நாங்களும் சாதிக்கிறோம்... எங்களையும் பாராட்டுங்க!‘‘குறிப்பிட்ட சில விளையாட்டுகளுக்கும் அதில் ஈடுபடுகிற வீரர்களுக்கும்தான் நம்ம நாட்ல அங்கீகாரம் கிடைக்குது...’’ என சரவெடியுடன் தொடங்குகிறார் ஸ்வேதா கீர்த்தனா.வேலுக்குறிச்சி கொல்லிமலை அடிவாரத்தில் ஒரு மலைவாழ் குடும்பத்தில் பிறந்து எந்தவித வசதிகளும், போதிய ஊட்டச்சத்துக்களும் இல்லாமல் தேசிய அளவில் சாதித்திருக்கிறார் இந்த தடகள வீராங்கனை.

‘‘நாமக்கல் ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரில இரண்டாமாண்டு கம்ப்யூட்டர் சைன்ஸ் படிக்கறேன். அப்பா, அம்மா, தம்பி, நான். குருவிக்கூடு மாதிரி எங்க குடும்பம். அப்பா, அம்மா ரெண்டு பேருமே விவசாயிங்க. ஸ்கூல் நாட்கள்ல டிஸ்கஸ் த்ரோ, ஷாட்புட் விளையாட ஆரம்பிச்சேன். 10வது படிக்கிறப்ப கொஞ்சம் நல்லாவே விளையாடினேன்! ஆனா, போட்டிகளுக்கு எல்லாம் போனதில்ல...’’ என்று சொல்லும் கீர்த்தனாவின் வாழ்க்கை கல்லூரிக்குச் சென்ற பிறகே மாறியிருக்கிறது.

‘‘காலேஜ் விளையாட்டு மாஸ்டர்கிட்ட பேச்சுவாக்குல நான் ஷாட்புட், டிஸ்கஸ் த்ரோ விளையாடுவேன்னு சொன்னேன். ஏற இறங்க என்னைப் பார்த்தவர், வெயிட் லிஃப்டிங் பக்கம் என் கவனத்தை திருப்பினார்.‘போதுமான பயிற்சி இல்லையே சார்’னு நான் சொன்னபிறகும் விடாம என்னை இன்டர் காலேஜ் காம்படிஷன்ல பங்கேற்க வைச்சார். அப்புறம் சில உள்ளூர் போட்டிகள். இந்த நேரத்துல வெளியூர்ல நடக்கிற போட்டிகள்ல பங்கேற்க வாய்ப்பு வந்தது. ஆனா, வீட்லயே சிக்கல்கள் ஆரம்பிச்சது.

கல்லூரி, உள்ளூர் போட்டிகளப்ப எதுவும் சொல்லாதவங்க, வெளியூர்னு சொன்னதும், குறிப்பா சில நாட்கள் தங்க வேண்டியிருக்கும்னு தெரியப்படுத்தினதும், ‘பளு தூக்கறதெல்லாம் பெண்களுக்கு எதுக்கு...’னு அப்பா, அம்மாவே இழுத்தாங்க. அக்கம் பக்கத்துல இருந்தவங்களும் ‘பொட்டப்புள்ளைய ஏன் இப்படி வெளியூருக்கெல்லாம் அனுப்புறீங்க...’னு கேட்க ஆரம்பிச்சாங்க.

எப்படியோ அவங்களை எல்லாம் சமாதானப்படுத்திட்டு போட்டிகள்ல கலந்துகிட்டேன். மெடல், கப் எல்லாம் வாங்க ஆரம்பிச்சபிறகுதான் அப்பா, அம்மா சமாதானமானாங்க. சுத்துவட்டாரமும் பாராட்டத் தொடங்கினாங்க...’’ என்ற கீர்த்தனா, இதற்கெல்லாம் காரணம், சில விளையாட்டு வீரர்களை மட்டுமே நம் சமூகம் முக்கியமாகக் கருதுவதுதான் என்கிறார்.

‘‘தடகளம்னு எடுத்துக்கிட்டா ஓட்டப்பந்தயம் மட்டும்தான் எல்லாருக்கும் நினைவுல வருது! மத்த விளையாட்டுகள்ல ஒலிம்பிக்குலயே ஜெயிச்சு தங்கம் வாங்கினாலும் ஒருநாள் செய்தியோட மறந்துடறோம். என்னை மாதிரி கிராமத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்கள்ல பலர் சிறந்த விளையாட்டு வீரர்களா இருக்காங்க. ஆனா, ஒழுங்கு  படுத்தி எடுத்துச் சொல்லி எங்களுக்கு பயிற்சி அளிக்க யாருமே இல்லை.

தப்பித்தவறி விளையாடறவங்களுக்கும் போதுமான ஊட்டச்சத்து கிடைக்கறதில்லை. தகுந்த கிரவுண்ட்... அரசாங்க உதவி... இதெல்லாம் எட்டாக்கனியா இருக்கறதால திறமைசாலிகள் பலர் இன்னும் வெளிச்சத்துக்கே வரலை...’’ ஆதங்கப்படும் கீர்த்தனா, தென்னிந்திய அளவில் பளு தூக்கும் போட்டியில் சாதித்து கப்புடன் திரும்பியிருக்கிறார்! மாநில அளவில் சாதித்து வரும் இவரது லட்சியம் சர்வதேச அளவில் பட்டையைக் கிளப்புவது!           

ஷாலினி நியூட்டன்