கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள் -5



சகல செல்வங்களும் அருளும் தியாகேசன்

‘‘ம்... சரியான கேள்விதான் கண்ணா! தம்பதிகளுக்குள்ள எந்த பிரச்னையும் வராம குழந்தை குட்டின்னு சந்தோஷமா இருக்கணும்னா திருவாரூர் தியாகராஜரை போய் வணங்கணும்!’’ பட்டென்று சொன்னார் நாகராஜன். ‘‘அது மட்டுமில்ல கண்ணா... தம்பதிகளுக்குள்ள மனஸ்தாபம் வந்தாலும் இந்த சாமியே தீர்த்து வைச்சுடுவார்..!’’ ஆனந்தவல்லி தன் பங்குக்கு சொன்னாள்.

‘‘ஆமாம்... பாட்டி சொல்றது சரிதான்...’’
‘‘தாத்தா... அப்படீன்னா இதுக்கும் சுவாரஸ்யமான கதை இருக்கும் இல்லையா..? அதையும் சொல்லுங்க...’’ கண்ணன் கேட்கத் தயாரானான்.நாகராஜன் சொல்லத் தொடங்கினார்...ஸ்ரீ வைகுண்டம். சொல்லவே வேண்டாம். கோலாகலத்துக்குப் பஞ்சமே இல்லை. அந்த அற்புத விண்ணகரத்தின் மத்தியில் இருந்த தங்க மயமான மாளிகையில் பாம்பணையில் கள்ள நித்திரை கொண்டிருந்தார் மாயவன்.

அவரது பாதமே கதி என்று பாத சேவை செய்து கொண்டிருந்தாள் திருமகள். எங்கும் இன்பம் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. அந்த இடத்துக்குச் சற்றும் பொருந்தாத கவலை தோய்ந்த முகத்தோடு ஒருவன் வந்தான். அவன் உடையும் நடையும் அவன் மாமன்னன் என்பதைப் பறைசாற்றியது. தலையில் உள்ள வைரக் கிரீடத்தைக் கழற்றி மரியாதை நிமித்தமாக கையில் வைத்துக்கொண்டான்.

மாதவனின் அருகில் சென்று பக்தியால் உடலை வில் போல் வளைத்து வணங்கினான். ‘‘பிரபோ! நாராயணா! அம்மா மகாலட்சுமி! உங்கள் பொற்பாத கமலங்களுக்கு இந்த சிறியவனின் அநேக வந்தனங்கள்!’’மாலவன் கண் திறந்து அவனை நோக்கினார். ‘‘வா இந்திரா! சுவர்க்கத்தில் அனைவரும் நலம்தானே? வலாசுரனை, முசுகுந்த சக்கரவர்த்தியின் துணை கொண்டு வென்றபிறகும் உன் முகத்தில் மகிழ்ச்சி இல்லையே... என்ன விஷயம்?’’ கேட்டபடி எழுந்து அமர்ந்தார்.

‘‘வெற்றிவிழாவைக் கொண்டாட சுவர்க்கத்துக்கு முசுகுந்த சக்கரவர்த்தியை அழைத்து வந்தேன். விழா இனிதே நடந்தேறிய பின் என்ன பரிசு வேண்டும் என்று முசுகுந்தனிடம் கேட்டேன்...’’‘‘அதற்கு முசுகுந்த சக்கரவர்த்தி என்ன சொன்னார்?’’
‘‘நான் தினமும் பூஜிக்கும் தியாகராஜ பெருமான் மூர்த்தத்தை கேட்டுவிட்டான்!’’

‘‘சபாஷ்! மாபெரும் சிவ பக்தனாயிற்றே அவன். அதனால்தான் எந்த போகத்தையும் கேட்காமல் நிலையான இன்பம் தரும் இறைவனை கேட்டுவிட்டான்...’’ என்றபடி மாதவன் இமைகளை மூடினார். அவர் மனக்கண்ணில் இந்திரனும் முசுகுந்தனும் உரையாடிய காட்சி விரிந்தது.

