உறியடி 2 அதிரடி



நீதியோ, நியாயமோ கைக்கு வந்து சேரும்னு இனி காத்திருக்க முடியாது!

‘‘‘உறியடி’ படம் எனக்கு கொடுத்தது பெரிய மரியாதை. எப்பவும் இரண்டாவது படம்தான் ‘ஆசிட் டெஸ்ட்’னு சொல்வாங்க. அந்தத் தகிப்பை இப்போ உணர்றேன். கிடைச்ச அங்கீகாரத்தைத்  தக்க வைக்கணும்னு ஆசை. எல்லாம் முடிச்சு, ஃபர்ஸ்ட் காப்பி பார்க்கிறப்ப சந்தோஷமா இருக்கு.

முதல் படத்தை விட ‘உறியடி 2’ அதிக உழைப்பு. அதற்கான பலனை அனுபவிக்க முடியும்னு நினைக்கிறேன். ஏதோ நாலு வார்த்தை படத்தைப் பற்றி சொல்லியாகணுமே என்பதற்காக சொல்லலை. மக்களுக்கு இது ஒரு நல்ல படமா இருக்கும்...’’ நிதானமாகப் பேசத் தொடங்குகிறார் இயக்குநர் - நடிகர் விஜய்குமார். ஆரவாரமே இல்லாமல் மனதைக் கொள்ளை கொண்ட இயக்குநர்.

எப்படி இந்த சினிமாவை எதிர்பார்க்க!முதல் படத்தின் எந்த சாயலும் இல்லாமல் சினிமா பண்ண ஆசை. ஆனால், எங்காவது ஓர் இடத்தில் உணர்வுகளின் ஒருங்கிணைப்பு நடந்திருக்கும். முதல் படத்தில் அரசியலும், திருப்பி அடிக்கிற ரிவெஞ்ஜும் இருக்கும்.
‘உறியடி 2’ ஒரு சோஷியல் டிராமா. அனைவருக்கும் ஆனது. முன்னாடியிருந்த சாதாரண வாழ்க்கையை இப்ப கேள்விப்படுறப்போ, எவ்வளவு இழந்திருக்கோம்னு சுளீர்னு உறைக்குது.

எனக்கு சினிமாவை நெகட்டிவ்வா முடிக்க சம்மதம் இல்லை. கொஞ்சம் நம்பிக்கையை எப்பவும் முன்வைப்பேன். த்ரில்லராக இருந்த ‘உறியடி’ மாதிரி இதுவும் தன் பங்குக்கு வேக வேகமா நகரும். கனமான கதை. விழிப்புணர்வை அடிப்படையாக வச்சிருக்கோம். யதார்த்தத்தை எப்பவும் நான் நம்புவேன்.

இங்கே யாரும் அரசியலுக்கு சம்பந்தம் இல்லைன்னு சொல்லிட முடியாது. அதை வெறுத்து ஒதுக்கவும் முடியாது. நாம் எதிர்கொள்கிற அத்தனை விஷயங்களிலும் அரசியல் பின்புலம் இருக்கு. அரசியல் நம்மை நேரடியாக பாதித்துவிடாமல் எல்லாமே நூலிழை வித்தியாசத்தில்தான் போய்க்கிட்டு இருக்கு. அதில் கொஞ்சம் மீறிப்போனாலும் பிரச்னைகள் முளைக்கும்.

இதில் அரசியலை நாம் கண்டுக்காமல் விட்டால் அதுவே வந்து நம்மை தொட்டுவிடும்னு சொல்லியிருக்கேன். இனிமேல் நீதியோ, நியாயமோ கைக்கு வந்து சேரும்னு காத்திருக்க முடியாது. அப்படி எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சம். உங்கள் நலனுக்காகவும், தேவைக்காகவும், சௌகரியத்துக்காகவும் நீங்களே முன்னிருக்க வேண்டிய நேரம் வந்தாச்சு. நீ போய்த்தான் உன் மாற்றத்தைப் பெறணும்னு ஆகிப்போச்சு.

