பகவான்-26



அரசியலுக்கு வா தலைவி!

கடந்த மூன்று அத்தியாயங்களாக அமெரிக்க வாழ் பெண் சன்னியாசி சூஸன் ஹார்ஃபோவின் சாட்சியத்தை வாசித்து வந்தோம். அமெரிக்காவில் ரஜனீஷ்புரத்துக்கு எப்படி ஆட்கள் திரட்டப்பட்டார்கள் என்பதற்கு ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாக அவரது வாக்குமூலம் அமைந்திருக்கிறது.

இந்தியாவில் இருந்தபோது ரஜனீஷ், தான் உருவாக்குவதற்காக கனவுகண்ட commune அமைப்பே வேறு. அது சகோதரத்துவம், சமத்துவம் நிரம்பியதாக, சர்ச்சைகள் ஏதுமற்ற அமைதிப் பூங்கா.மாறாக, அமெரிக்காவில் ரஜனீஷுக்காக ஒரேகானில் ஷீலா அமைத்துக் கொண்டிருந்த ரஜனீஷ்புரமோ நூற்றாண்டுகளுக்கு முந்தைய அரசு அமைப்பாக வளர்ந்துகொண்டிருந்தது.

அங்கே வர்க்கம் இருந்தது. பணமிருப்பவர்களுக்கு அதிகாரம் அள்ளித்தரப்பட்டது. சூஸன் ஹார்ஃபோ போன்ற நடுத்தர வர்க்கத்தினர், உழைப்புச் சுரண்டலுக்காக மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

நூற்றுக்கணக்கான அமெரிக்க ரஜனீஷ் பக்தர்கள், அங்கே காசு வாங்கிக் கொண்டு அனுமதிக்கப்பட்டு கடுமையான உடல் உழைப்பைச் செலுத்தி ரஜனீஷ்புரத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.இதைச் சொல்லும்போது பகவானை நாம் புனிதராகக் கட்டமைக்கிறோம்; அதற்காக மா ஷீலா ஆனந்தை வில்லியாக்குகிறோம் என்று பொருள் அல்ல.பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை என்கிற யதார்த்தத்தை ஷீலா உணர்ந்தவர் என்றே சொல்ல வருகிறோம்.

முதலில் ஐந்தே ஐந்து சன்னியாசிகளை வைத்துக்கொண்டுதான் வேலைகளைத் தொடங்கினார் ஷீலா. வெளிநாட்டு சாமியார் ஒருவரை உள்ளூரில் நிலைநிறுத்தி பெரும் அரசாங்கம் போன்ற அமைப்பை உருவாக்குவதை உள்ளூர் ஆட்கள் கண்டிப்பாக எதிர்ப்பார்கள் என்று அவர் எதிர்பார்த்தார்.

எனவேதான், அவ்வளவு கெடுபிடிகளைப் போட்டார். பொதுமக்கள், ஊடகங்கள், அவ்வளவு ஏன், ரஜனீஷ் பக்தர்களுக்கே கூட பெரிதாகத் தெரியாமல் ரகசியமாகத்தான் ரஜனீஷ்புரத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார்.

ஏனெனில், அதற்கு முன்பாக இந்தியாவில் ‘செக்ஸ் சாமியார்’ என்று ஓஷோ முத்திரை குத்தப்பட்டு, அவர் குறித்த எதிர்மறையான பிம்பங்கள் ஊடகங்களால் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஓஷோவுக்கு விசுவாசமாக ஆயிரக்கணக்கானோர் திரண்டாலும், அவர் குறித்த ஒவ்வாமை பல லட்சம் இந்தியர்களுக்கு பல்வேறு காரணங்களால் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

அமெரிக்காவிலும் ஜிம் ஜோன்ஸ் என்கிற கார்ப்பரேட் சாமியார் ஒருவரும் அப்போது இதே காலகட்டத்தில் சர்ச்சைக்குரியவராக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்.எனவேதான் ஷீலா தன்னுடைய ஒவ்வொரு அடியையும்  மிகவும் கவனமாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

எனினும் அருகிலிருந்த ஆண்டலோப் நகர்வாசிகளுக்கு இவர்களது நடமாட்டம் சந்தேகத்துக்கு உரியதாகவே இருந்து வந்தது.

ஆண்டலோப், அப்போதே கிட்டத்தட்ட ஒரு கைவிடப்பட்ட சிறுநகரம். அங்கே விவசாயம் பொய்த்து, எந்தத் தொழிலுக்கும் ஏதுவாக அமையாத ஒரு கட்டாந்தரையாக மாறிக் கொண்டிருந்தது. ஊரிலிருந்த இளைஞர்களெல்லாம் வேலைவாய்ப்புக்காக வேறு பசையான அமெரிக்க நகரங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டிருந்தார்கள். காலம் காலமாக அங்கே வசித்து வந்த பெருசுகள் மட்டும்தான் பெரும்பான்மை.

