99 கிலோமீட்டர் காபி ஸ்டாப்



உடலின் தூய்மையை உணர்ந்து வாழ்வை எளிமையாக்கும் உன்னத சத்துகள் சிறுதானிய உணவு முறையில் அதிகம். நாம் உண்ணும் உணவு குறித்த அக்கறையும் மரபு வழி அறிவும் மிகவும் அவசியம். மரபுமுறை உணவுகளான கம்பு, சோளம், வரகு, குதிரைவாலி, சாமை போன்றவை வெறும் பசியை மட்டும் போக்குவதில்லை; கூடவே உடலுக்கு ஆற்றலையும் நோய்களை எதிர்க்கும் சக்தியையும் தருகின்றன.

இவ்வளவு சிறப்புமிக்க சிறுதானிய உணவுகள் ஒரு காலத்தில் ஏழைகளின் உணவாக இருந்தன. இன்று அனைவரது உணவாகவும் மாறியிருக்கின்றன. இதற்குக் காரணம் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வே. ஆனால், தேவை அதிகரித்த அளவுக்கு இவற்றின் உற்பத்தி இல்லை என்பதால் விளையும் சிறுதானியங்களின் விலை அதிகமாக இருக்கிறது. எனவே பணக்காரர்கள் மட்டுமே சாப்பிடும் உணவாகவும் சிறுதானியங்கள் மாறிவிட்டன.

இந்நிலையில்தான் மரபான நம் உணவுகளை எளிய மக்களும், அதுவும் பயண நேரங்களில் உண்ணும் வகையில் ‘99 கிலோமீட்டர் காபி ஸ்டாப்’ உணவகம் இயங்கிவருகிறது. முதல் தரம். விலையோ மலிவு.சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அச்சிறுப்பாக்கம் அருகில் சரியாக 99 வது கிலோ மீட்டரில் இருக்கிறது இந்த உணவகம். “விமானத்துறைல கட்டுப்பாட்டாளர் பணில இருந்தேன். இந்தியா முழுக்க சுத்தியிருக்கேன். எங்க போனாலும் அந்த ஊர் உணவைத்தான் விரும்பிச் சாப்பிடுேவன். சரியான சாப்பாட்டு ராமன்னு என்னை சொல்லலாம்!

சிறுதானிய உணவுகள் குறித்த விழிப்புணர்வு பரவலாகாத காலத்துலயே இந்த உணவகத்தை ஆரம்பிச்சுட்டேன். ‘ஊருக்குள்ள தொடங்கினாலே யாரும் சாப்பிட மாட்டாங்க. நீ நெடுஞ்சாலைல தொடங்கியிருக்கியே...’னு என் நண்பர்களே வருத்தப்பட்டாங்க. ஆனா, எனக்கு நம்பிக்கை இருந்தது. மக்களை நம்பினேன். அவங்க உடல்நலத்துல அக்கறை காட்டினேன்...’’ புன்னகையுடன் உணவகத்தை ஆரம்பித்த கதையைச் சொல்கிறார் மனோ சாலமன்.
‘‘தொடக்கத்துல நாட்டுச்சக்கரைல காபியும், சிறுதானிய இட்லி, தோசையும் வழங்கினோம். மெல்ல மெல்ல மக்கள் ஆதரவு தர ஆரம்பிச்சாங்க. அதுக்கு அப்புறம்தான் மெனுவை அதிகரிச்சோம்.

மதுராந்தகம்தான் என் ஊர். பெரும்பாலும் சென்னைல இருந்துதான் தென் மாவட்டங்களுக்கு அதிகளவுல மக்கள் போறாங்க... வர்றாங்க. இதையே இப்படியும் சொல்லலாம். தென் மாவட்டங்கள்ல இருந்துதான் அதிகமான மக்கள் சென்னைக்கு வர்றாங்க... ஊருக்குத் திரும்பறாங்க.

