லன்ச் மேப்-ராஜபாளையம் கூரைக்கடை



குலதெய்வ வழிபாட்டுக்கு செல்லும்போது பூசை போட்டு ஆடு, கோழி வெட்டி சமைப்பார்கள். அதுதான் படையல் சோறு.

குழம்பு, வறுவல், சோறு என அனைத்தும் பூர்வீக மண் வாசனையுடன் மணக்கும். புதுமையான அனுபவத்தைக் கொடுக்கும். காடுகளில் கிடைக்கும் விறகைக் கொண்டு சமையல் செய்வார்கள். மசாலா வாசனையுடன் சூடான சாதத்தை இலையில் வைத்து மொத்த குடும்பமும் சாப்பிடும்போது அதன் சுவையே தனி. வீட்டில் எப்படி சமைத்தாலும் அந்த செய்முறையை ஈடு செய்ய முடியாது.

சாமி வாசனையுடன் இருக்கும் அந்த சாப்பாட்டை பத்தியக்காரர்கள் கூட பல மைல் நடந்து வந்து சாப்பிடுவார்கள். கிடாவின் அனைத்து உறுப்புகளையும் குழம்பில் சேர்த்து அதன் சாறுகளை மொத்தமாக இறக்கி சமைப்பதால் தனித்த ருசியில் அவை இருக்கும்.அப்படியான ருசியுடன் ராஜபாளையம் ரயில்நிலையம் அருகில் இருக்கும் கூரைக்கடையில் படையல் விருந்து தருகிறார்கள்!

குறைவான மசாலா வாசனை. பஞ்சு போல வெந்த வெள்ளாட்டுக் கறியில் மட்டன் சுக்கா, சிக்கன் சுக்கா, காடை வறுவல். குறைவான மெனுதான். ஆனால், ருசியோ அதே ஆதிகாலத்து மணம்! ‘‘33 வருஷங்களுக்கு முன்னால இந்த ரயில் நிலையத்துக்கு குறைவாதான் மக்கள் வருவாங்க. அப்படி வர்றவங்களுக்கு இது ஒண்ணுதான் கடை. சாலை ஓரமா ஓலைக் கொட்டகைல நாலு பேர் உட்கார்ந்து சாப்பிடற  மாதிரி டீக்கடையோடு இந்த உணவகத்தை ஆரம்பிச்சேன்.

இப்ப ஐம்பது பேர் வரை சாப்பிடற  மாதிரி வளர்ந்திருக்கோம். ஆனா, அப்ப மக்கள் சூட்டிய ‘கூரைக்கடை’ பெயரே நிலைச்சுடுச்சு. நாங்களும் பெயர் மாத்த விரும்பலை...’’ உற்சாகத்துடன் கடையின் சரித்திரத்தை சொல்லத் தொடங்குகிறார் கருப்பசாமி.பொதுவாக உணவகங்களில் இருக்கைகள் நெருக்கமாக இருக்கும். இங்கு வராண்டா மாதிரியான இடத்தில் அகலமான டேபிள் போட்டிருக்கிறார்கள். அனைத்து சமையலும் கரி அடுப்பில்தான். விறகால் மட்டுமே சமைக்கிறார்கள். குழம்புகளை அனலில் சுண்டக் காய்ச்சி எப்போது போனாலும் சுடச்சுடத் தருகிறார்கள்.

கூரைக்கடையின் ஸ்பெஷல், மட்டன் சாப்பாடு. இங்கு கிடைக்கும் மட்டன், சிக்கன் சுக்காவுக்காகவே நெடுந்தொலைவிலிருந்து வருகிறார்கள்.“மதுரை ஜில்லாவுலயே ‘ராஜபாளையம் வீட்டு மசாலா’வுக்குனு ஒரு தனி பேரு இருக்கு. சுவைக்கு தர்ற முக்கியத்துவத்தை செரிமானத்துக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் கொடுக்கறோம். எல்லா உணவுகள்லயும் பூண்டு, இஞ்சி சேர்மானம் கச்சிதமா இருக்கும்.

காரம் குறைவாதான் போடறோம். வயித்துக்கு எந்தக் கெடுதலும் ஏற்படாது. சாப்பிட்ட மூணு மணி நேரத்துல செரிச்சுடும்...’’ அடுக்குகிறார் கருப்பசாமி.மதுரை மட்டன் சுக்காவுக்கும் ராஜபாளையம் கூரைக்கடை மட்டன் சுக்காவுக்கும் வித்தியாசம் அதிகம். சுக்காவுடன் பட்டை, ஏலக்காய் என எந்த மசாலாவையும் இவர்கள் சேர்ப்பதில்லை. வீட்டில் அரைத்த மிளகாய், மல்லி ஆகியவற்றையே பயன்படுத்துகிறார்கள்.

மட்டன் குழம்பில் அடுக்கு பானையின் வாசத்தை நிச்சயம் உணர முடியும். தென்மாவட்டங்களுக்கே உரிய கை மணம் இவர்களது ஸ்பெஷல். மட்டன் / சிக்கன் / மீன் என மூன்று விதமான சாப்பாடு உண்டு.

உணவுக்கு ஏற்ப மட்டன் / சிக்கன் சுக்காவைத்  தருகிறார்கள். புலாவ் வகையிலேயே இங்கு பிரியாணி தயாராகிறது. சீரக சம்பா அரிசியை தம்மில் வேக வைக்கிறார்கள். சிக்கன், மட்டன் என எந்த பிரியாணி வாங்கினாலும் மட்டன் சிப்ஸ் உண்டு. காலையும் இரவும் டிபன். மதியம் சுடச்சுட கறிச்சோறு.  குடிக்கும் நீர் கூட இங்கு மணக்கிறது என்பதுதான் ஹைலைட்.                 

கோழி சுக்கா

நாட்டுக்கோழி - அரைக்கிலோ
சின்ன வெங்காயம் - 1/4 கப்
பூண்டு - 10 பற்கள்
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு:
சோம்பு, சீரகம் - 1/2 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு

பக்குவம்: கோழியை மஞ்சள் சேர்த்து சுத்தமாகக் கழுவி தனியாக வேக வைத்துக் கொள்ளவேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்கும் பொருட்களால் தாளித்து வெங்காயம், பூண்டை பொன்னிறமாக வதக்கி, தக்காளியைச் சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.
பின்னர் மிளகாய்த் தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறி வேகவைத்துள்ள கோழியுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும். எவ்வளவு சுண்டுகிறதோ அவ்வளவு சுவையாக இருக்கும். இங்கு விறகடுப்பு அனலில் சுண்ட வைக்கிறார்கள்.   

திலீபன் புகழ்

மீ.நிவேதன்