மெஹந்தி சர்க்கஸ்



சர்க்கஸ் அழகியைக் காதலித்து மயங்கும் இளைஞனின் கதையே ‘மெஹந்தி சர்க்கஸ்’.ஏற்றத்தாழ்வு, சாதிவெறி என காதல் கதைகள் வந்து கனமேற்றும் நேரத்தில் காவியமாக சர்க்கஸ் பின்னணியில் காதல் சொல்லியிருக்கிறார்கள்.
எல்லாக் கற்பனைகளுக்கும் அப்பாற்பட்ட அற்புதங்களும், எந்தக் கணிதத்துக்குள்ளும் அடங்காத மனக்கணக்காக காதலை இன்னிசையோடும், இளையராஜாவை மீட்டும் நினைவுகளோடும் சொல்லிய வகையில் புதிதாய் மிளிர்கிறார் அறிமுக இயக்குநர் சரவண ராஜேந்திரன்.

காதலுக்கு என்றும் திவ்யமான பக்கங்கள் உண்டு என்பதைத் தெளிவுபடுத்திய விதத்தில் படமும் விசேஷ கவனம் பெறுகிறது.திடீரென சர்க்கஸ் கம்பெனி அந்த ஊரில் வந்து இறங்கிவிட, ஊரே விழித்துக்கொள்கிறது.

அதிலும் உயிரைப் பணயம் வைத்து கத்தி விடும் நிகழ்ச்சி இன்னும் கவனம் பெறுகிறது. சர்க்கஸ் உரிமையாளரின் மகள் ஸ்வேதா திரிபாதி பயப்படாமல் நிற்க, அவர் அழகில் மனம் தருகிறார் மாதம்பட்டி ரங்கராஜ். இருவருக்குமான காதல் மலர, ரங்கராஜின் அப்பா மாரிமுத்து தடைபோட, ஜோடிக் கிளிகளாகப் பறந்துவிடுகிறார்கள்.

கண்டுபிடித்து, அவர்களைப் பிரித்து வைக்க, நிலை குலைந்து போகிறது சர்க்கஸ் கம்பெனி. விட்டுப்போன ஸ்வேதாவை ரங்கராஜ் கண்டடைந்தாரா, தன் காதலை அடைந்தாரா என்பதே க்ளைமேக்ஸ்.ராஜாவின் பாடல்களில் மனதைத் தரும் இடங்கள், இரண்டு இதயங்கள் மட்டுமே கேட்கிற இன்னிசையை எல்லோருக்கும் கேட்கச் செய்கிற ராஜாவின் பாடல்கள் என முதல்பாதி அருமையாக கவனம்பெறுகிறது. ரங்கராஜ் அதிகமாகக் காணக்கிடைக்காத இயல்பு நாயகன். கொஞ்சம் கொஞ்சமாக ஸ்வேதாவிடம் இதயம் இழக்கும் ரிதம் மனதில் நிற்கிறது.

ஸ்வேதா திரிபாதி மனம் நிறைக்கிறார். வடநாட்டுப் பெண்ணின் வடிவத்தில், ராஜகீதம் கேசட் கடைக்கு வெளியே இந்திப்பாடலைக் கேட்டு நிற்கும் விதமும், படிப்படியாக அவரும் ரங்கராஜிடம் மனதைப் பறிகொடுப்பதும் மகா இயல்பு. தன்னை வைத்துக் காப்பாற்ற முடியுமா என்ற சந்தேகத்தோடு, அவர் அன்பில்  நனைவதும் அழகு. கண்களில் காதல் கசிய அவர் இருக்கும்போது இன்னும் அழகு.

சாதிவெறி அப்பாவா… கூப்பிடுங்கள் மாரிமுத்துவை என எழுதி வைத்துவிட்டார்கள் போல... வகைதொகை இல்லாமல் காதலர்களை அடித்து நொறுக்குகிறார். விக்னேஷ்காந்த் கொஞ்சம் நடப்பிற்கு வந்து, காமெடியிலும், கேரக்டரிலும் நிலைத்து நிற்கிறார். வேல ராமமூர்த்தியைப் பாதிரியாராகப் பார்ப்பது ஆச்சர்யம். ஆனாலும் முற்போக்கு பாதிரியாராக வந்து வெளிச்சம் கூட்டுகிறார்.

ஷான் ரோல்டன் பாடல்கள் அவ்வளவு ஃப்ரெஷ். ஆனால், ஏனோ இளையராஜாவின் நினைவு வந்துவிடுகிறது. பின்னணியில் இன்னும் தீவிரம் காட்டியிருக்க வேண்டும். சிறுநகரம், வடநாட்டின் இடங்கள் என அழகூட்டுகிறது செல்வகுமாரின் ஒளிப்பதிவு.காதலும், இசையுமாகப் பொங்கும் புதுப் பிரவாகம்.       

குங்குமம் விமர்சனக் குழு