டெட்டாலுக்கு தடை வருமா ?



உலகம் முழுவதும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு கிருமிநாசினி, டெட்டால். காரணம், மக்கள் அதன் மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் மலிவான விலை.
சுதந்திரத்திற்கு முன்பே ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு, இந்தியக் குடும்பங்களில் ஓர் அங்கமாகிவிட்டது இந்தக் கிருமிநாசினி. பிறந்த குழந்தையின் ஆடை முதல் மரணம் நிகழ்ந்த வீட்டுக்கு அணிந்து சென்ற ஆடை வரை அனைத்தையும் டெட்டால் கலந்து துவைப்பது நம் வழக்கம்.

தவிர, வெட்டுக்காயம், சிராய்ப்பு, புண் போன்றவற்றுக்கு முதல் உதவி மருந்தாகவும் இதுவே இருந்து வருகிறது.இந்நிலையில், ‘‘‘சூப்பர் பக்’ எனப்படும் நோய்களைப் பரப்பும் பாக்டீரியாக்களின் பெருக்கத்தினால் மருந்து மாத்திரைகளைக் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துங்கள்...’’ என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

அமெரிக்காவில் நடந்த இந்த ஆய்வில் டெட்டால் சில கட்டுப்பாடுகளை மீறியிருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. மட்டுமல்ல, சில வருடங்களுக்கு முன் ‘‘பாக்டீரியாக்களை இது முழுமையாக அழிப்பதில்லை...’’ என்று குற்றம் சாட்டப்பட்டு டெட்டாலுக்கு தடை விதித்தது தென்னாப்பிரிக்கா. இந்தச் சூழலில் டெட்டாலுக்கு லைசென்ஸ் முறைகொண்டு வரலாமா என்று ஆராய்ந்து வருகிறது நம் மத்திய அரசு.

அதனால்தான் இப்போது பெரும்பாலான கடைகளில் டெட்டால் கிடைப்பதில்லை. இதுகுறித்து பொதுமருத்துவரான ஜெகதீசனிடம் பேசினோம்.‘‘இன்றைக்குப் பெரும்பாலான மக்கள் சுய மருத்துவர்களாக மாறிவிட்டார்கள். தங்களால் முடியாத பட்சத்தில்தான் மருத்துவர்களை நாடி வருகிறார்கள். தலைவலி, காய்ச்சல், பேதின்னு எது வந்தாலும் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள மருந்துக்கடைக்குப் போய் ஏதாவது மாத்திரையை வாங்கி விழுங்கிக்கொள்கிறார்கள்.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது டெட்டால் அவ்வளவு தீவிரமான மருந்து இல்லை. ‘டெட்டால் ஆபத்தானது, அதனால் இந்தப் பிரச்சனை வரும், டெட்டாலுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று இந்தியாவில் நடந்த எந்த ஆய்வும் இதுவரைக்கும் சொல்லவில்லை. காயத்தின் மீது தடவி விடுவது, குழந்தை மலம் கழித்த தரை, பாயைக் கழுவுவது போன்ற விஷயங்களுக்காக மட்டுமே மக்கள் டெட்டாலைப் பயன்படுத்துகிறார்கள். காரணம், நம்ம மக்களுக்குத் தெரிந்த ஒரேயொரு ஆன்டிசெப்டிக், கிருமிநாசினி டெட்டால் மட்டும்தான்.  

இப்படி நம் மக்களின் அன்றாட வாழ்வில் புழங்கும் ஆபத்தில்லா ஒரு மருந்துப்பொருளுக்கு லைசென்ஸ் முறை விதித்தால் அது அசௌகரியத்தைத்தான் உண்டாக்கும். கடைகளில் வாங்கி வைத்துள்ள டெட்டால் ஸ்டாக் எல்லாம் விற்பனை செய்ய முடியாமல் வீணாகலாம். பிறகு கடைகளில் கிடைக்காத அரிய பொருளாக அது மாறிவிடும். தட்டுப்பாடும், விலையும் அதிகரிக்கும்.

இதற்கு மாற்றாக வேறு நிறுவனங்கள் இந்தியாவில் கிருமி நாசினியை விற்பனைக்குக் கொண்டு வரும். அந்தப் புது கிருமிநாசினியும் பாதுகாப்பாக இருக்கும் என்று எப்படி நம்மால் சொல்ல முடியும்..?’’ என்ற ஜெகதீசனிடம், ‘ஒருவேளை டெட்டாலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டால் மக்கள் முதலுதவிக்கான மாற்றுப்பொருளாக என்ன மாதிரியான மருந்துகளைப் பயன்படுத்தலாம்..?’ என்று கேட்டோம்.

‘‘சோப் கரைசல் மற்றும் தொற்றுநோய் நீக்கி மருந்து. அத்துடன் மருந்துக்கடைகளில் முதலுதவிக்காக பிரத்யேகமாக வைத்திருக்கும் மருந்துகளையும் பயன்படுத்தலாம். முக்கியமாக மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டு இந்த மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துவது நலம்...’’ என்று அக்கறையுடன் முடித்தார் மருத்துவர் ஜெகதீசன்.    

டி.ரஞ்சித்