சீரழியும் ஜனநாயகம்!



ஓட்டுக்கு நோட்டு… அதிகாரிகள் + அரசியல்வாதிகள் கூட்டு…

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் நாளன்று ஊரிலிருந்து நண்பருக்கு போன் வந்தது. பேசியது அவரின் குடும்பத்தார்தான். திண்டுக்கல்லுக்குப் பக்கம் ஒரு கிராமம். அங்கெல்லாம் ஓர் ஓட்டுக்கு நூற்றைம்பது முதல் முன்னூறு ரூபாய் வரை தந்தார்களாம்.

‘உங்க ஊரில் எவ்வளவு கொடுத்தாங்க?’ என்று விசாரித்தார். ஓட்டுக்கு காசு வாங்குவது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை என்பதைப் பற்றிய எந்தக் குற்றஉணர்வும் இல்லாமல் இருவரும் ஏதோ அது தங்களுக்குப் பாத்தியப்பட்டது என்பதைப் போல பேசியதைக் கேட்க அதிர்ச்சியாக இருந்தது.

உண்மையில் ஓட்டுக்கு காசு தரும் கலாசாரம் ஒன்றும் இன்று வந்ததல்ல. அதெல்லாம் தேர்தல் என்ற ஜனநாயக வைபவம் தொடங்கிய நாள் முதலாகவே தோன்றிவிட்டது.

யூ டியூபில் அறிஞர் அண்ணா பேசும் ஆடியோ ஒன்று இருக்கிறது. திருப்பதி வெங்கடாஜலபதி படத்தைக் கொடுத்து அதன் மீது சத்தியம் செய்து வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா நடப்பதை ஒரு பொது மேடையில் மிகுந்த எள்ளலோடு பேசியிருப்பார் அண்ணா.
அப்போது எல்லாம் இது தவறு என்ற மனநிலை அரசியல்வாதிகளுக்கும் இருந்தது; மக்களுக்கும் இருந்தது. எனவே, இப்படியான தவறுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துவந்தன.

ஆனால், இந்தத் தேர்தலில் கிட்டத்தட்ட தமிழகம் முழுதுமே பரவலாகப் பணப்பட்டுவாடா நிகழ்ந்திருக்கிறது. இதைத் தடுக்க முடியாமல் தேர்தல் ஆணையம் விழிபிதுங்கி செயலற்று நின்றதை கண்கூடாகவே கண்டோம்.இத்தனை வருட காலத்தில் ஓட்டுக்கு காசு வாங்குவது பற்றிய குற்றவுணர்வு நமக்கு இல்லாமலே போய்விட்டது. மறைந்து திரிந்து யாருக்கும் தெரியாமல் வாங்கிக் கொண்டிருந்தது போய், ‘ஓட்டுக்குப் பணம் வாங்குவது என்ன குற்றம்?’ என்று திருப்பிக் கேட்கும் மூட சமூகமாக மாறியிருக்கிறோம்.

‘காசு வந்தா போதும். ஜனநாயகமாவது வெங்காயமாவது. எது எக்கேடு கெட்டுப் போனா எனக்கென்ன...’ என்ற மனநிலை உருவாகியுள்ளது. இது அப்பட்டமான பிழைப்புவாதம். மானுட வாழ்வின் எந்த விழுமியங்கள், உயர்வான அறங்கள் குறித்தும் அக்கறையில்லாத மனங்களால்தான் இப்படி யோசிக்க முடியும்.  

இங்குள்ள மக்கள்தொகையில் பெரும் விழுக்காடு அப்படி மாறியுள்ளது என்பதுதான் மிகப் பெரிய துயரம். ஜனநாயகப் படுகொலையில் அரசு ஈடுபடலாம்; அதிகாரிகள் ஈடுபடலாம்; மக்களே ஈடுபடுவார்களானால் விமோசனமே கிடையாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஓர் அரசியல் கட்சி காசு கொடுக்கிறது என்றால் அதனைத் தட்டிக் கேட்க எந்த அரசியல் கட்சியும் இங்கு இல்லாத நிலை ஏன் உருவாகியிருக்கிறது? இதற்கு என்ன காரணம்?

‘நீயும் தரமாட்டேங்கிற… தருகிறவனையும் தடுக்கிறயே?’ என்று மக்களின் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டுமா என்பதற்கு பயந்தே மற்ற கட்சிக்காரர்கள் தடுப்பதில்லை. முடிந்தால் தங்கள் பங்குக்கு தாங்களும் சொற்பத் தொகையாவது தருவோம் என்று தயாராகிறார்கள்.
மக்களிடம் காசு வாங்குவது குறித்த ஏற்பு இருக்கும் வரை, அது தவறு என்ற குற்றவுணர்ச்சி செயல்படாதவரை சட்டங்களால், தேர்தல் நடத்தை விதிமுறைகளால் எல்லாம் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது.

