கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-8



குழந்தை பாக்கியம் அருளும் வெண்காட்டு சங்கரன் ‘‘மாமா இருக்காரா..?’’
கிரிக்கெட் விளையாட கிளம்பிக் கொண்டிருந்த கண்ணன் சட்டென்று நின்றான். கேட்ட பெண்மணிக்கு 40க்கு மேல் வயதிருக்கும்.
‘‘மாமாவா..?’’ இழுத்தான்.

‘‘ம்... நாகராஜன்...’’

கண்ணனுக்கு பொறி தட்டியது. கதை கிடைக்கப் போகிறது! விளையாடச் செல்வதைக் கைவிட்டான். ‘‘வாங்க...’’

அந்தப் பெண்மணியை அழைத்துக் கொண்டு நாகராஜ தாத்தாவின் வீட்டுக்குச் சென்றான். ‘‘தாத்தா...’’‘‘என்ன கண்ணா..?’’ உள்ளறையில் இருந்து நாகராஜனும் அவரைத் தொடர்ந்து ஆனந்தவல்லியும் வந்தார்கள்.

‘‘இவங்க உங்களைப் பார்க்கணுமாம்...’’ பின்னால் தயக்கத்துடன் நின்றிருந்த பெண்மணியை சுட்டிக் காட்டினான்.‘‘வாம்மா...’’ நாகராஜன் புன்னகையுடன் அழைத்தார். ‘‘எம் பேரு லதா... நான்... அஸ்தினாபுரத்துல இருக்கேன்! வந்து துர்க்கை அம்மன் கோயில் பூசாரி உங்களைப் பார்க்கச் சொன்னார்...’’ தயக்கத்துடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
‘‘சேகரா..?’’ நாகராஜன் மலர்ந்தார்.

லதா தலையசைத்தாள்.‘‘உட்காருமா... வெயில்ல வந்திருக்க... இந்தா மோர் குடி...’’ பெரிய டம்ளர் நிறைய மோரை கொடுத்தார் ஆனந்தவல்லி.
மெல்ல சோஃபாவில் அமர்ந்து அந்த மோரைப் பருகினாள் லதா. வெயிலுக்கு இதமாக இருந்தது.

நாகராஜனின் அருகில் கண்ணன் அமர்ந்து கொண்டான்.‘‘சொல்லுமா... நான் என்ன செய்யணும்..?’’ அமைதியாக நாகராஜன் கேட்டார்.
‘‘வந்து மாமா... என் பையனுக்கு கல்யாணமாகி அஞ்சு வருஷங்களாகுது...’’
‘‘ம்...’’

‘‘என் மருமக வயித்துல இன்னும் எதுவும் தரிக்கலை...’’ சொல்லும்போதே லதாவின் குரல் தழுதழுத்தது. ‘‘நீங்கதான் நல்ல வழி காட்டணும்...’’ கையெடுத்துக் கும்பிட்டாள்.‘‘முதல்ல கையை இறக்குமா... கடவுளைத் தவிர வேற யாரையும் வணங்கக் கூடாது! இப்ப உனக்கு என்ன... பேரனோ பேத்தியோ பிறக்கணும்... அவ்வளவுதானே..? கவலைய விடும்மா. பிள்ளை பிறக்க விதியே இல்லைனாலும் திருவெண்காடன் அருளால கண்டிப்பா பிள்ளை பிறக்கும்...’’

சொன்ன நாகராஜன் தனது கண்களை மூடி ஈசனை தியானித்தார். பின்னர் மெல்ல திருவெண்காடனின் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்...
வெள்ளி மலை போல மின்னிக் கொண்டிருந்தது கைலாச பர்வதம். அதன் உச்சியில் ரத்தினங்கள் இழைக்கப்பட்ட ஆசனத்தில் அம்மையப்பன் அமர்ந்து கொண்டிருந்தனர். அவர்களது விழிகள் இரண்டும் அருளை வாரி வழங்கியபடி இருந்தது. பெற்ற தாயிடம் கூட காண முடியாத கருணை அவர்கள் முகத்தில் வழிந்தோடியது.

