இப்ப உள்ள தவறுகளை எமனாலதான் தட்டிக் கேட்க முடியும்!



தர்மபிரபு தடதட

‘‘நண்பர் யோகிபாபுவும் நானும் பத்து வருஷங்களுக்கு முன்னாடி ரூம்மேட்ஸ். அப்பவே அவருக்கு இந்தக் கதை தெரியும். இதையே என் முதல் படமா இயக்க விரும்பினேன்.அப்ப பாபுவோட கால்ஷீட் ரொம்பவே ஃபுல்லா இருந்துச்சு. அதனால எங்களால இதை உடனே ஆரம்பிக்க முடியல.
ஒருநாள் பாபுவே என்னைக் கூப்பிட்டு, ‘இது பிரமாதமான பொலிட்டிகல் சட்டையரா வரும். இந்த சப்ஜெக்ட்டை எப்ப பண்ணினாலும் ஃப்ரெஷ்ஷான காமெடி படமா இருக்கும்’னு சொல்லி சந்தோஷப்பட்டார்.

அப்புறம், நான் விமல், வரலட்சுமி நடிப்பில் ‘கன்னிராசி’னு ஒரு படத்தை இயக்கப் போயிட்டேன். அந்தப் படமும் முடிச்சு, அடுத்த ஸ்கிரிப்ட் வேலைகளை ஆரம்பிக்கும்போதுதான் மறுபடியும் பாபு கூப்பிட்டு தேதிகள் கொடுத்தார். தயாரிப்பாளரும் கிடைச்சாங்க. அப்புறமென்ன... அதே வேகத்தில் ஷூட் போயிட்டு, முழுப் படத்தையும் முடிச்சிட்டு வந்துட்டோம்...’’ உற்சாகமாகப் பேசுகிறார் இயக்குநர் முத்துக்குமரன். எமனாக யோகிபாபு நடிக்கும் ‘தர்மபிரபு’ படத்தின் இயக்குநர் இவர்.

ரெண்டாவது படமே பொலிட்டிக்கல் சட்டையர்..?

‘தர்மபிரபு’ டீசர் பார்த்ததும் நிறைய பாராட்டுகள். ‘நடப்பு அரசியல் நிலவரங்களை நல்லாவே நையாண்டி பண்ணியிருக்கீங்க’னு சொல்லி சந்தோஷப்பட்டாங்க. டீசரை விட படத்துல இன்னும் வீரியமான டயலாக்ஸை நிறையவே எதிர்பார்க்கலாம். நியாய, அநியாயங்களை பாகுபாடில்லாம பார்க்கறவர் எமர்தர்மன் ஒருத்தர்தான். இன்னிக்கு உள்ள தவறுகளைத் தட்டிக் கேட்க எமனாலதான் முடியும்னு நினைச்சேன். இது பொலிட்டிக்கல் சட்டையர்னாலும், குழந்தைகளுக்கும் பிடிக்கற மாதிரிதான் படம் வந்திருக்கு.

இதோட ஷூட் தொடங்கறதுக்கு முன்னாடி கும்பகோணத்தில் உள்ள எமதர்மன் கோயிலுக்கு நானும், யோகிபாபுவும் போய் கும்பிட்டு வந்தோம். சென்னை, பொள்ளாச்சினு படப்பிடிப்பு நடந்த மூணு மாசங்கள்ல ஸ்பாட்ல அசைவ சாப்பாடு இல்லாம பார்த்துக்கிட்டோம். நான்வெஜ் பிரியரான பாபு, அசைவம் சேர்க்காம இருந்ததால கொஞ்சம் ஸ்லிம் ஆகிட்டார்!

எமனின் அப்பாவாக ராதாரவி, அம்மாவாக ரேகா, சிவனாக ‘மொட்டை’ ராஜேந்திரன், சித்திரகுப்தனாக ரமேஷ் திலக். அவரது தங்கையாக மேக்னா நாயுடு, இவங்க தவிர அழகம் பெருமாள், ஜனனி ஐயர், ‘ஏமாளி’யில் நடிச்ச சாம் ஜோன்ஸ்னு நிறைய பேர் இருக்காங்க.

படத்தோட தயாரிப்பாளர் ரங்கநாதன் சார் விநியோகஸ்தரா இருந்து தயாரிப்பாளரா உயர்ந்திருக்கார். சினிமா வியாபாரங்கள் அவருக்கு அத்துப்படி. அதனாலதான் யோகிபாபு நடிச்சிருந்தாலும் கூட ரொம்ப பெரிய பட்ஜெட்ல படத்தை தயாரிச்சிருக்கார். போட்ட காசை திரும்ப எப்படி எடுக்கணும்ங்கற வித்தை தெரிஞ்சவர் அவர்.

டெக்னீஷியன் டீமும் ரொம்ப ஸ்டிராங்கா அமைஞ்சிருக்கு. மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். ‘வம்சம்’, ‘மௌனகுரு’, ‘காற்றின் மொழி’னு பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் அவர். ஜஸ்டின் பிரபாகரின் இசை படத்துக்கு பலம்.