இந்தத் தேர்தலில் பணப் புழக்கம் அளவுக்கு நாறிய இன்னொரு விஷயம் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இடையேயான கள்ளக் கூட்டு.
இதுவும் நம் நாட்டில் பல ஆண்டுகளாக நடந்துவருவதுதான் என்றாலும் இந்த முறை உச்சபட்ச அபத்தமாக நடந்தது. தேர்தல் நடத்தைவிதிகளைப் பின்பற்றுகிறோம் என்று காவல்துறையும் வருமானவரித்துறையும் தேர்தல் ஆணையமும் கிட்டத்தட்ட ஆளுங்கட்சிகளின் வேலை ஆட்களைப் போல நடந்துகொண்டன.

எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடுகளாகப் பார்த்து வருமான வரித்துறை ரெய்டுக்குச் சென்றது என்றால்; மற்ற அரசு அமைப்புகள் எதிர்க்கட்சிகளின் பணப் பட்டுவாடாவை மட்டுமே வரிந்துகட்டிக் கொண்டு முடக்க முற்பட்டன. மறுபுறம் ஆளுங்கட்சிகள் சற்று சுதந்திரமாகவே ஓட்டுக்கு நோட்டு கொடுப்பது; தேர்தல் நடத்தைவிதிகளை மீறுவது என்று உரிமையுடன் நடந்துகொண்டன.  

தேர்தல் நடத்தை விதிகள் என்பவை தேர்தலை ஜனநாயக மாண்புகள் கெடாமல் நடக்க உருவாக்கப்பட்டவை. ஆனால், இந்தப் புரிதல் அரசியல்கட்சிகளுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இருந்ததாகத் தெரியவில்லை. பல இடங்களில் ஆளுங்கட்சிகள் தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக நடந்தபோதும் பெரிய நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. அழுத்தங்கள் அதிகமான தருணங்களில் வெறும் விசாரணை என்ற கண்துடைப்புடன் நிறுத்திக் கொள்ளப்பட்டது.

அரசு அலுவலர்கள் அரசியல் பிரசாரம் செய்யக் கூடாது என்று ஒரு விதி இருக்கிறது. இந்த விதி இருப்பதன் காரணம் அரசு என்பது எப்போதும் எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் தரப்புக்கு மட்டுமே ஆதரவாக இருந்துவிடக்கூடாது; நடுநிலையோடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
ஆனால், இன்றோ இந்தியா முழுதுமே உள்ள பல அரசு அலுவலர்கள் அரசியல் சார்புகளோடும் அரசியல் தொடர்புகளோடும்தான் உள்ளார்கள்.
தேர்தல் காலங்களில் அவர்கள் அரசுக்குப் பணியாற்றுவதைவிடவும் தங்கள் அபிமான கட்சிகளுக்குப் பணியாற்றுவதையே முதன்மையாக நினைக்கிறார்கள்.

இப்படியான சிலரின் அணுகுமுறைகளால் ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்பும் கேலிக்கூத்தாகி விடுகிறது. தேர்தல் என்பது தேர்தல் கமிஷன், போலீஸ் மற்றும் துணை ராணுவ அமைப்பு, அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசுத்துறை அலுவலர்கள், வருமான வரித்துறை உட்பட பல்வேறு அரசு அமைப்புகள் இணைந்து நிறைவேற்ற வேண்டிய ஒரு ஜனநாயகக் கடமை.

இதில் ஒவ்வொருவருக்குமே பொறுப்பு இருக்கிறது. எந்த ஓர் அமைப்புக்கும் அல்லது தனி அலுவலருக்கும் தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் காட்ட தேர்தல் பணி தகுந்த இடம் அல்ல. ஆனால், இந்த விழுமியங்கள் எல்லாம் இப்போது காற்றில் பறந்துவிட்டன.
தமிழகத்தின் ஒரு தொகுதியில் ஒரு தேர்தல் அதிகாரி வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களை குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கும்படி நிர்ப்பந்தித்தார் என்ற குற்றச்சாட்டு வந்தது.

அதுபோலவே மதுரையில் தேர்தல் முடிந்தபிறகு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்திருக்கிறார் ஒரு பெண் தாசில்தார். இதெல்லாம் ஒரு சோறு பதம் என்பதைப் போல் வெளிவந்திருக்கும் விஷயங்கள். இன்னமும் வெளிவராத அசிங்கங்கள் இங்கு ஆயிரம் இருக்குமோ என்று அச்சமாக உள்ளது.

மொத்தத்தில் ஆளுக்கு ஒரு கை மண் அள்ளிப் போட்டு ஆழப் புதைத்துக்கொண்டிருக்கிறோம் ஜனநாயகத்தை. அரசியல்வாதிகள், அதிகாரிகளோடு மக்களும் குற்றவாளிக்கூண்டில் ஏறி நிற்கும் அவமானகரமான தேர்தல் இது.                         

இளங்கோ கிருஷ்ணன்