‘‘வா முசுகுந்தா! இதுதான் என் பூஜை அறை. இதோ இவர்தான் நான் பூஜிக்கும் தியாகராஜ சுவாமி. அந்த மாதவனே எனக்கு தந்தது. இவரை பூஜித்தே அனைத்து செல்வமும் வளமும் பெற்றேன்...’’ பீற்றிக் கொண்டான் இந்திரன்.

ஆனால், முசுகுந்த சக்கரவர்த்தியோ தியாகராஜரை கண்டதும் மெழுகாக உருகினார். தியாகராஜ உருவில் இருந்த ஈஸ்வரன் அந்த பக்தியைக் கண்டார். இந்திரனிடம் படாடோபமாக வாழ்வதை விட கசிந்துருகும் இந்த பக்தனுடன் பூமிக்கு சென்றுவிடுவது நல்லது என எண்ணினார்.தன் மனதில் உதித்த எண்ணத்தை அப்படியே முசுகுந்தனின் உள்ளத்துக்கு ஈசன் கடத்தினார். போதாதா..? இதற்காகத்தானே முசுகுந்தன் காத்திருந்தான்! உடனே தனக்கு செல்வமோ பகட்டோ வேண்டாம். தியாகராஜ சுவாமி போதும் எனக் கேட்டுவிட்டான்!

தன் மனக்கண்ணில் விரிந்த காட்சியைக் கண்டு மாலவன் புன்னகை பூத்தார். சிவபெருமானின் லீலை இது!மாதவனின் உதட்டில் மலர்ந்த புன்னகையை இந்திரன் கவனிக்கவில்லை. அவன் மனமெல்லாம் எங்கே தியாகராஜர் தன்னை விட்டு நீங்கினால் செல்வம் அனைத்தும் போய்விடுமோ என்ற கவலை மட்டுமே வாட்டி எடுத்தது!

‘‘சரி இந்திரா! முசுகுந்த சக்கரவர்த்தி கேட்டதற்கு நீ என்ன சொன்னாய்..?’’ மாலவன் அவனை நடப்புக்கு கொண்டு வந்தார்.‘‘உங்களிடம் உத்தரவு பெற்று வருவதாகச்  சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்! அவர் சுவர்க்கத்தில் காத்துக் கொண்டிருக்கிறார்!’’

‘‘அடடா... சிவனடியவரை காக்க வைக்கலாமா..? உடனே சுவர்க்கம் சென்று தியாகராஜரை அவரிடம் ஒப்படைத்துவிடு!’’ என்றபடி மீண்டும் நித்திரையில் ஆழ்ந்தார்.

மாதவனிடமிருந்து இப்படியொரு பதிலை எதிர்பார்க்காத இந்திரன், செய்வதறியாது சுவர்க்கம் திரும்பினான். மாதவனின் உத்தரவை மீறத் துணிவில்லை. அதேநேரம் தியாகராஜரை தாரை வார்க்கவும் மனமில்லை. என்ன செய்யலாம்..? யோசித்த இந்திரன், முசுகுந்தரை ஏமாற்ற சதித்திட்டம் தீட்டினான்!மறுநாள் பொழுது விடிந்ததும் இந்திரசபை கூடியது. முசுகுந்தரும் சபைக்கு வந்திருந்தார். அனைவரும் தத்தம் ஆசனங்களில் அமர்ந்தனர்.
‘‘எனதன்பு நண்பர் முசுகுந்தரே, நீங்கள் கேட்டபடி தியாகராஜரைக் கொண்டு செல்லலாம்! ஆனால் ஒரு நிபந்தனை...’’ என்றபடி இந்திரன் தன் கைகளைத் தட்டினான்.

