அமெரிக்கா Vs ஈரான் எண்ணெய் அரசியல்!இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை மேலும் உயரும்

‘ஈரான் நாட்டுடனான அமைதி, அமைதிக்கு எல்லாம் தாயாக அமையும்; ஈரான் நாட்டுடனான போர் போருக்கெல்லாம் தாயாக அமையும். இதனை அமெரிக்கா தெரிந்து கொள்ளவேண்டும்.

ட்ரம்ப், நீங்கள் சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடாதீர்கள். அது உங்களை வருத்தப்பட வைக்கும். ஈரான் நாட்டின் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கு எதிராக ஈரானில் கிளர்ச்சியைத் தூண்டிவிடும் நிலையில் நீங்கள் இல்லை...’ இப்படியொரு டுவீட்டை ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானி கடந்த 2018 ஜூலை 22ல் தட்டினார்.

அடுத்த நாள், 23ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ‘ஈரான் அதிபர் ஹஸன் ரவுஹானி! ஒருபோதும் அமெரிக்காவை அச்சுறுத்த நினைக்காதீர். இல்லையெனில் வரலாற்றில் நிகழாத அளவுக்கு கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். உங்களின் வன்முறை சிதைந்த வார்த்தைகளுக்கு முன் நிற்கும் நாடு அமெரிக்கா இல்லை; எச்சரிக்கையாக இருங்கள்’ என்று பதில் டுவீட்டை போட்டார்.

இதன் பின்னணியில் வல்லாதிக்கத்தின் உண்மை முகம் தெரிந்தாலும், ‘தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்பதில் தினை எது வினை எது என்று புரியாமல் பல நாடுகளும் இன்று தலையைப் பிய்த்துக் கொண்டுள்ளன.யாரை ஆதரிப்பது, யாரை ஒதுக்குவது என்றும் புரியவில்லை. காரணம், ரஷ்யாவுக்கு அடுத்தபடி உலகில் அதிகளவு கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு ஈரான். இந்தியாவும் சீனாவும் அதிகமாக நம்பியிருப்பது ஈரானின் எண்ணெயைத்தான்! மத்திய கிழக்கு ஆசியாவில் வல்லமை பெற்ற நாடாகத் திகழும் ஈரான், அணு ஆயுதத் தயாரிப்பிலும் ஈடுபட்டது.

ஆனால், இது அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லை. ‘கச்சா எண்ணெய் விற்பதால் கிடைக்கும் பணத்தில்தானே அணு ஆயுதங்கள் தயாரிக்கின்றீர்கள்; அதைத் தடுத்துவிட்டால் என்ன செய்வீர்கள்?’ என்று யோசித்து எதிர்மறை வேலைகளில் இறங்கியது. அதற்கு அமெரிக்கா சொல்லும் காரணம், ‘ஏமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு நவீன ஏவுகணைகளை சப்ளை செய்கின்றீர்கள்; சவூதி அரேபியா மீது தாக்குதல் நடத்துகின்றீர்கள்; அமெரிக்க நலன்களுக்கு எதிராக ஷியா பிரிவு முஸ்லிம் படையினரை பல நாடுகளில் தூண்டி விடுகின்றீர்கள்; தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறீர்கள்.

உங்கள் நாட்டில் உள்ள தலைவர்கள் அனைவரும் கள்ளக்கடத்தல்காரர்கள். புரட்சிக்காரர்கள் அல்ல; ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படை ஒரு பயங்கரவாத அமைப்பு...’ என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது.இதில் வேடிக்கை என்னவென்றால் ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படை என்பது அந்நாட்டின் ராணுவத்தைப் போன்றது.

ஈரானில் 1979ல் நடைபெற்ற இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு, இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டு இன்று பல்வேறு சிறப்பு அதிகாரங்களுடன் செயல்பட்டு வருகின்றனர். இதிலுள்ள குத்ஸ் படைப்பிரிவு, மத்திய கிழக்கு ஆசியாவில் ஈரானுடன் நட்பில் உள்ள சிரியா, லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவளித்து வருகிறது.

