கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-10



வேண்டியது எல்லாம் தரும் திருவெண்காடு

அச்சுதரும் அவரது மனைவியும் அவர்களது குருவின் வாக்கை வேத வாக்காகக் கொண்டு திருவெண்காட்டிற்குவிரைந்து சென்று சேர்ந்தார்கள். அங்கு ஈசனை கண்குளிர மனம்குளிர சேவித்து மகிழ்ந்தார்கள். நாற்பத்தெட்டு நாட்கள் கோயிலில் தங்கி, கோயில் தீர்த்தத்தில் நீராடி, ஈசன் புகழ் பாடி, ஈசன் பிரசாதத்தையே உண்டு விரதத்தைக் கடைப்பிடித்தார்கள்.  

குழந்தை வரம் கேட்டு அவர்கள் ஈசனை பூஜித்து நாற்பத்தாறு நாட்களை திருவெண்காட்டில் ஒரு நொடியைப் போல கழித்தார்கள். நாற்பத்தேழாவது நாள் பூஜைகளை முடித்துவிட்டு, அச்சுதரும் அவரது மனைவியும்  கண்ணயர்ந்தார்கள். அப்போது ஈசன் இருவரது கனவிலும் ஒரே நேரத்தில் வந்தார். கனவில் காட்சி தந்த தயாபரன், ‘‘எனதன்பு குழந்தைகளே! இந்தப்பிறவியில் உங்களுக்கு புத்திர பாக்கியம் இல்லை. ஆகவே வேறு வரம் கேளுங்கள்...’’ என்றார்.

ஈசன் சொன்னதைக் கேட்டு அச்சுதரும் அவரது மனைவியும் சற்றும் மனம் தளரவில்லை. இருவருக்கும் தாங்கள் நித்தம் ஓதி வணங்கும் தேவாரப் பதிகங்கள் மீது அசாத்திய நம்பிக்கை இருந்தது. ஆகவே, ‘‘சுவாமி! தேவியின் முலைப்பால் உண்ட சம்பந்தர் வாக்கு பொய்யாக வாய்ப்பில்லை. அவர் சொன்னபடி விரதம் இருக்கிறேன். ஆகவே, எனக்கு புத்திர பாக்கியம் நிச்சயம் உண்டு. புத்திரனைத் தர நீங்கள் மறுத்தாலும் சம்பந்தரின் வாக்கு பலம் எனக்கு புத்திரபாக்கியம் தரும்! ஆகவே கவலையில்லை. வேதங்களும் தேடியும் காணா தங்களைக் கண்டதே போதும் சுவாமி...’’ என்று தைரியமாக பதில் சொன்னார்கள்.

‘‘ஆஹா எனதருமை குழந்தைகளே! சம்பந்தர் வாக்கின் மீது நீங்கள் கொண்ட நம்பிக்கையை வியக்கிறேன். ஆகவே, சைவ சமயம் ஓங்க சம்பந்தனைப் போல ஒரு பாலகனை உங்களுக்கு தந்தோம். ஆசிகள்!’’ என்று அருளி  ஈசன் மறைந்தார்.  கனவு கலைந்து இருவரும் எழுந்தார்கள். இருவர் கனவிலும் ஈசன் வந்ததையும், தாங்கள் இருவரும் ஒரே பதிலைச் சொன்னதையும் எண்ணி எண்ணி மகிழ்ச்சியில் நீந்தினார்கள்...

‘‘இப்படி தேவாரப் பதிகத்தின் சக்தியால் விதியை வென்ற அச்சுதருக்கு பிறந்தவர்தான் மெய்கண்டார். இவர்தான் ‘சிவஞானபோதம்’ என்ற சைவ சித்தாந்தங்கள் அடங்கிய நூலை உலகத்துக்குத் தந்தவர். அந்த நூல் சைவ சமயத்திற்கு ஆணிவேரா இப்ப வரைக்கும் இருக்கு...’’ பக்தியுடன் நாகராஜன் சொல்லி முடித்தார்.

