K-13



ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கும் உதவி இயக்குநரின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பமே k-13.எதிர்கால வாழ்க்கைக்கு சினிமாவை நம்பியிருக்கும் இளைஞன் அருள்நிதி. முதல் முயற்சி அடுத்த கட்டம் போகாமல் இருக்க, தடுமாற்றமான சூழ்நிலையில், அமைதியின்றி இருக்கிறார். அடுத்த படத்திற்கான கொண்டாட்டத்தில் இருக்கிற நண்பனுக்காக ‘பப்’பிற்கு போகிறார் அருள்.

அங்கே புதிதாக அறிமுகமாகிறார் எழுத்தாளர் ஸ்ரத்தா நாத். அறிமுகத்திலேயே நெருக்கம் மலர, ஸ்ரத்தா வீட்டிற்கே பயணமாகிறார்கள். விழித்துப் பார்த்தால் அருள்நிதி டேப்பால் இறுக்கமாக சுற்றப்பட்டு கிடக்க, ஸ்ரத்தா ரத்தம் பெருகிய நிலையில் அசைவற்றுக் கிடக்க, என்ன நடந்தது என்பதே கதை.

முதல் காட்சியிலேயே கட்டப்பட்டுக் கிடக்கும் ஹீரோ, இறந்து கிடக்கும் ஹீரோயின் என வித்தியாசமாக கதையை இறக்கி நம்பி களமிறங்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பரத் நீலகண்டன்.எப்பவும் ஏமாற்றியிராத அருள்நிதி இதிலும் அவ்விதமே.

நடப்பது புரியாமல், தவித்து புலம்பி தன் வருகைக்கான தடயங்களை அழிக்கும் போக்கில் ஆரம்பிக்கிறது அவரின் நடிப்பு. என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கும் ஒவ்வொரு நொடியும் அவரது முகம் ஏகமாக பல ரசங்கள் காட்டுகிறது. எப்படி இந்த இடத்திற்கு வந்தோம் என்று நினைத்துப் பார்ப்பதில் தொடரும் பாணி எல்லாமே அருமை.

உள்ளேயே கிடந்து தவிப்பதைத் தவிரவும் தப்பிச் செல்ல முயல்வதை விடவும் அருள்நிதிக்குப் பெரிய வேலை இல்லை. ஆனாலும் மொத்தப் படத்தையும் தன் பதற்றத்தால், பயத்தால் தூக்கி நிறுத்தும் மேனரிசம் கைகொடுக்கிறது. இது கொலையா, தற்கொலையா, அல்லது பிரமையா என நம்மைத் தவிக்க வைத்து விடுகிறார்கள்.

ஸ்ரத்தா நாத் கரு தேடி அலையும் எழுத்தாளராக அருமையான பங்களிப்பு. ஆரம்ப அத்தியாயங்களில் அவரின் கிறக்கக் கண்களும், ஹனி ஸ்மைலும் காப்பாற்றுகின்றன.கொஞ்ச நேரமே வந்தாலும் ஆதிக் ரவிச்சந்திரனும், காயத்ரி சங்கரும் கவன ஈர்ப்பு. அதேமாதிரி ரமேஷ் திலக்கும் யோகிபாபுவும் உடன் வந்து ‘நலமா’ என விசாரிப்பதற்குள் காணாமல் போய்விடுகிறார்கள்.

ஒரே இடத்தில் வைத்து நகர்கிற கதையாக இருந்தாலும், கேமிராவில் ஓட்டமும் நடையுமாக ஏற்ற  இறக்கம் காட்டி கவர்கிறார் ஒளிப்பதிவாளர் அர்விந்த் சிங். சாம் சி.எஸ்ஸின் இசையில் பரபரப்பு களைகட்டுகிறது. என்ன நடக்கப் போகிறது என டெம்ப்ட் செய்வதில் உழைத்திருக்கிறார்.புத்திசாலித்தனமாக கதைைய இன்னும் ஈஸியாக உணர வைத்திருக்கலாம்.

முதல்பாதியில் அருள்நிதி, ஸ்ரத்தா இவர்களையே சுற்றிச்சுற்றிச் சுழல்வது கொஞ்சம் சலிப்புக் கூட்டுகிறது.  மனநலத்தை பின்னணியாக வைத்திருப்பது புதிது. க்ளைமேக்ஸ் நல்ல டுவிஸ்ட்.நிதானமாகப் புரிந்துகொள்ளப்பட்டால் இன்னும் ரசித்து உணரவேண்டிய த்ரில்லர்!    

குங்குமம் விமர்சனக் குழு