ஒரே ரணகளமாக இருக்கும் ஈரான் - அமெரிக்க உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்க, 2015ல் அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா, ஈரான் தலைவர்களுடன் பேசி ஒரு சுமுக தீர்வை ஏற்படுத்தினார். ‘எங்களது அணுசக்தித் திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை’ என்று ஈரான் உறுதியளித்ததால் அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகள் வியன்னாவில் ஒப்பந்தம் மேற்கொண்டன.

ஆனால், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் வந்தபின் ‘ஒபாமா ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தம், ஈரானை அணு ஆயுதங்கள் செய்யவிடாமல் தடுப்பதற்கு போதுமானதாக இல்லை’ எனக்கூறி ஒப்பந்தத்தை கைவிடுவதாக அறிவித்தார்.மேற்கண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ரஷியா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகள் அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும்கூட, அமெரிக்க டாலர்களை ஈரான் பெறுவதற்கும், கார்கள், தரைவிரிப்புகள் உள்ளிட்ட முக்கிய பொருள்களை அந்த நாடு ஏற்றுமதி - இறக்குமதி செய்வதற்குமான தடைகளை அமலுக்கு கொண்டு வந்தார் ட்ரம்ப்.

இவரின் தன்னிச்சையான முடிவு, இன்னொருபடி மேலே போய் ஈரானால் பொருளாதார வர்த்தக உறவை மேற்கொண்டுள்ள மற்ற நாடுகளுக்கும் ஓர் அச்சுறுத்தலைக் கொடுத்துள்ளது.அதாவது, ‘உலக நாடுகள் யாரும் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்ப் பொருட்களை வாங்கக் கூடாது; அதற்கு தடை விதிக்கப்படுகிறது; மீறி வாங்கினால் அமெரிக்கா சார்பில் பெறப்படும் நிதி ஆதாரங்கள் முடக்கப்படும்’ என்பதுதான் அது.  

கடந்த 2018 நவம்பர் 4ம் தேதி முதல் இந்தத் தடை அமலுக்கு வருவதாக அறிவித்த நிலையில், இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, துருக்கி, இத்தாலி, கிரீஸ், தைவான் ஆகிய நாடுகளுக்கு, 6 மாதங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. இந்தக் காலக்கெடுவும் கடந்த மே 2ம் தேதியோடு முடிந்தது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதுதான் பரபரப்பு.

சமீபத்தில் ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில், ‘8 நாடுகளுக்கான காலக்கெடு மே 2ம் தேதியுடன் முடிந்தது; இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு மேலும் இந்த சலுகையை நீடிக்க முடியாது. சவுதி அரேபியா மற்றும் பெட்ரோலிய எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பில் (ஒபெக்) உள்ள நாடுகள், கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க ஒப்பந்தம் செய்துள்ளன. இதனால் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றம் இருக்காது’ என்று தெரிவித்துள்ளார்.

ஈரானிடம் இருந்து 2018 - 19ல், இந்தியா 24 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது. இப்போது அமெரிக்கா கொடுத்துள்ள நெருக்கடியால் 24 மில்லியன் டன் கச்சா எண்ணெய் பற்றாக்குறையை ஈடுகட்ட தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கயானாவில் (GUYANA) இருந்து இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதாவது, ‘ExxonMobil’ என்ற நிறுவனம் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 20,000 பேரல் கச்சா எண்ணெய் தயாரிக்கும் என்பதால் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் தட்டுப்பாடு வராது என்று கணிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஸ்குமார், ‘‘அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் ஏற்படும் இழப்புகளைச் சமாளிக்க இந்தியா தயாராகவே உள்ளது; கச்சா எண்ணெய் பற்றாக்குறையைச் சமாளிக்க பிற நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.

எது எப்படியோ, இந்தியாவின் நுகர்வுக்கு ஏற்ற கச்சா எண்ணெய் வந்து சேரவேண்டும். பெட்ரோல், டீசல் மீதான விலையும் குறைய வேண்டும்.
இரண்டு பேர் சண்டையில் மூன்றாவதாக இருப்பவன் மண்டை உடைந்துவிடக் கூடாது!  