‘‘அப்பாடி! அப்ப விதிய மாத்தக்கூடிய மந்திரம் தமிழ்லயே இருக்குதுன்னு சொல்லுங்க! இப்பப் புரியுது நீங்க ஏன் எப்பவும் தேவாரம், திவ்யப் பிரபந்தம்னு படிச்சுகிட்டே இருக்கறதா சொல்றாங்கன்னு...’’ நெகிழ்ச்சியுடன் சொன்னாள் லதா. ஆமாம்மா... அதனாலதான்  தேவாரம், திவ்யப் பிரபந்தங்களை எல்லாம் நம்ம அடுத்த சந்ததியினருக்கு சொல்லித் தரணும்னு சொல்றேன்...’’ நாகராஜன் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

இதைக் கேட்டு மெய்மறந்தபடி அமர்ந்திருந்தான் கண்ணன். எதிர்வீட்டு நாகராஜ தாத்தா மீது அவனுக்கு அன்பும் பக்தியும் பெருகியது. ‘‘தாத்தா... வந்து... விதியை மாத்தக்கூடிய பதிகத்த இங்க சம்பந்தர் பாடி இருக்கார்னா ஏதாவது ஓர் அதிசயமும் இங்க நடந்திருக்கணுமே...’’ கண்ணன் மெல்ல இழுத்தான்.

‘‘இப்ப நீ கேட்பேன்னு தெரியும்... ஏங்க... அதையும் சொல்லிடுங்க...’’ புன்னகையுடன் தன் கணவர் நாகராஜனைப் பார்த்தாள் ஆனந்தவல்லி. தலையசைத்தபடி நாகராஜன் ஆரம்பித்தார். கண்ணனுடன் சேர்ந்து லதாவும் கேட்கத் தொடங்கினாள். திருவெண்காடே அன்று திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. பசும் மாவிலைத் தோரணங்கள் எங்கும் தென்றலில் அசைந்து ஆடியவண்ணம் இருந்தது. அனைவரின் வீட்டின் வாயிலிலும் பல வண்ணக் கோலங்கள் பளபளத்தன. ‘ஹர ஹரா சிவ சிவா’ என்று சிவனடியார்கள் கோஷித்துக் கொண்டிருந்தார்கள்.

இப்படி ஊரே மகிழ்ந்திருக்கக் காரணம் உமாதேவியின் முலைப்பால் உண்ட சம்பந்தப் பெருமானின் வெண்காட்டு விஜயம்தான். அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த அற்புதத் தருணம் வந்தது. சம்பந்தப் பெருமான் ஊரின் எல்லைக்கு வந்துவிட்டார்.
எல்லையில் அவரை வரவேற்க ஊரே கூடியது. ஆளுடைப்பிள்ளையார் அனைவருக்கும் வந்தனங்கள் செய்துவிட்டு  திருவெண்காட்டு நிலத்தைப் பார்த்தார்.

அவரது கண்களுக்கு வெண்காட்டில் இருந்த ஒவ்வொரு மணல் துகளும் சிவலிங்கமாகக் காட்சிதந்தது! அதைக் கண்ட அவரது கைகள் தாமாகக் குவிந்தன. கண்களில் நீர் வழிந்தது. ‘‘சிவ ஸ்வரூபமான இந்த மணலை மிதித்துத்தான் நான் என் அப்பன் வெண்காடனைப் பார்க்க வேண்டுமா... அம்மா..!’’ என்று அலறினார் சம்பந்தர்.

அவர் அம்மா என்று யாரை அழைத்தாரோ தெரியாது. ஆனால், கோயிலில் இருந்த அம்பிகை சட்டென்று எழுந்தாள். ஈசன் அவள் திருப்பாதத்தில் அணிவித்த மெட்டியும் சலங்கையும் கொஞ்ச, அன்னம் போல நடையிட்டு சம்பந்தர் முன் வந்து நின்றாள். சம்பந்தரைத் தனது பொற்கரங்களால் தூக்கினாள்.

