தாய்லாந்தில் தென்காசி திருடன்!



சிந்துபாத் சீக்ரெட்ஸ்

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களையடுத்து ‘சிந்துபாத்’திற்காக மீண்டும் விஜய்சேதுபதியுடன் கைகோர்த்திருக்கிறார் இயக்குநர் எஸ்.யு.அருண்குமார். ‘படத்தின் டீசரைப் பார்த்தால் செம சீரியஸான படமாகத் தோணுதே பாஸ்?’ என அவரிடம் கேட்டால், மெலிதாக குலுங்கிச் சிரிக்கிறார்.

‘‘அடுத்து ட்ரெய்லரும் ரெடியாகிடுச்சு. அதையும் பார்த்தா வேற விதமா சொல்வீங்க! ஆக்சுவலா இது ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர். ஆனா, டீசர்ல பார்த்தது மாதிரி படத்துல அவ்ளோ சீரியஸ் இருக்காது. மொத்த படமுமே அழகான ஒரு இசைப்பயணமா... செம விஷுவல் ட்ரீட்டா இருக்கும். அதுக்காகவே யுவனோட பின்னணி இசையை துபாய்ல போய் கோர்க்கப் போறோம்...’’  உற்சாகமாகப் பேசுகிறார் எஸ்.யு.அருண்குமார்.

‘சேதுபதி’க்குப் பிறகு இடைவெளி ஏன்?

சில சூழல்கள் அப்படி அமைஞ்சிடுச்சு. ‘சேதுபதி’ முடிச்சதும் அடுத்து வேற சில ஹீரோக்களுக்காக கதை ரெடி பண்ணியிருந்தேன். எல்லாருக்குமே கதை பிடிச்சிருந்தது. கொஞ்சம் வெயிட் பண்ணினேன். அப்புறம் யதேச்சையாக விஜய்சேதுபதி சாரை சந்திச்சப்ப ‘என்ன பண்றே?’னு விசாரிச்சார். சொன்னேன். ‘அடுத்தும் நாமளே பண்ணலாம்’னு அவர் க்ரீன் சிக்னல் காட்டிட்டார்.

ஆனா, அவருக்கும் அடுத்தடுத்த கமிட்மென்ட்ஸ் இருந்தது. உடனடியா தொடங்க முடியல. இந்தப் படத்துல பெரும்பாலான படப்பிடிப்பை தாய்லாந்துல ஷூட் பண்ண வேண்டியிருந்தது. ஸோ, விசா வாங்குறதுல கொஞ்சம் காலதாமதம். ஸோ, இந்த இடைவெளி நியாயமான காரணங்களால ஏற்பட்டது.

ஒண்ணு தெரியுமா... வடமாநிலத்துல நடக்கிற மாதிரிதான் கதை அமைச்சிருந்தேன். ஆனா, கதையைக் கேட்ட தயாரிப்பாளர் ராஜராஜன் சார், ‘தாய்லாந்து ஷூட் போயிடலாம். கதை இன்னும் ஸ்டிராங்கா இருக்கும்’னு யோசனை சொன்னார். அதன்படியே தாய்லாந்து போய் சில வாரங்கள் தங்கி மொத்த ஷூட்டையும் முடிச்சிட்டு வந்துட்டோம். ‘சேதுபதி’ யைத்  தயாரிச்ச ஷான் சுதர்ஷன் சாரே இந்தப் படத்தை வாங்கி வெளியிடறார்யாருங்க இந்த சிந்துபாத்?

சிந்துபாத் என்கிற கேரக்டரே கற்பனைக் கதைதான். கடல்தாண்டி வாணிபம் பண்ணப் போன சிந்துபாத்துக்கு அங்க நிறைய பிரச்னைகள், சவால்கள். தன்னோட வீரதீர சாகசத்தால அதையெல்லாம் எதிர்கொண்டு முறியடிப்பார். இதுதான் நாம படிச்ச சிந்துபாத் கதையோட சாராம்சம்.

படத்துல விஜய்சேதுபதிதான் சிந்துபாத். இதுல அவர் லோக்கல் திருடன். கடல் தாண்டிப் போய் பிரச்னைகளை முறியடிச்சு ஜெயிச்சு திரும்புறதுனால படத்துக்கு இந்த டைட்டிலை வைச்சிருக்கோம். படம் பார்த்து முடிச்சதும் நீங்களே பொருத்தமா இருக்குனு சொல்வீங்க.

நம்ம ஊர் தென்காசி பார்டர்ல ஆரம்பிக்கிற கதை அப்படியே தாய்லாந்து பார்டர், கம்போடியா பார்டர்னு பல இடங்கள்ல டிராவல் ஆகுது. அஞ்சலி, இதுல மலேசியாவில் ரப்பர் தோட்டத் தொழிற்சாலைல வேலை பார்க்கிற பொண்ணா நடிச்சிருக்காங்க. முக்கியமான ஒரு கேரக்டர்ல விஜய்சேதுபதி சார் பையன் சூர்யா நடிச்சிருக்கார்!

சூர்யாவை குழந்தையிலிருந்தே எனக்குத் தெரியும். அதனாலேயே நான் கேட்டதும் அவங்க அப்பா உடனே சம்மதிச்சார். ‘சேதுபதி’யில் எஸ்ஐ கேரக்டரில் நடிச்ச லிங்கா, இந்தப் படத்துக்காக 18 கிலோ உடல் எடை குறைச்சு நடிச்சிருக்கார். படத்துல நிறைய புதுமுகங்கள் இருக்காங்க. தாய்லாந்துல எடுக்கப்பட்ட ஃபைட் சீக்குவென்ஸ், சேஸிங் சீன்ஸ் எல்லாம் மிரட்டலா இருக்கும். அதுக்காகவே தாய்லாந்து ஸ்டண்ட் மாஸ்டரான நங், செம ரிஸ்க் எடுத்து ஃபைட்ஸ் அமைச்சிருக்கார்.