ஆக, சென்னைதான் மையம். அந்த சென்னைல இருந்து கார்ல தென் மாவட்டங்களை நோக்கிப் போறப்ப எவ்வளவு நேரத்துல உணவு கிடைச்சா நல்லா இருக்கும்... சரியா இருக்கும்னு ஆராய்ச்சி பண்ணினேன்.

100வது கிலோமீட்டர் கச்சிதமா இருக்கும்னு ஆராய்ச்சி முடிவு சொன்னது. யோசிக்கவே இல்ல. நடுக் காட்டுல கடையை ஆரம்பிச்சேன்...’’ என்ற மனோ சாலமன், நல்ல உணவுதான் தெளிவான சிந்தனையை அளிக்கும் என்கிறார்.‘‘இதை சிறுதானிய உணவுகள் சிறப்பா செய்யும். ஆக்சுவலா நாங்க மருந்தையே உணவா தர்றோம்...’’ கண்சிமிட்டுகிறார் மனோ சாலமன்.

பல்வேறு விதமான செப்பு, பித்தளைப் பானைகளில் விதவிதமாக குடிநீரை வைத்திருக்கிறார்கள். சீரகக் குடிநீர், ஓமக் குடிநீர், நன்னாரி, வெட்டிவேர் தண்ணீர், சிரட்டைக் குடிநீர், தாகமுத்திக் குடிநீர்... என பட்டியல் நீள்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தட்பவெப்பநிலைக்கு ஏற்றது. உணவு அருந்த வருபவர்கள் என்றில்லை. யார் வேண்டுமானாலும் இங்குவந்து குடிநீரைக் குடிக்கலாம். பாட்டில்களில் பிடித்துச் செல்லலாம்!

காலை 6 மணிக்கு உணவகத்தைத் திறக்கிறார்கள். மரபுவழி உணவான குதிரைவாலி மிளகுப் பொங்கல், மாப்பிள்ளைச் சம்பா உப்புமா, கொள்ளு - முளைகட்டிய பயிர் இட்லி, சீரக இட்லி, முடக்கத்தான் தோசை, வல்லாரைத் தோசை, தூதுவளைத் தோசை, பிரண்டைத் தோசை... என பிரேக்ஃபாஸ்ட் களைகட்டுகிறது.

மதியத்துக்கு கம்பு, சாமை, குதிரைவாலியில் தயிர் சாதம், சாம்பார் சாதம் என வெரைட்டி ரைஸ். இது தவிர கருப்பட்டி இனிப்பில் தினைப் பாயசம், வரகரிசி ரச சாதம் ஆகியவையும் உண்டு. சிரமமே இல்லாமல் செரிமானமாகின்றன.மண்பானையில்தான் சாப்பிடத் தருகிறார்கள். சாப்பிட்டு முடித்ததும் அந்த மண் குவளையைக் கழுவி நாமே எடுத்துச் செல்லலாம்! இதற்கு பணம் தர வேண்டியதில்லை. 4.30 வரை மதிய சாப்பாடு. பிறகு இரவு 9 மணி வரை சிறுதானிய சிற்றுண்டியும் நொறுக்குத் தீனியும்.  

தனியாக சமையல் அறை கிடையாது. அனைத்து ரெசிபிகளையும் மக்கள் முன்னிலையிலேயே சமைக்கிறார்கள். திறந்தவெளி கூடம்தான். மூலிகைகள், விளையாட்டுப் பொருட்கள் என கற்றல்வழி கூடமாகவும் இந்த உணவகம் காட்சியளிக்கிறது.

தினை

பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கிழக்கு ஆசியாவில் பயிரிடப்படும் தானிய வகைகளில் தினை முக்கியமானது. தினை உற்பத்தியில் உலகிலேயே இந்தியா முதலிடம் வகிக்கிறது. குழந்தை பெற்ற தாய்க்கு தினையைக் கூழாக்கித் தருவது தமிழர் மரபு.