தனது மெல்லிய இடையில் அவரை அமர வைத்தாள்! சம்பந்தரைக் கொஞ்சிக் கொண்டே ஈசன் சன்னதிக்கு அழைத்துச் சென்றாள்!சம்பந்தர் அவளது மடியிலிருந்து இறங்கவே இல்லை. பிறவிக்கடலுக்குத் தோணியாக இருக்கும் அவளை அந்த ஞானக் குழந்தை விடுமா? அம்மையின் இடையில் இருந்துகொண்டே அது அப்பனை சேவித்தது.

ஈசனும் மெல்ல இறங்கி நடந்து வந்தார். கைகளால் சம்பந்தரை வருடி ஆசி வழங்கினார்.‘‘தேவி! இதுநாள் வரையில் உனக்கு இடை என்று ஒன்று இல்லை என்றே எண்ணிக் கொண்டிருந்தேன்! ஆனால், இன்றோ அந்த இடையில் நீ நமது பக்தனைச் சுமந்து வந்திருக்கிறாய்! இதைக் கண்டவுடன்தான் உனக்கு இடை இருப்பதை உணர்கிறேன்!’’ உமை அம்மையைப் பார்த்து ஈசன் அன்போடு கூறினார். இதைக் கேட்டதும் அம்பிகையின் முகம் வெட்கத்தால் சிவந்தது.

அதைக் கண்ட ஈசன், ‘‘தேவி! இந்த உலகம் இருக்கும் வரை இந்த சம்பந்தரை இடையில் சுமந்தவண்ணம் அடியவர்களுக்கு காட்சி தருவாய்! உன்னைக் கண்டு வணங்குபவர்களுக்கு சந்தான பாக்கியம் முதல் அனைத்து சௌபாக்கியங்களையும் அருள்வாய்! பிள்ளை ஒரு நொடி நேரம் அழுததைக் கூட தாங்க முடியாத அற்புதக் கருணையின் வடிவமே சக்தி என்பதை உன்னைக் காண்பவர்கள் அறிவார்கள்!

சக்தி என்பவள், பரம்பொருளான ஈசனின் கருணையின் மொத்த வடிவம் என்பதை ஞானியர்கள் உணர்ந்து தெளிவார்கள். இதனால் வையகத்தில் ஆணுக்குப் பெண் சரி நிகர் சமம் என்பது நிலைநாட்டப்படும்..!’’ என்று கருணை பொங்க அமுதம் போன்ற குரலில் சொன்னார் ஈசன். அதைக் கேட்ட அம்பிகை அப்படியே சிலையாக மாறினாள்....

‘‘இன்னிக்கும் திருஞான சம்பந்தரை இடுப்புல வைச்சுக்கிட்டு அம்பாள் நமக்காக திருவெண்காட்டுல காட்சி தர்றாங்க. அவங்களை பக்தர்கள் அன்போட ‘பிள்ளை இடுக்கி அம்மன்’னு சொல்றாங்க. பிள்ளையான சம்பந்தரை தன் இடுப்புல இடுக்கிக் கிட்டதால இந்தத் திருநாமம் அந்த அம்பாளுக்கு ரொம்ப பொருந்தும்...’’ என்றபடி நாகராஜன் இயல்புக்கு வந்தார்.

‘‘வாவ்! சிவனோட கருணையின் வடிவம்தான் அம்பாளா..? அற்புதமான விளக்கம் தாத்தா. இதுக்கெல்லாம் மேல ஒரு விஷயம் இந்தக் கதைல இருக்கு. இந்த உலகத்துல யார் அழுதாலும் அந்த பார்வதி தேவி ஏதோ ஒரு விதத்துல வந்து உதவி பண்ணுவாங்க! ஏன்னா அவங்கதான் இத உலகத்துக்கே அம்மா! சரிதானே தாத்தா?’’கண்ணன் கேட்டதுதான் தாமதம்... ஆனந்தவல்லி இரண்டு கற்கண்டை எடுத்து அவன் வாயில் போட்டு, ‘‘சரியா சொன்னடா கண்ணா...’’ என்றாள்.