டெக்னீஷியன் டீமும் பலமா அமைஞ்சிருக்கு. ‘இறவாக்காலம்’ விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பண்றார். கேமராமேன் சித்தார்த்கிட்ட ஒர்க் பண்ணினவர். யுவன் இசையில் 5 பாடல்கள் ஹிட் ரகத்தில் சேர இருக்கு.

இதுவரைக்கும் நாம பார்த்த தாய்லாந்து வேற. இந்தப் படத்துல பார்க்கப் போற தாய்லாந்து வேற. அந்தளவுக்கு லொகேஷன்ஸை தேடித் தேடி கண்டுபிடிச்சு ஷூட் பண்ணியிருக்கோம். கூடவே தாய்லாந்து மக்களோட வாழ்வியலையும் பேசியிருக்கோம். இவ்வளவு வெளிநாட்டு ஷெட்யூல் இருந்தாலும் கூட 53 நாட்கள்ல படத்தை முடிச்சுட்டு வந்துட்டோம்.

விஜய் சேதுபதி கூடவே தொடர்ந்து மூணு படங்களா டிராவல் பண்றீங்களே..?

சந்தோஷமான பயணம்தான். ஆறேழு வருஷங்களா அவரை எனக்குத் தெரியும். என்னையும் அவருக்குத் தெரியும். முதல் படத்தோடு ஒப்பிடும்போது நடிப்புல செமையா முன்னேறியிருக்கார். அதேநேரம் மனிதரா நல்லா கனிஞ்சிருக்கார். அந்த அன்பும் அரவணைப்பும் பாசமும் துளிக்கூட மாறலை.

தாய்லாந்துல வாட்டர் ஃபால்ஸ்ல இருந்து குதிக்கணும். குதிச்சார். கடுமையான சேஸிங் சீன். கவலையே படாம செஞ்சு கொடுத்தார். தொடர்ந்து 36 மணிநேரம் ஷூட். சளைக்காம ஷாட்ஸ் ஓகே ஆகற வரை இருந்தார்.

மொத்தத்துல எங்க மனோவேகத்துக்கு எல்லா வகையிலும் ஈடுகொடுத்தார்.அவர் பையன் சூர்யா கூட நடிக்கிறப்பக்கூட டைரக்டர் விஷயத்துல தலையிடவே இல்ல. அஞ்சலி எப்படிப்பட்ட நடிகைனு உங்களுக்கே தெரியும். விடிய விடிய ஷூட் போனாலும் மறுநாள் காலை 7 மணிக்கு அவங்களை நம்பி ஷாட் வைக்க முடியும். முகத்துல சோர்வு தெரியாம ஃப்ரெஷ்ஷா வந்து நிற்பாங்க. அப்படிப்பட்டவங்களுக்கு தீனி போடக் கூடிய ரோல் என்பதால் வெளுத்து வாங்கியிருக்காங்க.

ஒவ்வொரு படத்துக்கும் இடைவெளி தேவைதானா?

இரண்டாவது முறையா இதே கேள்வி! இது ஆரோக்கியமான இடைவெளிதான் பிரதர். உடனுக்குடன் படம் பண்ணி என்ன ஆகப்போகுது? இந்தக் கேள்வியை எனக்குள்ள தொடர்ந்து கேட்டுக்கிட்டு இருக்கேன். இதுக்காக மூணு வருஷத்துக்கு ஒரு படம் கொடுப்பது சரினு அர்த்தமில்ல!

என்னால வருஷத்துக்கு இரண்டு படங்கள் பண்ண முடியுமானு தெரியலை. செய்யற படத்தை உருப்படியா எடுத்து பேச வைக்கணும்னு நினைக்கறேன். பொறுமையா ரசிச்சு ரசிச்சு ஸ்கிரிப்ட் எழுதப் பிடிச்சிருக்கு.

இன்னொரு விஷயம்... இதுக்கு முன்னாடி நான் ஐடி கம்ப்யூனிகேஷன்ல ஒர்க் பண்ணினேன். அந்த வேலையே பிடிக்கலைனுதான் பிடிச்ச வேலையான சினிமாவுக்கு வந்திருக்கேன். பிடிச்சதை பிடிச்ச மாதிரி செய்யறதுல இருக்கிற சுகம் வேற எதுல இருக்கு சொல்லுங்க?!
ஸ்கிரிப்ட் பக்காவானதும் ஷூட் கிளம்புவேன். ஆனா, சொன்ன நாட்களுக்கு முன்னாடியே படப்பிடிப்பை முடிச்சுடுவேன். இந்தப் படமும் அப்படித்தான்.

ஒரு மாசத்துல ஷூட் போகலாம்னு சொல்லி சில படங்கள் தேடி வந்தது. மறுத்துட்டேன். ஸ்கிரிப்ட்டை முடிக்காம படப்பிடிப்புக்குக் கிளம்பக்கூடாதில்லையா? என் மொத்த வாழ்க்கைல அஞ்சு பெஸ்ட் படங்களாவது தரணும்னுதான் மெனக்கெடறேன்!                

மை.பாரதிராஜா