ரூ.5.9 லட்சம் கோடி வர்த்தகம்

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருந்தாலும் தனது எண்ணெய் தேவைகளில் 84% இறக்குமதி மூலமே நிறைவு செய்கிறது. கடந்த நிதியாண்டில் (2017 - 18) மட்டும் ரூ.5.9 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. குறிப்பாக, ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் நாடுகளில் 2வது இடத்தில் உள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், மங்களூர் ரீபைனரீஸ் அண்ட் பெட்ரோலியம் லிட் மற்றும் நயாரா எனர்ஜி ஆகியவைதான் அதிகளவில் ஈரானில் இருந்து கச்சா எண்ணெயை கொள்முதல் செய்கின்றன. அவற்றில் சவுதி அரேபியா (19.9%), ஈராக் (16.2%), ஈரான் (11%), நைஜீரியா (10.9%), யுஏஇ (9.3%) என்ற அளவில் 2018 டிசம்பர் - 2019 ஜனவரி வரையிலான புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணவீக்கம் 4 மடங்கு உயர்வு

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஈரானின் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டிருக்கிறது. அதன் கரன்சிக்கு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மதிப்பு குறைந்திருக்கிறது. ஆண்டு பணவீக்கம் 4 மடங்கு உயர்ந்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருவதற்கு தயங்கும் நிலை ஏற்பட்டு, போராட்டங்கள் உருவாகியுள்ளன.

ஈரானின் இப்போதைய கச்சா எண்ணெய் ஏற்றுமதி ஒரு நாளுக்கு 1 மில்லியன் பேரல்களுக்கும் குறைவாகவே உள்ளது. அதே அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு முன்பு ஒரு நாளுக்கு 2.5 மில்லியன் பேரல்களுக்கும் அதிகமாக இருந்தது.

ஜலசந்தியை மூடுவோம்

ஈரான் ராணுவ மூத்த தளபதி முகமது பஹேரி வெளியிட்ட அறிக்கையில், ‘ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஈரானின் கச்சா எண்ணெய் எடுத்து செல்லவில்லையெனில், பிற நாடுகளின் கச்சா எண்ணெயும் அந்த வழியாக எடுத்துச் செல்ல முடியாது.

ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவது எங்கள் திட்டமில்லை. ஆனால், மோதல் போக்கு அதிகரித்தால், அதைச் செய்வதைத் தவிர ஈரானுக்கு வேறு வழியில்லை. நாட்டின் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், சர்வதேச நாடுகளால் கச்சா எண்ணெய் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் முக்கிய பகுதியான ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

500 மில்லியன் டாலர் முதலீடு

ஈரான் அதிபராக 2வது முறையாக பதவியேற்றபின் கடந்த 2018 பிப்ரவரியில் இந்தியா வந்த ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானி, ‘‘கடல் வழியாக இந்திய மக்கள் ஆப்கானிஸ்தான், ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு செல்ல உதவும் வகையில் ஈரானின் சாப்ஹார் துறைமுகத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படும். இந்தியாவின் வளர்ச்சிக்காக, ஈரானின் எண்ணெய் மற்றும் இயற்கை வளத்தை பகிர்ந்துகொள்ள தயாராக உள்ளோம்...’’ என்றார்.

இந்த சாப்ஹார் துறைமுக கட்டுமானத்திற்காக இந்தியா தரப்பில் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வழியாக இந்தியாவுடன் வணிகம் செய்ய ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு பாகிஸ்தான் அனுமதி அளிக்க மறுத்ததைத் தொடர்ந்து, சாப்ஹார் துறைமுக  ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால், இப்போது, ஈரானுக்கு எதிராக இந்தியாவுக்கு அமெரிக்கா கொடுக்கும் நெருக்கடியால், சாப்ஹார் துறைமுகத்தில் பல கோடி முதலீடு செய்த இந்தியாவின் நிலை என்னாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

செ.அமிர்தலிங்கம்