கண்டிப்பா அரசியலுக்கு வருவேன்! தடதடக்கும் தன்யா ஹோப்



கொஞ்சம் ‘காதல் ஆராரோ...’ சாக்ஷி; கொஞ்சம் ‘கறுப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு...’ மாளவிகா. இருவரின் மிக்ஸிங்கில் மினுங்குகிறார் தன்யா ஹோப். ‘தடம்’ படத்தில் அருண் விஜய்யுடன் ‘இணையே...’ என டூயட்டில் உருகவைத்த பெங்களூரு பெர்ஃப்யூம். கன்னடத்தில் ரீமேக்கான ‘உச்சக்கட்டம்’ படத்தில் கூட கிளாமர் டால் ஆக சுண்டி இழுத்த பப்ளிமாஸ். மிஸ் இண்டியா போட்டியில் ஃபைனல் வரை நிமிர்ந்து நின்றவர்.
‘நீ எப்படி இருக்கு..! நல்லா இருக்கீயா?’ என்ற தன்யாவின் சிணுங்கல் தமிழ் வரவேற்பில் தடதடக்கிறது மனசு!

நீங்க பெங்களூரு பொண்ணு... கோலிவுட் எப்படி?

ஐயெம் தன்யா ஹோப். வீட்ல டானி... டிங்கினு செல்லமா கூப்பிடுவாங்க. ரைட். என்ன கேட்டீங்க? யா... முதல் பட ஹீரோயின்களுக்கான கேள்வி! ஓகே... நான் தமிழுக்குத்தான் புதுசு. டோலிவுட்... சாண்டல்வுட்ல ஆல்ரெடி படங்கள் பண்ணிட்டிருக்கேன். தேவதைகள் கேட்வாக் பண்ணும் பெங்களூருலதான் பிறந்தேன். ஸ்கூல் படிப்பும் அங்கதான். அப்புறம் ஸ்டிரைட்டா லண்டன்! இன்டர்நேஷனல் ரிலேஷன்ஷிப்ல டிகிரி முடிச்சுட்டு மும்பை வந்தேன். கொல்கத்தா ஃபெமினா மிஸ் இண்டியா 2015ல கலந்துகிட்டு ஃபைனல் வரை வந்தேன்.

இதுக்கு அப்புறம் மாடலிங் பண்ண வேண்டியிருக்கும்னு நினைச்சா... சினிமால நடிக்க ஆஃபர் வந்தது! ஏஜென்ஸி மூலமா டோலிவுட் பட வாய்ப்பு வந்தது. ‘அபாடலு ஒக்கன்டேவாடு’ படத்துல கமிட் ஆனேன். ஆனா, அது ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாடியே கமிட் ஆன, கீர்த்தி சுரேஷுடன் நடிச்ச ‘நேனு சைலஜா’ வெளியாச்சு. இந்த மார்ச்சில் கூட கன்னடத்துல நடிச்ச ‘எஜமானா’ ரிலீஸ் ஆகியிருக்கு.

தெலுங்கில் நான் நடிச்ச படம் பார்த்துதான் ‘தடம்’ ஆடிஷனுக்கு கூப்பிட்டாங்க. மகிழ் சார், டிஓபி கோபி சார்னு எல்லாருமே ஏகமனதா என்னை செலக்ட் பண்ணினாங்க. கன்னடத்துல இப்ப மூணு நாலு படங்கள் நடிக்கறேன். ‘அமர்’ ரிலீஸுக்கு காத்திருக்கு.
தன்யாவுக்கு கிச்சன்ல இன்ட்ரஸ்ட் அதிகம் போல..?

கலாய்க்காதீங்க பாஸ்! யாரோ கொளுத்திப் போட்டிருக்காங்க. ஹெவியா பசியெடுத்தாகூட, ஃபரிட்ஜைத் திறந்து அதுல இருக்கறதை ஒரு வெட்டு வெட்டுவேன். அவ்வளவுதான் தெரியும். ஹைதராபாத்துக்கு நிறைய தடவை போயிருக்கேன். ஆனா, மும்பைல ஃப்ளைட் ஏறி ஹைதராபாத்துல இறங்கினதும் நேரா ஸ்பாட்... ஷூட் முடிஞ்சதும் ஏர்போர்ட்... மும்பைனுதான் இருந்தேன்.