அந்நகரின் மேயராக ஒரு பெண் இருந்தார். அவருக்கு ஆரம்பத்திலிருந்தே ஷீலாவைக் கண்டால் ஆகாது. ஏனெனில், ஷீலா நகருக்குள் வரும்போதெல்லாம் அங்கிருந்த நகரவாசிகளை மயக்கும்படியாகப் பேசுவார். அவர்களுக்காக ‘தண்ணீ’யாக செலவழிப்பார். ஒருவேளை ஷீலாவால் தன்னுடைய பதவிக்கு ஆபத்து வருமோ என்றுகூட மேயர் அஞ்சியிருக்கலாம்.

ஆனால், ஷீலாவோ மேயரோடு சமரசமாகப் போகவே விரும்பினார். எனவே, மேயரை ஒருநாள் இரவு உணவுக்கு அழைத்தார்.

மேயரும், தன்னுடைய படை பரிவாரங்களோடு அரைகுறையாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ரஜனீஷ்புரத்துக்கு வருகை தந்தார்.அங்கே ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டிருந்ததைக் கண்டதுமே மேயருக்கு சந்தேகம் அதிகரித்தது.

“நீங்கள் ஒரு பணக்கார விதவை. இங்கே பண்ணை அமைத்து வாழ்வதற்காக வந்திருக்கிறீர்கள் என்று கருதினேன். இங்கே நடக்கும் வேலைகளைப் பார்த்தால் அப்படித் தோன்றவில்லையே?” என்று கேட்டார்.“இந்தியாவில் பண்ணை என்பது ஒரு சிறிய கிராமம் அளவுக்கு இருக்கும். விவசாயப் பணிகள், கால்நடை வளர்ப்பு என்பதற்கெல்லாம் நிறைய ஆட்கள் தேவைப்படுவார்கள். அவர்களுக்கு எல்லாம் நாங்களே வீடு கட்டிக் கொடுப்போம்...” என்று கூறி சமாளித்தார் ஷீலா.

ஆனால், மேயரோ அதில் சமாதானமாகவில்லை. “உங்களுக்கு வேறு ஏதோ திட்டம் இருக்கிறது என்று கருதுகிறேன். அமெரிக்காவின் சட்ட திட்டங்கள் வேறு. பார்த்துக்கொள்ளுங்கள்...” என்று அதிருப்தியை நேரடியாகவே சொல்லிவிட்டுக் கிளம்பினார்.கிளம்பிய மேயர் சும்மா இல்லை.

அவருடைய மகனிடம் சொல்லி ஷீலாவின் பின்புலத்தை விசாரிக்கச் சொன்னார்.மேயரின் மகனோ, தன்னுடைய இந்தியத் தொடர்புகள் மூலமாக ஓரளவுக்கு ரஜனீஷ், ஷீலா ஆகியோரைப் பற்றித் தெரிந்துகொண்டார்.

அப்போதெல்லாம் மேற்கத்திய நாடுகளின் மக்கள் இந்தியாவை பாம்புகளுக்கும், யானைகளுக்கும் மத்தியில் மனிதர்கள் வசிக்கும் காட்டுமிராண்டி நாடு என்று கருதிக் கொண்டிருந்தார்கள். ரஜனீஷ் என்பவர், நிர்வாணசாமியார்; அவர் ஓர் நிர்வாண இயக்கம் நடத்துகிறார் என்கிற உறுதியான முடிவுக்கு மேயரின் மகன் வந்துவிட்டார்.

அதாவது, இந்தியாவிலிருந்த சமண சாமியார்களோடு போட்டுக் குழப்பிக்கொண்டார் (ரஜனீஷும் அடிப்படையில் சமணர் என்பதும் காரணம்).

மேலும் ஒரு ஜெர்மானியப் பத்திரிகையில் சில நிர்வாணப் புகைப்படங்களைப் பிரசுரித்து, அவற்றை ஓஷோவின் ஆசிரமத்தோடு சம்பந்தப்படுத்தி எழுதப்பட்டிருந்த கட்டுரைகள், ஐரோப்பாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. அந்தப் பத்திரிகை கட்டிங்குகளையும் மேயரின் பார்வைக்குக் கொண்டுவந்தார் அவருடைய மகன்.