அதைக் கண்ட அடியவர்களின் ‘சிவ சிவா’ என்ற இனிமையான கோஷம் விண்ணைப் பிளந்து கொண்டிருந்தது. அந்த கோஷத்தின் நடுவே ‘‘ஆலமுண்ட நீலகண்ட அண்ணலே... அபயம்! முக்கண் முதல்வா அபயம்! உமை ஒரு பாகா அபயம்!’’ என்ற அபயக்குரலும் கேட்டது. இன்பமயமான கைலாயத்தில் துன்பத்தோடு ஓலமிடுவது யார் என்று புரியாமல் அனைவரும் சிந்தையில் ஆழ்ந்தனர். அப்போது தேவர்களின் கூட்டம் ஈசனுக்கு முன்னால் வந்து வணங்கி நின்றது. அந்த கூட்டத்திற்குத் தலைவனாக இருந்த இந்திரனே பேச ஆரம்பித்தான்.

‘‘பிரபோ! என் ஆணவத்தை அழிக்க உங்களது நெற்றிக்கண்ணில் இருந்து பிறந்தவன் ஜலந்தரன் என்ற அசுரன். அவனது தொல்லைகளில் இருந்து தங்கள் அருளால் மீண்டோம். இப்போது அவன் மகன் மருத்துவாசுரனின் உருவத்தில் வேறு ஒரு தொல்லை வந்திருக்கிறது! எங்களை என்று இந்த அசுர பயம் விடும்? பிரபோ! எங்களைக் காக்க தங்களுக்கு மனமில்லையா? தேவர்களாகிய நாங்கள் படும் அவஸ்தையைப் போக்கி அருளுங்கள் சுவாமி!’’
துன்பம் தாளாமல் அழுத வண்ணம் ஈசன் பாதத்தை சரண் புகுந்தான் இந்திரன்.

இதைப் பார்த்த அம்பிகை, ‘‘சுவாமி, யார் அந்த மருத்துவாசுரன்? அவனுக்கு அவ்வளவு வலிமையா? வானவர்களே இப்படி வருந்துகிறார்களே?’’ என்று கேட்டாள்‘‘உமா! என் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்தவன் ஜலந்தரன் என்ற அசுரன். அவனது தவப்புதல்வன் இந்த மருத்துவன். என் பரம பக்தன். தவங்கள் பல புரிந்து என்னை அவன் மகிழ்வித்தான். நான் அவனுக்கு வரமாக என் கையில் இருக்கும் சூலத்தைத்  தந்தேன். ஈடு இணை இல்லாத என் ஆயுதத்தின் பலத்தால் அவனுக்கு ஆணவம் தலைக்கேறிவிட்டது. அதர்ம வழியில் செல்கிறான். விரைவில் அவன் அதர்மங்கள் ஒரு முடிவுக்கு வரும்!’’
‘‘சுவாமி! அசுரன் ஜலந்தரன் தங்கள் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவனா? இது என்ன விந்தை?’’

‘‘ஆம், அது நான் ஆடிய விந்தையான நாடகம்தான் தேவி! ஒருமுறை ஒரு பூதத்தின் ரூபம் தாங்கி கைலாசத்தின் வாயிலில் நின்றுகொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த இந்திரன் என்னை சாதாரண பூதம் என்று நினைத்து அவமதித்தான். நியாயமாக சிவ பூத கணத்தை சிவனடியாராகப் பாவித்து அவன் வணங்கியிருக்க வேண்டும்! செய்யவில்லை. ஆகவே அவனுக்கு பாடம் புகட்ட பூதமாக இருந்த நான் என் நெற்றிக்கண்ணைத் திறந்தேன்!
அதிலிருந்து வந்த தீப்பொறியில் உதித்தவன்தான் ஜலந்தரன். அவனிடம் இந்திரன் பட்ட பாடு ஏராளம். அதனால் இனி அவன் யாரையும் அவமதிக்கத் துணிய மாட்டான்!’’ என்றபடி ஈசன் புன்னகைத்தார்.

