இந்திய மக்கள் தொகையும் இந்த காரின் விலையும் ஒன்று!இந்திய நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தலா ரூபாய் ஒன்று கொடுத்தால் இந்தக் காரை வாங்க முடியும்!யெஸ். புகாட்டி நிறுவனம் சமீபத்தில் தயாரித்துள்ள காரின் விலை ரூ.132 கோடி!பிரான்ஸைச் சேர்ந்த புகாட்டி (Bugatti), விலை உயர்ந்த கார்களைத் தயாரிப்பதற்காகவே பிறவி எடுத்திருக்கும் நிறுவனம்! இதன் வயது 110. யெஸ். 1909ம் ஆண்டு பிறவி எடுத்த புகாட்டி, தனது 110வது பர்த்டேவை கொண்டாடும் விதமாக La Voiture Noire என்ற சூப்பர் காரை சமீபத்தில் தயாரித்துள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஜெனீவா நகரில், புகழ்பெற்ற ‘2019 ஜெனீவா மோட்டார் ஷோ’ (2019 Geneva Motor Show) சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. அங்குதான் La Voiture Noire சூப்பர் கார் முதல் முறையாக உலகுக்கு காட்டப்பட்டது.இன்றைய தேதியில் இதுதான் உலகின் காஸ்ட்லியான கார். எனவே கண்டமேனிக்கு இதை அவர்கள் தயாரிக்கவில்லை.

‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’ என ஒரேஒரு காரைத்தான் உருவாக்கியிருக்கிறார்கள். இந்தக் காரில் 8.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டபிள்யூ 16 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது என்பது ஹைலைட். மணிக்கு அதிகபட்சமாக 260 மைல்கள் வேகத்தில் பறக்குமாம். இது 2 டோர் கூபே ரகத்தைச் சேர்ந்த கார் என்றாலும் லிமோஸின் ரக கார்களின் சொகுசு, ஹைப்பர் ஸ்போர்ட்ஸ் கார்களின் சக்தி என காக்டெயில் ஆக்கியிருக்கிறார்கள்.

ஜெனீவா மோட்டார் ஷோ நிகழ்ச்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது வெறும் மாடல் மட்டும்தான். அதனை இயக்க முடியாது. La Voiture Noire காரின் உண்மையான, சாலையில் ஓட்டக்கூடிய வெர்ஷனை உருவாக்க புகாட்டி நிறுவனத்துக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் தேவை.

என்றாலும் இன்னமும் தயாரிக்கப்படாத, உருவாக்கத்தில் இருக்கும் இந்த La Voiture Noire சூப்பர் காரை ஒருவர் வாங்கிவிட்டார் என்ற செய்திதான் உலகின் இன்றைய ஹாட் நியூஸ்!

இதை புகாட்டி நிறுவனமும் உறுதி செய்துள்ளது. ஆனால் அந்தக் காரை வாங்கியது யார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்க புகாட்டி மறுத்து விட்டது.இந்திய மதிப்பில் சுமார் 132 கோடி ரூபாய்க்கு (வரிகள் உள்பட) விற்பனை செய்யப்பட்டுள்ள இந்தக் காரை வாங்கியிருப்பவர் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் முன்னாள் தலைவரான பெர்டினாண்ட் பைச் என தொடக்கத்தில் கிசுகிசுத்தார்கள்.

ஆனால், இப்போது போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியாேனா ரொனால்டோ இந்த La Voiture Noire சூப்பர் காரை வாங்கியிருக்கிறார் என்கிறார்கள்.இந்தச் செய்தியை நீங்கள் படிக்கும்போது வேறு ஒருவரின் பெயரும் அடிபடலாம்.  ஒன்றும் பிரச்னையில்லை. கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதான் ஆகவேண்டும்! அதுவரை ‘ரூ.132 கோடி காரா..?’ என வாயைப் பிளந்தபடி கூட்டத்தில் முண்டி
யடித்து பேருந்தில் ஏறி பயணம் செய்யலாம்!

சுப்புலட்சுமி