காஞ்சனா- 3



கூடியிருந்தவர்களுக்கு நல்லது செய்தவரைக் கொன்று குவித்தவர்களைத்  தேடி வந்து பழி தீர்க்கும் பேய்களின் கொட்டமே ‘காஞ்சனா - 3’.
சுற்றியிருக்கும் ஏழைகளுக்கு உதவி செய்தும், திக்கற்றவர்களுக்கான ஆசிரமம் அமைத்தும் அமைதியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கிறார் லாரன்ஸ்.  ஏழைகளுக்கு எதிரான அக்கிரமங்களைத்  தட்டிக் கேட்கிறார்.

எதிர்ப்பவர்களை எல்லாம் எகிறியடிக்கும் எமனாக இருக்கிறார். அவரையே காய் நகர்த்தி கொன்று விடுகிறார்கள். அதற்கான பழிவாங்கல் ஒரு பக்கம். கூட்டுக்குடும்பத்தில் இருக்கும் (இன்னொரு) லாரன்சுக்கு பேய் என்றாலே பயம். தாத்தா டெல்லி கணேஷின் சதாபிஷேகத்திற்கு கூட்டுக் குடும்பமாய் கிளம்பியவர்கள், நடுவில் ஒரு மரத்தினடியில் சாப்பிடப்போக, அங்கே இருக்கிற பேய்களையும் வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார்கள்.

மூன்று மாமன் பெண்களுடன் கொண்டாட்ட மனநிலையில் இருக்கிறார் அப்பாவி லாரன்ஸ். உடன் வந்திறங்கிய பேய்கள் ஆட்டத்தை ஆரம்பிக்க, வீடு இரண்டுபடுகிறது. பிறகான பயமுறுத்தும் பதற்றமே மீதிக் கதை.பிரமாண்டமான பங்களா, இருட்டில் கச்சிதமாக பிரசன்னமாகி மிரட்டும் அமானுஷ்ய உருவங்கள், பயமுறுத்தும் பின்னணி இசை, பேய் ஓட்டும் மந்திரவாதி, பேயின் ஃப்ளாஷ்பேக் என சிலபல வருடங்களாக நாம் பார்த்து பயந்து பழகிய அம்சங்களே. ஆனாலும் லாரன்ஸின் ஸ்பெஷலில் எல்லாம் நிறைய வித்தியாசம்.

காளியாக, இளைஞனாக இரண்டு வேடங்களில் களை கட்டுகிறார் லாரன்ஸ். வழக்கமான ஜிப்பா, வேட்டியில் பின்னி எடுக்கும் அதே லாரன்ஸ், மிக இளைஞனாக ஆச்சர்யமும் காட்டுகிறார். இளமைத்துடிப்பில் குறையாத உற்சாகமும், ஆட்டபாட்டமும் ஆஹா. காளி அதிகமும் அடிதடியில் இறங்கி கலக்க, இளையவர் லாரன்ஸ் திகிலை விடவும் காமெடியை நம்பிக் களமிறங்கியிருக்கிறார். பயமுறுத்துகிற ஒவ்வொரு சமயமும் மாமன் பெண்களின் மடியில் குதித்து இருந்துகொள்ளும் காமெடி, அடிக்கும் டைமிங் ஒன்லைனர்களில் தியேட்டர் அதிர்கிறது.

கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் என ரிப்பீட் ஆனாலும் சலிக்கவில்லை. அவர்கள் பங்குக்கு பயந்து தரும் காமெடி கலகலப்பு கலக்கல்.வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி என ஒன்றுக்கு மூன்றாக கவர்ச்சியில் முந்துகிறார்கள்.

ஆளுக்கு ஆள் பதினாறு அடி பாய்வதால், இளமைக் கொண்டாட்டம் இளைஞர்களுக்கே. இவர்கள் போதாதென வெள்ளைக்காரப் பெண்ணோடும் ஜோடி கட்டுகிறார் லாரன்ஸ்.
சூரி முதலிலும், கடைசியிலுமாக வந்து காணாமல் போகிறார்.

தமனின் இசை மிரட்டுகிறது. ‘பொம்மக்கா...’ பாடல் வீறுநடை. வெற்றி பழனிச்சாமியின் உழைப்பு கேமிராவில் சுடர்விடுகிறது.அதிரடியில் மிஞ்சும், பயத்தில் அஞ்சும் கமர்ஷியல் ஆக்‌ஷன் பிரமாண்டம்!

குங்குமம் விமர்சனக் குழு