‘‘அப்பப்பா! சமயத்தில் உங்கள் திருவிளையாடல்களை என்னால் கூட உணர முடியவில்லை...’’ அம்பிகை சலித்துக்கொண்டாள்.
அதை ரசித்தபடியே பரமன் தனது அருள்பார்வையை தேவர்கள் மீது செலுத்தினான். அந்தப் பார்வை பட்டதுமே தேவர்கள் துன்பம் அனைத்தும் தீர்ந்தது போல் உணர்ந்தார்கள்.

‘‘சுவாமி! தாங்கள் தேவ பிள்ளைகளைச் சோதித்தது போதுமே... அவர்களுக்கு மருத்துவாசுரனின் தொல்லையிலிருந்து முக்தி தாருங்கள். என் தாயுள்ளம் இவர்களது இன்னலைக் காணும்போது பதறுகிறது...’’ அம்பிகை தேவர்களுக்காக இறைவனிடம் சிபாரிசு செய்தாள். அம்பிகையின் பேச்சிற்கு மறுபேச்சு ஏது? உடன் ஈசன் தேவர்களைக் காக்க சித்தம் கொண்டார்.

‘‘எனதன்பு தேவ குழந்தைகளே! உங்கள் துயரம் விரைவில் தீரும். நீங்கள் பூலோகம் சென்று, தமிழ்த்திருநாட்டில் உள்ள ஸ்வேதாரண்யம் என்ற இடத்தில் மாறுவேடத்தில் எம்மை பூஜித்து வாருங்கள். அந்த கொடியவனின் கொட்டம் விரைவில் அடங்கும்!’’ என்று அருளினார்.
இதைக் கேட்ட தேவர்கள், அப்போதே தங்கள் துயரங்கள் தீர்ந்தது போல மகிழ்ந்தனர். அந்த மகிழ்ச்சியோடு வெண் காட்டிற்குச் சென்று தவம் புரிந்தார்கள்.

தேவர்கள் வெண்காட்டில் மாறுவேடத்தில் தவம் செய்யும் செய்தி மருத்துவாசுரனுக்குச் சென்றது. சிங்கம் போல கர்ஜித்து எழுந்தான். தனது படைகளைத் திரட்டிக்கொண்டு, தேவர்களைத் தாக்க வெண்காட்டிற்கு விரைந்தான். இனியும் மருத்துவாசுரனுக்கு திருந்த வாய்ப்பளித்து பயனில்லை என்பது ஈசனுக்கு புரிந்தது. உடன் தனது வாகனமான திருநந்திதேவரை அழைத்தார்.

‘‘நந்தி! தேவர்களின் கர்ம வினை முடிந்துவிட்டது. மருத்துவாசுரனுக்கு பாடம் புகட்டும் நேரமும் வந்துவிட்டது. ஆகவே, நொடியில் திருவெண்காட்டிற்குச் செல். அந்தக் கொடிய அசுரனைப் போரிட்டு வென்று வா. என் அருள் உனக்கு என்றும் துணை இருக்கும்!’’ என ஆசி வழங்கினார்.

நந்தி தேவர், அம்மையப்பன் பாதம் பணிந்து வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல போர்க் களத்தை நோக்கிச் சென்றார். நந்திதேவரின் வீர பராக்கிரமத்தால் அசுரப்படை நொடியில் நாசமானது. தன் படையின் நிலையைக் கண்ட அசுரனுக்கு கோபம் தலைக்கேறியது.
‘‘அடேய் மாட்டுப்பயலே! என் படையை நாசம் செய்த உனக்கு பாடம் புகட்ட இதோ ஈசனின் திருசூலம் வருகிறது. முடிந்தால் இதை எதிர்த்து போராடு...’’ என்று ஆவேசத்தோடு கொக்கரித்துவிட்டு, ஈசன் தனக்கு தந்த சூலாயுதத்தை நந்திதேவரின் மீது ஏவினான்.