உடனே ஏழு பல்லக்குகள் வந்தன. அனைத்திலும் தியாகராஜர் இருந்தார்! எல்லா சிலைகளும் ஒன்றுபோலவே இருந்தன!‘‘இவற்றில் ஒன்றுதான் உண்மையான தியாகராஜர் சிலை. அதை நீங்கள் சரியாகக் கண்டுபிடித்தால் அவர் உமக்கேதான்!’’ குறையாத இறுமாப்புடன் இந்திரன் நெஞ்சை நிமிர்த்தினான். முசுகுந்தர் அசரவில்லை.

நிதானமாக அந்த ஏழு பல்லக்குகளின் அருகில் சென்று கைகூப்பி வணங்கினார். ‘‘அப்பனே! மாலவனும் பிரமனும் தேடியும் உன்னைக் காணமுடியவில்லை! அப்படி இருக்க இந்த பேதை எப்படி கண்டுகொள்வேன்? ஆகவே சுவாமி... தயவுசெய்து தாங்களே தங்களைக் காட்டி அருளுங்கள்!’’ தழுதழுக்க பிரார்த்தனை செய்தார்.

உண்மையான பக்திக்குக் கட்டுப்படுவதுதானே ஈசனின் வழக்கம்! திருவிளையாடல் ஏதும் புரியாமல் அசல் தியாகராஜரின் சிலை எதுவென ஈசன் காட்டினார்!உடனே முசுகுந்தர், இந்திரனுக்கு அதைக் காட்டினார்!ஆச்சர்யத்தின் உச்சிக்கே இந்திரன் சென்றுவிட்டான். அதுவரை இருந்த இறுமாப்பு உதிர... சடாரென முசுகுந்தரின் கால்களில் விழுந்தான். கண்ணீர் மல்க தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டான்.

‘‘உங்களை ஏமாற்ற தேவ சிற்பி விஸ்வகர்மாவை அழைத்து ஆறு சிலைகளை அச்சு அசலாக ஒன்றுபோல் வடிக்கச் செய்தேன். ஆனால், சத்தியமும் பக்தியும்தான் வென்றிருக்கிறது! நீங்கள் கேட்டது ஒரு தியாகராஜர் விக்ரகம். நான் உங்களுக்கு அந்த ஒன்றுடன் சேர்த்து மற்ற ஆறையும் தருகிறேன்!’’ என்றபடி ஏழு விக்ரகங்களையும் முசுகுந்தரிடம் ஒப்படைத்தான்.

மகிழ்ச்சியுடன் முசுகுந்தர் அவற்றைப் பெற்றுக் கொண்டார்.‘‘முசுகுந்தரே! இந்த சுவாமி, சாதாரணமானவரல்ல... இவரது வரலாறு உங்களுக்குத் தெரியுமா..?’’ ‘‘பரமன் பெருமையை இந்த பாமரன் அறியேன்! அதை தாங்களே சொல்லிவிடுங்கள்...’’  ‘‘ஒருமுறை வைகுண்டத்தில்...’’ பக்தியுடன் இந்திரன் சொல்லத் தொடங்கினான்... உலகை ஆளும் மாதவனுக்குள் ஒரு வருத்தம். தன்னோடு கொஞ்சி விளையாட ஒரு மழலைச் செல்வம் இல்லையே...

மாதவன் நினைத்தால் அடைய முடியாததும் உண்டா? ஆனாலும் ஒரு நாடகம் ஆட தீர்மானித்து விட்டார்! ஆகவே, புத்திரனை வேண்டி ஈசனை நோக்கி தவமியற்றினார். உண்மையில் ஹரியும் ஹரனும் ஒருவரே. இதை மக்கள் உணரவேண்டும் என்பதற்காகவே சிவபூஜையின் மகத்துவத்தை உணர்த்த மாதவனே அவரை நினைத்து தவமிருந்தார்!

