நியூஸ் வியூஸ் - காட்சிப்பிழை!



ஜூலை, 1996.அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி, கோலாகலமாக நடந்து கொண்டிருந்தன.போட்டிகள் தொடங்கி ஒரு வாரம் ஆன நிலையில் நகரில் தீவிரவாதத் தாக்குதல் தொடங்கியது. ஜூலை 27ம் தேதி, அதிகாலை ஒரு மணிக்கு அட்லாண்டாவின் சென்டினியல் ஒலிம்பிக் பார்க்கில் ஒரு வெடிகுண்டு வெடித்தது. ஒருவர் மரணமடைந்தார். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

ஒலிம்பிக் போட்டிகள் நடந்துகொண்டிருந்த நேரத்தில் இந்த வன்முறைச் சம்பவம் நடந்ததால், சர்வதேச மீடியாக்கள் மொத்தமாக இந்தச் சம்பவத்தை உற்று நோக்கின.அந்த பார்க்கின் தனியார் செக்யூரிட்டி பாதுகாவலரான ரிச்சர்ட் ஜீவல், சாதுர்யமாக செயல்பட்டு குண்டு வெடிப்பதற்கு முன்பாகவே அங்கு கூடியிருந்த பல நூறு பேரை எச்சரித்து வெளியேற்றி உயிரிழப்பை பெருமளவு தடுத்தார் என்று ‘ஹீரோ’வாக மக்களால் கொண்டாடப்பட்டார்.
ஜீவல்லுக்கு கிடைத்த இந்தப் புகழ் ஓரிரு நாட்களுக்கே நீடித்தது.

‘அட்லாண்டா ஜர்னல் கான்ஸ்டிட்யூஷன்’ என்கிற பத்திரிகை வெளியிட்ட தலைப்புச் செய்தியில், அமெரிக்கக் காவல்துறை செக்யூரிட்டியான ஜீவல்தான் வெடிகுண்டு வைத்தார் என்று சந்தேகிப்பதாக தெரிவித்திருந்தது.இதைத் தொடர்ந்து சிஎன்என் தொலைக்காட்சியும், ஜீவல் குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாக ஃப்ளாஷ் நியூஸ் வெளியிட, உலகம் பரபரப்பானது. மக்களைக் காக்க வேண்டிய கடமையில் இருந்தவரே கழுத்தறுத்தார் என்று அமெரிக்கா முழுக்க பேசப்பட்டது.

ஜீவலை வாழ்த்திக் கொண்டிருந்த அதே வாய்கள், அவரை வசைபாட ஆரம்பித்தன.உலக மீடியா மொத்தமும் ஒலிம்பிக் போட்டிக்காக அட்லாண்டா நகரில் குவிந்திருக்க, தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்வதற்காக, தானே குண்டு வைத்து தானே மக்களைக் காப்பாற்றுவதாக சீன் போட்டார் ரிச்சர்ட் ஜீவல் என்று பக்கம் பக்கமாகக் கட்டுரைகள் எழுதின பத்திரிகைகள்.

முன்பு காவல்துறையில் பணியாற்றி, ஏதோ காரணத்துக்காக வெளியேறி செக்யூரிட்டியாகப் பணிபுரிந்து கொண்டிருந்த ஜீவல், தன்னை மக்களின் ஹீரோவாகக் காட்டிக் கொள்வதற்காக குண்டு வைத்தார் என்று பத்திரிகை நிபுணர்கள் புலன்விசாரணை செய்து சொன்னார்கள்.

அமெரிக்காவின் எஃப்.பி.ஐ அதிரடியாக ஜீவல் தங்கியிருந்த அப்பார்ட்மெண்டுக்குள் நுழைந்து, ஆதாரங்கள் ஏதாவது கிடைக்குமாவென்று தேடியது. அவர் 24 மணி நேரமும் எஃப்.பி.ஐ. காவல் அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்தார். இதெல்லாம் லைவ் ஆக டிவிகளில் காட்டப்பட்டுக் கொண்டே இருந்தன.

வெளியே தலை காட்ட முடியாமல் தன் அப்பார்ட்மெண்டுக்குள் முடங்கியிருந்த ஜீவலைச் சந்திக்க நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் அவரது அப்பார்ட்மெண்ட் வாசலில் காத்திருந்தார்கள். இதன் காரணமாக குடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அவருடைய வேலையும் பறிபோனது.

கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு அவர் குற்றவாளியாகவே நடத்தப்பட்டார். இத்தனைக்கும் ஜீவலுக்கு எதிரான ஆதாரங்கள் எதுவும் எஃப்.பி.ஐ. வசமில்லை. ஊடகங்களின் சந்தேகங்களுக்கு மட்டுமே எஃப்.பி.ஐ. தாளம் போட்டுக் கொண்டிருந்தது.

சாவகாசமாக அக்டோபர் மாதம், ‘டீ கேன்சல்’ கணக்காக, ‘ஜீவல் மீது எங்களுக்கு சந்தேகமில்லை, அவர் நிரபராதி’ என்று வக்கீலிடம் போலீஸ் சொன்னது. முன்பு ஜீவலை போட்டுக் கிழித்த ஊடகங்கள் எதுவுமே, அவர் நிரபராதி என்று போலீஸ் ஒப்புக்கொண்டதை செய்தி ஆக்கவில்லை.
எனவே, 2007ஆம் ஆண்டு தன்னுடைய 44வது வயதில் ரிச்சர்ட் ஜீவெல் காலமாகும் வரை மக்களின் சந்தேகப் பார்வைகளுக்கு இடையேதான் சங்கடமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்.