‘உறியடி 2’ முழுக்க முழுக்க அரசியல் அல்ல. தவறான முதலாளித்துவமும் தவறான அரசியலும் சுட்டிக்காட்டப்பட்டு அடையாளம் காணப்பட வேண்டிய இடங்கள் படத்தில் வருது. ெலனின்ல ஆரம்பிச்சு நம் மண்ணின் பெரியவர்கள் அத்தனை பேரும் சொன்னதுதான். எனக்கு யதார்த்தமும், நிஜமும் சினிமாவில் ஒட்டிப்போகணும்னு ஆசை. இதில் யதார்த்தத்தை மீறாமல் படம் செய்ய முயன்றிருக்கிறேன். சினிமாவினால் சமூக மாற்றங்கள் உடனடியாக  நிகழும் என நம்பவில்லை.

ஆனால், அந்தக் கடமை எனக்கு இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிச் சொல்லும்போது கொஞ்சம் தீவிரம் இருக்கத்தான் செய்யும். இங்கே மிக நியாயமாக நிகழ வேண்டியது நிகழாமல் இருக்கிறது. இங்கே சொல்ல வேண்டியதை, சொல்லாமல் இருப்பதை என் வரையிலாவது சொல்லலாம் என நினைத்திருக்கிறேன்.அனேகமாக எல்லோரும் புதுமுகங்கள்...

ஆமாம். நானே கதை நாயகனாக வருகிறேன். பழைய முகங்களை வைத்துக்கூட செய்ய முடியும். ஆனால், இமேஜ் இல்லாத, இதுவரை அடையாளம் இல்லாத முகங்கள் இருந்தால் சிறப்பாக இருக்கும். என் மன அமைப்பு என்னோடு இணைகிறவர்களுக்குப் புரிந்துவிடும். ஏதோ நம்மால் முடிந்த அளவுக்குப் புதுமுகங்களைப் புகுத்துவதே என் எண்ணம்.

என் இணை இயக்குநரும், உதவி இயக்குநர்களும் மிக முக்கியமான பாத்திரங்களில் வருகிறார்கள். என்னோட சினிமா எப்போதுமே காம்ப்ரமைஸுக்குக் கொஞ்சமா உட்பட்டாலும் நேர்மையானதாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.  கதை நாயகியாக விஸ்மயா வருகிறார். கதாபாத்திரத்திற்கு மிகவும் அணுக்கமாக நடித்திருக்கிறார்.இதை சூர்யாவே தயாரித்திருப்பது எப்படி சாத்தியமானது...

‘2D’ ராஜசேகரோடு ஒரு யதேச்சையான சந்திப்பு. ‘என்ன பண்றீங்க...’ என்று அவர்  கேட்டார். நான் இந்த ஸ்கிரிப்ட்டை வைத்துக்கொண்டு, நல்ல தயாரிப்பாளர் தேடிக்கொண்டிருப்பதைச் சொன்னேன். அவர் சூர்யாவிடம் சொல்ல, அவரும் கதை கேட்க, மிகவும் பிடித்துப்போனது.
அவருடைய திரைப்பட நிறுவனம் வெகுவாக நல்ல திரைப்படங்களையே தயாரிக்கிறது. இதுவரையிலும் அவர்கள் தரப்பிலிருந்து ஒரு நெருக்கடியும் கிடையாது. கட்டற்ற சுதந்திரம்.

முன்பு ‘உறியடி’ ரிலீசாகும்போது சரியான தியேட்டர்கள் கிடைக்காமல் அவதிப்பட்டதும் எனது கனவுகள் உடைந்துபோனதும் ஞாபகத்திற்கு வருகிறது. அப்படியும் ‘உறியடி’ படத்தைப் பக்குவமாக இந்த சினிமா கொண்டாடியது. இப்போது ‘உறியடி 2’வுக்கு அப்படி நேராமல் சூர்யா என்னைக் காப்பாற்றியிருக்கிறார். வாழ்க்கையின் ரெஃபரன்ஸாக இருக்கும் சினிமாவை எல்லோருக்கும் பிடிக்கும். ‘உறியடி 2’ அந்த வரிசையில்தான் வருகிறது.           
நா.கதிர்வேலன்