குதிரைவாலி

மானாவாரி நிலத்தில் விளையக்கூடிய தானியம்தான் குதிரைவாலி. குறைந்த நாட்களில் விளைச்சல் தரும் பயிர். இதன் கதிர், குதிரையின் வால் போல் இருக்கும். நெல்லுக்கு இணையான சுவையைக் கொண்ட தானியம் இது. குறைவாக நீரைப் பாய்ச்சினாலே போதும். வளர்ந்துவிடும்.

கம்பு

இந்தியாவில் அதிகளவில் பயிரிடப்படும் சிறுதானியம் என்றால் அது கம்புதான். வறண்ட பகுதிகளிலும் விளையும் தன்மை இதற்கு உண்டு. அதிகத் தட்பவெப்ப சூழலிலும், குறைவான சத்துள்ள நிலத்திலும், களை, பூச்சி தாக்குதல் இருந்தாலும் அவற்றைக் கடந்து கம்பு விளையும்.

வரகு

பல நாடுகளில் வரகுதான் பாரம்பரிய உணவாக இருந்திருக்கிறது என்கிறது அகழ்வாராய்ச்சி. இந்த தானியத்தின் தோலில் ஏழு அடுக்குகள் உண்டு. இதை பறவைகள், ஆடு, மாடு, கோழிகளால் உண்ண முடியாது. வறண்ட பகுதிகளில் கூட விளையக்கூடிய தன்மை இதற்கு உண்டு.
இதன் விதை ஆயிரம் வருடங்கள் வரைக்கும் முளைப்புத் திறன் கொண்டது! இதற்கு நேர் எதிராக விரைவிலேயே செரிக்கும் தன்மையும் இதற்கு உண்டு. கோயில் கோபுரக் கலசங்களில் வரகை அதிகம் வைப்பார்கள். பஞ்ச காலங்களில் இதை எடுத்து பயிர் செய்து உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வார்கள்.

கேழ்வரகு

ஒரு காலத்தில் ஏழைகளின் உணவாக இருந்த இது, இன்று காஸ்ட்லி கெலாக்ஸ் ஆகியுள்ளது! வசதியானவர்களும், நோய்வாய்ப்பட்டவர்களும் உண்ணும் உணவாக கேழ்வரகு இன்று காட்சியளிக்கிறது. மிகவும் வெப்பமான பகுதிகளிலும் விளையும் தன்மை கேழ்வரகுக்கு உண்டு. உடலுக்கு உறுதியைக் கொடுக்கும் உணவு இதுதான். மற்ற உணவுகள் எல்லாவற்றுக்கும் இரண்டாம் இடம்தான்.

பாரம்பரிய மிளகுப் பொங்கல்

குதிரைவாலி அரிசி - 200 கிராம்
லேசாக வறுத்த பாசிப்பருப்பு - 100 கிராம்
தண்ணீர் - 4 குவளை
உப்பு - தேவைக்கு
இஞ்சி - தேவையான அளவு
பச்சைமிளகாய் - சிறிது
சீரகம் - 2 சிட்டிகை
மிளகு - 3 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
நெய் - 50 கிராம்,
முந்திரிப்பருப்பு - 20 கிராம்
பக்குவம்: தண்ணீரைக் கொதிக்க வைத்து குதிரைவாலி அரிசி, பாசிப்பருப்பைச் சேர்த்து குழைய வேக விடவும். சிறிதளவு நெய் சேர்க்கவும். நன்றாக வெந்ததும் உப்பு சேர்த்து பொங்கல் பதம் வந்ததும் எண்ணெயைக் காய வைத்து சீரகம், மிளகு, இஞ்சி, முந்திரி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டு தாளித்து பொங்கலில் சேர்த்து கிளறி இறக்கவும். பொங்கல் மேல் நன்றாக நெய்யை சேர்க்கவும். மிளகை அப்படியே முழுசாகச் சேர்க்காமல் அம்மியில் லேசாகத் தட்டிப் போட்டால் சுவையாக இருக்கும்.

திலீபன் புகழ்

ஆ.வின்சென்ட் பால்