பகவான்-28எல்லைகளை மீறாதீர்கள்!

1984, அக்டோபர் 30ஆம் தேதி.தன்னுடைய மூன்று ஆண்டு கால மவுனத்தை கலைத்து பக்தர்கள் மத்தியில் ஓஷோ பேசினார்.

“என்னுடைய சிந்தனைகள் அனைத்தையும் உலகத்தின் முன்பாக வைத்துவிட்டேன் என்பதற்காக நான் மவுனம் காக்கவில்லை. என்னுடைய மவுனத்துக்கு என்ன மதிப்பு என்பதை நான் உணர்ந்துகொள்ள இந்த மூன்று வருடங்கள் தேவைப்பட்டன...” என்று பேச ஆரம்பித்தார்

இம்முறை அவரது பேச்சில் மத எதிர்ப்பு அதிகமாகக் காணப்பட்டது. எல்லா மதங்களையும், அவற்றின் அடக்குமுறை சிந்தனைகளையும் கடுமையாக எதிர்த்தார். குறிப்பாக கிறிஸ்தவ மதம் அவரது பேச்சில் தாக்குதலுக்கு உள்ளானது.இந்தியாவில் இருந்து அவரை அமெரிக்காவுக்குத் துரத்தியது அரசியல். அதே அரசியல் அமெரிக்காவிலும் அவருக்கு முட்டுக்கட்டைகள் போட்டது குறித்த கோபம் அவரது பேச்சில் வெளிப்பட்டது.

ஒரேகான் மாகாணத்தில் நிலை கொள்வதற்காக ரஜனீஷ் பக்தர்கள் நடத்திக் கொண்டிருந்த சட்டரீதியான போராட்டங்களுக்கு ஆதரவு தரும் வகையில் அவரது பேச்சு அமைந்தது. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் சுதந்திரம் ஏட்டளவில்தானா என்றும் கேள்வி எழுப்பினார்.இதையடுத்து ஆசிரமத்துக்கு ரத்தத்தால் எழுதப்பட்ட ஓர் எச்சரிக்கைக் கடிதம் வந்தது.

“எல்லைகளை மீறாதீர்கள்...” என்கிற வாசகத்தோடு அடியில் KKK என்று எழுதப்பட்டிருந்தது.KKK என்றதுமே ஆசிரமத்து நிர்வாகிகள் அலறிவிட்டனர்.
அமெரிக்காவில் 1865ல் உருவானது ‘கு குளக்ஸ் கிளான்’ (ku klux klan) என்கிற இனவெறி அமைப்பு. வெள்ளையர் தேசியம்தான் அந்த அமைப்பின் குறிக்கோள்.

வரலாற்று ரீதியாகவே தங்கள் கொள்கைகளுக்காக படுகொலைகள், தீவிரவாதமென்று அராஜகம் செய்துவருவதே அந்த அமைப்பின் செயல்பாடுகள்.
குறிப்பாக இடம்பெயர்ந்து அமெரிக்காவுக்கு வருகிறவர்களுக்கு கு குளக்ஸ் கிளான் ஓர் எமன்.1860களில் கருப்பினத்தவருக்கு எதிராக ஏராளமான வன்முறைச் சம்பவங்களை நடத்தியதின் மூலம் வளர்ந்த அமைப்பு இது.

ரகசிய அமைப்பான இதில் யார் யார் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பதே மற்றவர்களுக்குத் தெரியாது. தீவிர வலதுசாரி அமைப்பான கேகேகே-வின் அரசியல் ஃபாசிஸத்தை அடிப்படையாகக் கொண்டது.

வெள்ளை நிறத்திலான முகமூடி, நீண்ட அங்கி இவர்களது அடையாளம்.1870களிலேயே அமெரிக்க அரசால் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டு விட்டாலும், இந்த அமைப்பினர் இன்றுவரை ஏதோ ஒரு வகையில் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுத்தான் வருகின்றனர்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மீண்டும் வலிமை பெற்றனர். 1925 வாக்கில் இந்த அமைப்பில் 40 முதல் 60 லட்சம் பேர் வரை இணைந்திருந்தார்கள் என்று சொல்கிறார்கள்.