ஊடகங்களின் செய்திப் பசிக்கு ஒரு சாமானியர் எப்படி பலியாவார் என்பதற்கு ரிச்சர்ட் ஜீவலே சரியான உதாரணம்.பின்னாளில் தன் மீது அவதூறு பரப்பிய ஊடகங்கள் மீது அவர் மானநஷ்ட ஈடு வழக்குத் தொடுத்து நடத்திக்கொண்டிருந்தார்.மக்களைக் காப்பாற்றிய அந்த குண்டுவெடிப்பு இரவைப் பற்றி அப்போதுதான் தன் வழக்கறிஞரிடம் வாய் திறந்தார்.

“சந்தேகத்துக்கு இடமான வகையில் பார்க்கில் கிடந்த பைப் வெடிகுண்டை முதன்முதலாக நான்தான் பார்த்தேன். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவரை அழைத்து வந்து காட்டினேன். டார்ச்லைட் அடித்தெல்லாம் பரிசோதித்தவர், அது வெடிகுண்டு என்று தெரிந்ததுமே தலைதெறிக்க ஓடிவிட்டார்.

ஆனால், நான் அச்சப்படவில்லை. காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு, என்னால் முடிந்தவரை அருகே இருந்தவர்களை அப்புறப்படுத்தினேன். ஒருவேளை நானும் விலகி ஓடியிருந்தால் ஏகப்பட்ட உயிரிழப்பு நடந்திருக்கும்...”ஊடகங்களின் செய்திப் பசிக்கு இரையான ரிச்சர்ட் ஜீவலை, எஃப்.பி.ஐ. நடத்திய மோசமான முறை குறித்து யாருமே தட்டிக் கேட்கவில்லை. எஃப்.பி.ஐ. அதிகாரிகளும் அதுகுறித்து பின்னர் வாயே திறக்கவில்லை.

மக்களைக் காப்பாற்றியவரே, மக்களைக் கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கடும் அலைக்கழிப்புக்கு ஆளாகி, மனஉளைச்சலால் அடுத்த பத்தாண்டுகளில் செத்துப் போனார்.குற்றம் சாட்டப்படுபவர்கள் யாரும் குற்றவாளிகள் அல்ல. அவர்கள் குற்றம் செய்தது நிரூபணமாகும் வரை அவர்களது பெயர், அடையாளம் உள்ளிட்ட விவரங்கள் பொதுவில் தெரிவிக்கப்படக்கூடாது என்கிற குரல், பல்லாண்டுகளாக உலகம் முழுக்க எழுப்பப்பட்டு வருகிறது.

ஏனெனில், குற்றம் சாட்டப்பட்டவரின் மீது குற்றமில்லை என்பது காவல்துறை மற்றும் நீதிவிசாரணையில் தெரிய வருவதற்குள், அந்த அப்பாவிக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு மனஉளைச்சல்களை சமூகம் தந்துவிடுகிறது.சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு சம்பவமும் அப்படித் தான்.

‘கோயம்பேடு மார்க்கெட்டில் இரண்டு மனநோயாளிகள் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டார்கள். அதில் ஒருவர், இன்னொருவரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டார்...’ என்று அவரது பெயருடன் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

மறுநாள் விசாரணையில்தான் உண்மை தெரிந்தது.இறந்தவர், வடநாட்டுத் தொழிலாளி. கொடுமையான வெயிலால் வலிப்பு வந்து இழுத்துக் கொண்டிருந்தவரைக் கண்ட இன்னொருவர் ஓடிவந்து தன் மடியில் ஏந்திக் கொண்டார். மடியில் ஏந்திய மறுநிமிடமே அவர் உயிர் பிரிந்திருக்கிறது.தூரத்தில் இருந்து இதைக் கண்ட சிலர், வேறுமாதிரி நினைத்து கண், காது, மூக்கு வைத்து போலீஸிடம் புகார் சொல்ல, அதை போலீஸ் அப்படியே ஊடகங்களுக்கு செய்தியாகக் கொடுக்க, பெரும் அமளிதுமளி ஆகிவிட்டது.

அந்த வடநாட்டுத் தொழிலாளியின் உயிரைக் காப்பாற்ற முயன்றவர் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா. பதினைந்துக்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். சில திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்.

உண்மை வெளிப்படுவதற்கு முன்பாக அவரது பெயருடன் நாளிதழ்களில் செய்தி வந்ததுமே, பிரான்சிஸை அறிந்தவர்கள் பதறிப்போனார்கள். “கவிதைகளில் அன்பையும், மனிதநேயத்தையும் வலியுறுத்தும் பிரான்சிஸா இப்படிச் செய்தார்?” என்றெல்லாம் ஃபேஸ்புக்கில் பதிவுகள் போட்டு தீர்ப்பே எழுதிவிட்டார்கள்.

கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்த சிசிடிவி காட்சிகள், இறந்த வடநாட்டு வாலிபரின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் ஆகிய ஆதாரங்கள் கிடைத்த பிறகுதான் பிரான்சிஸ், உயிரைக் காப்பாற்றப்போனவர்; உயிரை எடுத்தவர் அல்ல என்பது நிரூபணமானது.நாம் கனவிலும் மறந்துவிடக்கூடாத கருத்து இதுதான்.‘கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீரவிசாரிப்பதே மெய்’.

யுவகிருஷ்ணா