அது காலனைப்போல அவரை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவர் கைகள் இரண்டையும் குவித்தார். உள்ளம் உருக ஈசனின் பாதங்களைப்  பணிந்தார். நந்திதேவரை நோக்கி வந்த சூலம், அவரைத் தாக்க முடியாமல் வருந்தியது. அந்த சூலம் ஒன்பது இடங்களில் தாக்கியபோதும் அவரை வீழ்த்தமுடியவில்லை. அவர் உச்சரித்த சிவ நாமம் அரணாக இருந்து அவரை ரட்சித்து விட்டது.  

இது இப்படியிருக்க, போர் நீடித்தால் என்ன நடக்குமோ என்று வருந்திய தேவர்கள், ஈசனை சரண் புகுந்தனர். அடியவர்களைக் காக்க ஈசன் கண நேரத்தில் அகோர வடிவம் எடுத்தார். கருணையே வடிவான ஈசனின் அந்த உக்கிர வடிவத்தைக் கண்டு அண்ட சராசரங்களும் நடுங்கின.

ஆனால், அசுரன் நடுங்கவில்லை. அவன் மனம் கோடானு கோடி ஆண்டுகள் தவம் புரிந்தாலும் காணக் கிடைக்காத சிவ தரிசனத்தைக் கண்டு மெய்மறந்தது. அவனது கண்கள் பக்தியின் பெருக்கால் குளமாக மாறியது.  

தனக்கு பாடம் புகட்ட ஈசன் கொண்ட ரூபத்தை புகழ வார்த்தை இல்லாமல் வாய் குழறியது. கையிலிருந்து நழுவிய பொருளைப்போல சட்டென்று பரமனின் காலில் விழுந்தான்.அசுரனது சிரத்தில் பரமன் தன் திருப்பாதத்தை வைத்தார். அவன் உயிர் அவன் உடலைவிட்டுப் பிரிந்து பரமனுடன் கலந்தது.

கந்தர்வர்கள் அகோர மூர்த்தியாக வடிவம் கொண்ட ஈசன் மீது மலர் மாரி பொழிந்தார்கள். முனிவர்கள் ஜெயகோஷம் செய்து துதித்தார்கள். அசுரன் தலையில் ஈசன் திருப்பாதத்தை வைக்க அவன் என்ன தவம் செய்தானோ என்று சிவபக்தர்கள் சிந்தையில் ஆழ்ந்தனர். உலகமே மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தியது.

‘‘இப்படி அகோர மூர்த்தியா வந்து அசுரனுக்கும் தேவர்களுக்கும் அருள் செய்த சுவாமிய இன்னிக்கும் திருவெண்காட்டுல கண்குளிர வணங்கலாம். நந்திதேவர ஒன்பது இடத்தில சிவனோட சூலம் தாக்கினது இல்லையா? அதனால ஏற்பட்ட காயத்த இப்பவும் இந்தக் கோயில் நந்தியோட திருமேனில தரிசிக்கலாம்...’’ எனச் சொன்ன நாகராஜனின் கண்கள் பக்தியில் கலங்கின.

‘‘இப்பிடி அந்த திருவெண்காடரைப் பத்தி மட்டும் சொன்னா என்ன அர்த்தம்? பிரம்மவித்யாம்பிகைய பத்தி யார் சொல்லுவாங்க?’’ நாகராஜனை இயல்புக்குக் கொண்டு வரும் விதமாக ஆனந்தவல்லி பேச்சுக் கொடுத்தாள். கண்ணன் சட்டென்று துள்ளினான். ‘‘பிரம்மவித்யாம்பிகையா? அம்பாள் திருநாமமே ரொம்ப வித்தியாசமா இருக்கே! இப்படியொரு பேரு எப்படி வந்தது தாத்தா..?’’உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்த லதாவின் முகத்திலும் அதே கேள்வி. கவனித்த நாகராஜன், ‘‘அது ரொம்ப ஆச்சரியமான சரித்திரம்...’’ எனப் புன்னகைத்தார்.

(கஷ்டங்கள் தீரும்)

ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்