Food Digest!



எந்தெந்த உணவுப் பொருட்கள் எவ்வளவு நிமிடம் அல்லது நேரங்களில் செரிமானம் ஆகும்..?

‘செரிமானம் இல்லையேல் வெகுமானம் இல்லை!
கப்பலேறும் மானம்!’

இது பொன்மொழியா அல்லது அனுபவ மொழியா என்று தெரியாது. ஆனால், மக்கள் எல்லோருக்குமே நம் உடலில் ஏற்படும் அனைத்துக் கோளாறுகளுக்கும் மலச்சிக்கல்தான் காரணம் என்று தெரியும்.  ஆக, ஜீரணமாக வேண்டும் என்றுதான் மெனக்கெடுகிறோம். அதற்காகவே சாப்பிடுகிறோம்.ரைட். எந்தெந்த உணவுப் பொருட்கள் எவ்வளவு நிமிடம் அல்லது நேரங்களில் செரிமானம் ஆகும்..? ஒரு பார்வை பார்த்துவிடலாமா?

பச்சைப் பட்டாணி

இதில் நார்ச்சத்து அதிகம். சாப்பிட்ட 90 முதல் 120 நிமிடங்களுக்குள் ஜீரணமாகி
விடும்.

பீச், செர்ரி பழங்கள்

சுவையானது. 40 நிமிடங்களில் செரிமானமாகும்.

பால்

பொதுவாக பால் ஜீரணமாக கொஞ்சம் நேரமாகும். அதாவது 4 முதல் 5 மணி நேரங்கள்!

வேகவைத்த காய்கறிகள்

சாப்பிட்ட 40 நிமிடங்களுக்குள் வேக வைத்த காய்கறிகள் ஜீரணமாகிவிடும். அதேநேரம் பச்சைக் காய்கறிகள் செரிமானம் ஆக இதைவிட கூடுதல் நேரமாகும்.

மிளகாய்

இதைச் சேர்க்காமல் எந்த உணவையும் நாம் தயாரிப்பதில்லை. இதை மிளகாயும் உணர்ந்திருக்க வேண்டும்! எனவே
தான் சமத்துப் பிள்ளையாக 40 நிமிடங்களில் இது செரிமானம் அடைகிறது!

தண்ணீர், ஜூஸ்

ஜஸ்ட் 20 முதல் 30 நிமிடங்களில் இவை ஜீரணமாகி விடும். ஷாக்கை குறைங்க! குடிக்கும் தண்ணீரும் செரிமானம் அடைய 30 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது!

சிறுதானியங்கள்

இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் அல்லவா? எனவே ஜீரணமாக ஒன்றரை மணி நேரத்தை எடுத்துக் கொள்கிறது.

முலாம்பழம்

இது ஜீரணமாக வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்பதாலோ என்னவோ வெயில் காலத்துக்கு ஏற்ற பழமாக இது இருக்கிறது! உடல் சூட்டை கப்பென்று குறைக்கும்!

பீட்ரூட்

ஏதோ கடித்ததுமே காய்கறிகள் செரிமானம் அடைகின்றன என நினைக்கிறோம். அப்படியில்லை. சாலட்டில் இருக்கும் பீட்ரூட் ஜீரணமாகவே 50 நிமிடங்களாகும்!

காலிஃபிளவர்

45 நிமிடங்களில் இது ஜீரணமாகும். இதில் அதிகளவு கோலின் சத்து இருக்கிறது என்பது நமக்குத் தெரியும்தானே?

பழங்கள்

நம்புங்கள். கடித்து வயிற்றுக்குள் செல்வதற்குள் ஜீரணமாவது பழங்கள்தான். வாழைப்பழம், ஆப்பிள் போன்றவை 20 - 30 நிமிடங்களில் செரித்துவிடும்.
திராட்சை

30 நிமிடங்களுக்குள் ஜீரணமாகிவிடும்.

மீன்

அசைவ உணவுகளிலேயே ஈசியாக செரிமானம் அடைவது மீன்தான். ஜஸ்ட் 45 - 60 மினிட்ஸ்!

சோளம்

மக்காச்சோளம்தான். 45 நிமிடங்களுக்குள் ஜீரணமாகிவிடும். மாலை நேரத்துக்கு ஏற்றது.

ப்ரக்கோலி

நீரிழிவு நோயாளிகள், இதயக் கோளாறு உள்ளவர்கள், உடல் பருமனானவர்கள், புற்றுநோயை விரட்ட எண்ணுபவர்கள்... என எல்லோருக்குமான சர்வரோக நிவாரணியாக உணவில் ப்ரக்கோலியைப் பரிந்துரை செய்வது நியூட்ரீஷியன்ஸின் வழக்கம். அப்படிப்பட்ட பிரக்கோலி 40 நிமிடங்களில் செரித்துவிடும்.

தானியங்கள்

அரிசி, கோதுமை போன்றவற்றை உணவாக அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டாம் என டாக்டர்ஸ் ஜெனரலாக பரிந்துரை செய்வதற்குக் காரணம், இவை ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால்தான். அதாவது 3 மணி நேரங்கள்! இதனால் உடலின் ஆற்றல் தேவையில்லாமல் அதிக நேரம் வீணாகிறது.

வேகவைத்த முட்டை

பிரேக்ஃபாஸ்ட்டுக்கு உகந்தது. ஏனெனில் வேகவைத்த முட்டை செரிமானம் அடைய 2 மணி நேரமாகும். மதியம் உணவு எடுத்துக்கொள்ளும்வரை தாங்கும்.

சிக்கன்

ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் எடுத்துக்கொண்டே ஜீரணமாகும். எனவேதான் இரவில் சிக்கன் சாப்பிட வேண்டாம் என்கிறார்கள்.
உருளைக்கிழங்கு மென்மையாக இருப்பதால் வேகமாக ஜீரணமடையும்... எளிதாக இருப்பதால் குழந்தைகள் சாப்பிடும்... என உருளைக்கிழங்கை கொடுக்கிறோம். ஆனால், சிக்கனை விட இதுவே செரிமானம் அடைய அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது!

கேரட்

பச்சையாகவே கேரட்டை சாப்பிடுகிறோம். இப்படி வேக வைக்காமல் சாப்பிடும் கேரட், செரிமானம் அடைய 50 நிமிடங்களாகும்.

கொண்டைக்கடலை

புரதமும் நார்ச்சத்தும் நிறைந்த உணவு. 90 முதல் 120 நிமிடங்களில் ஜீரணமாகும்.

ஆரஞ்சு, சிட்ரஸ் பழங்கள்

அதிகபட்சம் 30 நிமிடங்கள். அவ்வளவுதான்!

கொட்டைகள்

முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற கொட்டை வகைகள் ஜீரணமடைய 3 மணி நேரம் எடுத்துக் கொள்கின்றன!

இறைச்சி

மட்டன், மாட்டிறைச்சி போன்றவை செரிமானம் அடைய 3 மணி நேரங்களுக்கு மேலாகும். எனவே இரவிலும் பயணங்களிலும் இவற்றைத் தவிர்ப்பது
நல்லது.                             

சுப்புலட்சுமி