இது போதாதா? அடுத்த தேர்தலிலும், தானே ஜெயிப்பதற்கு ஏதாவது பிரச்னை சிக்காதா என்று காத்துக் கொண்டிருந்த மேயர், அரசியல் செய்ய ஆரம்பித்தார்.உள்ளூர்வாசிகளிடம் ஷீலா குறித்த பொய்யான அவதூறுகளைப் பரப்ப ஆரம்பித்தார்.

“நம்முடைய ஊரில் நிர்வாண சாமியார்கள் மடம் கட்டுகிறார்கள். நம் அமெரிக்கக் கலாச்சாரத்தை காட்டுமிராண்டிகள் குழிதோண்டிப் புதைக்க வருகிறார்கள். நாகரிகமிக்க மக்களான நாம் அனுமதிக்கலாமா?” என்று ‘மண்ணின் மைந்தன்’ இனவாதத்தைக் கையில் எடுத்தார்.

ஒரேகான் மாகாணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த செனட்டர்களுக்கு (நம்மூர் எம்பிக்களைப் போல அங்கு செனட்டர்கள்) நிலவரத்தை கலவரமாகச் சித்தரித்து புகார்க் கடிதங்களை அனுப்பினார்.

செனட்டர்களும் அடுத்த தேர்தலைச் சந்திக்க வேண்டும் அல்லவா? எனவே, தம் ஊரில் ஒரு பெரிய பிரச்னை உருவாகிக் கொண்டிருப்பதாகவும், அதற்கு எதிராகத் தாங்கள் போராடிக் கொண்டிருப்பதாக ‘சீன்’ கிரியேட் செய்யவும், சில வேலைகளைச் செய்தார்கள்.

அதன் அடிப்படையில் ‘லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்’ என்கிற பத்திரிகையின் நிருபர்கள் கேமிராவும், கையுமாக ரஜனீஷ்புரத்துக்கு வந்து சேர்ந்தார்கள். ஷீலாவிடம் கிடுக்கிப்பிடி போட்டார்கள்.

ஓஷோ யார், அவருடைய அருமை பெருமைகள் என்ன என்பதையெல்லாம் விளக்கமாகச் சொல்லிவிட்டு; பகவான் அமெரிக்காவில் தன்னுடைய ஆசிரமத்தை அமைக்கிறார். இதுவரை உலகம் காணாத ஒரு புதிய சமூகத்தை இங்கே உருவாக்குகிறார் என்றெல்லாம் உண்மைகளைப் போட்டு உடைத்தார் ஷீலா.

‘லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்’ பத்திரிகை மிக விரிவாக இதுகுறித்த செய்திகளைப் படங்களோடு வெளியிட்டது. அதுநாள் வரை மிகவும் குறைவானவர்களுக்குத்தான் பகவான், அமெரிக்கா வந்து சேர்ந்திருப்பது தெரிய வந்திருந்தது. பத்திரிகைச் செய்திக்குப் பிறகு அது பற்றிக் கொண்டது.

ஏராளமான அமெரிக்க பக்தர்கள் உடனடியாக ஷீலாவுக்கு கடிதங்கள் அனுப்பி, தங்களுக்கும் ரஜனீஷ்புரத்தில் இடம் வேண்டும், எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை என்று வலியுறுத்தத் தொடங்கினர். ஆசிரமத்துக்கு மேலும் நிறைய பணம் சேரத் தொடங்கியது.

அதே நேரத்தில் உள்ளூரான ஒரேகான் மாகாணத்தில் ரஜனீஷ்புரம் அமைவதற்கு எதிர்ப்பும் ஆங்காங்கே எழுந்தது. ஆண்டலோப் நகர மேயரின் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் கூடி ஆர்ப்பாட்டமெல்லாம் நடத்தினார்கள்.எதிர்ப்பின் காரணமாக ரஜனீஷ்புரத்தைக் கைவிட்டுவிட்டு வேறு இடத்துக்கு இடம்பெயரலாம் என்று அமைதி நாடும் பெரும்பாலான சன்னியாசிகள் கருதினார்கள்.

ஆனால், ஷீலாவின் திட்டமோ வேறாக அமைந்தது. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். அரசியலை அரசியலால்தான் எதிர்கொள்ள வேண்டும். ஆண்டலோப் நகரத்தின் அரசியலையே நாம் கைப்பற்றினால் என்னவென்று விபரீதமாக யோசித்தார்.இந்தியாவில் தனக்கு கடுமையான அரசியல் அழுத்தங்கள் இருந்தபோதேகூட ரஜனீஷ், இப்படிப்பட்ட முடிவை எடுக்கவில்லை.ஷீலாவோ தைரியமாகக் களத்தின் இறங்கினார்.

(தரிசனம் தருவார்)  

- யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்