யோகிபாபு, மேக்னாநாயுடு காம்பினேஷனில் ஒரு பாடலை தாய்லாந்தில் ஷூட் பண்றதா இருக்கோம். எடிட்டிங்கை ஷான் லோகேஷ் கவனிக்கறார். புராண சாயல் கொண்ட படங்கள்ல ஆர்ட் டைரக்டரோட ஸ்கோப் அதிகம் இருக்கும். அதுக்காகவே சி.எஸ்.பாலசந்தரை கமிட் பண்ணினோம். இதுக்கு முன்னாடி ‘அவன் இவன்’, ‘பரதேசி’னு பட்டையைக் கிளப்பினவர் அவர். முக்கியமான ஒரு விஷயம், இந்தப் படத்துக்கு அப்புறம் எமனின் இமேஜ் மாறும்.

என்ன சொல்றார் யோகிபாபு?

அவர் ஹேப்பி. இப்ப நிறைய படங்கள்ல அவர் பிசியா இருக்கறதால சில நேரங்கள் ஸ்பாட்டுக்கு ரொம்பவும் டயர்ட் ஆக வருவார். ஆனா, எமன் கெட்டப்பிற்கு அவர் மாறினதும், எங்கிருந்து அவருக்கு எனர்ஜி வரும்னு அவருக்கே தெரியாது. அவ்ளோ எனர்ஜியோட நடிச்சுக் கொடுப்பார்!
டயலாக்ஸை அவரோடு சேர்ந்துதான் எழுதியிருக்கேன். ஒரு காலத்தில் நாங்க ரூம்மேட்ஸ்னாலும் இப்ப அவர் டாப்மோஸ்ட் காமெடியன். ஆனாலும் இன்னும் அதே நட்போடு அவர் இருக்கறது சந்தோஷமா இருக்கு.

எமனுக்கு ஜோடி கிடையாது. அதனால இவருக்கு படத்துல ஜோடி இல்ல! மேக்னா நாயுடு, இதுல ஒரு பாடலுக்கு ஆடியிருக்காங்க. சின்ன இடைவெளிக்குப் பிறகு ரீஎன்ட்ரி ஆகறாங்க.

டீசரில் துணிச்சலா அரசியலை சாடியிருக்கீங்களே..?

நான் தஞ்சாவூர்க்காரன். அதுவும் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன். எங்க மண்ணுல உள்ள அத்தனை பேருமே அரசியல் பேசறவங்கதான். ஸோ, இயல்பாவே எனக்குள்ளும் அது கலந்திருக்கு. இன்னொரு விஷயம், ‘நையாண்டி’ன்னாலே சமூகத்தில் உள்ள குறைகளை சீர்திருத்தும் நோக்கத்தோடு சொல்றதுதானே! பிச்சைக்காரனிலிருந்து கோடீஸ்வரன் வரை பலரையும் சரிசமமா பாவிச்சு தண்டனை தீர்ப்பு தருவது எமன்தான். அப்படிப்பட்டவர் மூலம் கருத்தை சொன்னா பொருத்தமா இருக்கும்னு தோணுச்சு. அதனால இந்தக் கதையை எழுதினேன்.  

என்னாச்சு உங்க ‘கன்னிராசி’?

படம் எப்பவோ ரெடியாகிடுச்சு. ‘கன்னிராசி’க்கு முன்னாடியே ‘தர்மபிரபு’ ரிலீஸாகிடும் போலிருக்கு! அதுவும் காமெடி கதைதான். கூட்டுக் குடும்ப ஹீரோ விமல். அவர் ஃபேமிலில உள்ள அத்தனை பேருக்குமே ராசி கன்னிராசியா இருக்கறதால அவங்க குடும்பத்துல உள்ளவங்களுக்கு லவ் மேரேஜ்தான் நடந்துட்டு இருக்கும்.

ஆனா, அரேஞ்ஜ்டு மேரேஜ்தான் பெஸ்ட்னு நினைக்கறவர் விமல். அவர் வீட்டுக்கு எதிரிலேயே காதலே பிடிக்காத வரலட்சுமி குடி வர்றாங்க. அப்புறம் என்ன நடக்குதுனு கதை போகும்.

தியேட்டர் ஓனரா விமலும், ஸ்கூல் டீச்சரா வரலட்சுமியும் நடிச்சிருக்காங்க. அதிலும் காமெடி ஆர்ட்டிஸ்ட்கள் அதிகம் இருக்காங்க. படத்தோட கிளைமேக்ஸ்ல 26 ஆர்ட்டிஸ்ட்கள் நடிச்சிருக்காங்க! அது எப்ப ரிலீஸானாலும் காமெடி ட்ரீட் டாக இருக்கும்!l

மை.பாரதிராஜா