‘‘ஆமா கண்ணா... பாட்டி சொன்ன மாதிரி சரியா சொல்லிட்ட! இதுமாதிரி இந்த திருவெண்காடர் செய்த அற்புதங்கள் ஏராளம். பிள்ளை வரம் கேட்டு இங்க தவம் செய்தார் மதங்க முனிவர். அவருக்கு ஈசன் அம்பாளையே மகளாகப் பிறக்க அருள் செய்தார்! பூமில பிறந்த அம்பாளும், மாதங்கி என்ற பெயர்ல வளர்ந்து, தவம் பண்ணி ஈசனை கல்யாணம் செய்துகிட்டாங்க! பிரம்மனுக்கு உபதேசம் செய்த பிரம்மவித்யாம்பாள் இவங்கதான்!
அது மட்டுமில்ல... இந்திரனுக்கு இருந்த பிரம்மஹத்தி தோஷத்த இந்தத் தலத்து ஈஸ்வரன் போக்கினார். அதனால தீராத தோஷங்களைப் போக்கும் மருந்தாகவும் இங்க சிவன் இருக்கார்.

இங்குள்ள சிவனை பூஜை செய்தார் புதன். அதன்பிறகுதான் நவக்கிரகத்துல ஒரு கிரகமா இருக்கற பதவியையே அவர் பெற்றார்! அதனால இந்த சிவன் நியாயமான பதவியைத் தரக்கூடிய கற்பகமாகவும் இருக்கார்...’’ கண்ணனைப் பார்த்துச் சொன்ன நாகராஜன், மெல்ல திரும்பி லதாவைப் பார்த்து புன்னகைத்தார். லதாவின் முகத்திலும் நம்பிக்கை சுடர்விட்டது.

‘‘இவர் சொன்னது கொஞ்சம்தான் லதா... இன்னும் நிறைய இருக்கு. ஸ்வேதகேது என்ற பக்தனுக்காக இங்க சிவன் எமனையே அழிச்சார். அதனால வெண்காடரை வணங்கினா எம பயமே.  இருக்காது. பட்டினத்தாரோட பக்தன் சேந்தனாரை அந்த நாட்டு ராஜா சில தவறான காரணங்களுக்காக சிறை வைச்சார்.

சேந்தனாரைக் காப்பாத்த வெண்காடரை வேண்டிக்கிட்டார் பட்டினத்தார். சிவன் உடனே விநாயகரை அனுப்பி அவரை சிறைல இருந்து விடுவிச்சார். சிறைல இருந்த சேந்தனார் கைவிலங்கை உடைச்சு பிள்ளையார் அவரைக் காப்பாத்தினார் இல்லையா? அந்த உடைஞ்ச கை விலங்கை இன்னிக்கும் இந்தக் கோயில் பிள்ளையார் கைல பார்க்கலாம்...’’ என்ற ஆனந்தவல்லி மெல்ல அருகில் வந்து லதாவின் தோளை ஆதரவாகப் பற்றினாள்.
‘‘தைரியமா உன் மகனையும் மருமகளையும் வெண்காட்டுக்கு கூட்டிட்டுப் போ. அங்க சாமியை வணங்குங்க. கண்டிப்பா உனக்கு பேரனோ பேத்தியோ பிறப்பாங்க!’’ என்றாள் ஆனந்தவல்லி.  

நாகராஜன் அதை ஆமோதித்தார்.நம்பிக்கையுடன் லதா எழுந்தாள். ‘‘ரொம்ப தேங்க்ஸ் மாமா...’’ கைகூப்பினாள்.‘‘ஆன்ட்டி ஒரு நிமிஷம்...’’ கண்ணன் தடுத்தான். நாகராஜனை நோக்கி, ‘‘தாத்தா! குழந்தை உருவாக ஒரு கோயில் சொல்லிட்டீங்க. அந்த குழந்தை நல்லபடியா பிறக்கவும் ஒரு கோயில் சொல்லுங்களேன்...’’ என்றான்.‘‘அட ஆமாம்...’’ எழுந்த லதா அமர்ந்தாள். ‘‘அந்தக் கோயிலையும் சொல்லிடுங்க மாமா!’’ நாகராஜன் அர்த்தத்துடன் புன்னகைத்தார்!

(கஷ்டங்கள் தீரும்)

- ஜி.மகேஷ்