கடந்த 150 ஆண்டுகால வரலாற்றில் கு குளக்ஸ் கிளான் அமைப்பினரால் அமெரிக்காவில் பலநூறு வன்முறை வெறியாட்டங்கள் நடந்திருக்கின்றன.இப்போதும் கூட கேகேகே அமைப்பில் சுமார் பத்தாயிரம் பேர் வரை இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அமெரிக்காவின் காவல் அமைப்பான எஃப்.பி.ஐ.யிலேயே கூட இந்த அமைப்பின் ஊடுருவல் இருப்பதாகத் தகவல்.

அப்படிப்பட்ட அமைப்பினர்தான் ரஜனீஷ்புரத்துக்கு எதிராகக் களத்தில் குதித்தனர்.ரத்தக் கடிதம் வந்த நாள் முதலாக தினம்தோறும் தொலைபேசி மிரட்டல்கள், எச்சரிக்கைக் கடிதங்கள் ஆசிரமத்துக்கு வந்து கொண்டே இருந்தன.சொல் மட்டுமின்றி செயலிலும் இறங்கினார்கள்.

கடுமையான கோடை இரவு ஒன்றில் ஆசிரமத்தின் ஒரு பகுதி திகுதிகுவென எரிய ஆரம்பித்தது. அலறிப் புடைத்துக்கொண்டு பாதுகாவலர்கள் அங்கே திரண்டபோது குதிரையில் வந்திருந்த கவுபாய் தொப்பி அணிந்த சிலர், பண்ணை வீடுகளுக்குத் தீ வைத்துக் கொண்டிருந்ததைக் கண்டனர்.அவர்களைக் கையும், களவுமாகப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அந்த கவுபாய்கள் தங்களை ‘rednecks’ என்று பெருமையாக சொல்லிக் கொண்டனர். ரெட்நெக்ஸ் என்பவர்கள் பழமைவாதமும், இனவாதமும் பேசக்கூடிய பண்ணை விவசாய அமைப்பினர்.‘ரஜனீஷ்புரத்தில் அமெரிக்க தேசியத்துக்கு அச்சுறுத்தல் விளைவிக்கக் கூடிய கருத்துகள் பரிமாறப்படுகின்றன. அவற்றைத் தடுப்பதற்கே அழிக்க முயற்சிக்கிறோம்...’ என்று அந்த குடிகார கவுபாய்கள் திமிராகப் பேசினர்.

உள்ளூர் காவல்துறையினரோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அச்சப்பட்டனர். அவர்கள் மீது சார்ஜ்ஷீட் கூட போடவில்லை. விபத்து என்று சொல்லி கேஸ் ஊத்தி மூடப்பட்டது. ஒருவேளை அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தங்கள் காவல் நிலையமே கூட தீப்பற்றி எரியும் என்று காவலர்கள் அச்சப்பட்டனர்.

காவல்துறை நடவடிக்கை எடுக்காது என்பது புரிந்தவுடன் வன்முறையாளர்களுக்கு ஊக்க மருந்து குடித்தது போலானது. அடுத்தடுத்து வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டனர். ரஜனீஷ்புரத்தில் இந்தச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே சிறப்பு தீயணைப்பு நிலையம் ஒன்று உருவானது.அவர்கள் தீ வைப்பதும், இவர்கள் அணைப்பதும், காவல்துறை கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்ப்பதும் ரஜனீஷ்புரத்தின் இயல்பான காட்சிகளாக மாறின.

அடுத்து வன்முறை அமைப்பினர் வேறு ரீதியான மிரட்டல்களை விடுக்கத் தொடங்கினர்.‘மா ஷீலா ஆனந்தை கடத்தப் போகிறோம்’ என்று மிரட்டல் கடிதம் வந்தது.இதையடுத்து ஷீலாவுக்கு பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கப்பட்டன. ஆசிரமத்தை விட்டு வெளியே செல்வதை அவர் நிறுத்திக் கொண்டார். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டும் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் துணையோடு வெளியே சென்று வந்தார்.
ஷீலாவின் மீது கை வைக்க முடியாது என்று தெரிந்தவுடன், அடுத்த மிரட்டல் கடிதம் வந்தது.