மாதவனின் பக்தியை மெச்சி பார்வதி தேவியுடன் ரிஷப வாகனத்தில் காட்சி தந்தார் ஈசன்.பக்தியோடு அவரை வணங்கி பிள்ளை வரம் கேட்டார். அதேநேரம் ஈசனின் அருகில் இருப்பது தன் தங்கை என்பதால் பார்வதியை அவர் வணங்கவில்லை!அம்பிகை இதை ஏற்கவில்லை. தங்கை என்பது முன்பு. இப்பொழுது, தான் ஈசனின் மனைவி! அந்த ஸ்தானத்துக்கு மாதவன் மரியாதை அளித்திருக்க வேண்டும். மாதவனே இதைச் செய்யத் தவறினால் மக்களும் தவறுவார்களே...

எனவே சினத்துடன், ‘‘ஈசன் அருளால் தங்களுக்கு பிறக்கும் மகன் அந்த ஈசனின் நெற்றிக்கண்ணாலேயே மடிவான்!’’ என சபித்தாள்.தன் தவறை உணர்ந்த மாதவன், ஈசன் திருவுருவையும் அம்பிகை திருவுருவையும் ஒரே பீடத்தில் அமர்த்தி, நடுவில் குழந்தை குமரைனயும் இருத்தி ஒரு சிலை செய்து ஈசனை வணங்கி பூஜித்தார். இதனால் சினம் தணிந்த அம்பிகை, ‘‘பிறக்கப்போகும் மகன் ஈசனின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்டு மீண்டும் ஈசன் அருளால் உயிர் பெறுவான்!’’ என அருளினாள். இப்படி பிறந்த குழந்தைதான் மன்மதன்!

தன் வேண்டுதலை நிறைவேற்றிய பரம்பொருளை சதா இதயக் கமலத்தில் வைத்து மாதவன் பூஜித்து வந்தார். மாலவனின் சுவாசத்தையே தாளமாகக் கொண்டு ஆனந்தமாக அந்த இதயத்தில் தியாகராஜர் நடனமாடினார். இப்படி ஆடிய நடனமே அஜபா நடனம் என அழைக்கப்படுகிறது.ஒரு நாள் அசுரர்களின் தொல்லை நீங்கவும் சுவர்க்கம் வளம் பெறவும் வேண்டி மாதவனிடம் வந்தான் இந்திரன்.

‘‘அப்போது என் குறையைத் தீர்க்க தன் இதயக் கமலத்தில் இருந்த தியாகராஜரைக் கொடுத்தார். அன்று முதல் இன்றுவரை நான் இவரை பூஜித்து வருகிறேன். இனி இவர் உம் பொறுப்பு. இவரை கண்ணின் மணி போல் பாதுகாக்க வேண்டும்...’’ தழுதழுத்தபடி முசுகுந்தரின் கரங்களை இந்திரன் பற்றிக் கொண்டான். ‘‘தாத்தா... ஒரு நிமிஷம்!’’ கண்ணன் இடைமறித்தான். ‘‘யார் இந்த முசுகுந்தர்..?’’

‘‘சோழ ராஜாடா கண்ணா. அவர் முகம் குரங்கு மாதிரி இருக்கும்...’’ நாகராஜன் பதிலளித்தார்.‘‘அச்சச்சோ...’’‘‘உச்சுக் கொட்டாத கண்ணா! இப்படியொரு முகம்தான் தனக்கு வேணும்னு அவரே கேட்டு வாங்கிக்கிட்டார்!’’ ஆனந்தவல்லி புன்னகைத்தாள்.

‘‘நிஜமாவா பாட்டி..?’’ கண்ணனின் கண்கள் விரிந்தன.‘‘வேணும்னா தாத்தாவையே கேட்டுப் பாரு!’’‘‘பாட்டி சொல்றது உண்மையா தாத்தா..?’’ ஆமோதித்த நாகராஜன், அதுகுறித்து சொல்லத் தொடங்கினார்...

(தொடரும்)

- ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்