சமீபத்துலதான் மகாராஜால பானி பூரி  நல்லா  இருக்கும்... பாரடைஸ்ல சிக்கன் பிரியாணி நல்லா இருக்கும்னு மத்தவங்க சொன்னாங்க. போய் ஒரு கை பார்க்கணும்! ஆனா, நேரமே கிடைக்க மாட்டேங்குது!ஆக்சுவலி எனக்கு பைக் ரைடிங் பிடிக்கும். சொந்தமா பைக்கும் வச்சிருக்கேன். I’m a Bike person! அப்புறம் புக்ஸ் வாசிப்பேன். ஏலியன்ஸ் புக்ஸை தவறவிட மாட்டேன்.

என்னைப் பொறுத்தவரை நடிகைகளுக்கு மொழி முக்கியமில்ல. கிளாமர் டாலோ, ஹோம்லி கேர்ளோ... எல்லாமே நடிப்புதான். எல்லாவிதமான கேரக்டர்லயும் பெயர் வாங்க விரும்புறேன். நான் எது பண்ணினாலும் அதை கிழிகிழினு கிழிக்க எங்க வீட்லயே ஒரு விமர்சகர் இருக்காங்க! வேற யார்... என் தங்கைதான். என் நடிப்பை அவதான் முதல் ஆளா விமர்சிப்பா. மிகச் சரியா கிரிடிசைஸ் பண்ணுவா.

தமிழ் கொஞ்சம் பேசத் தெரியுதே... எப்படி?

ரியலி! தேங்க்ஸ். தமிழும் சரி, தெலுங்கும் சரி... என்னால எப்படி பேச முடியுதுனு சொல்லத் தெரியல. இவ்வளவுக்கும் நான் லாங்குவேஜை ஈஸியா கத்துக்கக் கூடியவளும் இல்ல. மும்பைல வசிச்சாலும் இன்னமும் இந்தில ஃப்ளோவா பேச வராது. ஆனா, தமிழ் புரியுது. கொஞ்சம் பேசிடறேன். தெலுங்கில் மூணு படங்கள் நடிச்சிருந்தாலும் இன்னும் டப்பிங் பேசக்கூடிய அளவு டெவலப் ஆகல.

நடிக்க வராமல் இருந்திருந்தா என்னவாகியிருப்பீங்க..?

லண்டன்ல நான் காலேஜ் படிக்கிறப்ப முதல் ரெண்டு வருஷங்கள் பார்ட்டி, ஃபங்ஷன்னு லைஃபை நல்லா என்ஜாய் பண்ணினேன். அப்புறம் ஃபைனல் இயர்ல பயம் வந்துடுச்சு. ‘லண்டன் வரை வந்து படிக்கறோம். இப்படி இருக்கலாமா டானி’னு எனக்கு நானே கேட்டுகிட்டேன். மூணு காலேஜ் ஃப்ரெண்ட்ஸுடன் சேர்ந்து ஒரு வருஷம் லைப்ரரிலயே பழியா கிடந்து 80% மார்க்ஸ் வாங்கினேன்!

சினிமாவுக்கு வந்தது ஆக்சிடென்ட். ஆனா, பாலிடிக்ஸ்ல ஜொலிக்கணும்னு ஆசைப்பட்டிருக்கேன். ஸோ, சினிமாவுக்கு வரலைனா ஒருவேளை நேஷனல் லெவல்ல அரசியல்ல இறங்கியிருப்பேனோ என்னவோ..!இப்பவும் ஒண்ணும் குடி மூழ்கிடலை. வருங்காலத்துல கண்டிப்பா அரசியல்ல குதிப்பேன்!

மை.பாரதிராஜா