முடக்கப்பட்ட ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் சொத்துகளின் இன்றைய நிலை!



NEWS WITHOUT VEIWS
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 05 அன்று இறந்தார். அதைத்தொடர்ந்து அவர் சொத்துகளை நிர்வகிக்க ஒருவரை நியமிக்க வேண்டுமென்று புகழேந்தி என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
அதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் சகோதரர் மகன் தீபக், தன்னை அந்த சொத்தின் நிர்வாகியாக நியமிக்கவேண்டுமென கோரிக்கை விடுத்தார். இந்த இரு வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்க நீதிமன்றம் முடிவு செய்தது. இதுகுறித்து தீபாவிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

ஜெயலலிதாவின் சொத்துகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையை வருமான வரித்துறையின் துணைக் கமிஷனர் ஜி.ஷோபா சார்பில் துறையின் வக்கீல் ஏ.பி.னிவாஸ் தாக்கல் செய்தார்.

அதில், வருமான வரித்துறையில் ஜெயலலிதா தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் அவரது சொத்துகள், கடன்கள் ஆகியவை குறித்த கணக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, சென்னை பார்சன் மேனர் கட்டடத்தின் தரைத்தள கட்டடம், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நகர் காலனியில் உள்ள வீடுகள், மந்தைவெளி செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள இடம், போயஸ் கார்டன் போன்றவை ஜெயலலிதாவின் அசையா சொத்துகளாக உள்ளன.

வருமான வரி பாக்கிக்காக இந்த சொத்துகள் வருமான வரித்துறையால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.இவை தவிர ரூ.1 கோடியே 52 லட்சத்து 57 ஆயிரத்து 673 மதிப்புள்ள நிலமும், ரூ.3 கோடியே 82 லட்சத்து 28 ஆயிரத்து 817 மதிப்புள்ள கட்டடமும் ஜெயலலிதாவுக்கு உள்ளன. வங்கியில், அவரது எல்லாக்கணக்கையும் சேர்த்து, 10 கோடியே 47 லட்சத்து 64 ஆயிரத்து 151 ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

அவர் இறக்கும்போது கையில் இருந்த ரொக்கம் ரூ.15,086. அவரிடம் இருந்த தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்களின் மதிப்பு ரூ.15 லட்சத்து 50 ஆயிரம், பாரம்பரிய பொருட்கள், ஓவியங்கள், சிலைகள், கலைப்பொருட்கள், படகுகள், விமானம் ஆகியவற்றின் மதிப்பு ரூ.42 லட்சத்து 25 ஆயிரம்.

கடந்த 2016 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, இந்த அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.16 கோடியே 37 லட்சத்து 40 ஆயிரத்து 727 ஆகும்.

கடந்த 2016 - 17 கணக்கின்படி ஜெயலலிதாவுக்கு பல்வேறு நிறுவனங்களில் பங்குகள் உள்ளன. அதாவது, கொடநாடு எஸ்டேட்டில் உள்ள 50 சதவீத பங்கின் மூலம் லாபமாக 1 கோடியே 27 லட்சத்து 37 ஆயிரத்து 130 ரூபாயும், ராயல் வேலி புளோரிடெக் நிறுவனத்தில் உள்ள 50 சதவீத பங்கு மூலம் கிடைத்த லாபத்தொகை ரூ.1 கோடியே 7 லட்சத்து 95 ஆயிரத்து 586ம் கிடைத்துள்ளது.

ஜெயா பப்ளிகேஷனின் 50 சதவீத பங்குகள் ஜெயலலிதாவிடம் உள்ளன. இதன்மூலம் 7 கோடியே 23 லட்சத்து 48 ஆயிரத்து 593 ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. கிரீன் டீ எஸ்டேட்டில் உள்ள 77 சதவீத பங்குகள் இவரிடம் இருக்கின்றன. இதன்மூலம் ரூ.12 கோடியே 70 லட்சத்து 40 ஆயிரத்து 128 நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த பங்குகளின் மூலம் வந்த வருவாயில் நஷ்டத்தை கழித்தபின் வரும் மொத்தம் லாபத்தின் மதிப்பு 7 கோடியே 88 லட்சத்து 40 ஆயிரத்து 591 ரூபாய்.இந்த நிறுவனங்களின் பங்குகள் மூலம் கொடநாடு எஸ்டேட் மீதுள்ள மூலதன இருப்பு ரூ.13 கோடியே 85 லட்சத்து 57 ஆயிரத்து 763 உட்பட, 40 கோடியே 3 லட்சத்து 49 ஆயிரத்து 064 ரூபாய் மூலதன இருப்பாக உள்ளது.

நிறுவனங்களின் பங்குகளில் உள்ள மூலதன இருப்பு மற்றும் அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு என ஜெயலலிதாவின் மொத்த சொத்து மதிப்பு 56 கோடியே 41 லட்சத்து 19 ஆயிரத்து 971 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.கடந்த 1990 - 91 முதல் 2011 - 2012 ஆண்டுகளுக்கான ஜெயலலிதாவின் செல்வ வரி (வட்டியுடன் சேர்த்து) 2018 டிசம்பர் 31 வரை, 10 கோடியே 12 லட்சத்து ஓர் ஆயிரத்து 404 ரூபாய் பாக்கி உள்ளது. இதேபோல் வருமான வரி பாக்கி 2017 - 18 டிசம்பர் 31 வரை 6 கோடியே 62 லட்சத்து 97,720 ரூபாய் பாக்கி உள்ளது!  

Data lab