ராகுல் தாத்தா செம ஹாட் மச்சி!‘‘ஊரே நயன்தாரா கிட்ட பேச காத்திருக்காங்க. ஆனா, அவங்களே எனக்கு போன் செஞ்சு ரொம்ப நேரம் பேசுவாங்க..!’’ எடுத்ததுமே கெத்து காட்டுகிறார் ராகுல் தாத்தா (எ) தனபால் (எ) உதயபாலன்.

இந்த வாரத்தின் ஹாட் டாபிக் இவர்தான். இவரது போட்டோ ஷூட்தான். ‘‘ஒருத்தர் பாக்கியில்லாம எல்லாருமே இதென்ன இங்கிலீஷ் பட ஸ்டைல்ல போட்டோ ஷூட்னு கேட்டுட்டாங்க. நமக்கென்ன தெரியும்..? கோகுல் தம்பியும் அவங்க டீமும்தான் இப்படி என்னை எடுத்திருக்காங்க.

இதைப் பத்தி முதல்ல கோகுல் சொல்லட்டும் அப்புறம் என்னைப் பத்தி நான் சொல்றேன்...’’ என ராகுல் தாத்தா வழிவிட... கோகுல் ஆரம்பித்தார்.
‘‘போட்டோகிராபில ஒரு பிரிவுதான் இந்த ஃபேஷன் மாடல் ஷூட். பொதுவா யூத், செக்ஸி, ஹாட்... இப்படிதான் போட்டோ ஷூட்டை பிளான் பண்ணுவாங்க.

நாங்க இதை உடைச்சு வெளிநாட்டுப் பாணில வயசான நபர்களை ஸ்டைலா, செம ஹாட்டா காட்டணும்னு முடிவு செஞ்சோம். அப்ப எங்க நினைவுக்கு வந்தவர் ராகுல் தாத்தாதான்!செம கெத்தான மனுஷன். நடிப்புலயும் கெட்டி. அவரை யாருமே இந்த ஆங்கிள்ல யோசிச்சது இல்லையேன்னு மேக்கப் ஆர்ட்டிஸ்ட், டிசைனர், ஹேர் ஸ்டைலிஸ்ட் சகிதமா அவரை உண்டு இல்லைனு ஆக்கிட்டோம். அப்படி எடுத்த போட்டோஸ்தான் இப்ப வைரலாகி இருக்கு...’’ என கோகுல் முடிக்க காலரை உயர்த்தியபடி ராகுல் தாத்தா பேசத் தொடங்கினார்.

‘‘சினிமாவுக்கு வந்து 48 வருஷங்களாச்சு. இப்ப வரை என்னை யாரும் இந்த மாதிரி போட்டோ எடுத்ததில்ல! முதல்ல பயந்துட்டேன். என்னடா இந்தப் பசங்க முடியெல்லாம் வெட்டறாங்க... நாம நாமளா இருப்போமான்னு கேள்விகள் வேற.

ஆனா, போட்டோ எடுத்து ரிலீசானதும் வர ஆரம்பிச்சது பாருங்க போன் கால்ஸ்... இப்ப வரை நிக்கவேயில்ல!’’ முகமெல்லாம் மலர்ந்தவர், இவ்வளவு தூரம், தான் வளர எம்ஜிஆர்தான் காரணம் என்கிறார். ‘‘சொந்த ஊரு  நாகப்பட்டினம் பக்கத்துல அந்தணர்பேட்டை. பாட்டு எழுதணும், நடிக்கணும், சினிமாவுல பெரிசா சாதிக்கணும்னு சென்னை வந்தேன். வயித்துப் பாட்டுக்காக பாண்டிபஜார் கீதா ஹோட்டல்ல வேலை பார்த்தேன். அப்புறம் கிடைச்ச வேலைகளை எல்லாம் செஞ்சேன்.

அந்த ஹோட்டலுக்கு கீழயே ஒரு நாடகக் கம்பெனி இருந்தது. வேலை இல்லாத நேரங்கள்ல அவங்க கூட நிறைய நாடகங்கள்ல நடிச்சேன். அப்பறம் எம்ஜிஆர் ஐயா ஆபீஸ்ல கேட்டரிங் வேலை.ஒருநாள் ‘நல்லா நடிக்கிற... வா...’னு கூட்டிட்டுப் போய் ஒரு சின்ன கேரக்டர்ல நடிக்க வைச்சார். இப்படித்தான் சினிமாவுல நடிக்க ஆரம்பிச்சேன்.

என் மனைவியும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்தான். ‘மண்வாசனை’ பட நேரத்துலதான் எங்களுக்குக் கல்யாணமாச்சு. ஒருவகைல சொந்தம்தான். பாரதிராஜா, பாண்டியராஜ், ரேவதி, பாலு மகேந்திரா சார்... இப்படி எல்லாரும் ஷூட்டிங் வேன்லயே என் கல்யாணத்துக்கு வந்தாங்க!கல்யாணமாகி 35 வருஷங்கள் ஓடிருச்சு. ரெண்டு பொண்ணுங்க. ஒரு பொண்ணை தேனிலயும் இன்னொரு பொண்ணை வெளிநாட்டுலயும் கட்டிக் கொடுத்தாச்சு.

கணக்கே இல்லாம படங்கள்ல நடிச்சாச்சு. போதும் இந்த சினிமா... ஊருக்கே போகலாம்னு முடிவு எடுத்தப்ப தனுஷ் கம்பெனில இருந்து போன் வந்துச்சு. முதல்ல நான் டெஸ்ட்டுக்கு போனது ‘மாரி’ பட புறா வளர்க்கற பெரியவர் ரோலுக்குதான். அப்ப அங்க வந்த விக்னேஷ் சிவன், தன்னுடைய ‘நானும் ரவுடிதான்’ படத்துல என்னை புக் செஞ்சார்.

அப்பறம் அனிருத் பாட்டு, ஷார்ட் ஃபிலிம்ஸ், நிறைய படங்கள்னு வாழ்க்கையே இந்த வயசுல பெரிய அளவுல மாறிடுச்சு. எங்க போனாலும் ராகுல் தாத்தா, ராகுல் தாத்தானு கூப்பிடறாங்க...’’ புன்னகையுடன் சொல்பவர் இப்போது ‘அயோக்யா’, ‘கொரில்லா’ உட்பட சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்!   

ஷாலினி நியூட்டன்