

திலீபன் புகழ்

ஆர்.சி.எஸ்., டி.அருள் ராஜ்