இம்முறை பகவானையே கடத்தப் போகிறோம் என்று எச்சரித்தனர். அவ்வாறு கடத்தாமல் இருக்க தங்களுக்கு ஒரு மில்லியன் டாலர் பணம் வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.ஆசிரமத்து சன்னியாசிகள் கொதித்துப் போய்விட்டனர்.

முந்தைய மிரட்டல் மாதிரி இல்லாமல், தங்கள் ஆணிவேரையே அசைத்துப் பார்க்கும் இந்த போக்கிரித்தனத்துக்கு முடிவு கட்ட, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இருந்த தங்கள் தொடர்புகளைப் பயன்படுத்தினர்.மேலிடத்தில் இருந்து வந்த அழுத்தம் காரணமாக வேறு வழியின்றி வேண்டா வெறுப்போடு காவல்துறை களத்தில் இறங்கியது.

யார் யாரால் மிரட்டல் கடிதங்கள் வந்திருக்கலாம் என்று பட்டியல் எடுத்தது. மிரட்டியவர்கள் என்று உறுதியாகத் தெரிந்தவர்களைக் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தியது.அமெரிக்க நீதிமன்றங்களில் நீதிபதிகள் மட்டுமே முடிவெடுத்துவிட முடியாது. ‘ஜூரிகள்’ என்று சொல்லப்படக்கூடிய நீதிபதிக்கு ஆலோசனை சொல்லும் குழுவினரின் கருத்துகளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இந்த ஜூரி குழுவினரில் பெரும்பாலும் உள்ளூர் விஐபிகள் துண்டு போட்டு இடம்பிடித்திருப்பர்.

ரஜனீஷ்புரத்தை வெறுத்த ஜூரிகளின் பரிந்துரையின் படி, காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் அத்தனை பேரும் அப்பாவிகள் என்று விடுவிக்கப்பட்டனர்.ஒரு நாள் இரவு.ஷீலா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

மறுமுனையில் பேசியவர், மிகவும் பதற்றத்தோடு சொன்னார்.“ஆசிரமத்தில் குண்டு வைக்கப் போகிறார்கள்...”பதறிப்போன ஷீலா, அந்த நடு இரவில் அத்தனை பேரையும் எழுப்பினார்.

முந்தைய நாள் ஆசிரமத்துக்கு வந்திருந்தவர்கள் யார் யாரென்று உடனடியாக கணக்கெடுக்கப்பட்டது. அதில் அடையாளம் தெரியாத இருவர் இருந்தார்கள் என்கிற தகவலும் கிடைத்தது.

அந்த இருவர் எங்கேயென்று ரஜனீஷ்புரம் முழுக்க தேடுதல் நடந்தது. அவர்கள் மாயமாக மறைந்து விட்டிருந்தார்கள். எனவே, குண்டு வைக்க வந்தவர்கள் அவர்களாகத்தான் இருக்க முடியும் என்கிற முடிவுக்கு வந்து, அசம்பாவிதம் எதுவும் நடப்பதற்கு முன்பாகத் தவிர்க்க வேண்டுமே என்கிற பதைபதைப்பில் ரஜனீஷ்புரம் முழுக்க அலர்ட் ஆனது.

பகவான் தங்கியிருந்த குடிலுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. சுமார் நூறு பேர், ரஜனீஷ்புரத்தை அங்குலம் அங்குலமாக அலசி, ஆபத்து ஏதுமில்லையென்று ஷீலாவுக்கு விடியற்காலையில் ரிப்போர்ட் செய்தனர்.ஒருவாறாக ஷீலா சமாதானப்பட்டாலும், அவரது மனசுக்குள் வேறு ஏதோ விபரீதம் விளையப்போகிறது என்று அலாரம் அடித்துக் கொண்டே இருந்தது.அதற்கு ஏற்ப, தொலைபேசி கிணுகிணுத்தது.

(தரிசனம் தருவார்)    

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்